16.4.10

மின்சாரமே நீ, போ.. போ.

மின்சாரம் தடைப்பட்டதும் நான் அரசாங்கத்தையோ,மின்வாரியத்தையோ திட்டவில்லை. குதியாட்டம் போட்டுக்கொண்டு எனக்கு முன்னே எனது மனது ஓடிப்போய் படியில் உட்கார்ந்து கொள்கிறது.குளுகுளுவென மழலையைப்போல அல்லது பெண்ணின் அடிவயிற்றைப்போல காற்று உடல் முழுக்கப்படர்கிறது.எங்கம்மா இதை தென்றல் காத்தென்று சொல்லுவாள். நிற்கப்போகிற சுதியில் சுழலுகிற மின்விசிறி வெளியே எட்டிப் பார்த்து முகம் சுழிக்கிறது. சுற்றுச்சுவர் மறைசலில் நீர்கழிக்க எத்தனித்த பெரியவர் முதல் அழைப்பை ஒத்திப் போடுகிறார். கடந்துபோகும் இளம்பெண்களின் முகங்களை இருள் பார்த்துக்கொள்ள  சிரிப்பொலியை செவிப்பறைகள்  திருடு கின்றன. அவர்கள் அணிந்திருக்கும் சுடிதார் ஒரு கனம் தாவணியாய் உருமாற நினைவு மினுக்கிட்டு மறைகிறது.

மூன்றாவது வாசலில் உட்கார்ந்திருக்கும்  பெரியவரும் மனைவியும் வீட்டை விட்டு ஓடிப்போன மகன்களின் வெற்றிடத்தை சண்டையிட்டுச் சரிசெய்கிறார்கள்.போதையில் வந்திறங்கும் வருவாய் அலுவலர் கூடுதல் கவனத்துடன் நடப்பதாகப் பாவனை செய்து தடுமாறுகிறார்.தடதடத்துக் கடக்கும் இருசக்கர வாகனத்து ஒளிக்க கற்றை கண்களையும் சூழலையும் கூசச் செய்கிறது. கூடடைந்த பறவைகளின் சீழ்கை ஒலியில்லாத  சலனம் அருகிருக்கும் கூந்தல் ஷாம்புக்கு கூடுதல் மணம்சேர்க்கிறது. இப்போதுதான் குப்பையில்லாத தொலைக்காட்சி ஒழுக்கமாக கூடத்தில் தூங்குகிறது.

அருகருகே அமைந்த வீடுகளின் வாசற் பெண்கள் கைப்பேசியில்லாத நிஜ உரையாடலுக்குத் திரும்புகிறார்கள் .வாகன  வெளிச்சத்துக்கு எதிர்த்தொளிரும் செம்மறியாட்டுக் கூட்டத்தின் கண்கள் பார்க்கிற பாக்கியம் கிராமமறியா மகனுக்கு காண்பிக்கிறேன்.உடன் நடந்து வரும் ஒற்றை மாட்டின் மணிச்சத்தமும் மேய்ப்பரின் விலங்கு மொழியும் திரும்பக் கிடைக்காத் திரவியங்கள். யார் வீட்டிலோ திமிறும் குக்கரின் வெப்பக் காற்றுக் கூட நடுச்சாமத்தில் அழைக்கும் சங்கேதக் குரலாக மாறும் யௌவன இருள்.இயல்பின் ரம்மிய இசைகளைக் குலைத்தபடி இதோ திடு திடு வென அலறுகிறது வீடுகள்,மஞ்சளும் வெள்ளையுமாய் இருளைக் களங்கப்படுத்தியபடி  அதோ அந்தக் கேடுகெட்ட மின்சாரம் வந்துவிட்டது.

46 comments:

நேசமித்ரன் said...

என்ன கட்டுமானம் எவ்வளவு செறிவு

நுண்ணிய படப்பிடிப்பு
இருளில் விழிக்கும் ரகசியங்களின்
சுவர்களில் நிழல் நகரும் வாகன வெளிச்சம்

காமராஜ் said...

நேசன் வாங்க.

//இருளில் விழிக்கும் ரகசியங்களின்
சுவர்களில் நிழல் நகரும் வாகன வெளிச்சம்//

ஆஹா,
கவிதைக்கையால் கொஞ்சம் தலை கோதிவிடுகிறீர்களே. thanks

மாதவராஜ் said...

வலைப்பக்கத் தலைப்புக்கு எழுதியதாய் இருக்கிறது.
சரி, மெயின் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டு ரசிக்கலாமே :-)))))

காமராஜ் said...

என் வீட்டு
மெயின் சுவிட்சை
மட்டும்தானே
ஆப் பண்ணமுடியும்?.
ஊர்ல எரிகிற மின்சாரத்தை எப்படித்தடைசெய்ய.
ஊர விடு,
உன் வீட்டு சுவிட்சைக்கூட
ஆப் பண்ண முடியாதே ?

