25.6.11

புற உலக அடையாளங்களை உதறிவிட்டு தோளில் விழும் கை. ( கருப்பு நிலாக்கதைகள்- தோழர் எஸ் ஏபியின் விமர்சனம்)


ஒரு கட்சியின் மாவட்டச்செயலாளர் டவுசர் போட்டுக்கொண்டு சமயல் செய்துகொண்டே ஆல்பர்ட் காம்யூ பற்றிப்பேச உடன் உட்கார்ந்து கீரையை ஆய்ந்துகொண்டே கதை கேட்கிற அனுபவம் அற்புதமானது. அப்போது விருதுநகர் கந்தபுரம் தெருவில் இருந்த எங்கள் தலைமை அலுவலகத்தில் வேலைபர்த்துக் கொண்டிருந்தேன்.அங்கிருந்து அரைபர்லாங்க் தூரத்தில்தான் சிபிஎம் கட்சியின் மவட்டக்குழு அலுவலகம் இருந்தது.  கிளம்பி ஆபீசுக்கு வா என்று தொலைபேசியில் அழைப்பார்.வேறு ஏதும் தொழிற்சங்க விவகாரமாக இருக்குமோ என்று   அங்கே போனால் ஒரு முண்டா பனியனும் டவுசரும் போட்டுக்கொண்டு சமயல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். கூடவே தாமஸ்,சேகர்,மணிமாறன்,கண்ணன் இன்னும் பிஎஸென்எல் பெருமாள்சாமி போன்ற தோழர்கள் இருப்பார்கள்.

அன்று போனபோது வகைவகையான கீரைகளை கூடத்தில் பரத்திப்போட்டு கைபார்த்துக்கொண்டிருந்தார்கள்.அது புரட்டாசிமாதம் மழைபெய்து ஈரமாகிப்போன அந்த அலுவலக முற்றத்திலும் சுவரை ஒட்டிய பகுதிகளிலும் முளைத்துக்கிடந்த கீரைவகைகளெல்லாம் அங்கே கிடந்தது. வாங்க காம்சு நீங்களும் மாட்டிக்கிட்டிங்களா இன்னைக்கு நீங்கதான் ஸ்பெசல்.தோழர் சமையலை முதலில் சாப்பிடப்போகிற டெஸ்டர் நீங்கதான் என்று சொல்லவும் சுற்றியிருந்தவர்கள் கெக்கேபிக்கே என்று சிரிப்பார்கள். கூறுல்லாமச் சிரிக்காதிங்கப்பா கீரைகள்ள எவ்வளவு சத்து இருக்குன்னு தெரியுமா ?. இதுவரைக்கும் அப்படிஒரு புத்தகம் வரலயில்ல காம்ஸ் என்று தாமஸ் கேட்பதில் அர்த்தம் புரிந்துகொண்டு.ஆமப்பா ஒங்களமாதிரி ஸ்டைல் சாப்பாடு சாப்புடுறவங்களுக்கு புத்தகம் போட்டுத்தான் சொல்லிக்கொடுக்கணும் என்பார்.ஆடுகூட திங்காத இந்தக்கொழைகளுக்கு பேர்கூடத்தெரியாதே என்று சொல்லவும். மகிலி,தொகிலி, சாரநத்தி,பச்சை,பசலை,தூதுவளை என்று அடுக்கிக்கொண்டே போவார்.அப்போ இது நித்தியகல்யாணி இல்லையா என்று சேகர் ஒரு செடியைத்தூக்கி காண்பிப்பார்.

