8.6.11

இடவல பேதமும் ஒரு அர்த்தமுள்ள திண்ணையும்.


திருவிழாக்கூட்டம் போல இருந்தது. சண்டைதான்.ஓசியில் பார்க்கக் கிடைக்கிற நிகழ்கலை இல்லையா.'தெருச்சண்டை கண்ணுக்கு குளிச்சி' எங்கம்மா இப்படிச் சொலவடை சொல்லும். அவன் தான் மாரிமுத்து கையில வேப்பங் கொலயில்லாம ஆடிட்டு இருந்தான். என்ன என்று கேட்டால் அவன் பீச்சாங் கையி என்று சொல்லிவிட்டானாம்.சொன்னால் என்னப்பா ஒனக்கு இடது கைப் பழக்கம்தானே என்று கேட்டால் சொன்ன திலகரை விட்டுவிட்டு என்னோட மல்லுக்கு நின்னான்.'என்ன ரெண்டடி ஆடிச்சிருந்தாக்கூட பொறுத்திடுப்பேன் எப்படிச்சொல்லப்போச்சு' என்று பிராதாகிவிட்டது.ஊர்ச்சனங்களும் கூட அப்படிச் சொன்னது தப்பென்றே அபிப்பிராயப் பட்டார்கள்.

நொட்டாங்கை பழக்கமானாலும் கூட அவனது செயல்களெல்லாம் மிகத்துள்ளியமாக இருக்கும். எழுத்து அச்செழுத்துப்போல இருக்கும்.கிட்டி அடிக்கும் போது எதிரே நின்றால் மூஞ்சப் பேத்துரும்.அப்படி அந்த இடது கை யாருக்கும் இல்லாத வல்லமையை கொடுத்தாலும் அவனே கூட அதை இகழ்வாக எண்ணியிருந்தான்.

அவனென்று இல்லை ஊர்,ஜில்லா,நாடு எல்லாம் அப்படித்தான் மதுரை போகும் பேருந்தில் விருதுநகருக்கு பயணச் சீட்டுக் கேட்டேன் நிற்கமுடியாத கூட்டம் வலதுகையில் கம்பியைப் பிடித்திருந்தேன்.அதனாலே இடதுகையால் காசைக் கொடுத்தேன் கண்டக்டர் அளவுகடந்த கோபமடைந்து விட்டார் என்னா சார் 'படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க இடது கையில காசு தறீங்க'.வலது காலை எடுத்து முதல் அடிவைக்க வேண்டுமென்கிற தொன்று தொட்ட ஆச்சாரங்களும் இப்பொழுது கூட மிக நெருக்கமான நபர்களை சங்கர் தான் அவனுக்கு வலது கை மாதிரி என்று சொல்லுவதுண்டு.

இரண்டிரண்டாக இருக்கும் கண்,காது,நாசி போன்ற உறுப்புக்களுக்கு இடது வலது பேதமில்லை.அப்படியிருக்க கைக்கு மட்டும் இட வல பேதம் எப்படி வந்திருக்கும்.இடது கை இழிவான செயலுக்கும், வலது கை உயர்வான வேலைகளுக்கும் பயண்பாடாவதால் இந்த பேதம் வந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இழிவும் உயர்வும் நமது உடலுக்குள்ளே தான் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வழும் பதிவுலக நண்பர் திரு ராம் அவர்கள் ஊருக்கு வந்திருந்தார்கள்.பத்தமடையில் தோழர் தமிழ்ச்செல்வன் வீட்டில் நானும் தோழன் மாதுவும் அவரைச்சந்திக்க நேர்ந்தது. ஒரு முழுப்பகல் தமிழ்ச்செலவனுடைய சமயலையும் பேச்சையும் சேர்த்து ருசிக்கக் கிடைத்த தருணம் அது.

உலகமே பார்த்து வியக்கும் குடும்பம் கூட்டுக்குடும்பம் நமது தனிசிறப்பு என்பது தெரியும் ஆனால் ஒரே குடும்பத்துக்குள் இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வழக்கில்லாமல் ஒதுங்கி வாழ்வது உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சித்தகவல் என்று சொல்லுகிறார்.ஆனால் நமோ 'நா அவங் கூடப்பேச மாட்டேன்' என்று இலகுவாகச் சொல்லிவிடுகிறோம்.மற்ற உறவுகளுக்கு எப்படியோ ?. கணவன் மனைவிக்குள் பேச்சில்லாமல் கழிந்த கொடூர வாழ்க்கை இங்கே கோடிக்கணக்கில் இருக்கும்.அதைக்கூடப் பெருமிதத்தோடு சொல்லும் நமது கௌரவம்.இன்னும் சிசுக்கொலை பற்றி,நீளப்படங்கள் பற்றி,தற்கொலைகள் பற்றி எல்லாம் அவரோடு ஒருநாள் முழுக்கப் பேசிக்கிடந்தோம் நாங்கள்.

