16.11.09

அறியாமையின் மூலதனத்தில் கட்டிய கோட்டைகள்


இந்திய விடுதலைக்குப் பின் பிராந்திய வாரி மாநிலங்கள் எனும் கொள்கை மாற்றப்பட்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. மஹாராஷ்ட்ரா ப்ரசிடென்சி மாநிலத்தில் இருந்த குஜராத்தும், மஹாரஷ்ற்றாவும் 1960 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக விளங்கிய அந்நாளைய பம்பாய் நகரின் பெருமுதலாளிகள்குஜராத்திகளாகவும், மார்வாரிகளாகவும் மட்டுமே இருந்தார்கள். தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் தங்களை மூளை உழைப்புக்கு உட்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொண்டார்கள். அரசாங்க,தொழில் நிறுவண, அதிகாரத்தில் தென்னிந்தியர்களே பெருவாரியாக இருந்தார்கள். இதுவே அவர்களின் சொந்தங்களை வரவழைத்து அலுவலக பதவிகளில் இருத்திக்கொள்ள ஏதுவானதாக இருந்தது.


மும்பைவாசியான பாலசாஹேப் தாக்கரே எனும் கருத்துப்பட ஓவியர் குடியேற்ற வாசிகளை நையாண்டி செய்து மர்மிக் வார இதழில் படங்கள் வெளியிட்டதன் மூலம் பிரபலமனார். அந்த பிரபலத்தின் மூலதனத்தில் 1966 ஜூன் மாதம் 16 ஆம் தேதி சிவசேனைக் கட்சியை ஆரம்பித்தார். மண்ணின் மைந்தர்கள் கோஷத்தோடு துவக்கப்பட்ட இந்த இயக்கம் ஒரு கட்சியாகப் பரிணமிக்குமுன் கணக்கிலடங்கா வன்முறைகளை தென்னிந்தியர்கள் மீது பிரயோகித்தது. தென்னிந்தியர்களின்உணவுவிடுதிகளை கட்டாயமாக மராத்தியர்களுக்கு கைமாற்றியது.


அறுபதுகளில் பம்பாய் தொழில் நகரத்தின் தொழிலாளர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கம்யூனிஸ்டுகளை சீர்குழைக்க தொழிலதிபர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்தது. அடிப்படையில் இந்துத்துவ கொள்கைகளோடு கிளம்பிய சிவசேனாவுக்கு கம்யூனிஸ்டுகளை அழிப்பது லட்டு சாப்பிடுகிற மாதிரியான ஒப்பந்தமானது. 1970 ஆம் ஆண்டு தாதர் பகுதி சட்டமன்ற உறுப்பினர் கிஷன்தேசயைப் படுகொலை செய்யப்பட்டார். உலகமெங்கும் வலதுசாரிகளின்வளர்ச்சி பொதுவுடமை வாதிகளின் உயிர்ப்பலியினாலேயே நிர்மாணிக்கப்படுகிறது.


1995 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து வெற்றிபெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிவசேனைக் கட்சியில் சந்தோசங்களும், வெறுப்புகளும் மும்பை நகரத்தின் இயலபை மோசமாக உலுக்கியது. பால்தாக்கரேயின் மனைவி மீனாத்தாய் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாக புரளி கிளப்பி இரண்டு வாரங்கள் மராட்டியம் சிதைக்கப்பட்டது. 2005 ல் நாராயண் ரானே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைக் கண்டித்து பால்தாக்கரேயின் மருமகன் ராஜ் தாக்கரே '' மஹராஸ்ட்ர நவ நிர்மான் சேனா'' என்கிற புதுக்கட்சியை ஆரம்பித்தார். இரு பிரிவுகளும் பலமாக மோதிக்கொண்டன. இருப்பினும் தனியே வந்த ராஜ்தக்கரே அவர்களின் பிரதான விதை முதலான தமிழர், கம்யூனிஸ்ட், எதிர்ப்பை விட்டுக் கொடுக்கவில்லை.

