8.4.10

இடவல பேதமும் ஒரு அர்த்தமுள்ள திண்ணையும்.

திருவிழாக்கூட்டம் போல இருந்தது. சண்டைதான்.ஓசியில் பார்க்கக் கிடைக்கிற நிகழ்கலை இல்லையா.'தெருச்சண்டை கண்ணுக்கு குளிச்சி' எங்கம்மா இப்படிச் சொலவடை சொல்லும். அவன் தான் மாரிமுத்து கையில வேப்பங் கொலயில்லாம ஆடிட்டு இருந்தான். என்ன என்று கேட்டால் அவன் பீச்சாங் கையி என்று சொல்லிவிட்டானாம்.சொன்னால் என்னப்பா ஒனக்கு இடது கைப் பழக்கம்தானே என்று கேட்டால் சொன்ன திலகரை விட்டுவிட்டு என்னோட மல்லுக்கு நின்னான்.'என்ன ரெண்டடி ஆடிச்சிருந்தாக்கூட பொறுத்திடுப்பேன் எப்படிச்சொல்லப்போச்சு' என்று பிராதாகி  விட்டது. ஊர்ச்சனங்களும் கூட அப்படிச் சொன்னது தப்பென்றே அபிப்பிராயப் பட்டார்கள்.

நொட்டாங்கை பழக்கமானாலும் கூட அவனது செயல்களெல்லாம் மிகத்துள்ளியமாக இருக்கும். எழுத்து அச்செழுத்துப்போல இருக்கும்.கிட்டி அடிக்கும் போது எதிரே நின்றால் மூஞ்சப் பேத்துரும்.அப்படி அந்த இடது கை யாருக்கும் இல்லாத வல்லமையை கொடுத்தாலும் அவனே கூட அதை இகழ்வாக எண்ணியிருந்தான்.

அவனென்று இல்லை ஊர்,ஜில்லா,நாடு எல்லாம் அப்படித்தான் மதுரை போகும் பேருந்தில் விருதுநகருக்கு பயணச் சீட்டுக் கேட்டேன் நிற்கமுடியாத கூட்டம் வலதுகையில் கம்பியைப் பிடித்திருந்தேன்.அதனாலே இட்துகையால் கசைக் கொடுத்தேன் கண்டக்டர் அளவுகடந்த கோபமடைந்து விட்டார் என்னா சார் 'படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க இடது கயில காசு தறீங்க'.வலது காலை எடுத்து முதல் அடிவைக்க வேண்டுமென்கிற தொன்று தொட்ட ஆச்சாரங்களும் இப்பொழுது கூட மிக நெருக்கமான நபர்களை சங்கர் தான் அவனுக்கு வலது கை மாதிரி என்று சொல்லுவதுண்டு.

இரண்டிரண்டாக இருக்கும் கண்,காது,நாசி போன்ற உறுப்புக்களுக்கு இடது வலது பேதமில்லை.அப்படியிருக்க கைக்கு மட்டும் இட வல பேதம் எப்படி வந்திருக்கும்.இடது கை இழிவான செயலுக்கும், வலது கை உயர்வான
வேலைகளுக்கும் பயண்பாடாவதால் இந்த பேதம் வந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இழிவும் உயர்வும் நமது உடலுக்குள்ளே தான் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வழும் பதிவுலக நண்பர் திரு ராம் அவர்கள் ஊருக்கு வந்திருந்தார்கள்.பத்தமடையில் தோழர் தமிழ்செல்வன் வீட்டில் நானும் தோழன் மாதுவும் அவரைச்சந்திக்க நேர்ந்தது. ஒரு முழுப்பகல் தமிழ்ச்செலவனுடைய சமயலையும் பேச்சையும் சேர்த்து ருசிக்கக் கிடைத்த தருணம் அது. உலகமே பார்த்து வியக்கும் குடும்பம் கூட்டுக்குடும்பம் நமது தனிசிறப்பு என்பது தெரியும் ஆனால் ஒரே குடும்பத்துக்குள் இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வழக்கில்லாமல் ஒதுங்கி வாழ்வது உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சித்தகவல் என்று சொல்லுகிறார்.ஆனால் நமோ 'நா அவங் கூடப்பேச மாட்டேன்' என்று இலகுவாகச் சொல்லிவிடுகிறோம்.மற்ற உறவுகளுக்கு எப்படியோ ?. கணவன் மனைவிக்குள் பேச்சில்லாமல் கழிந்த கொடூர வாழ்க்கை இங்கே கோடிக்கணக்கில் இருக்கும்.அதைக்கூடப் பெருமிதத்தோடு சொல்லும் நமது கௌரவம்.இன்னும் சிசுக்கொலை பற்றி,நீளப்படங்கள் பற்றி,தற்கொலைகள் பற்றி எல்லாம் அவரோடு ஒருநாள் முழுக்கப் பேசிக்கிடந்தோம் நாங்கள்.

