25.6.11

புற உலக அடையாளங்களை உதறிவிட்டு தோளில் விழும் கை. ( கருப்பு நிலாக்கதைகள்- தோழர் எஸ் ஏபியின் விமர்சனம்)


ஒரு கட்சியின் மாவட்டச்செயலாளர் டவுசர் போட்டுக்கொண்டு சமயல் செய்துகொண்டே ஆல்பர்ட் காம்யூ பற்றிப்பேச உடன் உட்கார்ந்து கீரையை ஆய்ந்துகொண்டே கதை கேட்கிற அனுபவம் அற்புதமானது. அப்போது விருதுநகர் கந்தபுரம் தெருவில் இருந்த எங்கள் தலைமை அலுவலகத்தில் வேலைபர்த்துக் கொண்டிருந்தேன்.அங்கிருந்து அரைபர்லாங்க் தூரத்தில்தான் சிபிஎம் கட்சியின் மவட்டக்குழு அலுவலகம் இருந்தது.  கிளம்பி ஆபீசுக்கு வா என்று தொலைபேசியில் அழைப்பார்.வேறு ஏதும் தொழிற்சங்க விவகாரமாக இருக்குமோ என்று   அங்கே போனால் ஒரு முண்டா பனியனும் டவுசரும் போட்டுக்கொண்டு சமயல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். கூடவே தாமஸ்,சேகர்,மணிமாறன்,கண்ணன் இன்னும் பிஎஸென்எல் பெருமாள்சாமி போன்ற தோழர்கள் இருப்பார்கள்.

அன்று போனபோது வகைவகையான கீரைகளை கூடத்தில் பரத்திப்போட்டு கைபார்த்துக்கொண்டிருந்தார்கள்.அது புரட்டாசிமாதம் மழைபெய்து ஈரமாகிப்போன அந்த அலுவலக முற்றத்திலும் சுவரை ஒட்டிய பகுதிகளிலும் முளைத்துக்கிடந்த கீரைவகைகளெல்லாம் அங்கே கிடந்தது. வாங்க காம்சு நீங்களும் மாட்டிக்கிட்டிங்களா இன்னைக்கு நீங்கதான் ஸ்பெசல்.தோழர் சமையலை முதலில் சாப்பிடப்போகிற டெஸ்டர் நீங்கதான் என்று சொல்லவும் சுற்றியிருந்தவர்கள் கெக்கேபிக்கே என்று சிரிப்பார்கள். கூறுல்லாமச் சிரிக்காதிங்கப்பா கீரைகள்ள எவ்வளவு சத்து இருக்குன்னு தெரியுமா ?. இதுவரைக்கும் அப்படிஒரு புத்தகம் வரலயில்ல காம்ஸ் என்று தாமஸ் கேட்பதில் அர்த்தம் புரிந்துகொண்டு.ஆமப்பா ஒங்களமாதிரி ஸ்டைல் சாப்பாடு சாப்புடுறவங்களுக்கு புத்தகம் போட்டுத்தான் சொல்லிக்கொடுக்கணும் என்பார்.ஆடுகூட திங்காத இந்தக்கொழைகளுக்கு பேர்கூடத்தெரியாதே என்று சொல்லவும். மகிலி,தொகிலி, சாரநத்தி,பச்சை,பசலை,தூதுவளை என்று அடுக்கிக்கொண்டே போவார்.அப்போ இது நித்தியகல்யாணி இல்லையா என்று சேகர் ஒரு செடியைத்தூக்கி காண்பிப்பார்.

சரி சரி காம்ஸ் இருந்து ஒரு பிடிபிடிச்சுட்டுப்போங்க நெறிஞ்சிக்கீரையும் கூட இதுல இருக்கு என்று சொல்லிவிட்டு எல்லோரும் பயந்து கொண்டு கிளம்புவது போலக் கிளம்புவார்கள். திரும்பி வரும்போது கொறிக்க கொஞ்சம் காரச்சேவும் சிகரெட்டுகளும் வாங்கிவந்து போடுவார்கள்.அப்படிப்பட்ட தோழருக்கு அப்போதே நாற்பதுவயதுக்குமேல் இருக்கும்.நாங்கள் எல்லோரும் இருபது இருபத்தைந்து வயதுக்காரரகளாக இருந்தோம்.  ஒரு தலைமுறை இடைவெளியை துடைத்து விட்டு மிகநெருக்கமாக எங்களோடு இணைந்துகொள்ளும் அவர்மேல் எப்போதும் ஒரு பிரம்மிப்பு இருந்துகொண்டே இருக்கும்.அது அவரது அசாத்திய உயரம் காரணமாக மட்டுமல்ல பிரான்ஸ் காஃப்கா, ஆல்பர்ட்காம்யூ,கிருஷ்ணன் நம்பி,ஜி.நாகராஜன் ஆகியோரின் பெயர்களையும் அவகளின் படைப்புகளில் இருந்து சின்ன சின்ன கதைகளையும் பேசுவார்.அதே அவர்தான் தொழிற்சங்க செயல்குழுக்கூட்டங்களில் இறுக்கமான முகத்தோடு விமர்சனம் செய்தும், கண்டித்தும் வழிநடத்துகிற ஆசானாகவும் இருப்பார்.

மீந்து போனகட்டுரை நோட்டுகளில் எழுதிவைத்த பத்துப்பதினைந்து கதைகளோடு இதுவும் மக்கிப்போகுமோ என்று கொண்டுபோய் காண்பித்த கதையை தூக்கிவைத்துக்கொண்டாடினார். செம்மலரில் அதைப்பிரசுரிக்கவைத்து எனது முதல்கதையை எல்லோரிடமும் பெருமிதமாக அறிமுகப்படுத்தினார் தோழர் எஸ்.ஏ.பி,. அந்தகதை ’பூச்சிக்கிழவி’ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்து நான்டீடெய்ல் பகுதியில் இணைந்தது. இன்னும் வெளியிடமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் எனது இரண்டவது சிறுகதைத்தொகுப்பை தயங்கித்தயங்கி  தோழர் எஸ் ஏ பி க்கு அனுப்பிவைத்தேன்.

ஜூன் மாத ‘செம்மலரில்’ அதற்கான விமர்சனம் எழுதியிருக்கிறார்.அதையும் அவரே அழைத்துச்சொன்னார்.ஒருகதை அதன் அடிநாதம் உணர்ந்து சிலாகிக்கப்படும்போது படைப்பாளனுக்கு அதைவிட வேறு ஏதும் தேவையில்லை. எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது என்று நிராகரிக்க முடியாத அன்பு அது. இதோ அந்த அன்புநிறைந்த பரிசில் எங்கள் ஆசான் எஸ் ஏ பி யின் வார்த்தைகளில்.

0

குறைந்த, அதி சிறந்த கதை சொல்லிகள் மனிதர்கள் பேசத் தெரிந்த காலத்திலிருந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஏற்றுதலும் போற்றுதலுமாய் அவர்கள் வரலாற்றில் பெருமையோடு நிலைத்திருக்கிறார்கள். பெருங் கதையாடல்களுக்கு மாற்றாக கணக்கிலடங்காக் கதைகளைக் கொண்டது சிறுகதையுலகம். மனித வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை ஒரு பொறியாய் எழுத்தில் வடிப்பது சிறுகதை ஆசிரியனின் பணியாகும். இதில் வல்லமை மிக்கவர்கள் ஒரு சிறுகதையிலேயே மனிதரின் முழு வாழ்வையும் சிருஷ்டித்து விடுகிறார்கள். காமராஜின் இந்தக் கருப்புநிலாக் கதைகள் வல்லமையோடு வடிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் வரும் கதைகள் அடையாளப்படுத்த முடியாத எளிய விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றியவையாகும். வறுமையும், அந்த வாழ்வின் கொடூரங்களும் அவர்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை பழைய - புதிய பாணிகளை இணைத்து கருப்பு நிலாக் கதைகள் கூறுகின்றன. இன்றும் நமது கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் பேயாட்டம் போடுகின்றன. ஒரே மாதிரியான வறுமைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் சாதியின் பெயரால் மனிதர்கள் ஒடுக்கப்படுவது தொடர்கிறது. இந்த அபத்தங்களை வெல்வது கடினமாயிருக்கிறது. விடுதலையின் ஒத்திகையில் சிறந்த பாடகராய் கட்டபொம்மு நாடகத்தில் நடிக்கும் அருந்ததியரை ஏற்கமறுக்கும் சாதிவெறி கொடிகட்டிப் பறக்கிறது. வேரை விரட்டிய மண்ணில் சலவைத் தொழிலாளியின் மகன் கிராமத்துக் கொடுமையிலிருந்து தப்பி சென்னைக்கு ரயிலேறுகிறான். ரயிலிலேயே அவனது சாதி பறந்துவிடுகிறது.