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு, அருமை

அமர பாரதி said...

அருமையான பதிவு காமராஜ் அவர்களே. //அருகருகே அமைந்த வீடுகளின் வாசற் பெண்கள் கைப்பேசியில்லாத நிஜ உரையாடலுக்குத் திரும்புகிறார்கள் // கைப்பேசி பேட்டரியில்தானே இயங்குகிறது. இந்த ஒரு வரி மட்டும் சிறிது பிசிறடிக்கிறதா?

seemangani said...

//குப்பையில்லாத தொலைக்காட்சி ஒழுக்கமாக கூடத்தில் தூங்குகிறது.//

ஆஹா...அண்ணே இது போன்ற வர்ணனையில் இன்னும் ஜொலிக்கிறது இடுக்கை...வாழ்த்துகள்... நன்றி

மாதவராஜ் said...

நண்பா, இந்தத் தெருவில் கேடு கெட்ட மின்சாரம் இருந்தாலும் இரவு ஒன்பது மணிக்கு வெளியே வந்து பார். இருளை ரசிக்க முடியும். ரசனைக்கு ரொமப மெனக்கெட வேண்டியதில்லை. மொட்டை மாடிக்குச் சென்றால் நடச்த்திரங்களோடு பேசவே செய்யலாம் கைபேசி, தொலைபேசி இல்லாமல்.

காமராஜ் said...

வாங்க ராம்ஜி.
சும்மா இன்றைய நாளுக்கான இட்டு நிறப்பல் அவ்ளோதான்.

காமராஜ் said...

வருங்கள் அமர பாரதி.
செல் போன்கள் இல்லாமல் போய்விடும் என்று சொல்லவில்லை.பொதுவாக பேச்சு என்பது தூரத்து மனிதர்களோடு தான் என்பது இப்போது செல்போன்கள் கொண்டு வந்த சட்டம்.டீவி யை விட்டு தப்பித்து வெளியே வந்தால் எதிர்வீட்டாரோடு பேசித்தானே ஆகவேண்டும் அதற்குச்சொன்னேன்.தவறாகவும் இருக்கலாம்.சுட்டிக்காட்டியமைக்கு அன்பு.

காமராஜ் said...

சீமான் சும்மா எழுதுனது.

காமராஜ் said...

ஒரு முன்னிரவில் மின்சாரத்தாலான இடர்ப்படுகள் இல்லாத வெற்று இருளைச் சொன்னேன்.அதுக்குப்போயி இப்டி இலக்கண நோட்ட எடுத்துட்டு வர்றயே தோழா ?

மாதவராஜ் said...

கேடுகெட்ட மின்சாரம் என்று சொன்னது எஅன்க்குப் பிடிக்கவில்லை. கவிதைக்கு பொய் அழகாக இருக்கலாம், ஆனால் உண்மை அதைவிட அழகானது, அர்த்தமுள்ளது என நினைக்கிறேன்.

இராமசாமி கண்ணண் said...

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரியெனப்படுகிறது எனக்கு. மின்சாரத்தின் பயன்பாட்டால்(தொலைக்காட்சி போன்ற சாதனங்களின்) நம் வீட்டுக்குள்ளயே நாம் அன்னியப்பட்டு போகிறோம். டெலி சீரியல்கள் இல்லையென்றால் ஏதோ ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளால் மற்றவரோடு கூடி ஒட்கார்ந்து பேசுவது என்பதே மறந்து போன ஒன்றாகி விட்டது. எனது சிறு வயதில் சாத்தூரில் இரவு உணவு முடித்து விட்டு பக்கத்து வீட்டாருடன் நேரம் போவதே கதைத்த பொழுதுகள் ஒரு கனவை போல் வந்து போகிறது எனக்கு.

Sethu said...

"வாகன வெளிச்சத்துக்கு எதிர்த்தொளிரும் செம்மறியாட்டுக் கூட்டத்தின் கண்கள் பார்க்கிற பாக்கியம் கிராமமறியா மகனுக்கு காண்பிக்கிறேன்.உடன் நடந்து வரும் ஒற்றை மாட்டின் மணிச்சத்தமும் மேய்ப்பரின் விலங்கு மொழியும் திரும்பக் கிடைக்காத் திரவியங்கள். யார் வீட்டிலோ திமிறும் குக்கரின் வெப்பக் காற்றுக் கூட நடுச்சாமத்தில் அழைக்கும் சங்கேதக் குரலாக மாறும் யௌவன இருள்.இயல்பின் ரம்மிய இசைகளைக் குலைத்தபடி இதோ திடு திடு வென அலறுகிறது வீடுகள்,மஞ்சளும் வெள்ளையுமாய் இருளைக் களங்கப்படுத்தியபடி அதோ அந்தக் கேடுகெட்ட மின்சாரம் " ---
அற்புதம். அமர்களமாக இருக்கு. சில சமயம் மின்சாரம் போனா தான் இயற்கையின் அழகு தெரியும் pola. உண்மையிலேயே இதையெல்லாம் நாம் நகர வாழ்கையில் இழக்கிறோம் என்று அறிவதில்லை. மிக நன்றாக இருக்கிறது. Thanks. - சுவாமி

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

வானம்பாடிகள் said...