உளவியலில் ஆராய்சிப்பட்டம் பெற்று  அங்கே பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ராம் சொல்லும்போது' ஆதிகாலத்து தாய்மர்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தங்களுக்கான அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது குழந்தைக்கு தாயின் அருகாமையை உணர்த்துவதற்காக இதயம் இருக்கும் இடது பக்கம் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்க வேண்டும். வலது கையினலேயே எல்லாக்காரியங்களும் செய்து அது பழக்கமானது என்று  இடது கைப்பழக்கம் உருவானதன் பூர்வாசிரமம் பற்றிச்சொன்னார். அப்படியானால் ஆண்கள் ?

விலங்குகளோடும்,அதன் பின்னர் மனிதரோடும் சண்டையிட்டுக் கொண்டே காலம் தள்ளிய ஆண், உ யிரின் மையப் புள்ளியான இதயத்தைப் பாதுகாக்க கவசங்களை இடது கையிலும் கல்,வில், வாள் போன்ற கொலைக்கருவிகளை வலது கையிலும் ஏந்தியபடி அலைந்து அலைந்து வலது கைப்பழக்குத்துக்கு ஆளாகியிருக்கிறான் என்று கூறினார்.

ரோமானியர்களே இடது பழக்கத்தை இழிவு பழக்கமாக உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்.அவர்களது கத்தோலிக்க மதம் போகிற திசையெல்லாம் இடது கைப்பழக்கத்துக்கு எதிரான மூடக்கருத்துக்களும் கொண்டுசெல்லப்பட்டன. ஜீசஸ் உட்கார்ந்திருப்பது வலது பக்கம் எனவும்,சாத்தான்கள் இட்து பக்கம் எனவும் கற்பிதப்படுத்தப்பட்ட  பைபிள் பரப்புறைகள் உலகம் எங்கும் வியாபித்தது.வலது கைகுலுக்கல்,வணக்கம் சொல்லுதல் போன்ற நடை முறைகளை அறிமுகப்படுத்தியவர்களும் ரோமானியர்களே.

ஆனால் விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் இடது பக்கத்தின் சிறப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுப்பகுதி,இதயம்  மைந்திருக்கும் பகுதி,அதனோடு தொடர்புடைய உடலுறுப்புக்கள் எல்லாமே இடது பக்கமே அமைந்திருக்கின்றன.

இடது கையில் நான்காவது இருக்கும் மோதிர விரலின் நரம்புகள் நேரடியாக இதயத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறதாம்.வரலாற்றின் மிகச்சிறந்த ஆளுமைகள் எல்லாம் அதிஷ்டவசமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.இசைமேதை பீத்தோவன்,உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் மைக்கேல் ஆஞ்செலோ,லியார்னோடாவின்சி, தத்துவமேதைகள் கொதே,நீட்ஷே. நெப்போலியனும் அவனது மனைவி ஜோசப்பினும் இடது கை ஜோடி, ஜூலியஸ் சீசர் கூட ஒரு இடது கை வீரன். தடகளம்,விளையாட்டுத் துறைகளில் இடது ஆட்டக்காரர்கள் தனித்த இடத்தைப் பிடித்தவர்களாக அறியப்படுகிறார்கள்.

மீறலும்,எதிர்ப்பும்,கட்டமைப்பை எதிர்த்து கலகம்  நடத்துவதும்,அந்நியமும், இருட்டும்,இடது பக்கத்திலிருந்தே வரும்  என்பதே உலகளாவிய நம்பிக்கைகள்.வழி வழியாய் வந்த மத,அரச,முதலாளி நம்பிக்கைகள் வலதென்றும்,அதை எதிர்ப்பது இடதென்றும் பின்னாளைய உலகம் பிரிந்து கொண்டது.பிரஞ்சுப்புரட்சிக்கு முந்தையப் பாராளுமன்றத்தில் கனவான்கள் இடதுபக்கத்திலும்,அறிஞர்கள் வலது பக்கத்திலும் அமர்ந்திருந்தார்களாம்.

   
சொந்த உறுப்புக்களுக்குள் பேதமாகிப் பின்னால்,சொந்த மனிதக் கூட்டத்தில் பேதமாகி,உலகமே இடவல பேதத்தில் இயங்க ஆரம்பித்தது ஒரு பெரும் தேடலுக்கான வரலாறு. மிகப்பெரும் ஆராய்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து கிடைக்கிற பல அறிய தகவல்களுக்கும் ஊற்றுக்கண்ணான இந்தப்பொருள் குறித்து நிறைய்யப்பேச விவாதிக்க களம் இருக்கிறது.காலம் இல்லை.