மனிதரின் சிந்தனையை வடிவமைப்பதில் புனைகதை உத்தி நல்ல பலனளிக்கிறது. மருளாடியின் மேலிறங்கியவர்கள் கதையில் ஒரு வேசையின் வாழ்க்கை சாமியாடியாகி, அருள்வாக்குச் சொல்லும் மருளாடியாவது நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் சாத்தூர் பகுதியில் வாழ்ந்த, வாழும் மனிதர்களையும் அவர்களது அவலமான வாழ்க்கையிலிருந்தும் தோன்றியவை. இந்த வாழ்வை அருகிலிருந்து பார்த்தாலும் அருமையான கதையாக்கிச் சொல்லுகிற திறமை கதை சொல்லிக்கு இருக்கவேண்டும். காமராஜுக்கு நிறையவே இருக்கிறது.

சம்பாரி மேளம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் மெய்ம்மறந்து கேட்டு ரசித்த ஒன்றாகும். சம்பாரி நாயனமும், கனத்த தவில்களும் சுற்றி நிற்கும் ஆயிரம் ஜனக் கூட்டத்தையே ஆட்டுவிக்கும். இந்தக் கதையில் "குழந்தைகள் எப்போதும் மலர்களைக் குவித்து வைத்தது போல் தூங்குவார்கள். அவர்களுக்கு மட்டுமே நித்திரையின் போது சிரிக்கிற சிலாக்கியம் வாய்க்கும். அந்தக் குழந்தைகளோடு நிலவில் கடவுள் விளையாடுவதாய் கிராம்த்துத் தாய்மார்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்" என்பதில் அழகு சொட்டுகிறது. இந்தத் தொகுப்பிலேயே சிறந்த கதை கருப்பு நிலாக்களின் கதை தான். ஒடுக்கப்பட்டு வீழ்ந்து கிடந்த பெண் ஓங்காரமாய் எழுந்து ஆட்களையே சாய்த்து விடுகிறாள். இக்கதையின் நடை உயிரோட்டம் மிக்கதாகும். அல்லபர் காம்யு தனது காலி கூலா கதையின் பாத்திரம் மூலம் பேசுவது நினைவுக்கு வருகிறது. "விதியை அறிய முயற்சித்தேன். அது இயலாது என்பது புரிந்ததும் எனக்கான விதியை நானே உருவாக்கிக் கொள்வதெனத் தீர்மானித்தேன். "இந்த ஒடுக்கப்பட்ட பெண்ணும் விஷ மதுவாலும், அரிவாள் மனையாலும் பழி தீர்க்கிறாள்.

நாலைந்து பக்கங்களிலேயே நறுக்குத் தெறித்தாற் போல கரிசல்காட்டு மனித வாழ்வை நம் கண்முன்னே நிறுத்தி விடுகிறார் காமராஜ். ரயிலை போகும் போதும் வரும் போதும் பார்க்கிற மக்கள் அதில் ஏறிப் பார்த்ததில்லை. கிழவியைக் கிண்டல் செய்வது, சிரிக்க வைக்கிறது. டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து பிடிபட்ட சிறுவனை நிலைய அதிகாரியே டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமானம் உலுக்குகிறது.

சர்ச்சுகளில் தரும் அப்பம் எப்படிப்பட்டது என்று தெரியாமல் அதை ஒரு பெரிய தின்பண்டமாய் நினைத்துக் கேட்கும் கன்னியப்பனைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். நாமும் சிரிக்கிறோம். கள்ளக் காதலர்களை அடித்துக் கொன்று போட்டுப் பேயடித்ததாய் கதைவிடும் கதை சிறப்பானது. முளைப்பாரிகள் வயலில், பாட்டுக்காரி தங்கலட்சுமி, மனநலக் காப்பகத்தில் மனநலமுள்ளவளையும் அடைத்துள்ள கொடுமையைக்கூறும் கதை அருமை. கதைகளுக்கு காமராஜ் தரும் தலைப்புகள் அற்புதமானவை. உதாரணமாக ஆனியன் தோசையும் அடங்காத லட்சியமும், பெரியார் பேரனுக்குப் பிடித்தமான பேய் போன்றவற்றைக் கூறலாம்.

இவன் நினைத்தால் ஏராளமாய் கதை எழுத முடியும். ஆனால் எழுதித் தொலைக்க மாட்டேங்கிறானே என்று காமராஜைப் பற்றி நான் நினைப்பதுண்டு. அற்புதமான கதைகளை ஏராளமாய் எழுதட்டும். கரிசல் இலக்கியம் செழிக்கட்டும் கருப்பு நிலாக் கதைகள் போல.

22.6.11

பஞ்சாயத்து தலைவர் பதவி பொது ஏலத்துக்கு


ஒரு உயர்வுநவில்ச்சிக்காக முன்னமொருமுறை இப்படி எழுதியதாக ஞாபகம் இருக்கிறது.அது இப்போது செய்தியாக வந்துவிட்டதில் ஆச்சர்யமும் சந்தோசமும் இல்லை. மாறாக பெரும் சஞ்சலம் வந்துசேர்கிறது. இப்படியே போனால் அரசாங்கத்தைக்கூறு போட்டு வித்துருவான்.என்று நாம் கோபத்தில் சொல்லுவது  இப்போது மத்தியில் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் நான் சொல்லவந்தது அதுவல்ல.இந்த ஆண்டு ஊர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரப்போகிறதில்லையா.அந்தத்தேர்தலில் அவரவர் போட்டியிடுவதற்குத் தான் தங்களை எல்லாவகையிலும் தயார் படுத்திக்கொண்டிருப்பார்கள்.ஆனால் ஒரு பஞ்சாயத்தில் பதவியை ஏலத்திற்கு விடத்தயாராகிக் கொண்டிருக்கிறார் களாம். ஏலத்தொகை ரூபாய் இருபது லட்சமாம்.

எந்தப்பஞ்சாயத்து என்றுகேட்கிறீர்களா. ஒட்டுமொத்த தமிழ்ச் சினிமாவும் மையம் கொண்டிருக்கிற நம்ம மதுரை மாவட்டத்தில் தான் இந்த பொது ஏலமுறை அமலுக்கு வந்திருக்கிறது.மதுரைமாவட்டம் உசிலம்பட்டி த்தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி (செல்லம்பட்டி என்றால் நீங்கள் மறந்திருக்கக் கூடும் இங்குதான் சென்ற முறை ஆட்சியர் உயர்திரு உதயச்சந்திரன் மற்றும் சிபிஎம் விசிக கட்சிகளின் பெரும் போராட்டத்தில் பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல் நடந்தது.) ஒன்றியத்தில் உள்ள அய்யனார் குளம் ஊராட்சித்தலைவர் பதவியின் தற்போதைய மார்க்கெட் விலை 20 லட்சம்.நன்றி தீக்கதிர் நாளேடு.22.6.2011.http://www.theekkathir.in/index.asp

21.6.11

இருளுக்கும் ஒளிக்கும் ஊடே ஒரு அந்திக்கருக்கல்


ரிங்க் ரோடு வந்து இறங்கும் போது அந்தி சாய்ந்துகொண்டிருந்தது.ஒரே கூட்டமாக இருந்தது.இவர்கள் எல்லோரும் கோவில்பட்டி போகிறவர்களாக இருக்ககூடாது என்று கருவிக்கொண்டேன்.போனசனிக்கிழமை மாதிரியே இறங்கியதும் ஏதாவது பேருந்துகிடைத்து விட்டால் சரியாக ஒன்பது மணிக்கு வீட்டுக்கு போய்விடலாம். பலசரக்கு கடையைக் கடக்கும் போது நைனா ரண்ட சார் இப்புடுதான் ஒச்சவா என்றுகேட்பார்.அவரைத் தொடர்ந்து அவரது பேத்தி கடகடவெனப் பேசும் தெலுங்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் அங்கிருந்து நடையைக் கட்டலாம்.கன்னங் கரேலென்று நேர்த்தியாய்க் குடை விரித்திருக்கும் நிலவேம்பு மரத்தின் நுனியை எட்டி இழுத்துக்கொண்டே எஸ்.ஆர் நாயுடு காலனியைக்கடந்து போகலாம்.எதிர்ப்படும் பெண்களின் ஈர்ப்பு இனிய பாடல்களை  ஞாபகப்படுத்த இன்னும் இரண்டு நிமிடத்தில் வீட்டுக் கதவைத்திறக்கலாம். இப்படி ஒரு வாரத் தனிமை வீட்டையும் தெருவையும் தெரு மனிதர்களையும் வசீகரமாக்கியது.