சரி சரி காம்ஸ் இருந்து ஒரு பிடிபிடிச்சுட்டுப்போங்க நெறிஞ்சிக்கீரையும் கூட இதுல இருக்கு என்று சொல்லிவிட்டு எல்லோரும் பயந்து கொண்டு கிளம்புவது போலக் கிளம்புவார்கள். திரும்பி வரும்போது கொறிக்க கொஞ்சம் காரச்சேவும் சிகரெட்டுகளும் வாங்கிவந்து போடுவார்கள்.அப்படிப்பட்ட தோழருக்கு அப்போதே நாற்பதுவயதுக்குமேல் இருக்கும்.நாங்கள் எல்லோரும் இருபது இருபத்தைந்து வயதுக்காரரகளாக இருந்தோம்.  ஒரு தலைமுறை இடைவெளியை துடைத்து விட்டு மிகநெருக்கமாக எங்களோடு இணைந்துகொள்ளும் அவர்மேல் எப்போதும் ஒரு பிரம்மிப்பு இருந்துகொண்டே இருக்கும்.அது அவரது அசாத்திய உயரம் காரணமாக மட்டுமல்ல பிரான்ஸ் காஃப்கா, ஆல்பர்ட்காம்யூ,கிருஷ்ணன் நம்பி,ஜி.நாகராஜன் ஆகியோரின் பெயர்களையும் அவகளின் படைப்புகளில் இருந்து சின்ன சின்ன கதைகளையும் பேசுவார்.அதே அவர்தான் தொழிற்சங்க செயல்குழுக்கூட்டங்களில் இறுக்கமான முகத்தோடு விமர்சனம் செய்தும், கண்டித்தும் வழிநடத்துகிற ஆசானாகவும் இருப்பார்.

மீந்து போனகட்டுரை நோட்டுகளில் எழுதிவைத்த பத்துப்பதினைந்து கதைகளோடு இதுவும் மக்கிப்போகுமோ என்று கொண்டுபோய் காண்பித்த கதையை தூக்கிவைத்துக்கொண்டாடினார். செம்மலரில் அதைப்பிரசுரிக்கவைத்து எனது முதல்கதையை எல்லோரிடமும் பெருமிதமாக அறிமுகப்படுத்தினார் தோழர் எஸ்.ஏ.பி,. அந்தகதை ’பூச்சிக்கிழவி’ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்து நான்டீடெய்ல் பகுதியில் இணைந்தது. இன்னும் வெளியிடமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் எனது இரண்டவது சிறுகதைத்தொகுப்பை தயங்கித்தயங்கி  தோழர் எஸ் ஏ பி க்கு அனுப்பிவைத்தேன்.

ஜூன் மாத ‘செம்மலரில்’ அதற்கான விமர்சனம் எழுதியிருக்கிறார்.அதையும் அவரே அழைத்துச்சொன்னார்.ஒருகதை அதன் அடிநாதம் உணர்ந்து சிலாகிக்கப்படும்போது படைப்பாளனுக்கு அதைவிட வேறு ஏதும் தேவையில்லை. எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது என்று நிராகரிக்க முடியாத அன்பு அது. இதோ அந்த அன்புநிறைந்த பரிசில் எங்கள் ஆசான் எஸ் ஏ பி யின் வார்த்தைகளில்.

0

குறைந்த, அதி சிறந்த கதை சொல்லிகள் மனிதர்கள் பேசத் தெரிந்த காலத்திலிருந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஏற்றுதலும் போற்றுதலுமாய் அவர்கள் வரலாற்றில் பெருமையோடு நிலைத்திருக்கிறார்கள். பெருங் கதையாடல்களுக்கு மாற்றாக கணக்கிலடங்காக் கதைகளைக் கொண்டது சிறுகதையுலகம். மனித வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை ஒரு பொறியாய் எழுத்தில் வடிப்பது சிறுகதை ஆசிரியனின் பணியாகும். இதில் வல்லமை மிக்கவர்கள் ஒரு சிறுகதையிலேயே மனிதரின் முழு வாழ்வையும் சிருஷ்டித்து விடுகிறார்கள். காமராஜின் இந்தக் கருப்புநிலாக் கதைகள் வல்லமையோடு வடிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் வரும் கதைகள் அடையாளப்படுத்த முடியாத எளிய விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றியவையாகும். வறுமையும், அந்த வாழ்வின் கொடூரங்களும் அவர்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை பழைய - புதிய பாணிகளை இணைத்து கருப்பு நிலாக் கதைகள் கூறுகின்றன. இன்றும் நமது கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் பேயாட்டம் போடுகின்றன. ஒரே மாதிரியான வறுமைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் சாதியின் பெயரால் மனிதர்கள் ஒடுக்கப்படுவது தொடர்கிறது. இந்த அபத்தங்களை வெல்வது கடினமாயிருக்கிறது. விடுதலையின் ஒத்திகையில் சிறந்த பாடகராய் கட்டபொம்மு நாடகத்தில் நடிக்கும் அருந்ததியரை ஏற்கமறுக்கும் சாதிவெறி கொடிகட்டிப் பறக்கிறது. வேரை விரட்டிய மண்ணில் சலவைத் தொழிலாளியின் மகன் கிராமத்துக் கொடுமையிலிருந்து தப்பி சென்னைக்கு ரயிலேறுகிறான். ரயிலிலேயே அவனது சாதி பறந்துவிடுகிறது.

