18.11.09

கலவரத்தில் நசுங்கிய இயல்பான மனிதாபிமனம்.

மதுரையில் துணிக்கடையில் ஒரு சாத்தூர்க்காரரைப் பார்த்துவிட்டால் உடனே எதோ பொக்கிஷம் கிடைத்தது போல அவர்களைப் பற்றிக் கொள்ளச் சொல்லுகிறது. நீங்க பைபாஸ் ரோட்ல அந்திக்கட வச்சிருக்கீங்கள்ள என்று முகமன் சொல்லிக்கொண்டு சிநேகம் தொடரச் சொல்லுகிறது. சென்னையில் யாரையாவது விருதுநகர் மாவட்டத்து மனிதரைச் சந்திக்க நேர்ந்தால் எதோ உறவுகளைச் சந்திக்க நேர்ந்தது போல ஆகிவிடுகிறது. குண்டூர் தாண்டிவிட்டாலோ ஒட்டு மொத்த தமிழகமும் ஓரினம் ஆகிவிடுகிறது.


இப்படித்தான் கட்டாக் ( ஒரிஸ்ஸா) அகில இந்திய மாநாட்டுக்குப் போகும்போது நாங்கள் 48 பேர் ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியை ஆக்ரமித்துக் கொண்டோம். கூத்தும் கும்மாளமுமாக கழிந்த ரெண்டு நாள் ரயில் பயணம். யாராவது ப்ரெட் ஆம்லெட் வாங்கினால் அது பல பங்குகளாகப் பிரிக்கப்படும். சிகரெட் குடிக்கிறவர்கள் ஆரம்பத்தில் கர்ணர்களாகவும் நாள் ஆக ஆக 'மாந்தோப்புக்குயிலே சுருளிராஜனாகவும்' எதிர்ப் பரிமாணம் எடுக்கிற விந்தைகள் நடந்தது.மிக நீண்ட கிருஷ்ணா ஆற்றுப் பாலத்தைக் கடந்து ரயில்போகையில் அப்படியே அந்தரத்தில் மிதக்கிற ஆர்ப்பரிப்பு தொற்றிக்கொண்டது. விசாகப்பட்டிணம் நிலையத்தில் சுடச்சுட அவிச்ச முட்டைவாங்கி மிளகாய்ப் பொடி சேர்த்து தின்ற போது பலபேருக்கு பல்விளக்கினோமா எனும் சிந்தனையில்லாமல் போனது.


தேநீர் குடிப்பதுகூட லாகிரி எனக் கருதும் தோழர்கள் கூட கொஞ்சம் சரக்கடித்துவிட்டு மேல்சட்டையை ஏற்றிக்கட்டி நடனம் ஆடியதும். ரெண்டு ரூபாய் சைக்கிள் வாடகையில் நான்குபேர் ஏறிக்கொண்டு கட்டாக் வீதியில் ஒரு ஆளும் கட்சி மந்திரிபோல எழுந்து நின்று வாக்குகேட்டதும். " பேரன்பு கொண்ட கட்டாக நகர வாக்காளப்பெருமக்களே, கெட்டவார்த்தைச் சின்னத்தில் போட்டியிடும் அன்புச் சகோதரர் கணேசன் அவர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மணியண்ணன் செய்த அட்டகாசம் அந்த நடு ராத்திரி ரெண்டு மணி கட்டாக் வீதியில் இன்னும் உறைந்து கிடக்கிறது.


சுப்புராஜ் அண்ணன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, கரம் சாயா, போண்டா வடை, மணிப்பாறைப்பட்டீ, மணிப்பாறைப்பட்டீ.. எனக்கத்திக் கொண்டு ஒரு ரயில் நிலையத்தில் கோணங்கிச் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பிரயாணம் செய்த மணிப்பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தூரப்பிரதேசத்தில் கைபற்றிக்கொண்டு பேசிய நெகிழ்வின் தருணங்களை துல்லியப்படுத்துவது எனக்கு கடினம்.