எய்யா திருசெந்தூர் தூத்துக்குடி வண்டிவந்தா சொல்லுங்க, இந்தக்கெழவிய ஏத்தி வுட்ருப்பா என்று சொல்லிக்கொண்டே ஒரு கட்டைப் பையை  கீழே வைத்துவிட்டு எனது முகத்தைப்பார்த்தார் அந்தப்பாட்டி.கட்டைப்பையில் வெளியே தெரியும்படிக்கு இருந்த கிளிமூக்கு மாம்பழமும் பாக்கெட் மிக்சரும் பேரக்குழந்தைகளின் ஆர்ப்பரிப்பையும் சந்தோசத்தையும் சுருட்டி வைத்திருந்தன.கோவில்பட்டி வண்டி காலியாய் வந்தது புது வண்டி இளையராஜா பாட்டு வேறு.தம்பி இது எந்தூர் வண்டி கோயில்பட்டி.இப்படியே எனக்கான மூன்று வண்டிகள் போய்விட்டது. பாட்டிக்காகக் காத்திருந்தேன்.அப்போது கூட்டம் கிட்டத்தட்ட குறைவாக இருந்தது.நான் பாட்டி,சின்னப் பையனோடு ஒருவர் கொஞ்சம் கொத்தனார்கள் மட்டும் இருந்தோம். கொத்தனார்களோடுஅவரும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கடைசியாய் வந்த கோவில்பட்டி வண்டியில் ஏறினார் என்னைத் திரும்பிப் பார்த்து சார் வரலியா என்று கேட்டார்.பாட்டி என்னைப்பார்த்து நீ கோயில்பட்டி போனுமா மகராசன் கெழவிக்காக நிக்கியா.தூத்துக்குடி பேருந்து வந்ததும் ஏறினாள் வண்டி புறப்பட்டது பின்னர் நின்று ஒரு பெண்ணையும் ஒரு பெண்குழந்தையையும் இறக்கிவிட்டு விட்டு எதோ சத்தம் போட்டுக்கொண்டே விசிலடித்தார் நடத்துநர்.

அதன் பிறகு வந்த மூன்று வண்டிகளும் பைபாஸ்ரைடர்.ரிங்ரோட்டில் நிற்கவே இல்லை. இருட்டி விட்டது . வாகனங்கள் மஞ்சள் கண்களுடன் பாலமேறி வரத்தொடங்கின.வானம் மஞ்சளுக்கும் கறுப்புக்கும் நடுவில் ஒரு புதுநிறத்தை கரைத்துக்கொண்டிருந்தது. ஒற்றை வெள்ளைக்கொக்கு மட்டும் பறந்து போனது. அதன் இறக்கை அசைவில் நெடிய பாரமும் சோகமும் தெரிந்தது.ராமேஸ்வரம் திருப்பத்தில் இருந்த பெட்டிக்கடைக்காரர் பால் சட்டியைக்கழுவி ஊற்றி விட்டு ரோட்டுக்கும் கடைக்கும் நடுவே சூடம் ஏற்றி  வைத்து விட்டுக் காத்திருந்தார். கம்மங்கூழ் விற்றுக் கொண்டிருந்த வரும்  தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு கடைசியாய்க் கடந்துபோனார். பரப்புக்குறைந்து நியான் விளக்குகளின் மஞ்சள் நிற மௌனம் அந்த இடத்தில் குவிந்து கிடந்தது.நான் அந்தப்பெண்,அந்தக்குழந்தை அவ்வப்போது கடந்து போகும் வாகன இறைச்சல்.

சற்றைக்கெல்லாம் அந்தக்குழந்தை கால்வலிக்கிறதென்று பேருந்து நிறுத்தத்தின் படியில் படுத்துவிட்டது.இப்போது இருவருக்குமான பிரதானப்பிரச்சினை தனிமை. என் ஆராய்ச்சி மனது அவள் யார்,எங்குபோகிறாள்,ஏன் அவளது கணவன் வரவில்லை என்று  கணித்துக் கொண்டிருந்தது.அவள் கட்டியிருந்த பட்டுச்சேலை எங்கோ விஷேசத்துக்குப் போய் வருவதாக முடிவுக்கு வரவைத்தது. பெருஞ் சஞ்சலத்துக்குப் பிறகு முகம் பார்த்தேன். வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.இது  அவமானமாக இருந்தது. பாட்டியைச்சபித்துக் கொண்டேன்.ஒரு நிமிடம் தாமதித்தால் ஓராயிரம் அடிகள் பிந்தங்கிவிடுவோம் என்கிற சோலைம்மாணிக்க அண்ணன் வார்த்தைகள் காரணமில்லாமல் நினைவுக்கு வந்தது. அவள் அப்படித்திரும்பியது அந்த சூழலின் இயல்பற்ற நிலைமையை இன்னும் அதிகரித்தது.  எதிர்திசையில் போய் நிற்கநினைத்த போது லாரிகள் அதிகமாக வராஅரம்பித்தது.  அதைத் துடைத்து என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளச் சற்றுத் தள்ளிப்போய் நின்றுகொண்டேன். எனது செல்போனை எடுத்து அதிலிருந்த குறுஞ் செய்திகளைப் படித்துக்கொள்வதாகப் பாவனை பண்ணினேன்.

வேகமாய் வந்த நேசனல் பெர்மிட் லாரி அவள் பக்கத்தில் வந்து நின்றது.ஓட்டுநர் கழுத்தை நீட்டி அவளிடம் ஏதோகேட்டான். அவள் பதறிப்போய் என்னருகில் நெருங்கி வந்து நின்றாள். மறுபடியும் ஒரு தூத்துக்குடி வண்டி வந்தது. வண்டியைப்பர்த்து விட்டு என்னைப் பார்த்துக்கேட்டாள் ‘அண்ணே தூத்துக்குடி வண்டிக கோயிலுப்பட்டி போகாதா”. இல்லீங்க அருப்புக்கோட்டை,எட்டயபுரம் வழியா நேராப் போயிரும். இன்னொரு திருநெல்வேலி வண்டி வந்தது ஓடிப்போய் மகளை எழுப்பித் தூக்கிக்கொண்டு நடக்குமுன் நின்றவண்டி கிளம்பி விட்டது.பாப்பா அது புதுப் பஸ்ஸ்டாண்டுதான் போகும் நீ அங்கிருந்து பத்துமணிக்குமேல் திருப்பியும் ஒத்தீல ஊருக்குள்ள வரணும். பயப்படாதே நானும் கோயில்பட்டி வண்டிலதான் போனும் என்றேன்.சரிண்ணே என்றாள்.அதற்குப்பிறகுப் வந்த எல்லாவண்டிகளும் நிற்காமல் போகவே இன்னும் பரபரப்பானாள்.  ஆமா உங்க வீட்டுக்கரரெ பஸ்ஸ்டாப்புக்கு வரச்சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டேன். மஞ்சள் நியான் விளக்கில் அவள் முகம் இறுகுவதை உணரமுடிந்தது.

அதன் பின்னாடி அவள் என்னோடு பேசுவதைத் தவிர்த்துக்கொண்டாள். அது பாதுகாப்புக்காகவா இல்லை வேறெதுவுமா எனக்கணிக்க முடியவில்லை.கோவில்பட்டி பேருந்து வந்ததும் குழந்தையைத்தூக்கப்போனேன். அவள் முந்திக்கொண்டு குழந்தையை கூடுதல் வாஞ்சையோடு அள்ளிக்கொண்டாள். சூட்கேசை நான் எடுத்துக்கொண்டேன். காலியிருக்கையில் அவளைஇருத்திவிட்டு என்னிடம் சூட்கேசை வாங்கிக்கொண்டாள். நான் கடைசி இருக்கைக்கு போய்விட்டேன்.பேருந்து நகர்ந்து ஓடியது முகம் வருடிய காற்றில் தூங்கிப்போயிருந்தேன்.ஒரு மணிநேரத்துக்குப்பின் கண்விழித்துப்பார்த்தேன் விருதுநகரை நெருங்கிக்கொண்டிருந்தது.பேருந்து பயணிகள் எல்லோரும் கிட்டத்தட்ட அரைத்துக்கத்தில் இருந்தார்கள். அவள் மட்டும் பிள்ளையை மடியில் கிடத்தி அவளை அணைத்துக்கொண்டு கடந்து போன இருளை வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள். கண்ணில் கணகணவென்று வீசும் ஒரு ஒளியின் தீர்க்கம் இருந்தது.

