4.11.09

நினைவுகளில் மட்டும் நெற்றிதொடும் பாசமலர்கள்.
வாங்கிய பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிருசு பெருசெனும் போட்டியில் சண்டை போட்டுக் கொள்ளவும். எனது பழய்ய சட்டையைப் போட்டுக் கொள்ளவும். சின்னச்சின்ன தவறுகளை அப்பனிடம் போட்டுக் கொடுக்கவும். பாசி, ஸ்டிக்கர், பெண்கள்கைப்பை பார்க்கிற நேரங்கள் நினைவுக்கு வரும் அக்கா தங்கையில்லாத அனாதைக்கு. இல்லாத பொருள்கள் மீது வட்டமிடும் கனவுபோல எங்கிருந்தாவது வந்து அலைக்கழிக்கிறது எனது நாட்களை இந்தப்படம்.ஆளில்லா நேரத்தில் கண்ணாடியின் முன்னாடி அல்லாடும் குருவியைப் போலவே. பிள்ளை விளையாட்டில் என் பிறப்பாக வந்த செல்லக்கனி. எட்டாம் வகுப்பில் ஜோடி போடும்போது எனக்குத் தங்கை முறையாக வந்த மைதிலி. பணியில் சேர்ந்த பின்னால் நடராஜன் மனைவி அம்மு, இன்னொரு .. இப்படி நான் எனக்கென வரித்துக்கொண்ட பிறப்புகள் ஏராளம்.பாசமலர் பார்க்கிற நேரமெல்லாம் எங்கம்மாமேல் எனக்கு கோபம் வரும். அதையெல்லாம் இறக்கி வைக்கிற முதிர்ந்த பிறப்பாக,காற்றைக்,கடலை,காக்கைகுருவிகளைக் கைநீட்டும் யாரையும் உறவாக்கச்சொல்லியபடி கிந்திக் கிந்தி நடக்கும் அவள் தான் சின்னத் தங்கச்சி, பெரியக்கா.13 comments:

உயிரோடை said...

//அக்கா தங்கையில்லாத அனாதைக்கு//

இந்த‌ வ‌ரி மிகுந்த‌ வ‌லியை உண‌ர்விக்கின்ற‌து. என‌க்கு அக்கா ம‌ட்டும் தான் கூட‌ பிற‌க்காத‌ அண்ணும் த‌ம்பியும் த‌ங்கைக‌ளும் ஏராள‌ம்.

லெமூரியன் said...

\\கைநீட்டும் யாரையும் உறவாக்கச்சொல்லியபடி கிந்திக் கிந்தி நடக்கும் அவள் தான் சின்னத் தங்கச்சி, பெரியக்கா.//

சிலிர்க்க வைத்த வரிகள். பெண்பிள்ளைகளுடன் பிறப்பதற்கும் தவம் செய்திருக்க வேண்டுமோ என்னவோ. சகோதரர்களை மட்டும் கொண்ட ஒரு ஆணிடம் இருந்து சகோதரியுடைய ஒரு ஆணின், பெண்ணைப் பற்றிய பார்வை மிகவும் மாறுபட்டிருக்கும்.

அருமையை இருக்கு காமராஜ் சார்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

என்னை பிழிய பிழிய அழ வைக்கிறீர்கள் எல்லாருமா சேர்ந்து. தொப்புள் வீடு படிச்ச, கண்ணீரின் தடம் மறைவதற்கு முன்னால் திரும்பவும் கண்ணீர் படுகை கரைபுரண்டு ஓடுகிறது இந்த பதிவை படிக்கும் போது. நாம இருவரும் இது பற்றி பேசி இருக்கிறோம், பெண் குழந்தைகள் இல்லாத வீடு எத்தனை கொடுமை என்று. இது பற்றி நான் எழுத நினைத்தது நீங்கள் முந்திக் கொண்டீர்கள், ஆனாலும் நானும் எழுதத் தலைப்படுகிறேன், எல்லா அக்கா தங்கையும் ஒன்று தான் என்றாலும் அனுபவங்களும், உணர்வு நிலைகளும் வெவ்வேறாய் இருக்கிறது தானே, உள்ளங்கை ரேகைகளைப் போல.

எல்லாம் ஆம்பள பிள்ளைகளாப் போச்சுன்னு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெரிய குறை, கடைசியாப் பொறந்த பயலை பொண்ணாக்க சீவி, சிங்காரிச்சும் அடங்காத ஆசையில், உறவுக்கார பிள்ளைக எல்லாம் மகளாய் பாவிக்க பழகிக் கொண்டார்கள். பாசமாய் உருகும் யாரையும் சகோதரிகளாய் வரித்துக்கொள்ள நானும் பழகிக்கொண்டேன். சினிமாவில் சிரிக்கும், அழும் அண்ணன் தங்கை உறவுக்கெல்லாம், சிரித்து,அழுது, அரற்றி ஒரு அக்கா, தங்கைக்காக ஏங்கும் மனசு.
கௌஸல்யா அக்கா தொடங்கி இன்றைய அனிதா வரை, டேய் சீனு, சீனு அண்ணா என்று எத்தனை விதவிதமான குரல்கள், நினைக்கும் போதே ஒலிக்கிறது கபாலங்களில் ஒரு விநோத ஜுக் பாக்ஸ் போல. தீப்பெட்டி அடைக்க ராமராஜ் வீட்டிற்கு வரும் சிறியதும் பெரியதுமான எத்தனை விதவிதமான பெண்கள், எத்தனை விதமான ரசனைகள், எத்தனை விதமான விளித்தல்கள், எத்தனை விதமான தொனிகள், கையில் அள்ளிய பிடி மணலில் வெவ்வேறு வடிவத்தில் வண்ணத்தில் மினுக்கும் ஆற்று மணல் மாதிரி!