டெல்லி கரோல்பாக் வீதியில் போய்க்கொண்டிருக்கும் போது 'எலே ஞொக்காலி' எனும் வார்த்தையக் கேட்டுப்பாருங்கள் விகல்பமில்லாத தமிழ்ப்பாலருந்திய சந்தோசம் வந்து சேரும். அங்கிருந்து எஸ்ற்றிடி போட்டு வீட்டுக்காரியுடன் பேசும்போதுபெருகும் கண்ணீரும் கதகதப்பும் "எப்ப வருவீக" என்று கேட்கும் போது சுருங்கிப்போகும் உலகத்தூரம். தூரக்கிழக்கு நாடுகளில் எப்படியெனத் தெரியவில்லை இன்னும் அடர்த்தியாக இருக்கலாம்.


ஒரு நாள் சென்னை ஜெமினி பாலத்துக்கிழே இருக்கும் எமரால்டு தியேட்டரில் மமூட்டியின் 1932 படம் பார்க்கப்போனோம்.மாப்ளாக் கலவரத்தின் தியாகத்தோடு ரத்தம் தோய்ந்த வரலாறு அது. நான், மாது, பீகே,சோலைமாணிக்க அண்ணன் எல்லோரும் நுழைவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். அந்த வரிசையில் வேஷ்டி கட்டிய நபர் ஒருவரைப் பார்த்தேன். தெரிந்த முகமாக இருந்தது. மூளையைக் கசக்கிக் கொண்டு இருந்த போது மம்மூட்டியின் ' தின ராத்திரங்கள் ' பற்றி மாது சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சில நிகழ்வுகளைச் செறிவூட்டிச் சொல்லுவதைக் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு படைப்பாளி.


சற்று திரும்பிப் பார்த்தபோது அந்த வேஷ்டிக்காரர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் நம்மை வச்சகண் வாங்காமப் பார்த்தா அது நம்ம முதுகில் குறுகுறுக்குமாம் கிராமத்தில் யாரொ சொல்லக் கேட்டது. அந்த வரிசையில் ஒரு அழகான மண்ணிக்கணும், ஒரு நேர்த்தியாக உடை உடுத்திய வாலிபனும் இன்னொரு விபச்சாரப்பெண்ணும் நொடியில் கண்டதும் காதல் கொண்டார்கள். பிறகு இடைவேளைக்கு முன் அவள் அவனது கைக்கடிகாரம்,மணிப்பர்சுடன் எஸ்கேப்பினாள் அது கிடக்கட்டும் . அந்த வேஷ்டிக்காரர் இப்போதும் கூட குறுகுறு வெனப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் தனியே போய் யோசித்தேன். ஆமாம் சாத்தூர் முக்குலாந்தக் கல்லில் ஒரு ஆயத்த டெலிபோன் பூத் வைத்திருந்தவர் அவர், எனது நண்பனின் நண்பன் அவரது உடன் பிறந்தவன்.


விடைகிடைத்த சந்தோசத்தில் நேரே போய் ' நீங்க சாத்தூர் தானே ' என்று கேட்டேன். மருண்டு போய் இல்லை என்றார் நீ யாரு என்று கேட்டார் சொன்னேன் நான் சாத்தூரே இல்லை என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார். நுழைவுச்சீட்டு எடுத்துக்கொண்டு உள்ளே போனோம். நான் மாதுவிடமும் பீகேவிடமும் இதைச்சொன்னேன். அப்போதும் கூட மறைந்திருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். படம் ஆரம்பிக்குமுன்னாலேயே தியேட்டரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. எனது கண்டுபிடிப்பும், விடையும் சிதைந்து போய் நான் மீண்டும் மூளையைக் கசக்கினேன்.