20.6.11

சிறுநீரகத்தைப் பறிகொடுத்த ஆந்திரப் பெண்களும், வாழ்வைப் பறிகொடுத்த உபி பெண்களும்

                                             ( நன்றி: டெக்கான் கிரானிக்கல்)


இரண்டு நாட்களுக்கும் மேலாக ஏதும் யோசிக்கத் தோன்றாமலே இருண்டு கிடக்கிறது சிந்தனை.வடிவேலுவின் நகைச்சுவையின் ஊடாகக்கூட அவளைப்பற்றியதான விசனம் தொற்றிக் கொண்டுவிடுகிறது.இது என்ன தேசம் இது எதனாலாஅன தேசம் என்கிற சிந்தனை வந்து வந்து குழப்புகிறது.ஆந்திரமாநிலம்  பகுதியில் தங்கள் வறுமையையும் கடன் சுமையையும் விரட்ட சொந்த சிறுநீரகத்தைப் பிடுங்கிக்கொடுத்த பெண்களும். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தலித் பெண் முதல்வராக இருந்தும் கூட தங்களின் கற்பைக்காப்பாற்றிக் கொள்ள த்ராணியற்றுச் செத்துப்போன அந்த இரண்டுபேரும் வந்து வந்து அலைக்கழிக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் உள்ள பெண்கள் தங்களின் கடனைத் திருப்பிக் கொடுக்க சிறுநீரகத்தைப் பிடுங்கிக் கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கு 9000 ரூபாய் தருவதாகச் சொல்லி நான்கு நாட்கள் ஆய்வுக்கூடத்தில் அடைத்துவைத்து திருப்பி அனுப்பியிருக்கிறது ஒரு ஆங்கில மருந்துக் கம்பெனி. ஆனால் இதே தேசத்தில் இதே காலத்தில் லஞ்சமாகப் பரிமாறப்பட்ட தொகையின் பூஜ்ஜியங்கள் எழுதுகிற தாளைவிட்டுத் தாண்டி வெளியே போகிறது.நாட்டை விட்டு வெளியில் கிடக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பைக் கேட்டால் தலை சுற்றுகிறது.அந்தக் கறுப்புப் பணத்தை காப்பற்றச் சொல்லிப் போராடும் சன்னியாசியின் சொத்து மதிப்பைக் கேட்டால் பயமாக இருக்கிறது. சாய்பாபவின் அறைக்குள் கிடந்த ரொக்கப்பணமும் நகையும் சாமியார்கள் மேலிருக்கிற கொஞ்சநஞ்ச அனுதாபங்களையும் துடைத்தெறிகிறது. அதை அலுங்காமல் குலுங்காமல் எடுத்துக்கொண்டுபோய் சாய்பாபா அறக்கட்டளைக் கணக்கில் சேர்த்த அரசின் பரிவை நினைத்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அவலங்களில் நமது தேசத்திற்கான அடையாளம் எது என்கிற கேள்வி வந்து பதிலற்றுத் திரும்புகிறது.

கடந்த ஒரு வாரத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஆறு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.அதில் இரண்டு பெண்கள் வெறும் பதினாறு பதினைந்தே வயதான தலித் சிறுமிகள்.கடைசியாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபெண் ( இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மணிநேரத்து ஒரு வன்கொடுமையோடு பாலியல்பலாத்காரம் நடைபெறுவதாக அரசப்புள்ளிவிவரமே ஒத்துக் கொள்கிறது. எனவே அது கடைசியாக நடந்த கொடூரமாக இருக்காது ) ஐந்து பேர்களால் தூக்கிக்கொண்டுபோய் கொடுமைப் படுத்தப் பட்டிருக்கிறாள்.தான் கட்டிய மனைவியின் சம்மதமில்லாமல் கூடுவதையே குடும்ப வன்முறை என்று கணக்கிலெடுத்துக்கொள்கிற இந்த யுகத்தில் ஒரு பெண்ணை ஐந்துபேர் தூக்கிக்கொண்டு போக முடிந்தது எந்த தைர்யத்தில்.ஒரே ஒரு தைர்யம் ஆண், அதுவும் செருக்குத் திமிர்படைத்த சாதிய ஆதிக்கம் மண்டிக்கிடக்கும் ஆண் என்கிற தைர்யம்.

காதல் காமம் சிருங்காரம் ஆலிங்கணம் உறவு உடலுறவு இனவிருத்தி ஆசை இச்சை எனப்பட்டியலிட்டு அதைப்பேச பாட எழுத தீராது
காலங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.அதைப்பற்றிப்பேசும் போதும் கேட்கும்போதும் நரம்புகளில் இனிப்பு ரத்தம் ஓடுகிறது. குருவிகள் இலைமறைவில் உட்கார்ந்து கொண்டு அலகுரசிக்கொள்ளும் போது பார்க்கிற நமக்கு கிலேசம் உண்டகிறது.அப்படிப்பட்ட ஒன்றை வல்லூட்டியமாக பறிக்கிற சிந்தனை எங்கிருந்து கிளம்பியிருக்க முடியும்.ஆதிக்கம்,ஆதிக்கமேதான்.

ஆநிறைகவர்தலோடு பெண்களையும் கவர்ந்து கொண்டு போவதே வீரம் என்றிருந்த கற்காலம் தொடங்கி இந்தக்கணினியுகம் வரையில் நலிந்த பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு என்பதும் கூட கைக்கெட்டாத ஆடம்பரப் பொருளாகவே  இருக்கிறது. எனக்குத்தெரிந்த வரையில் மிருகங்கள் கூட கூட்டுக் கற்பழிப்பிலும் வன்புணர்ச்சியிலும் ஈடுபடுவதில்லை.தவிரவும் அவைகள் இன்னொரு உயிரை பசிக்குத்தவிர வேறு எதற்காகவும் கொல்லுவதில்லை.கயர்லாஞ்சி கூட்டுப் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சுரேகா போட்மாங்கே அவளது மகள் ப்ரியங்கா போட்மாங்கே இந்த இரண்டு பெயர்கள் இந்தியாவின் கவனத்தைப்பெறாமல் போனது.மராட்டிய மாநிலத்திலும் உபியிலும் மட்டுமே அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன.அது தவிர்த்த வேறெந்த மாநிலத்திலும் அப்படிச் சம்பவம் பற்றிச் சொல்லப்படவே இல்லை.அதற்கு முந்தைய நிதாரி தொடர் கொலைகளில் கொல்லப்பட்ட பதினைந்து பெண்குழந்தைகள் பற்றிய செய்தியும் பெரிதாக ஊடகங்களின் பரபரப்பை ஈர்க்கமுடியவில்லை. காரணம் ரொம்ப ரொம்பப் பழமையானது.பாதிக்கப்பட்ட உயிர்கள் எல்லாமே விளிம்பு நிலை மக்களின் உயிர்கள்.

நடந்தவைகளைக் குற்றம் என்று ஒப்புக்கொள்ளவே இந்த மேல்ஜாதி இந்தியாவுக்கு மனம் வரவில்லை.மாறாக நடந்த கொலைகளுக்கு புதிய விதிகள் எழுதப்படுகிறது அவை மநுவின் ஆங்காரம் அடங்கிய தடித்த பக்கங்களில் பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்படுகின்றன.
கயர்லாஞ்சி சம்பவத்தைக் கூட்டுப்பாலியல் பலாத்காரம், மற்றும் வன்கொடுமை எனச்சொல்லுவதற்குப் பதிலாக நடத்தை கெட்ட குடும்பத்துக்கு பஞ்சாயத்து கொடுத்த தண்டனை என்று ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.அதே போல உயர்சாதிப் பெண்ணைக்  கல்யாணம் செய்தவன் படுகொலை செய்யப்பட்டான் அது கருணைக்கொலை என்கிற சொல்லால் பூசிமெழுகப்பட்டது.

ஆக எதவதொரு வழியில் எங்காவது தவறு நடந்தால் அதற்குப் பின்னாடி ஆதிக்கம் தனது நாக்கைத் துருத்திக்கொண்டுதான் நியாயம் பேசுகிறது. ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஏதாவதுநேர்ந்தால் உடனே ஆகாயவிமானத்தில் ஏறி அங்குபோய் இறங்கத்தயாராய் இருக்கிறது வெளியுறவுத்துறை. பூஜா பேடியை தரக்குறைவாகப் பேசியதற்காக ஒட்டுமொத்த ஊடகமும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. இப்படியாகத் தராசின் ஒருபக்கம்தான் எப்போதும் இழுத்துக்கொண்டே இருக்கிறது.

மீதமுள்ள இன்னொரு தட்டில் கணம் சேர்க்கும் நியாயங்கள் கிடைக்கவே கிடைக்காதோ என்கிற சலிப்பும் இது யாருடைய தேசம் என்கிற கேள்வியும் துளிர்த்துக்கொண்டே இருக்கிறது. அவ்வப்போது எழும் சின்னசின்னக் கண்டனக் குரல்களில் இந்த கேள்விகள் கருகிப்போக மீண்டும் மீண்டும் எதாவது நிகழும் என்கிற ஒரு தேடல் ஒரு கனவு நீண்டு கொண்டே போகிறது.
ஒரு நிரந்தரமான நம்பிக்கை,எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்க நெடிய பயணம் தேவை.

அதுவரை அதுவரை கொண்டு வாருங்கள்  பாரதி கேட்ட எரிதழலையும் காந்திகேட்ட  பற்களும் நகங்களும், பாட்டாளிவர்க்கம் கேட்ட தெருவில் கிடக்கும் கற்களும்.எனதருமைத் தோழிகளே  இவையெல்லாம் எங்கே போயின ?