இருட்டு ஒரு தனி அழகு. அதேனோ ஹெட் ஃபோன் மாட்டினவர் உரக்கப் பேசுவது போல் இருட்டிலும் குரல் உரத்தே ஒலிக்கும் நகரங்களில்:)). அருமைங்க

சங்கர் said...

மின்சாரத்துக்காக போராட்டம் நடத்தும் காலகட்டத்தில்....மனிதர்கள் திருடிய இரவினை...ரசிகவைத்ததிற்கு....நன்றி...

காமராஜ் said...

மாது...

ஒரு மாட்டு வண்டி நிறைய்ய மைக் செட் சாமன்கள் வரும்.இப்போது ஊருவிட்டு ஊருக்கு இணைப்புக்கொடுக்கும்
கேபிள் வயர்கள் போல எங்காவது பம்புசெட்டில் இருந்து மின்சாரம் எடுத்து வந்து கல்யாணம் நடத்தும் நாட்கள்.

என்னோடு இருந்தது. முதன் முதலில் மின் கம்பத்துக்காக வெட்டிய குழியில் தான் எங்கள் முழு நாள் விளையாட்டும் இருந்தது.முதல் நாள் எரிந்த குண்டு பல்பின் ஒளியை சந்திராயனைப் பார்ப்பது போல ஊரே கூடி பார்த்தது. அன்றிலிருந்து இதோ இதுவரை இந்த வலையெழுதும் கணினியின் பின்புறத்தில் சொறுகபப்பட்ட வயர்கள் போல உள்ள வயர்கள் இந்த வாழ்வைச் சுற்றிப்படர்ந்திருக்கிறது.

கொஞ்சம் ரிலாக்ஸாக கேடுகெட்ட மின்சாரமென்று எழுதினேன் தான்.

9/11 ல் இரட்டைக்கோபுரம் இடிந்து விழுகிறபோது உள்ளே தனது அடுக்கு மாடிக்குள் பரவும் சூரிய ஒளியைக் கவிதையாய்ச் சொன்ன குறும்படத்தை நீயும் நானும் சேர்ந்து ரசிக்கவில்லையா ?

என் அன்புத்தோழனே ?

காமராஜ் said...

//சில சமயம் மின்சாரம் போனா தான் இயற்கையின் அழகு தெரியும் pola. உண்மையிலேயே இதையெல்லாம் நாம் நகர வாழ்கையில் இழக்கிறோம் என்று அறிவதில்லை//

ஆமாம் சேது சார்.

காமராஜ் said...

அன்பின் ராமசாமிக்கண்ணன். ஆஹா எத்தனை இரவுகள் தெருவையே அல்லோலகல்லோலப்படுத்தி இரைச்சலோடு அலைந்திருக்கிறோம்.

காமராஜ் said...

Blogger வானம்பாடிகள் said...

// இருட்டு ஒரு தனி அழகு. அதேனோ ஹெட் ஃபோன் மாட்டினவர் உரக்கப் பேசுவது போல் இருட்டிலும் குரல் உரத்தே ஒலிக்கும் நகரங்களில்:)).//

இது இன்னொரு கவிதை

காமராஜ் said...

வாருங்கள் சங்கர்.
வலையுலகம் அன்புடன் அழைக்கிறது.

காமராஜ் said...

தமிழினி வலைக்குழுமத்தின் அன்பிற்கும், அழைப்பிற்கும் நன்றி.

மாதவராஜ் said...

ஆம் தோழனே! அந்தக் குறும்படத்தை ரசித்தோம். இருள் நீங்கி வெளிச்சம் படரும் காட்சியை ரசித்தோம்.

இப்போதும் சொல்கிறேன், ‘கேடு கெட்ட மின்சாரம்’ மிகத் தப்பான பிரயோகம். மனிதகுல வர்லாறு அறிய நேர்ந்த ஒரு படைப்பாளியிடம் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவதை ரசிக்க முடியவில்லை, என்னால்!

மணிநரேன் said...

பழைய நினைவுகளை மீட்டெடுக்க வைத்த தங்களின் ரசனையை ரசித்தேன்.