2008 அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற ரயில்வே சர்வீஸ் கமிசன் தேர்வெழுத வந்த பீகாரிகளையும், குஜராத்திகளையும் தேர்வு அரைக்கு வெளியே இழுத்துப் போட்டு அடித்தது எம் என் எஸ் கட்சி. சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் திரு ஆஸ்மி இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது அவரை சட்டமன்றத்துக்கு உள்ளேயே தாக்கியது. எம் என் எஸ் கட்சி இப்போது பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி புது பூதத்தைக் கிளப்பியிருக்கிறது. நடைபெறவிருக்கும் 1100 எழுத்தர் பதவிக்கான தேர்வில் மராட்டியகர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.


ஒரே நாடு ஒரே மதம் எனும் சொல்லும் கூட ஒரு தேர்தல் கால காரட் என்பதை அவர்கள் திட்டவட்டமாக நிரூபிக்கிறார்கள். அஸ்ஸாமில்,கர்நாடகாவில்,மும்பையில்,காவிரி,முல்லைப்பெரியாறு என தேசமெங்கும் தங்கள் மண்ணின் மைந்தர் கோஷங்களோடு கிளம்பியிருக்கிறது பிரதேச வெறிக்கூச்சல் பரிவாரங்கள்.


யாதும் ஊரே யவரும் கேளிர், திரைகடலோடியும் திரவியம் தேடு, கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், சரே ஜகாசே அச்சா,இந்தூஸுத்தான் ஹமாரா, ஜனகனமங்கள தாயக ஜயகே, எனும் பாடல்களில் பொதிந்து கிடக்கும் உணர்வுகளைப் பிரித்தெரியும் இந்த வெறியின் பின்னால் அப்பட்டமான சுயலாபம் மட்டுமே பொதிந்து கிடக்கிறது. அதைச்சரி செய்யவோ தடுக்கவோ எந்த திட்டமும் இல்லாது வெற்றுடம்பாய் கிடக்கிறது சமகால அரசியல் . எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க லாயக்கற்றுக் கைபிசைகிறது மத்திய அரசு. இது ஒரு புறம்.


ஆயிரமாயிரமாண்டு காலம் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும், பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், தாழ்த்தப்பட்ட ஜனங்களின் உயிர் வாழ்வாதாரமான கோரிக்கைகளை ஒட்டுமொத்த பலத்தைப் பிரயோகித்து அடக்குகிற சூது இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இரட்டை அனுகுமுறைகளுக்குள் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அறியாத ஜனங்கள்தான் இன்னும் பாரதி சொன்னது போலகஞ்சி குடிப்பதற்கிலாமலும் அதன் காரணம் அறியாமலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் அவர்கள்தான் என்பது சதம் இடம் அடைக்கிற இந்தியர்கள்.

நன்றி, விக்கிபீடியா,ஆனந்த் டெல்தும்டே( கயர்லாஞ்சி ),கூகுள் செய்தி

11 comments:

இளவட்டம் said...

அருமையான கருத்துக்கள் சார்.
பிரதேச வெறிக்கூச்சல் வடக்கே அல்லாது நம் அண்டை மாநிலங்களிலும் தலை விரித்து ஆடுகிறது.
முல்லை பெரியார் விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் அறிக்கையை என்னவென்று சொல்வது?

குப்பன்.யாஹூ said...

பதிவு அருமை.

ஆனால் இந்திய நாட்டின் மக்கள் (குடிசைவாசிகள், சாமனியர்கள், மத்திய தர ச்மபழ்க் குடிகள்) ஒன்றும் விவரம் அற்றவர்கள் அல்ல.

அவர்கள் தெளிவாக தேர்தலில் வாகு அளித்து இந்த மாதிரி கட்சிகளை புறக்கணித்து உள்ளனர், ஆட்சிக்கு வராமல் தடுத்து உள்ளனர்.

மும்பையில் சிவசேனா போல தமிழகத்தில் புறக்கணிக்கப் பட்ட கட்சிகள் (புதிய நீதி கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், த மு மு, பா ம க)

க.பாலாசி said...

//எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க லாயக்கற்றுக் கைபிசைகிறது மத்திய அரசு.//

உண்மை....தாங்கள் குறிப்பிட்ட கட்சியினரின் அராஜகத்திற்கு அளவேயில்லாமல்தான் இருக்கிறது.

நல்ல தகவல்கள்....