19.6.11

சுருங்கும் உலகம்


வீட்டில் நாலுபேர்
வீதியில் இருபது வீடுகள்
பகுதியெங்கும் மனிதர்கள்
ஆங்காங்கே இரும்புக்கோபுரம்
எல்லோர் கையிலும் அலைபேசி
எப்போதும் பேசிக்கொண்டே
இருக்கிறது உலகம்.
தொலைதூரக் குரல்களில்
பொங்கிப் பிராவகம் எடுக்கிறது
அன்பும் சிரிப்பும்
சவுதியில் அடிக்கும் வெயிலின்
தகிப்பை உடனுக்குடன் தெரிய முடியும்
சென்னையில் பெய்யும் மழையின்
சத்தத்தை அப்படியே கேட்கமுடியும்
ஆனாலும்
இந்த இரண்டு வருடத்தில்
எதிர்வீட்டுக்காரரிடம்
பேசமுடிந்த வார்த்தைகள்
இரண்டே இரண்டு
கல்யாணம் வச்சிருக்கேன்

சந்தோசம் ’

அவசியம் வரணும்

சரி’

9.6.11

நினைவுகள் துளிர்க்கும் மேற்குத் தொடர்ச்சி நாட்கள்.


சிலு சிலுவென முகத்தைத் தடவும் அதிகாலைக் காற்று.தூரத்து ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கு கிளம்பும் பெண்களின் பட்டுச்சேலை சரசரப்பும் மல்லிகைப்பூவின் சுகந்த நெடியும்.மெல்லிய ஓசையில் எண்பதுகளின் தமிழ்சினிமாப்படலுமாக அந்தப் பயணம் அவளவு இனிதாக இருந்தது.ஏறும்போதே நடத்துநர் சிரித்துக்கொண்டு சும்மா ஏறுங்கசார் ஒண்ணேகால் மணிநேரத்துல ரிங்க் ரோட் போயிர்லாம் என்றார்.ஐநூறு ரூவா சில்றயில்ல என்று சொன்ன பிறகும் அதே சிரிப்புமாறாமல்,ஏறுங்க சார் ஐநூறு கலெக்சன் ஆகாமலா போகும் என்றார்.இப்படிச் சிரித்துக்கொண்டு பொதுத்துறையில் வேலை பார்க்கிறவர்கள் தேவதூதர்கள் போலத்தெரிவார்கள் அதுவும் பேருந்து நடத்துநர்கள் சிரித்தால் லாட்டரி அடிச்ச மாதிரித்தான்.

மொத்தம் அந்தவண்டியில் பத்துபேர்தன் இருந்தார்கள் விருதுநகருக்கு உள்ளே போகாது ஆத்துப் பாலத் துலதான் நிக்கும் என்று சொல்லிக்கொண்டே இன்னும் நான்கைந்து பயணிகளை ஏற்றிக்கொண்டார்.நான் சின்னப்பிள்ளையாய் இருக்கும்போதிலிருந்து விருதுநகர் ஊருக்குள் இருக்கும்சாலை அப்படியே தான் குட்டிக்குட்டிக் கம்மாய்கள் வழிமறிக்கும் சாலையாகவே இருக்கிறது.திர்மங்கலத்திலிருந்து விருதுநகருக்கு வர இருவது நிமிஷம்தான் ஆகும் விருதுநகருக்குள்ளேபோய் வெளியேற அதுக்குமேல நேரமாகிப்போகும்.ஊருக்கு வெளியே ஒரு புதிய பேருந்து நிலையம் கட்டினார்கள்.அங்கே பன்றிகள் கூட உள்ளே போவதில்லை.அது முன்னாள் எம் எல் ஏ ஒருவரின் சொந்த இடமாம்.பொதுச்சொத்துக்களை நாசமாக்குவதில் இந்தியாக்காரனுக்கு இணையாக எவனும் போட்டி போட முடியாது.அதில் மட்டும் எப்போதும் நாம் தான் ஜாம்பியன்.

தூரத்தில் அப்பாவின் டிவியெஸ்50 வண்டியில் அமர்ந்துகொண்டு வரும் கலூரிப்பெண்ணை கவனித்துவிட்டு நிக்கட்டும்ணே ஒரு டிக்கெட் வருது என்றார்.காமராஜ் காலேஜ் நிக்குமா என்றார் ஏறுங்க டைமாகுது நீங்க வரலயில்ல கம்பிலயிருந்து கையெடுங்க ரைட் என்றார். குளிர்ந்த்காற்று இன்னும் பொதுபொதுவென வர வண்டி வேகமெடுத்தது.வழக்கமாக காலையில் டீக்குடிக்கப்போகும் நைனா கடையில் அப்போதுதான்  வாசத்தெளித்துக்கொண்டிருந்தார்கள்.நடைப்பயிற்சிக்கரர்களில் ஓரிரு பெண்களும் கலந்து வந்தது கவனத்தை ஈர்த்தது.கார் ஓட்டினால்,சைக்கிள் ஓட்டினால்,போலிஸ் உடையணிந்திருந்தால்,புருவங்கள் தன்னாடி உயர்ந்துகொள்கிறது.அன்று அதிகாலை ராமநாதபுரம் வீதியில் மூன்று சக்கர சைக்கிளில் நான்கு பீப்பாய்களை வைத்துக்கொண்டு இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு போன பெண் மட்டும் யார்கண்ணையும் உறுத்தவில்லை.தலைமுறை தலைமுரையாய் ஆப்பம் விக்கிற மணியம்மா,ஒரு அந்திக்கடையையும் ஊத்தவாயோடு உத்துப்ப்பார்த்துக்கொண்டு சாப்பிட வருகிற லாரிக்காரங்கலையும் சமாளிக்கிற கெங்கம்மா ஹோட்டல் பெண்ணையும் எந்த பத்திரிகையும் புதுமைப் பெண்ணாகப் பார்ப்பதில்லை.

சாத்தூர் தாண்டியது ஆளாளுக்கு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு நினைவுகளினோடு பயணித்துக்கொடிருந்தார்கள்.நடத்துநர் ஓட்டுநரின் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டு டெப்போ மேனேஜர் செய்யும் அடாவடிகளை விமர்சித்துக்கொண்டு  வந்தார். நேத்துவரைக்கும் கம்முனுகெடந்த அந்த தொழிற்சங்கப்பேரவை க்காரய்ங்கெல்லாம் கரைவேட்டிகட்டிக்கிட்டு டெப்போக்குள்ள உக்காந்துட்டு டூட்டி பாக்காம போயிர்றாய்ங்கப்பா என்று சொல்லிக்கொண்டே வந்தார். எப்படித்தூக்கம் வந்ததோ தெரியவில்லை முழிக்கும் போது ஆத்துப்பாலத்திலிருந்து வண்டி கிளம்பிக்கொண்டிருந்தது.பக்கத்தில் ஒருவர் வந்து உட்கார்ந்தார் திரும்பிப்பார்த்தால் முருகேசனேதான். பேருந்தே திரும்பிப்பார்க்குகும்படிக்கு ரெண்டுபேரும் சத்தம்போட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.

முருகேசன் பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாகப்படித்தவன். முருகேசனைப்பார்க்கும் போதெல்லாம் ஜட்டியைத் தலையில் போட்டுக் கொண்டு பொய்யாக ஒப்பாரி வைக்கும் அந்தச்சித்திரம் தான் நினைவுக்கு வரும். முருகேசன் அப்படி அழும்போது ஒட்டுமொத்த விடுதியே சிரித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் பிரின்ஸ்பல் வந்துவிட்டார்.அவர் இப்படித்தான் ஆகாத நேரத்திலெல்லாம் வந்து  தொலைத்து விடுவார். தம்மடிக்கும் போது பெட்டியில் தாளம்போட்டுக்கொண்டு பாட்டுப்படிக்கும்போது,மொட்டக்குண்டி கதைகள் பேசும்போதென்று நினையாத நேரத்தில் திடும்மெனப் பிரசன்னமாவார்.

முருகேசனைப்பார்க்கும்ப்போதெல்லாம் இந்தப்பாட்டு நினைவுக்கு வரும்.இல்லையானால் இந்தப்பாட்டைக்கேட்கும்போதெல்லாம் முருகேசன் நினைவும் சிரிப்பும் வரும். “காட்டன் டுக்கேயிலே மியே மெனிடேசு சீனக் கசின்”.அப்போது இந்தப்பாட்டு அவ்வளவுபிரபலம்.என்ன பாட்டுன்னு தெரியுதா. பருத்தி எடுக்கையிலே என்னப்பலநாளு பாத்த மச்சான்.முருகேசன் நல்ல சிவப்பு பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கொண்டு அகலப்பட்டி, அகலகாலர் சட்டையை டக் பண்ணிக்கொண்டு வந்தால் ஆண்களே ஆசைப்படுவார்கள். அவனுக்கு ரகரகமான பென்தோழிகள் உண்டு. அவனுக்கு தினப்படிக்குத் தொழிலே காலையில் எழுந்து குளித்து திண்ணீறு வைத்துக்கொண்டு இன்பண்ணிவிட்டு நேரே சாத்தூர் பேருந்து நிலையத்துக்குப் போவதுதான்.

