21.6.11

இருளுக்கும் ஒளிக்கும் ஊடே ஒரு அந்திக்கருக்கல்


ரிங்க் ரோடு வந்து இறங்கும் போது அந்தி சாய்ந்துகொண்டிருந்தது.ஒரே கூட்டமாக இருந்தது.இவர்கள் எல்லோரும் கோவில்பட்டி போகிறவர்களாக இருக்ககூடாது என்று கருவிக்கொண்டேன்.போனசனிக்கிழமை மாதிரியே இறங்கியதும் ஏதாவது பேருந்துகிடைத்து விட்டால் சரியாக ஒன்பது மணிக்கு வீட்டுக்கு போய்விடலாம். பலசரக்கு கடையைக் கடக்கும் போது நைனா ரண்ட சார் இப்புடுதான் ஒச்சவா என்றுகேட்பார்.அவரைத் தொடர்ந்து அவரது பேத்தி கடகடவெனப் பேசும் தெலுங்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் அங்கிருந்து நடையைக் கட்டலாம்.கன்னங் கரேலென்று நேர்த்தியாய்க் குடை விரித்திருக்கும் நிலவேம்பு மரத்தின் நுனியை எட்டி இழுத்துக்கொண்டே எஸ்.ஆர் நாயுடு காலனியைக்கடந்து போகலாம்.எதிர்ப்படும் பெண்களின் ஈர்ப்பு இனிய பாடல்களை  ஞாபகப்படுத்த இன்னும் இரண்டு நிமிடத்தில் வீட்டுக் கதவைத்திறக்கலாம். இப்படி ஒரு வாரத் தனிமை வீட்டையும் தெருவையும் தெரு மனிதர்களையும் வசீகரமாக்கியது.

எய்யா திருசெந்தூர் தூத்துக்குடி வண்டிவந்தா சொல்லுங்க, இந்தக்கெழவிய ஏத்தி வுட்ருப்பா என்று சொல்லிக்கொண்டே ஒரு கட்டைப் பையை  கீழே வைத்துவிட்டு எனது முகத்தைப்பார்த்தார் அந்தப்பாட்டி.கட்டைப்பையில் வெளியே தெரியும்படிக்கு இருந்த கிளிமூக்கு மாம்பழமும் பாக்கெட் மிக்சரும் பேரக்குழந்தைகளின் ஆர்ப்பரிப்பையும் சந்தோசத்தையும் சுருட்டி வைத்திருந்தன.கோவில்பட்டி வண்டி காலியாய் வந்தது புது வண்டி இளையராஜா பாட்டு வேறு.தம்பி இது எந்தூர் வண்டி கோயில்பட்டி.இப்படியே எனக்கான மூன்று வண்டிகள் போய்விட்டது. பாட்டிக்காகக் காத்திருந்தேன்.அப்போது கூட்டம் கிட்டத்தட்ட குறைவாக இருந்தது.நான் பாட்டி,சின்னப் பையனோடு ஒருவர் கொஞ்சம் கொத்தனார்கள் மட்டும் இருந்தோம். கொத்தனார்களோடுஅவரும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கடைசியாய் வந்த கோவில்பட்டி வண்டியில் ஏறினார் என்னைத் திரும்பிப் பார்த்து சார் வரலியா என்று கேட்டார்.பாட்டி என்னைப்பார்த்து நீ கோயில்பட்டி போனுமா மகராசன் கெழவிக்காக நிக்கியா.தூத்துக்குடி பேருந்து வந்ததும் ஏறினாள் வண்டி புறப்பட்டது பின்னர் நின்று ஒரு பெண்ணையும் ஒரு பெண்குழந்தையையும் இறக்கிவிட்டு விட்டு எதோ சத்தம் போட்டுக்கொண்டே விசிலடித்தார் நடத்துநர்.