19 comments:

சாந்தி மாரியப்பன் said...

//உலகமே இடவல பேதத்தில் இயங்க ஆரம்பித்தது ஒரு பெரும் தேடலுக்கான வரலாறு//

நினைப்பதற்கு சின்ன விஷயம் போல் இருந்தாலும், வாகனங்கள், இயந்திரங்கள் இயக்குவது முதற்கொண்டு எவ்வளவு சிக்கலான காரியங்களில் இந்த பேதம் ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது,தடுமாறவும் வைத்து விடுகிறது.

சந்தனமுல்லை said...

இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றுவதை வைத்துக்கொண்டு எத்தனை பெரிய விஷயங்களை பேசி விடுகிறீர்கள்...

கொடுக்கும்போது கண்டிப்பா வலதுகையாலேயே கொடுக்கவேண்டும்,...ஏன் டாட்டா காட்டணும்னா கூட அது வலது கையாலேதான்..:-)

மிக அருமையான இடுகை அண்ணா...

சீமான்கனி said...

//இரண்டிரண்டாக இருக்கும் கண்,காது,நாசி போன்ற உறுப்புக்களுக்கு இடது வலது பேதமில்லை.அப்படியிருக்க கைக்கு மட்டும் இட வல பேதம் எப்படி வந்திருக்கும்.//

சரியா சொனீங்க அண்ணே...எனக்கும் இடதுகை பழக்கம் இருந்தது எல்லோரும் திட்டி திட்டி கொஞ்சம் மாற்றி கொண்டேன்...பதிவு அருமை அண்ணே...

காமராஜ் said...

அமைதிச்சாரல் said...


//நினைப்பதற்கு சின்ன விஷயம் போல் இருந்தாலும், வாகனங்கள், இயந்திரங்கள் இயக்குவது முதற்கொண்டு எவ்வளவு சிக்கலான காரியங்களில் இந்த பேதம் ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது,தடுமாறவும் வைத்து விடுகிறது.//

நாமெல்லாரும் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். வலது ஆயிரக்கணக்கான ஆண்டுப்பழக்கம்.

காமராஜ் said...

வாம்மா முல்லை.
பிறந்த நாள் இனிதே முடிந்ததா ?

காமராஜ் said...

நன்றி சீமான்.

ராம்ஜி_யாஹூ said...

அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள், இன்னும் இது குறித்து விரிவாக எழுதுங்கள்.

ஜெயந்தி said...

என் மகள் இடது கை பழக்கம் உடையவள். அவள் குழந்தையாக இருக்கும்போது எழுதுவது, சாப்பிடுவது எல்லாம் இடது கையிலேயே செய்வாள். அவள் இடது கைப் பழக்கமுள்ளவள் என்று எனக்குத் தெரியாமல் அவள் தவறான கையை உபயோகிக்கிறாள் என்று நினைத்தேன். சாப்பிடுவது, எழுதுவது போன்ற பழக்கங்களை வலது கைக்கு சிரமப்பட்டு மாற்றினேன். அவள் சற்று பெரிதானவுடன் தான் எனக்கு தெரிந்தது அவள் இடது கைப் பழக்கமுள்ளவள் எனறு.

அதே போல் என் மகன் அவங்க அப்பாவை வேண்டுமென்றே வம்புக்கிழுப்பான். 'அய்ய அய்ய இடது இடது' என்று. அவர் நிதானமாகச் சொல்வார், 'இடது இல்லைன்னா நாறிப்போயிறும்'.

அம்பிகா said...