அங்கே ஒருநாள் பிரச்சினையாகி அவனுக்கு அடி விழுந்துவிட்டது.கிழிந்த சட்டையோடுவந்தான்.

8.6.11

இடவல பேதமும் ஒரு அர்த்தமுள்ள திண்ணையும்.


திருவிழாக்கூட்டம் போல இருந்தது. சண்டைதான்.ஓசியில் பார்க்கக் கிடைக்கிற நிகழ்கலை இல்லையா.'தெருச்சண்டை கண்ணுக்கு குளிச்சி' எங்கம்மா இப்படிச் சொலவடை சொல்லும். அவன் தான் மாரிமுத்து கையில வேப்பங் கொலயில்லாம ஆடிட்டு இருந்தான். என்ன என்று கேட்டால் அவன் பீச்சாங் கையி என்று சொல்லிவிட்டானாம்.சொன்னால் என்னப்பா ஒனக்கு இடது கைப் பழக்கம்தானே என்று கேட்டால் சொன்ன திலகரை விட்டுவிட்டு என்னோட மல்லுக்கு நின்னான்.'என்ன ரெண்டடி ஆடிச்சிருந்தாக்கூட பொறுத்திடுப்பேன் எப்படிச்சொல்லப்போச்சு' என்று பிராதாகிவிட்டது.ஊர்ச்சனங்களும் கூட அப்படிச் சொன்னது தப்பென்றே அபிப்பிராயப் பட்டார்கள்.

நொட்டாங்கை பழக்கமானாலும் கூட அவனது செயல்களெல்லாம் மிகத்துள்ளியமாக இருக்கும். எழுத்து அச்செழுத்துப்போல இருக்கும்.கிட்டி அடிக்கும் போது எதிரே நின்றால் மூஞ்சப் பேத்துரும்.அப்படி அந்த இடது கை யாருக்கும் இல்லாத வல்லமையை கொடுத்தாலும் அவனே கூட அதை இகழ்வாக எண்ணியிருந்தான்.

அவனென்று இல்லை ஊர்,ஜில்லா,நாடு எல்லாம் அப்படித்தான் மதுரை போகும் பேருந்தில் விருதுநகருக்கு பயணச் சீட்டுக் கேட்டேன் நிற்கமுடியாத கூட்டம் வலதுகையில் கம்பியைப் பிடித்திருந்தேன்.அதனாலே இடதுகையால் காசைக் கொடுத்தேன் கண்டக்டர் அளவுகடந்த கோபமடைந்து விட்டார் என்னா சார் 'படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க இடது கையில காசு தறீங்க'.வலது காலை எடுத்து முதல் அடிவைக்க வேண்டுமென்கிற தொன்று தொட்ட ஆச்சாரங்களும் இப்பொழுது கூட மிக நெருக்கமான நபர்களை சங்கர் தான் அவனுக்கு வலது கை மாதிரி என்று சொல்லுவதுண்டு.

இரண்டிரண்டாக இருக்கும் கண்,காது,நாசி போன்ற உறுப்புக்களுக்கு இடது வலது பேதமில்லை.அப்படியிருக்க கைக்கு மட்டும் இட வல பேதம் எப்படி வந்திருக்கும்.இடது கை இழிவான செயலுக்கும், வலது கை உயர்வான வேலைகளுக்கும் பயண்பாடாவதால் இந்த பேதம் வந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இழிவும் உயர்வும் நமது உடலுக்குள்ளே தான் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வழும் பதிவுலக நண்பர் திரு ராம் அவர்கள் ஊருக்கு வந்திருந்தார்கள்.பத்தமடையில் தோழர் தமிழ்ச்செல்வன் வீட்டில் நானும் தோழன் மாதுவும் அவரைச்சந்திக்க நேர்ந்தது. ஒரு முழுப்பகல் தமிழ்ச்செலவனுடைய சமயலையும் பேச்சையும் சேர்த்து ருசிக்கக் கிடைத்த தருணம் அது.

உலகமே பார்த்து வியக்கும் குடும்பம் கூட்டுக்குடும்பம் நமது தனிசிறப்பு என்பது தெரியும் ஆனால் ஒரே குடும்பத்துக்குள் இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வழக்கில்லாமல் ஒதுங்கி வாழ்வது உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சித்தகவல் என்று சொல்லுகிறார்.ஆனால் நமோ 'நா அவங் கூடப்பேச மாட்டேன்' என்று இலகுவாகச் சொல்லிவிடுகிறோம்.மற்ற உறவுகளுக்கு எப்படியோ ?. கணவன் மனைவிக்குள் பேச்சில்லாமல் கழிந்த கொடூர வாழ்க்கை இங்கே கோடிக்கணக்கில் இருக்கும்.அதைக்கூடப் பெருமிதத்தோடு சொல்லும் நமது கௌரவம்.இன்னும் சிசுக்கொலை பற்றி,நீளப்படங்கள் பற்றி,தற்கொலைகள் பற்றி எல்லாம் அவரோடு ஒருநாள் முழுக்கப் பேசிக்கிடந்தோம் நாங்கள்.

உளவியலில் ஆராய்சிப்பட்டம் பெற்று  அங்கே பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ராம் சொல்லும்போது' ஆதிகாலத்து தாய்மர்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தங்களுக்கான அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது குழந்தைக்கு தாயின் அருகாமையை உணர்த்துவதற்காக இதயம் இருக்கும் இடது பக்கம் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்க வேண்டும். வலது கையினலேயே  எல்லாக் காரியங்களும் செய்து அது பழக்கமானது என்று  இடதுகைப்பழக்கம் உருவானதன் பூர்வாசிரமம் பற்றிச்சொன்னார். அப்படியானால் ஆண்கள் ?

விலங்குகளோடும்,அதன் பின்னர் மனிதரோடும் சண்டையிட்டுக் கொண்டே காலம் தள்ளிய ஆண் ஊயிரின் மையப் புள்ளியான இதயத்தைப் பாதுகாக்க கவசங்களை இடது கையிலும் கல்,வில், வாள் போன்ற கொலைக்கருவிகளை வலது கையிலும் ஏந்தியபடி அலைந்து அலைந்து வலது கைப்பழக்குத்துக்கு ஆளாகியிருக்கிறான் என்று கூறினார். சொந்த உறுப்புக்களுக்குள் பேதமாகிப் பின்னால்,சொந்த மனிதக் கூட்டத்தில் பேதமாகி,உலகமே இடவல பேதத்தில் இயங்க ஆரம்பித்தது ஒரு பெரும் தேடலுக்கான வரலாறு.

ரோமானியர்களே இடது பழக்கத்தை இழிவு பழக்கமாக உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்.அவர்களது கத்தோலிக்க மதம் போகிற திசையெல்லாம் இடது கைப்பழக்கத்துக்கு எதிரான மூடக்கருத்துக்களும் கொண்டுசெல்லப்பட்டன. ஜீசஸ் உட்கார்ந்திருப்பது வலது பக்கம் எனவும்,சாத்தான்கள் இட்து பக்கம் எனவும் கற்பிதப்படுத்தப்பட்ட பைபிள் பரப்புறைகள் உலகம் எங்கும் வியாபித்தது.வலது கை குலுக்கல், வணக்கம் சொல்லுதல் போன்ற நடை முறைகளை அறிமுகப்படுத்தியவர்களும் ரோமானியர்களே.

ஆனால் விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் இடது பக்கத்தின் சிறப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. மூளையின்  செயல்பாட்டுப்பகுதி, இதயம் அமைந்திருக்கும் பகுதி,அதனோடு தொடர்புடைய உடலுறுப்புக்கள் எல்லாமே இடது பக்கமே அமைந்திருக்கின்றன.

இடது கையில் நான்காவது இருக்கும் மோதிர விரலின் நரம்புகள் நேரடியாக இதயத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறதாம்.வரலாற்றின் மிகச்சிறந்த ஆளுமைகள் எல்லாம் அதிஷ்டவசமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.இசைமேதை பீத்தோவன்,உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் மைக்கேல் ஆஞ்செலோ,லியார்னோடாவின்சி, தத்துவமேதைகள் கொதே,நீட்ஷே. ப்போலியனும் அவனது மனைவி ஜோசப்பினும் இடது கை ஜோடி, ஜூலியஸ் சீசர் கூட ஒரு இடது கை வீரன். டகளம், விளையாட்டுத் துறைகளில் இடது ஆட்டக்காரர்கள் தனித்த இடத்தைப் பிடித்தவர்களாக அறியப்படுகிறார்கள்.

மீறலும்,எதிர்ப்பும்,கட்டமைப்பை எதிர்த்து கலகம் நடத்துவதும்,அந்நியமும்,இருட்டும்,இடது பக்கத்திலிருந்தே வரும்  என்பதே உலகளாவிய நம்பிக்கைகள்.வழி வழியாய் வந்த மத,அரச,முதலாளி நம்பிக்கைகள் வலதென்றும்,அதை எதிர்ப்பது இடதென்றும் பின்னாளைய உலகம் பிரிந்து கொண்டது.பிரஞ்சுப்புரட்சிக்கு முந்தையப் பாராளுமன்றத்தில் கனவான்கள் இடதுபக்கத்திலும்,அறிஞர்கள் வலது பக்கத்திலும் அமர்ந்திருந்தார்களாம்.