மனிதரின் சிந்தனையை வடிவமைப்பதில் புனைகதை உத்தி நல்ல பலனளிக்கிறது. மருளாடியின் மேலிறங்கியவர்கள் கதையில் ஒரு வேசையின் வாழ்க்கை சாமியாடியாகி, அருள்வாக்குச் சொல்லும் மருளாடியாவது நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் சாத்தூர் பகுதியில் வாழ்ந்த, வாழும் மனிதர்களையும் அவர்களது அவலமான வாழ்க்கையிலிருந்தும் தோன்றியவை. இந்த வாழ்வை அருகிலிருந்து பார்த்தாலும் அருமையான கதையாக்கிச் சொல்லுகிற திறமை கதை சொல்லிக்கு இருக்கவேண்டும். காமராஜுக்கு நிறையவே இருக்கிறது.

சம்பாரி மேளம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் மெய்ம்மறந்து கேட்டு ரசித்த ஒன்றாகும். சம்பாரி நாயனமும், கனத்த தவில்களும் சுற்றி நிற்கும் ஆயிரம் ஜனக் கூட்டத்தையே ஆட்டுவிக்கும். இந்தக் கதையில் "குழந்தைகள் எப்போதும் மலர்களைக் குவித்து வைத்தது போல் தூங்குவார்கள். அவர்களுக்கு மட்டுமே நித்திரையின் போது சிரிக்கிற சிலாக்கியம் வாய்க்கும். அந்தக் குழந்தைகளோடு நிலவில் கடவுள் விளையாடுவதாய் கிராம்த்துத் தாய்மார்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்" என்பதில் அழகு சொட்டுகிறது. இந்தத் தொகுப்பிலேயே சிறந்த கதை கருப்பு நிலாக்களின் கதை தான். ஒடுக்கப்பட்டு வீழ்ந்து கிடந்த பெண் ஓங்காரமாய் எழுந்து ஆட்களையே சாய்த்து விடுகிறாள். இக்கதையின் நடை உயிரோட்டம் மிக்கதாகும். அல்லபர் காம்யு தனது காலி கூலா கதையின் பாத்திரம் மூலம் பேசுவது நினைவுக்கு வருகிறது. "விதியை அறிய முயற்சித்தேன். அது இயலாது என்பது புரிந்ததும் எனக்கான விதியை நானே உருவாக்கிக் கொள்வதெனத் தீர்மானித்தேன். "இந்த ஒடுக்கப்பட்ட பெண்ணும் விஷ மதுவாலும், அரிவாள் மனையாலும் பழி தீர்க்கிறாள்.

நாலைந்து பக்கங்களிலேயே நறுக்குத் தெறித்தாற் போல கரிசல்காட்டு மனித வாழ்வை நம் கண்முன்னே நிறுத்தி விடுகிறார் காமராஜ். ரயிலை போகும் போதும் வரும் போதும் பார்க்கிற மக்கள் அதில் ஏறிப் பார்த்ததில்லை. கிழவியைக் கிண்டல் செய்வது, சிரிக்க வைக்கிறது. டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து பிடிபட்ட சிறுவனை நிலைய அதிகாரியே டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமானம் உலுக்குகிறது.