இரண்டு தரப்பிலும் சேர்ந்து மொத்தம் பதினைந்து பேர்களைப்பலி கொண்ட ஒரு கலவரம் நடந்தது சாத்தூரில்.சகஜ வாழ்வு பாதிக்கப்பட்டு ஒரே ஊரில் இருந்த தெருக்கள் வேறு வேறு நாடுகள் போலானது ஓவ்வொரு தெரு முனையிலும் காவலர்கள் உட்கார்ந்து பாண்டியாடிக் கொண்டிருந்தார்கள். சாத்தூரின் தண்ணீர்ப் பஞ்சம் மறந்துபோனது. இரவில் குடங்களோடு தண்ணீருக்கு அலைய பயம் தடுத்தது. நாய்களும் காற்றும் மட்டுமே பயமில்லாமல் அங்குமிங்கும் அலைந்தது. அப்படி ஒரு கலவரம் சாத்தூரில் முன்னதாக நடந்திருந்தது.


நெடுநாள் கழித்து சாத்தூரில் நடந்த ஜாதிக் கலவரத்தில் தொடர்புடையவர் பட்டியலில் அவரும் ஒருவர் எனத்தெரிந்து கொண்டபோது இன்னும் பல விடை கிடைக்காத மனிதாபிமானக் கேள்விகள் என்னைச் சூழ்ந்துகொண்டது.

18 comments:

குப்பன்.யாஹூ said...

மகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ப

லெமூரியன்... said...

கடந்து போன நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்ப்பது எப்பொழுதுமே அலுக்காத ஒன்று.....உங்கள் பதிவைப் படிக்கும் போது எனக்குண்டான சில பழைய நியாபகங்கள் கிளர்ந்தெழுவதை தடுக்கவியலவில்லை....மனதிற்குள் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி பரவியது படிக்கும் போது...மேலும் மற்றைய பயணங்களைப் போலல்லாது ரயில் பயணம் நமக்கு ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு புதிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும்....மறக்க முடியாத சம்பவங்களாக வாழ்வில் அனைவருக்கும் ரயில் பயணங்களில் ஏதோ ஒன்று நடந்திருக்கும்.....

ஜாதிக் கலவரங்கள்....அதனுடைய தாக்கம் .....அதில் உண்டானக் மனக் காயம்...இது பெரும்பாலும் தென்னகத்தில் உள்ளவர்க்கு அதிகம் உணர்ந்திருக்கிற விஷயம்....உடன் பழகிய நெருக்கமான நண்பர்கள் கூட ஒரு ஜாதிக் கலவரத்திற்கு பிறகு முகம் திருப்பிச் சென்றதை ஜீரணிக்க முடியாமல் வேறு பள்ளி மாற்றியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.....

☼ வெயிலான் said...

// நாய்களும் காற்றும் மட்டுமே பயமில்லாமல் அங்குமிங்கும் அலைந்தது //

அருமையான வரிகள்.

க.பாலாசி said...

இதைபோன்ற கண்காணாத இடத்திற்கு செல்லும்போது நமக்கு நமது ஊர்க்காரர்கள் யாராவது இங்கு இருப்பார்களா என்ற ஏக்கம் வரத்தான் செய்யும். குறிப்பாக இரயில் நிலையங்களில். குவாட்டி செல்லும்போது எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது.

சில நேரங்களில் சில மனிதர்கள். ஏதோவிதத்தில் அவர்கள் செய்வது அவர்களுக்கே தெரிவதில்லை.

உயிரோடை said...

எவ்வ‌ள‌வு சுவார‌ஸிய‌மாக‌ எழுதுகின்றீர்க‌ள். அருமையாக‌ இருக்கு.

பா.ராஜாராம் said...

//தேநீர் குடிப்பதுகூட லாகிரி எனக் கருதும் தோழர்கள் கூட கொஞ்சம் சரக்கடித்துவிட்டு மேல்சட்டையை ஏற்றிக்கட்டி நடனம் ஆடியதும். ரெண்டு ரூபாய் சைக்கிள் வாடகையில் நான்குபேர் ஏறிக்கொண்டு கட்டாக் வீதியில் ஒரு ஆளும் கட்சி மந்திரிபோல எழுந்து நின்று வாக்குகேட்டதும். " பேரன்பு கொண்ட கட்டாக நகர வாக்காளப்பெருமக்களே, கெட்டவார்த்தைச் சின்னத்தில் போட்டியிடும் அன்புச் சகோதரர் கணேசன் அவர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மணியண்ணன் செய்த அட்டகாசம் அந்த நடு ராத்திரி ரெண்டு மணி கட்டாக் வீதியில் இன்னும் உறைந்து கிடக்கிறது.