மிகப்பெரும் ஆராய்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து கிடைக்கிற பல அறிய தகவல்களுக்கும் ஊற்றுக்கண்ணான இந்தப்பொருள் குறித்து நிறைய்யப் பேச விவாதிக்க களம் இருக்கிறது. காலம் இல்லை.

( இது ஒரு மீள்பதிவு )

5.6.11

திடீர் ரசம்,திடீர் சாம்பார், மற்றும் திடீர் புரட்சியாளர் ராம்தேவ்.


ஜீவ சமாதி யடைந்தார்,தண்ணீரில் மிதக்கிறார்,குருடர்களைப்பார்க்க வைக்கிறார்,வாயிலிருந்து லிங்கத்தை எடுக்கிறார்,கிரிக்கெட்டில் ஜெயிக்க யாகம் நடத்துகிறார்,ஓடிப்போனார்,இரட்டை ஆயுள் தனடனை கொடுக்கப்பட்டது,ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருந்தார் என்றுதான் இது வரை சாமியார்களைப்பற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தது.சமீபகாலமாக  அவர்களுக்கு புது அவதாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது அரசியல் அவதாரம்.அதுவும் பரபரப்பான அரசியல் அவதாரம்.தங்களின் ஞானதிருஷ்டியால் நடந்தவற்ரையும் நடக்க இருப்ப வற்றையும் அறியமுடிகிற இவர்களின் கண்ணுக்கு இப்பொழுதுதான் இந்த லஞ்சம் கறுப்புப்பணம் தெரியவந்திருக்கிறது.இவ்வளவு நாட்கள் அந்த ஞானதிருஷ்டி என்கிற ரேடாரில் லஞ்சமும் ஊழலும் கறுப்புப்பணமும்  தட்டுப்படாமல் போனது எப்படி.அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது எப்படி.

நேற்று கரைவேஷ்டி கட்டிய அண்ணாதிமுக கவுன்சிலரலிருந்து தலைமுறை தலைமுறையாய் கரைவேஷ்டி கட்டாமல் கொள்ளையடிக்கிற முதலாளிகள் வரை தாங்கள் அடித்த பணத்தில் முதல் பங்கை உண்டியலில்தான் போடுகிறார்கள்.அன்னதானம் போட,கும்பாபிஷேகம் நடத்த என கோயில்களுக்கு கொடுக்கிற அன்பளிப்புகள் தங்கள் கறைகளை கழுவிக்கொள்வதோடு வருமாண வரியிலிருந்தும் விலக்குப் பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இப்படியான ஆன்மீக செயல்பாடுகளின் நிஜமான நிதியாதாரம் முறைகேடாக சம்பாதித்த பணம்தான் என்பதை தெய்வமே அறியும்.அதனால் தான் அந்த ஏரியாவுக்குள் இன்று வரை நுழையாமல்  சமியார்களும் பீடங்களும் நிஷ்டையில் இருந்தார்கள்.  இப்போது தங்களின் மௌனத்தைக் கலைத்துவிட்டு இந்த தவறுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது வினோதமான விஷயமக இருக்கிறது.சுமார் பதினெட்டுக்கோடி செலவில் முற்றிலும் குழு குழு வசதி செய்யப்பட்ட பந்தலில் இருந்துகொண்டு  அவர்கள் படம் காட்டுவதைப் படம் பிடிக்க வெறிகொண்டலைகிறது அவர்களின் ஊடகங்கள்.

ஒரு யோகா சொல்லிக்கொடுக்கிற சாமியார் எப்படி பதினெட்டுக்கோடி செலவழித்து உண்ணாவிரதம் இருக்க முடியும். ஒரு ஆன்மீக நிலையம் எதற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் உயர்தொழில்நுட்ப மருத்துவமனைகள் நடத்துகிறது.கருணையும், பரிவும்,மண்ணிப்பும் நிறைந்த சாத்வீகச்சாமியார்கள் ஏன் மசூதியை இடிக்கவேண்டும் என்கிற மனசாட்சிப்படியான கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. ஒரு மிகப்பெரிய ஊழலைக்கண்டுபிடித்து அதற்குத்தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அன்னா ஹசாரேவும்,ஆன்மீக ராம்தேவும் விஸ்வரூபமாகக்காட்சிப் படுத்தப்படுவது எதற்காக,யாருக்காக ?.

தங்களின் ஒருநாள் கூலியையும் இழந்துவிட்டு கைக்காசும் செலவழித்து வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்னாடி உட்கார்ந்து கோஷமிடும் லட்சோபலட்சம் மக்களின் கோரிக்கைகளை உதாசினமாகக் கடந்து போகிறது ஊடகங்கள் . இங்கொன்றும் அங்கொன்றுமாக தினம் தினம் இந்தியா முழுவதும் நடக்கிற போராட்டங்கள்.ஊழலின் ஊற்றுக்கண்ணான நிறுவணங்களில் நேரடியாகத் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருக்கிறது ஒரு தன்னலமில்லாத கூட்டம்.அநீதிகளுக்கு எதிராகக் களத்தில் இறங்கி அதனால் இன்னல்களை சம்பாதித்து இறுதியில் தங்கள் உயிரையும் பலிகொடுத்த தியாகிகள் ரத்தினசாமி,லீலாவதி போன்ற வர்களின் மரணம் எதோ முன்பகை காரணமாக நடந்தது போல ஒரு வரிச்செய்தியாய்ச் சித்தரித்தது ஊடகங்கள்.

இப்போது களத்தில் இருக்கிற எந்த அரசியல் கட்சியும் எந்த அரசியல் வாதியும் சுத்தமானவர்கள் இல்லை என்பது போலொரு தோற்றத்தை உண்டு பண்ணவே திட்டமிட்டு இந்த திசை திருப்பல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.   இந்த உண்ணா விரதப் போராட்டத்துக்கான உடனடிப்பலன்கள் ஏதும் சர்வநிச்சயமாக நிகழ்ந்து விடப் போவதில்லை.ஆனால் திட்டமிட்டபடி பலன்கள்  அரசியல் அனுகூலமாக முடியும்.

2.6.11

கட்டபொம்மன்,பகத்சிங்,பாரதி வரிசையில் பதிந்துபோன மேற்குவங்கம்



இந்தியா முழுமைக்கும் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கும் போது கேரளம் ஓணம் கொண்டாடுகிறது.இந்தியா முழுவதும் அடிமைப்பட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிகளும் தோட்டாக்களும் சுபாஷ் சந்திரபோஸ் களும் சூரியாசென்களும் கல்பனாதத்துகளும் மேற்குவங்கத்திலிருந்து கிளம்பி னார்கள். சிட்டகாங் கிளர்ச்சியும் சூரியா சென்னும் வரலாற்று ஆசிரியர்களால் மறைக்கப்பட்ட பெயர்கள்.அந்த மேற்குவங்கம் அரவிந்தர் என்கிற புரட்சிக்காரனைக்கொடுத்தது ஆனால் புதுச்சேரி அவருக்கு ஆஸ்ரமம் அமைத்துக் கொடுத்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியிருக்கவேண்டும் என்பதை இப்போதே சிந்திக்கிற மாநிலம்  என்கிற பெயரும் அதற்கு எதிராக எனது எதிரிகளை கல்கத்தாவில் விட்டுச்செல்கிறேன் என்று மவுண்ட் பேட்டன் சொல்லிக்கொண்டு  திரும்பிப்போனதும் வரலாற்றில் அழியாத வார்த்தைகள். அவர் திரும்பிப்போகிற நேரத்தில் கூட அடிமை எதிர்ப்பின் உக்கிரமான பகுதியை  மேற்குவங்கமே எடுத்துக்கொண்டது. அன்னிபெசண்ட், நிவேதிதா,அன்னைதெரேசா,தாகூர்,சத்யஜித்ரே,மிருணாள் சென், அபர்ணா, நந்திதா போஸ் என்கிற நூற்றுக்கணக்கான ஆளுமைகளோடு ஒரு கால்பந்தாட்டக்காரனுக்கு சிலை வைத்திருக்கிற மாநிலம்.