அதன் பிறகு வந்த மூன்று வண்டிகளும் பைபாஸ்ரைடர்.ரிங்ரோட்டில் நிற்கவே இல்லை. இருட்டி விட்டது . வாகனங்கள் மஞ்சள் கண்களுடன் பாலமேறி வரத்தொடங்கின.வானம் மஞ்சளுக்கும் கறுப்புக்கும் நடுவில் ஒரு புதுநிறத்தை கரைத்துக்கொண்டிருந்தது. ஒற்றை வெள்ளைக்கொக்கு மட்டும் பறந்து போனது. அதன் இறக்கை அசைவில் நெடிய பாரமும் சோகமும் தெரிந்தது.ராமேஸ்வரம் திருப்பத்தில் இருந்த பெட்டிக்கடைக்காரர் பால் சட்டியைக்கழுவி ஊற்றி விட்டு ரோட்டுக்கும் கடைக்கும் நடுவே சூடம் ஏற்றி  வைத்து விட்டுக் காத்திருந்தார். கம்மங்கூழ் விற்றுக் கொண்டிருந்த வரும்  தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு கடைசியாய்க் கடந்துபோனார். பரப்புக்குறைந்து நியான் விளக்குகளின் மஞ்சள் நிற மௌனம் அந்த இடத்தில் குவிந்து கிடந்தது.நான் அந்தப்பெண்,அந்தக்குழந்தை அவ்வப்போது கடந்து போகும் வாகன இறைச்சல்.

சற்றைக்கெல்லாம் அந்தக்குழந்தை கால்வலிக்கிறதென்று பேருந்து நிறுத்தத்தின் படியில் படுத்துவிட்டது.இப்போது இருவருக்குமான பிரதானப்பிரச்சினை தனிமை. என் ஆராய்ச்சி மனது அவள் யார்,எங்குபோகிறாள்,ஏன் அவளது கணவன் வரவில்லை என்று  கணித்துக் கொண்டிருந்தது.அவள் கட்டியிருந்த பட்டுச்சேலை எங்கோ விஷேசத்துக்குப் போய் வருவதாக முடிவுக்கு வரவைத்தது. பெருஞ் சஞ்சலத்துக்குப் பிறகு முகம் பார்த்தேன். வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.இது  அவமானமாக இருந்தது. பாட்டியைச்சபித்துக் கொண்டேன்.ஒரு நிமிடம் தாமதித்தால் ஓராயிரம் அடிகள் பிந்தங்கிவிடுவோம் என்கிற சோலைம்மாணிக்க அண்ணன் வார்த்தைகள் காரணமில்லாமல் நினைவுக்கு வந்தது. அவள் அப்படித்திரும்பியது அந்த சூழலின் இயல்பற்ற நிலைமையை இன்னும் அதிகரித்தது.  எதிர்திசையில் போய் நிற்கநினைத்த போது லாரிகள் அதிகமாக வராஅரம்பித்தது.  அதைத் துடைத்து என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளச் சற்றுத் தள்ளிப்போய் நின்றுகொண்டேன். எனது செல்போனை எடுத்து அதிலிருந்த குறுஞ் செய்திகளைப் படித்துக்கொள்வதாகப் பாவனை பண்ணினேன்.

வேகமாய் வந்த நேசனல் பெர்மிட் லாரி அவள் பக்கத்தில் வந்து நின்றது.ஓட்டுநர் கழுத்தை நீட்டி அவளிடம் ஏதோகேட்டான். அவள் பதறிப்போய் என்னருகில் நெருங்கி வந்து நின்றாள். மறுபடியும் ஒரு தூத்துக்குடி வண்டி வந்தது. வண்டியைப்பர்த்து விட்டு என்னைப் பார்த்துக்கேட்டாள் ‘அண்ணே தூத்துக்குடி வண்டிக கோயிலுப்பட்டி போகாதா”. இல்லீங்க அருப்புக்கோட்டை,எட்டயபுரம் வழியா நேராப் போயிரும். இன்னொரு திருநெல்வேலி வண்டி வந்தது ஓடிப்போய் மகளை எழுப்பித் தூக்கிக்கொண்டு நடக்குமுன் நின்றவண்டி கிளம்பி விட்டது.பாப்பா அது புதுப் பஸ்ஸ்டாண்டுதான் போகும் நீ அங்கிருந்து பத்துமணிக்குமேல் திருப்பியும் ஒத்தீல ஊருக்குள்ள வரணும். பயப்படாதே நானும் கோயில்பட்டி வண்டிலதான் போனும் என்றேன்.சரிண்ணே என்றாள்.அதற்குப்பிறகுப் வந்த எல்லாவண்டிகளும் நிற்காமல் போகவே இன்னும் பரபரப்பானாள்.  ஆமா உங்க வீட்டுக்கரரெ பஸ்ஸ்டாப்புக்கு வரச்சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டேன். மஞ்சள் நியான் விளக்கில் அவள் முகம் இறுகுவதை உணரமுடிந்தது.