சர்ச்சுகளில் தரும் அப்பம் எப்படிப்பட்டது என்று தெரியாமல் அதை ஒரு பெரிய தின்பண்டமாய் நினைத்துக் கேட்கும் கன்னியப்பனைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். நாமும் சிரிக்கிறோம். கள்ளக் காதலர்களை அடித்துக் கொன்று போட்டுப் பேயடித்ததாய் கதைவிடும் கதை சிறப்பானது. முளைப்பாரிகள் வயலில், பாட்டுக்காரி தங்கலட்சுமி, மனநலக் காப்பகத்தில் மனநலமுள்ளவளையும் அடைத்துள்ள கொடுமையைக்கூறும் கதை அருமை. கதைகளுக்கு காமராஜ் தரும் தலைப்புகள் அற்புதமானவை. உதாரணமாக ஆனியன் தோசையும் அடங்காத லட்சியமும், பெரியார் பேரனுக்குப் பிடித்தமான பேய் போன்றவற்றைக் கூறலாம்.

இவன் நினைத்தால் ஏராளமாய் கதை எழுத முடியும். ஆனால் எழுதித் தொலைக்க மாட்டேங்கிறானே என்று காமராஜைப் பற்றி நான் நினைப்பதுண்டு. அற்புதமான கதைகளை ஏராளமாய் எழுதட்டும். கரிசல் இலக்கியம் செழிக்கட்டும் கருப்பு நிலாக் கதைகள் போல.

5 comments:

விமலன் said...

பாசாங்கற்ற புத்தக விமர்சனத்தை படித்த திருப்தி.மேலும் எஸ்.ஏ.பி பற்றிய ஞாபகமூட்டல்கள் சிறப்பாக இருந்தது.

Rathnavel said...

அருமையான பதிவு.

ஓலை said...

Arumaiyaga irukkunga.

ராகவன் said...

காமராஜ் என்னும் கதைசொல்லி!

சம்பாரி மேளத்தையும், சாமக்கோடாங்கியையும் படித்து விட்டு புலம்பியிருக்கேன் காமராஜ்... என்ன மனுஷண்டா இந்தாளு... என்ன எழுத்துடா இது என்று...

கருப்பு நிலாக்கதைகள் பற்றி படிக்காமலே பலவிதமான நினைப்புகள்... பதிவுகளில் தொடர்ந்து படித்திருந்தாலும், ஒட்டுமொத்தமாய் உங்கள் எழுத்தின் முழுவீச்சும் எனக்கு கிடைத்திருக்கும் படிக்கவேண்டும் என்ற ஆவலாதி நாளுக்கு நாள் அதிகமாகிறது.

நிறைய எழுதணும் காமராஜ் நீங்க... சிறுகதையில் உங்களுக்கென்று ஒரு இடம் எப்போதும் எனக்குள் உண்டு.

அன்பு காமராஜ்! மனுஷனைப் பேசும் கதைகள் ஒரு மனுஷன் பேசும் கதைகள்.

அன்புடன்
ராகவன்

திலிப் நாராயணன் said...

பர்மா காலனியில் இருந்த மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் கண்ணனை எனக்கு அறிமுகம் செய்த விதம் அபாரமானது. இவன் நாராயணன் மிகப்பெரிய பாடகன் தெரியுமா (அப்போது பி ஜி வி எஸ் வீதி நாடகக்குழுவின் காமாராஜர் மாவட்டத்தலைவராக மாவட்டம் முழுதும் புழுதி படிந்த கால்களுடன் பயணம் முடித்திருந்த நேரம்).பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன் விருது நகரில் நடைபெற்ற த மு எ க ச வரவேற்புக்குழு கூட்டத்திற்கு வந்திருந்தார் எஸ் ஏ பி .காமராஜின் கருப்பு நிலாக்கதைகளுக்கு செம்மலரில் விமர்சனம் எழுதி இருக்கிறேன். படித்து விட்டு சொல் என்று சொன்னார். எல்லாத்தையும் பிளாக்கிலேயே எழுதுறாயாக்கும் என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.