Vidhoosh(விதூஷ்) said...

அருமை சார். மின்சாரமில்லாத நாட்களில் செய்வதற்கு நிறையாகத்தான் இருக்குங்க. :)

அம்பிகா said...

கேடுகெட்ட மின்சாரம் இல்லையென்றால், உங்களால் பதிவிடவும், எங்களால் ரசிக்கவும் முடியாதே அண்ணா.

காமராஜ் said...

என்னுயிர்த்தோழனே.

நான் இனியும் விவாதிக்க வரவில்லை.நமது முழந்தையினை நாம் உச்சிமுகரும் போது சில கெட்டவார்த்தை சொல்வதில்லையா,அன்பின் மிகுதியால் சண்டையிட்டுக்கொள்வதில்லையா ?.

தனியொரு மனிதனுக்குணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னபாரதியும் அந்த ஒற்றை பசித்தவயிற்றுக்காடனும் இதே ஜெகத்தில்தான் இருக்கிறார்கள் இல்லையா ?

ஒரு போதிநிலாவின் மொட்டை மாடி நிறந்தரமானதா?

சமீபத்தில் வெளியான அங்காடித்தெருவில் டூயட் பாடல் இருந்த போதும் நாம் தூக்கி கொண்டாடவில்லையா ? அதில் வரிக்கு வரி நம்மால் ஒத்துப்போக முடியுமா?.

அது உயர்வு நவிழ்ச்சி இல்லையா மாது ?.என்ன மாது ?.

சரி. என்னன்னும் இருக்கட்டும். நீ சொன்னால் சரியாகத்தானிருக்கும்.

காமராஜ் said...

மணிநேரன்.
வித்யா,
அம்பிகா.

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

காமராஜ் said...
This comment has been removed by the author.
காமராஜ் said...
This comment has been removed by the author.
padma said...

அட அட என்ன ஒரு எழுத்து .நெஜம்மா தென்றல் வந்து வீசிட்டு போன மாதிரி .நீங்க எழுதற மாறி தமிழ பேசுவீங்களா ?

Vetrimagal said...

அருமை. என் மனதில் எழுந்த புகழ்ச்சிகள் எல்லாம் பின்னுட்டங்களை பார்த்த உடன் அடங்கி விட்டன.

நயாகராவில் இரவில் பார்த்த தாரகைகள் நினைவில் வருகின்றன.

நன்றி.

க.பாலாசி said...

//மூன்றாவது வாசலில் உட்கார்ந்திருக்கும் பெரியவரும் மனைவியும் வீட்டை விட்டு ஓடிப்போன மகன்களின் வெற்றிடத்தை சண்டையிட்டுச் சரிசெய்கிறார்கள்//

அடர் கருப்பிற்குள் ஒழிந்திருக்கும் இவ்வொளியை ரசிக்கிறேன். இருளும் அழகுதான்... காண்பவரின் கண்களைப்பொருத்து.....

அன்புடன் அருணா said...

மின்சாரத்தடை அவ்வப்போது கொண்டுவரும் சொர்க்கத்தை உணர்ந்தால் மட்டுமே புரியும்..அந்தவகையில் எனக்கு நன்றாகவே புரிகிறது.

/சரி. என்னன்னும் இருக்கட்டும். நீ சொன்னால் சரியாகத்தானிருக்கும்./
இது டாப்பு!!! :)

காமராஜ் said...

வாங்க அன்பான வெற்றிமகள்.

கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

//அடர் கருப்பிற்குள் ஒழிந்திருக்கும் இவ்வொளியை ரசிக்கிறேன்.//

thanks balaji

காமராஜ் said...

நன்றி பத்மா.

காமராஜ் said...

ஆசிரியப்பெருந்தகை வாங்க.
கருத்துக்கு நன்றி.

சந்தனமுல்லை said...

அழகாக இருக்கிறது..இடுகையும்..படமும்! :-)

VijayaRaj J.P said...

\\சுடிதார் ஒரு கனம் தாவணியாய் உருமாற நினைவு மினுக்கிட்டு மறைகிறது.//

அப்படியா காமராஜ்?

அஹமது இர்ஷாத் said...

//இப்போதுதான் குப்பையில்லாத தொலைக்காட்சி ஒழுக்கமாக கூடத்தில் தூங்குகிறது.//

நிதர்சனம்...

வரிகளின் ஈர்ப்புவிசை நம்மை மீண்டும் படிக்கதூண்டுகிறது. அருமை அண்ணே..

காமராஜ் said...

வாம்மா முல்லை கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

அண்ணா வாங்க வாங்க,
ரொம்ப நாளா ஆளையே காணோம்.

இல்லையா பின்ன..

காமராஜ் said...

அன்பின் இர்ஷாத் வருகைக்கு நன்றி