அதன் பின்னாடி அவள் என்னோடு பேசுவதைத் தவிர்த்துக்கொண்டாள். அது பாதுகாப்புக்காகவா இல்லை வேறெதுவுமா எனக்கணிக்க முடியவில்லை.கோவில்பட்டி பேருந்து வந்ததும் குழந்தையைத்தூக்கப்போனேன். அவள் முந்திக்கொண்டு குழந்தையை கூடுதல் வாஞ்சையோடு அள்ளிக்கொண்டாள். சூட்கேசை நான் எடுத்துக்கொண்டேன். காலியிருக்கையில் அவளைஇருத்திவிட்டு என்னிடம் சூட்கேசை வாங்கிக்கொண்டாள். நான் கடைசி இருக்கைக்கு போய்விட்டேன்.பேருந்து நகர்ந்து ஓடியது முகம் வருடிய காற்றில் தூங்கிப்போயிருந்தேன்.ஒரு மணிநேரத்துக்குப்பின் கண்விழித்துப்பார்த்தேன் விருதுநகரை நெருங்கிக்கொண்டிருந்தது.பேருந்து பயணிகள் எல்லோரும் கிட்டத்தட்ட அரைத்துக்கத்தில் இருந்தார்கள். அவள் மட்டும் பிள்ளையை மடியில் கிடத்தி அவளை அணைத்துக்கொண்டு கடந்து போன இருளை வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள். கண்ணில் கணகணவென்று வீசும் ஒரு ஒளியின் தீர்க்கம் இருந்தது.

6 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்லும்போது நமது மனம் கஷ்டப்படுகிறது. நாம் அவர்களுக்கு உதவ முயற்சிப்பதை அலட்சியப்படுத்துவார்கள். அவமானமாகத்தான் இருக்கும். தாங்கிக்கொள்ள வேண்டியது தான்.
உங்கள் பதிவை கிடைக்கும்போது படித்து வருகிறேன்.
நன்றி.

Mahi_Granny said...

அந்தி கருக்கலின் நிகழ்வை அருமையாய் விவரித்த கதை சொல்லி காமராசுககு பாராட்டுக்கள். இந்த தமிழுக்குத்தான் அந்த பாராட்டு.

அ.முத்து பிரகாஷ் said...

புனைவென சொன்னதால் தான் புனைவாகிறது வாசகனுக்கு...
பாட்டியையும் வெள்ளை கொக்கையும் அப்பெண்ணையும் அவர்களின் கண்ணின் தீர்க்க ஒளி தான் வழிநடத்திச் செல்கின்றது...
இல்லை...
அவர்கள் தீர்க்கமாக செல்வதாலேயே கண்ணில் ஒளி பெருகி வளர்கிறது...
தன்னந் தனியே வலசை போகும் பறவை நம்மிடம் சொல்லாமல் சொல்வது என்ன?

உங்கள் கருத்துரைக்கு..
சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html

நிலாமகள் said...

இப்ப‌டியான‌ பாவ‌ப்ப‌ட்ட‌ பெண்சென்ம‌ங்க‌ளுக்கு ஏதோவொரு அண்ண‌ன் ம‌ன‌திட‌ம் கூட்டி விடுகிற‌தால் க‌ட்டிய‌வ‌னின் அல‌ட்சிய‌த்தை அல‌ட்சிய‌ம் செய்து ஓடுகிற‌து வ‌ண்டி.உங்க‌ளின் ந‌டை எங்க‌ளை நிக‌ழிட‌த்தில் நிறுத்தி விடுகிற‌து அனாய‌ச‌மாய்.

அன்புடன் அருணா said...

நிறைய அடிபட்டிருக்கும் பெண்களுக்கு உதவ நினைக்கும் அண்ணன்களும் வேறுவிதமாய்த் தெரிவதில் வியப்பில்லை.

விமலன் said...

தனிமையின் கரங்களில் மனிதம் படுகிற பாடு தனிக்கதைதான்.