இன்னும் கூட அமர்த்தியா சென் போன்ற பொருளாதார வல்லுநர்களை உற்பத்திசெய்து கொடுத்துக்கொண்டிருக்கிற மாநிலம்.  இவ்வளவு பெருமை களுக்கும் ஒரே காரணம் ஒரு முப்பத்திநான்கு ஆண்டுகள் அங்கு இடதுசாரி ஆட்சி நடைபெற்றதுதான் எனச்சொல்லமாட்டேன். இவ்வளவு காலம் அங்கு ஒரு செங்கொடி ஆட்சி நடைபெறுவதற்கு இவையெல்லாம் தான் மூலகாரணியாக இருந்தது.இன்னும் இந்தியா இருக்கிற வரை அது அப்படித்தான் தொடரும்.காரணத்தைம் ஒரு சின்ன உத்தாரணத்தோடு சொல்லலாம். இன்றைக்கு இருக்கிற அணைத்து தேசியத் தொழிற் சங்கங்களுக்கும் ஆரம்பகாலத்தில் அங்குதான் முளைப் பிடித்தார்கள். இன்றைக்கும் கூட ஐஎன்டியுசி தொடங்கி புரட்சிகர தொழிலாளர் முன்னணிகள் வரையிலும் பெருவாரியானவை மேற்குவங்கத்திலிருந்தே நிர்வகிக்கப்படுகின்றன.அதனாலேகூட அது எனக்குப்பிடித்துப்போனது எனச்சொல்லமாட்டேன்.

1958 ல் அரச மான்யம் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் இன்னும் முதல்வர்களை ராஜராஜ ராஜமார்த்தாண்ட என்று  ஒரு முழத்துக்கு நீட்டி புனைப்பெயர்  சொல்லி விட்டு நிஜபெயரை மறந்துபோகும் அளவுக்கு துதிகள் பெருகிக் கிடக்கிற தேசத்தில்.   இருபத்தைந்தாண்டு காலம்  முதலமைச்சாராயிருந்த ஒருவரை எல்லோரையும் போலத்தோழர் ஜோதிபாசு என்று அழைக்கமுடிகிற எளிமை குடிகொண்டிருந்தது அங்கேதான். ஒரு ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தால் எவ்வளவு அள்ள முடியும் என்பதை மாறி மாறிவரும் தமிழக ஆட்சியாளர்களும் அவர்களது தோழிகளும் குடும்பத்தினரும் உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முப்பத்துநான்கு ஆண்டுகாலம் பதவியில் இருந்த அந்தக்கூட்டத்துக்கு அவப்பெயர் கிள்ளினான்,முள்ளினான்,குசுவினான் என்பதுதான். அவர்களுக்கென்று சொந்த கொடநாடோ,சன்,கலைஞர் குழுமங்களோ கிடையவே கிடையாது.

கவுஹாத்தியில் நடைபெற்ற அகில இந்திய கிராமவங்கி ஊழியர்சங்க மாநாட்டுக்கு போகிற வழியில் அந்த ஹௌரா சந்திப்பில் அரைநாள் தங்கவேண்டியிருந்தது. எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளார் தோழர் கிருஷ்ணகுமார் காத்திருக்கும் அறையை விட்டு யாரும் வெளியே போகக்கூடாது என்று கடும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.  கட்டுப்பாட்டை மீறுகிற மனசு எல்லோர் அடிமனதிலும் குறுகுறுத்துக் கொண்டே இருக்குமல்லவா ? நாங்கள் கட்டுப்பாட்டை மீறிப்போனோம். போகிற வழியெங்கும் சொத சொதவெனச் சகதி. கூடவந்தவர் சொன்னார் பார்த்தாயா கம்யூனிஸ்ட் கட்சி ஆளுகிற மாநிலத் தலைநகரில் கூட குடிசைகளையும் சகதிகளையும் ஒழிக்க முடியவில்லை என்று. அப்பொழுது எனக்கு பதில்சொல்லத் தெரியவில்லை ,விமர்சனம் வந்தது,கேட்டேன் .பிழைக்கவே வழியில்லாத பீகாரிகளும் ஒரியாக்காரர்களும் தினம் தினம் கள்ள ரயிலேறி வந்து கல்கத்தாவில் குடிபுகுந்தால் என்ன ஆகும்.இந்தியாவில் உள்ள மொத்தக்குடிசையும் அங்கேதான் இருக்கும் என்று பதில் சொன்னார் ஒருதோழர்.

ஒரு கடைகோடி குடிசைவாசிக்கு இருக்கும் ஜீவாதார நம்பிக்கையைப் பெறுவது எவ்வளவு பெரிய விஷயம். அங்கெ போன உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என்கிற உறுதி வந்ததற்கு அந்த மாநிலம் கொண்டிருந்த மனிதாபிமானம் மட்டுமே  காரணம். எனவே தான் இந்தியாடுடே,ஐபிஎன்,என்டிடிவி, தினமலர்,தினத்தந்தி,சன்டீவி ஆகிய ஊடகங்களுக்கு முதல் எதிரியாகவே நீடிக்கிறது. அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.ஆகையால தான் ஜெயித்து பதவிக்கு வந்த மம்தா பானர்ஜியை எப்போதும் காட்டன் சேலை உடுத்தும் எளிமையானவர் என்று முன்னிறுத்துகிறது. இன்றும் கூட ஓட்டுவீட்டில்தான் குடியிருக்கிறார் என்று பெருமிதப்படுகிறது.காட்டன் புடவை உடுத்துவதும், ஜோல்னாப்பை தொங்கவிட்டுக் கொள்வதும்,தங்க நகைகள் தவிர்த்து சில எளிமையான அலங்காரங்கள் செய்துகொள்வதும் வங்காளிகளின்  பிரத்யேகக் கலாச்சாரம். அப்படிப் பார்த்தால் அந்த மாநிலத்து ஆண்களெல்லாம் வேஷ்டியை தார்ப்பாச்சா கட்டுவார்கள் அதற்காக அவர்கள் வெறும் கோவணம் தான் கட்டிக் கொள்கிற்றார்கள் என்று சொல்வதா ?.

ஆனலும் அதை ஒரு பெரிய கவர்ச்சி செய்தியாக வெளியிடும் பத்திரிகைகளும் அதைப்படிக்கிற தமிழ் வாழ் தினத்தந்தி வாசகன். உள்ளூர் அய்யாவையும் அம்மாவையும்,அவர்களின் கொடிக்குகளான கவுன்சிலர்களையும் அவர்களின் மனைவிமார்கள் அள்ளிப்போட்டுக்கொள்கிற நகைகளையும் நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறான்.அந்த இடியில் சொல்லாமல் விட்டுப்போன முந்தைய முதல்வர்களின் எளிமை விடுபட்டுப்போகிறது.இப்படிக் கள்ள மௌனம் காப்பதிலும் பெரிய்ய அரசியல் இருக்கிறது. அதாவது மனித மனம் எதிர்விதமாகக் கற்பனை செய்யும் குணாம்சம் கொண்டது .

முதன்முதலில் கடலைப் பார்த்த ஒரு கருசக்காட்டு மனிதன்  மாப்ப்ள பாத்தியா இந்தூர்க்காரங்க குடுத்துவச்சவங்கடா,வருசம் முழுக்க நல்லாக்குண்டி கழுவுவாங்க என்று சொன்னானாம். அப்படித்தான்  இந்த ஊடகங்கள் மக்களுக்கு செய்திகள் சொல்லுகிறது.

எப்ப பாரு ரஷ்யாவப்பாரு மேற்கு வங்கத்தப்பாருன்னு சொல்லிக்கிட்டு அலைந்தது ஒரு கூட்டம் இனி இந்தியாவில் அப்படி பொதுநம்பிக்கைகளை சுட்டிக் காட்டுவதற்கும் சொல்லி க்காண்பிப்பதற்கு இடமில்லாமல் போய் விட்டதா?

இல்லை.

எம் இளமைக் காலங்களில் கட்டபொம்மனின், வாஞ்சிநாதனின், பகத்சிங்கின், பாரதியின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் முறுக்கேறி ஓடுமே ஒரு சூடான ரத்தம்.அவர்களின் கதைகள் கேட்கிறபோதெல்லாம் ஒரே ஒரு நாள் அவர்களைப்போல் வாழ்ந்து மடிந்து போகச்சித்தமாகும் ஆவல் மேவுமே ?  அது போல.

இந்த தேசத்தில் காணக்கிடைக்கிற மேடு பள்ளங்களுக்கு,
ஆண்டான் அடிமை  வழக்கத்துக்கு,
பாட்டினிச் சாவுக்கும் பத்து ஏக்கர் பங்களாவுக்கும் உள்ள வேறுபாட்டுக்கு மருந்தாகக்கிடைக்கிற ஒரே மாற்று என்ற நம்பிக்கையும்
அந்த நம்பிக்கையை சுட்டிக்காட்டவவும் இப்போதைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிற பொது மனிதர்கள் நிறைந்த இடம்
அந்த மாநிலம் என்பதாலே எனக்குப்பிடிக்கும்.

பட்டங்கள்  ஆளவும் சட்டங்கள் செய்யவும் கூடுகிற ஒரு சட்டசபையை,அந்த மாநிலத்தின் முதல்  மண்டபத்தை எழுத்தாளர்கள் கட்டிடம் என்று சொல்லுவது தான் கூடுதலாகப் பிடிக்கும்.