சந்தனமுல்லை said...

அருமை! நன்றாக அணுகியிருக்கிறீர்கள்!
சுயநலத்தையும் அரசியல் பரபரப்பையும் மட்டுமே பின்புலமாக கொண்டவைதானே இந்தக்கட்சிகள்!

velji said...

உணர்வுகளைக் கிளப்பி,அப்பாவிகளின் வாழ்வை தீயிலிட்டு அரசியல்வாதிகள் குளிர்காய்வது அடங்குவதாக தெரியவில்லை.சினிமாக்காரனுக்கு பாட்டும்,பைட்டும் போல அரசியல் வெற்றி பார்முலாகவே இது பின்பற்றப்படுகிறது.

அக்கறையான பதிவு.நன்றி காமராஜ்.

D.R.Ashok said...

:(

லெமூரியன் said...

காம ராஜ் அண்ணா .....உங்கள் கருத்துக்களில் இருந்து நான் மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளேன்........நாம் இதைப் பற்றி வந்தேறிகள் என்ற தலைப்பில் விரிவாக இன்னொரு பதிவிடுவோம்......அதற்க்கு முன்னர் இந்தப் பதிவிற்கு எனது கருத்துக்கள் நான் இங்கே பதிகிறேன். சிவ சேனை ஒரு மத சார்புடைய கட்சிதான். மாற்று கருத்து இல்லை. அனால் அவர்கள் இப்பொழுது கையிலெடுத்திருக்கும் பிரச்சினை...மொழிக் கொள்கை மற்றும் மாநில சுயாட்சி ஆகியன எவ்வாறு தேசியக் கட்சிகளால் சிதறடிக்கப் பட்டுள்ளது என்பதனை தெளிவாகக் காட்டுகிறது. இந்தியக் கூட்டமைப்பின் அடித்தளமே மொழி வாரியான மாநிலங்கள் தான் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பான்மை மொழி பேசும் மகர்களின் பிரதிநிதிகள் சிறுபான்மை(மராட்டியத்தில் மும்பையில் மட்டுமே ஹிந்தி பெரும்பான்மையாக பேசப் படுகிறது) மொழியான ஹிந்தியில் பிரமாணம் எடுக்க வேண்டிய அவசியமென்ன..? நமக்கு தமிழ் போலவே தானே மகர்களுக்கு மராத்தியும் ஒரு அடையாளமாக உள்ளது? அதைக் காப்பதற்கும் பிற மொழிக் கலப்பின்றி பேசுவதற்கும் அதை பிரபலப்படுத்தவும் யாராவது முயன்றால் அது வரவேர்க்கத்தக்கதுதானே? மேலும் கருனாடகத்திலோ அல்லது கேரளத்திலோ அல்லது ஆந்திரத்திலோ இப்படி செஇய முடியுமா? மராட்டியத்தில் நடக்கும்போது மட்டும் இது ஏன் பூதாகரமாக்கப் பட வேண்டும்? விடை இதுதான் - தேசியக் கட்சிகளின் குறிப்பாக காங்கிரசு கட்சியின் மொழிக் கொள்கை என்பது பிராந்திய மொழிகளை மிதித்து ஹிந்தியை திணித்து அது மட்டுமே இந்தியக் கூட்டமைப்பின் மொழி அடையாளமாக மாற்ற நினைக்கிறது ? அந்த மாற்றத்தை தடுக்க நினைக்கும் போது எழுகின்ற தேசியவாதிகள் எனும் ஹிந்தி மொழி வெறியர்களின் ஆத்திரமே ராஜ் தாக்றேவிர்கேதிரான கூச்சல். உங்களுக்கு தெரிந்திருக்கும் மொழிக் கொள்கை வகுக்கும் போது பாராளுமன்ற வாக்குவாதத்தில் பங்கேற்ற நேஹ்ருவின் முகம் ஹிந்தியை எதிர்த்து தென் மாநில உறுப்பினர்கள் பேசிய போது ..இறுகிப் போய் அவர் சட்டையில் குத்தும் ரோஜாப் பூ போல் சிவந்து காணப் பட்டதே? நேரு வின் வெளிப் பாடு தான் அன்றைய ஆதிக்க வர்க்கத்தின் வெளிப்பாடும்...சமஸ்க்கிருதத்தின் எச்சமான ஹிந்தியை இந்தியக் கூட்டமைப்பின் ஒரு மொழியாகக் காண்பித்து ....இந்தியாவை ஒரே தேசமாகக் காண்பிக்க வேண்டும் என்ற வெறியின் வெளிப் பாடே இது. இந்தியா என்பது ஒரு தேசமன்று. அது ஒரு துணைக் கண்டம் அவ்வளவே. பல தேசங்கள் சேர்ந்த ஒரு கண்டம். வேறு வார்த்தைகளில்- தேசங்களின் கூட்டமைப்பு. தேசிய நீரோட்டம் என்பது அனைவரையும் அரவணைத்து அவர்களின் மொழி மற்றும் கலாசாரத்திர்ற்கு மதிப்புக் கொடுப்பதே ஆகும். மாறாக புரிந்து கொண்டு செயல் பட்டதால்தான் இன்று பலுசிஸ்தான் பிரச்சினை பாகிஸ்தானின் இறையாண்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. அப்படியொரு முயற்சிகள் இங்கு தொடங்கும் போது இங்கும் இறையாண்மை கண்டிப்பாக கேள்விக்குலாக்கப் படும் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை.