முள்ளும் மலரும், காஞ்சித்தலைவன், ராஜராஜசோழன், பாசமலர், தர்மயுத்தம் என்று எத்தனையோ படங்கள் என்னை வதைத்து இருக்கிறது, அண்ணன் தங்கை கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், நெகிழ்வுகள் மனசுக்குள் பெரிய விசனத்தை ஏற்படுத்தி விடுகிறது. மனசுருகி கண்ணின் மணி போல, மணியின் நிழல் போல என்ற பாசமலர் பாடலை இப்போது பாடும்போதும் அழ வருகிறது.

ஆண், பெண்ணுக்குமான எந்த உறவும் மிக அழகாய் இருக்கிறது, அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி, அம்மா-மகன், அப்பா-மகள் என்று எந்த உறவுமே உணர்வு மையினால் எழுதப்பட்டு இன்னும் உலராமல் இருக்கிறது, அதே பொலிவுடன் அழியாமலும். எல்லோரும் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறோம் காவடிசிந்துவாய் ஒரு கவிதை நடையில், ராக சாயலை மறைத்து.

அன்புடன்
ராகவன்

சந்தனமுல்லை said...

கடைசிவரிகளில் கண்கலங்க வைத்து விட்டீர்கள்!
/
வாங்கிய பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிருசு பெருசெனும் போட்டியில் சண்டை போட்டுக் கொள்ளவும்/
ஹிஹி...கவலையை விடுங்க அண்ணா..நானும் பப்புவும் வந்துடறோம் - அப்புறம் கதற போறீங்க பாருங்க! :-)))

பா.ராஜாராம் said...

ரொம்ப நெகிழ்வான பகிர்வு மக்கா...அப்படியே தலைகீழ் மாற்றம் இந்த ராஜாராமுக்கு.நெருக்கி அடித்து கொண்டு நாலு சகோதரிகள்.தளம் தொடங்கிய பிறகு கூடுதலாக மூன்று.அண்ணன் தம்பிகளுக்கு அலைகிற மனசு என்னிடமும் உண்டு.அக்கறை பச்சை!

இந்த ராகவனை என்ன செய்யலாம் காமராஜ்?உணர்வு பூர்வமான பதிவுகளை எல்லாம்,பின்னூட்டத்தில் வந்து போட்டு விடுகிறார்!போகிற போக்கில்!..இனி அவரின் பின்னூட்டம் தேடி வாசிக்கவென தளம் தளமாக போகவேணும் போல் இருக்கு...நிறைஞ்ச மனசு ராகவன்!!!

அ.மு.செய்யது said...

பா.ரா வின் பதிவிலேயே உங்கள் பின்னூட்டத்தை பார்த்து கலங்கினேன் காமராஜ்.
இந்த பதிவும் மனதை வெகுவாக பாதிக்கிறது.

இரண்டு அக்காக்களின் பாசத்தில் திளைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு,
அக்கா தங்கை இல்லாதவர்களின் வலியை,வெற்றிடத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

பரவாயில்லை...!! உடன்பிறந்தால் தான் அக்கா தங்கையா ??

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

பாசத்துக்கு ஏங்கும் மனம் புரிகிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களுக்கு அக்கா, தங்கச்சி இல்லாத வருத்தம் மாதிரி தலைல கொட்டு வெக்க ஒரு அண்ணன் இல்லியே ந்னு ரொம்ப நாளா வருத்தம் எனக்குள்ளயும் இருக்கு,

//அக்கா தங்கையில்லாத அனாதைக்கு//

இதப் பார்த்தவுடனே ரொம்பவும் கஷ்டமாயிடுச்சு அண்ணா.

Pradeep said...

உண்மைதான் சார்.

பா.ராஜாராம் said...

உங்களுக்கும் மூணு சகோதரிகள் வலை உலகில்(லாவண்யா,முல்லை,அமித்தம்மா!)கிடைச்சாச்சு போல!"பிரவு,வேறு என்ன வேணும் ஓய்...கலங்குரீறு....கண்ணை தொடச்சுக்குட்டு ஆக வேண்டியதை பாரும்...தாய் மாமனா,காரியமா!

உண்மையில் நிறைவா இருக்கு காமு.

காமராஜ் said...

இப்படி ஆற்றுப் படுத்துகிற வார்த்தைகளுக்கும்,தூரத்திலிருந்து கண்ணீர்துடைக்க நீழும் கரங்களுக்கும் நான் வார்த்தைகளில் நன்றி சொல்லமுடியாது. ஒரு சொட்டு உப்புத்தண்ணீரால்

லாவண்யா,அமித்தம்மா,அருணாமேடம்,சந்தபமுல்லை,பாரா,பரா,ப்ரதீப்,செய்யது,லெமூரியன்,ஆரூரான்.

காமராஜ் said...

லாவண்யா,
அமித்தம்மா,
அருணாமேடம்,
சந்தனமுல்லை,
பாரா,பரா,
ப்ரதீப்,
செய்யது,
லெமூரியன்,
ஆரூரான்.

நன்றி