எங்க தாத்தா தந்த ஏதோ பொருளை இடது கையில் வாங்கி, அதற்காக திட்டு வாங்கியது நினைவு வந்தது.
நல்ல இடுகை.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எல்லாக் குழந்தைகளும், திருத்தப்படாத, அல்லது சொல்லி தராத பட்சத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் ஆகிறார்கள். இது அறிவியல் ரீதியான உண்மை, மேலும் இடது கை பழக்கமுள்ளவர்களின் செய்திறன் நேர்த்தி, வலது கை பழக்கமுள்ளவர்களிடம் கிடையாது. எனக்கு கல்லூரி படிக்கும் போது சித்ரா என்ற தோழி இருந்தால், அவள் இடது கை பழக்கமுள்ளவள், அவளின் கையெழுத்தும், எந்த வேலை செய்தாலும் அதில் இருக்கும் செய்நேர்த்தியும் எனக்கு இடது கை பழக்கமுள்ளவர்களின் மேல் ஒரு பெரிய மரியாதையை உண்டு பண்ணியது. இடது கை பழக்கமுள்ளவர்களின் கலை மற்றும் இதர இலக்கிய ஈடுபாடு வியப்புக்குரியது, அவர்களின் நுண்ணிய பார்வை வலது கை பழக்கமுள்ளவர்களின் கன்வென்ஷனல் எண்ணங்களில் இருந்து வேறுபட்டவை, ஒரு மற்று கோணத்தை பார்க்க முடியும் அவர்களின் நுன்னியல்புகளில். எனக்கு எல்லாம் இடது கை பழக்கமுள்ளவர்கள் எல்லாம் வேல்லைக்காரனாகவும், மேல் வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்றும் ஒரு கருத்து இருந்தது நான் சிறுபிள்ளையாய் இருக்கும் போது. இடது கை பழக்கமுள்ளவர்கள் அதிகம் இருப்பது ஐரோப்பிய நாடுகளில் என்பது அதற்க்கு ஒரு காரணமாய் இருக்கலாம்... இடது கை பழக்கமுள்ளவர்கள் பெரும்பாலும் அழகானவர்களாகவும், நல்ல ஆடை தெரிவு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் கணக்கு திறமையும், வான சாஸ்திர அறிவும் வலது கை பழக்கமுள்ளவர்களை விட அதிகம் என்று ஆய்வு சொல்கிறது. நொட்டாங்கை என்று கேலி பேசிய காலங்களை நாம் கடந்து விட்டோம் என்றே தோன்றுகிறது. இடது கை பழக்கமுள்ளவர்கள் வலது கைக்கு கட்டாயப்படுத்தி மாறும் போது அவர்களுக்கு ஒரு சமசீரின்மை மனசுக்குள் வந்து விடுகிறது... இடது கை பழக்கமுள்ளவர்களின் மொழி ஆளுமையும், பொதுவான ஆளுமையும் வியக்க தக்க வகையில் மென்மையாய் இருக்கும் மற்றவர்களை ஒப்பிடும் போது... இடது கை பழக்கமுள்ளவர்களின் குறைபாடு சொல்ல வேண்டும் என்றாள், அவர்களின் உடம்பில் டெஸ்டெஸ் ஸ்ட்ரோன் அதிகம் சுரப்பதால் அவர்களின் ஆயுள் மற்றவர்களை விட குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம், அதுவும் அவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான சாத்தியமும் அதிகம் என்று சொல்வார்கள்... மனவளர்ச்சி குறைவு, மனச்சிக்கல்கள் இவை இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு அதிகம், அதுவும் இது நம்மிடையே இருக்கும் இந்த இடது கை காரர்களை கீழாய் பார்க்கும் போக்கு கூட அவர்களின் மனக்குழப்பத்திற்கு ஒரு காரணமாய் இருக்க கூடும். நிறைய பேசலாம் இதை பற்றி காமராஜ்...

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

வணக்கம் ராம்ஜி படிப்பதை முழுமையாக மொழிபெயர்க்க நேரமில்லை.
சுமார் 6 மணிநேர மின்தடைவேறு.அன்புக்கு நன்றி.

காமராஜ் said...

வாங்க ஜெயந்தி.
பின்னூட்டம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
பகிர்ந்தமைக்கு நன்றி.

காமராஜ் said...

நன்றி அம்பிகா.

காமராஜ் said...

அன்புத்தோழனே
ராகவன்.அசத்துறீங்கப்பா.
என் இடுகையை கூடுதல் அர்த்தமுள்ளதாகிவிட்டீர்கள்.
நன்றி .

அன்புடன் அருணா said...

/வரலாற்றின் மிகச்சிறந்த ஆளுமைகள் எல்லாம் அதிஷ்டவசமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்/
அட! என்னையும் சேர்த்துக்கோங்கப்பா!..அம்மாவிடம் திட்டு வாங்கி வாங்கி எழுதுவது மட்டும் வலதுக்கு வலுக்கட்டாயமாக மாற்றிக் கொள்ளப்பட வைக்கப் பட்டது.

பனித்துளி சங்கர் said...

//////இடது கையில் நான்காவது இருக்கும் மோதிர விரலின் நரம்புகள் நேரடியாக இதயத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறதாம்.வரலாற்றின் மிகச்சிறந்த ஆளுமைகள் எல்லாம் அதிஷ்டவசமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்./////


அட புதுமையான விசாயமாகத்தான் இருக்கிறது . பதிவு மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள்

காமராஜ் said...

ஆஹா, உங்களிடம் புதைந்து கிடக்கும் எழுத்து தனித்துவமானதற்கு
அதுவும் ஒரு காரணமா ? அருணா நன்றி.

காமராஜ் said...

வாங்க சங்கர்.
அன்புக்கு நன்றி.

kashyapan said...

The running track from school to Olympic is from left to right.ttThe heart of man is inthe left and when u turn left running there will be less strain in the heart the experts say.For the horse the track will be from right to left because for horse the heart is on its rightside the same expert say....kashyapan.