காமராஜ் said...

அன்புத்தங்கமே,
லெமூரியன்.

வணக்கம். மொழி குறித்த உங்களின் பார்வை அலாதியானது அதில் எந்த தடுமாற்றமும் தேவையில்லை இருக்கவும் கூடாது.
ஆனால் நான் பேச வந்தது அதுவல்ல. இந்த தேசம் முழுவதும் பரவிக்கிடக்கிற நலிந்த மக்களின் கோரிக்கைகள் வெளிவரும் போது அரசிடம் இரும்புக்கரம் இருக்கிறது. ஆனால் மதவாத, ஜாதிவாத, இனவாத பிரிவினைக் கலவரங்கள் கவனிக்கவேண்டும் பொதுச்சொத்துக்களுக்கு பெரும் குந்தகம் விளைவிக்கிற கலவரங்கள் ஜஸ்ட் லைக் தட் சும்மா விடப்படுகிறது என்பதே எனது வாதம். அப்போது இரும்புக்கரம் கரும்புக்கரமாக மாறூகிறது. மற்றபடி மராத்தியர்களின் மொழிப்பற்றின் மேல் எனக்கு எந்த கருத்து முரண்பாடும் இல்லை. உலகில் சிறந்த மொழி எது " அது அவரவர் தாய் மொழி "எனும் கருத்தின் மேல் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. ஒரு இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும்
என்பதில் இருக்கும் அடர்த்தியான எச்சரிக்கையை அறியமுடிகிறது.

ஆனால் எதன் பொருட்டும் உழைக்கிற ஜனங்களை ஒதுக்கக்கூடது. மேலும் தமிழன் தமிழ்நாட்டில் மட்டும் வாழவேண்டும் என்னும் கொள்கை வெறி சரியானதல்ல.அப்றம் தொழில் நுட்பக்கல்லூரிகள் எல்லாம் தேவையற்றதாக மாறும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் வேற்று ஜாதி, அதாவது தலித் இனத்துப்பையன் வேலை பார்க்கக்கூடாது என்கிற அடக்குமுறை நடந்தது அதற்கும் sbi யில் மராத்தியர்கள் மட்டும் வேலைபார்க்கவேண்டும் எனும் கோஷமும் வேறு வேறல்ல.

எவ்வளவு வேலை வாய்ப்புகள் இருக்கிறது. அதையெல்லால் அவுட்சோர்சிங் அமைத்து சுரண்டுகிற உலகமயம் கோபப்பட வைக்கமாட்டேன் என்கிறதே. அந்த முரண்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை.

காமராஜ் said...

குப்பன் யாஹூ,
இளவட்டம்,
பாலாஜி,
வேல்ஜி,
அசோக்,
அன்புத்தங்கை

அணைவருக்கும்
அன்பும் வணக்கமும்.

திசையன்..! said...
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் said...

அருமை... நல்ல பகிர்வு தோழரே