உளவியலில் ஆராய்சிப்பட்டம் பெற்று  அங்கே பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ராம் சொல்லும்போது' ஆதிகாலத்து தாய்மர்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தங்களுக்கான அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது குழந்தைக்கு தாயின் அருகாமையை உணர்த்துவதற்காக இதயம் இருக்கும் இடது பக்கம் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்க வேண்டும். வலது கையினலேயே  எல்லாக் காரியங்களும் செய்து அது பழக்கமானது என்று  இடதுகைப்பழக்கம் உருவானதன் பூர்வாசிரமம் பற்றிச்சொன்னார். அப்படியானால் ஆண்கள் ?

விலங்குகளோடும்,அதன் பின்னர் மனிதரோடும் சண்டையிட்டுக் கொண்டே காலம் தள்ளிய ஆண் ஊயிரின் மையப் புள்ளியான இதயத்தைப் பாதுகாக்க கவசங்களை இடது கையிலும் கல்,வில், வாள் போன்ற கொலைக்கருவிகளை வலது கையிலும் ஏந்தியபடி அலைந்து அலைந்து வலது கைப்பழக்குத்துக்கு ஆளாகியிருக்கிறான் என்று கூறினார். சொந்த உறுப்புக்களுக்குள் பேதமாகிப் பின்னால்,சொந்த மனிதக் கூட்டத்தில் பேதமாகி,உலகமே இடவல பேதத்தில் இயங்க ஆரம்பித்தது ஒரு பெரும் தேடலுக்கான வரலாறு.

ரோமானியர்களே இடது பழக்கத்தை இழிவு பழக்கமாக உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்.அவர்களது கத்தோலிக்க மதம் போகிற திசையெல்லாம் இடது கைப்பழக்கத்துக்கு எதிரான மூடக்கருத்துக்களும் கொண்டுசெல்லப்பட்டன. ஜீசஸ் உட்கார்ந்திருப்பது வலது பக்கம் எனவும்,சாத்தான்கள் இட்து பக்கம் எனவும் கற்பிதப்படுத்தப்பட்ட பைபிள் பரப்புறைகள் உலகம் எங்கும் வியாபித்தது.வலது கை குலுக்கல், வணக்கம் சொல்லுதல் போன்ற நடை முறைகளை அறிமுகப்படுத்தியவர்களும் ரோமானியர்களே.

ஆனால் விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் இடது பக்கத்தின் சிறப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. மூளையின்  செயல்பாட்டுப்பகுதி, இதயம் அமைந்திருக்கும் பகுதி,அதனோடு தொடர்புடைய உடலுறுப்புக்கள் எல்லாமே இடது பக்கமே அமைந்திருக்கின்றன.

இடது கையில் நான்காவது இருக்கும் மோதிர விரலின் நரம்புகள் நேரடியாக இதயத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறதாம்.வரலாற்றின் மிகச்சிறந்த ஆளுமைகள் எல்லாம் அதிஷ்டவசமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.இசைமேதை பீத்தோவன்,உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் மைக்கேல் ஆஞ்செலோ,லியார்னோடாவின்சி, தத்துவமேதைகள் கொதே,நீட்ஷே. ப்போலியனும் அவனது மனைவி ஜோசப்பினும் இடது கை ஜோடி, ஜூலியஸ் சீசர் கூட ஒரு இடது கை வீரன். டகளம், விளையாட்டுத் துறைகளில் இடது ஆட்டக்காரர்கள் தனித்த இடத்தைப் பிடித்தவர்களாக அறியப்படுகிறார்கள்.

மீறலும்,எதிர்ப்பும்,கட்டமைப்பை எதிர்த்து கலகம் நடத்துவதும்,அந்நியமும்,இருட்டும்,இடது பக்கத்திலிருந்தே வரும்  என்பதே உலகளாவிய நம்பிக்கைகள்.வழி வழியாய் வந்த மத,அரச,முதலாளி நம்பிக்கைகள் வலதென்றும்,அதை எதிர்ப்பது இடதென்றும் பின்னாளைய உலகம் பிரிந்து கொண்டது.பிரஞ்சுப்புரட்சிக்கு முந்தையப் பாராளுமன்றத்தில் கனவான்கள் இடதுபக்கத்திலும்,அறிஞர்கள் வலது பக்கத்திலும் அமர்ந்திருந்தார்களாம்.

மிகப்பெரும் ஆராய்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து கிடைக்கிற பல அறிய தகவல்களுக்கும் ஊற்றுக்கண்ணான இந்தப்பொருள் குறித்து நிறைய்யப் பேச விவாதிக்க களம் இருக்கிறது. காலம் இல்லை.

( இது ஒரு மீள்பதிவு )

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நிறைய பயனுள்ள புதிய செய்திகள்.
வாழ்த்துக்கள் திரு காமராஜ்.