சுப்புராஜ் அண்ணன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, கரம் சாயா, போண்டா வடை, மணிப்பாறைப்பட்டீ, மணிப்பாறைப்பட்டீ.. எனக்கத்திக் கொண்டு ஒரு ரயில் நிலையத்தில் கோணங்கிச் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பிரயாணம் செய்த மணிப்பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தூரப்பிரதேசத்தில் கைபற்றிக்கொண்டு பேசிய நெகிழ்வின் தருணங்களை துல்லியப்படுத்துவது எனக்கு கடினம்.

சுப்புராஜ் அண்ணன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, கரம் சாயா, போண்டா வடை, மணிப்பாறைப்பட்டீ, மணிப்பாறைப்பட்டீ.. எனக்கத்திக் கொண்டு ஒரு ரயில் நிலையத்தில் கோணங்கிச் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார்//

ஹா..ஹா..ஹா..சிரிச்சு முடியலை காமராஜ்.வயசை மறக்கிற சுகம் இந்த லாகிரிக்கு மட்டுமே.படம் படமாக விரிந்தது காமு.

//தூரக்கிழக்கு நாடுகளில் எப்படியெனத் தெரியவில்லை இன்னும் அடர்த்தியாக இருக்கலாம்.//

:-(

நண்பர்கள் எல்லோருமாக,...போங்க காமராஜ்..விட்டுட்டு போய்டீங்கள்ள?

அருமையான பகிர்வு மக்கா!

காமராஜ் said...

வணக்கம்

குப்பன் யாஹூ,
பாலாஜி,
லெமூரியன்,
வெயிலான்,
லாவண்யா,

நன்றி.

காமராஜ் said...

வாங்க... வாங்க பாரா.
எப்டிருக்கீங்க,
ராகவன் பேசினாரா.
வந்தது சந்தோசமாகவும்
ஆறுதலாகவும் இருக்கு.
தாங்க்ஸ்.

ஈரோடு கதிர் said...

படிக்க படிக்க திகட்டாதது உங்கள் எழுத்து...

சாத்தூர்காரர் முகம் திருப்பிப்போனது சட்டெனெ வருத்தமாயிருந்தாலும்... கடைசி வரி படிக்கும் போது பரிதாபமாகவேயிருந்தது

அன்புடன் அருணா said...

சாத்தூரைப் பற்றி என்றவுடன்....எங்கே சாத்தூர் சாத்தூர் என்று பட படவென்று படித்துவிட்டு மறுபடி நிதானமாக முதலிலிருந்து......

காமராஜ் said...

வாங்க கதிர்,
வணக்கம்.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

அருணா மேடம்
நன்றி......

anto said...

மாமா!சூப்பர்....வெவ்வேறு சம்பவங்களை சுவையாக கோர்த்துள்ளீர்கள்...

காமராஜ் said...

அன்புமிக்க மாப்ளே,

என்ன நடக்கு, ஒரு சத்தமும் இல்ல.
வரவுக்கும் கருத்துக்கும் வந்தனம்.

மகள் - வரப்போகும் பூக்குட்டி,
அங்கிள்,.... எல்லோருக்கும்

என் அன்பும் வணக்கமும்.

pavithrabalu said...

அன்புள்ள தோழரே

சாதிப் பிரிவினையின் விளைவுகள் வேதனையளிப்பதாகவே உள்ளன. திடீரென முளைக்கும் தலைவர்கள் கிளப்பும் புகைச்சலில், பாதிக்கப்படுவதென்னவோ சாமானியர்கள் தான்... அப்படிப்பபட்ட ஒரு அப்பாவி தான் நீங்கள் சொன்னவரோ...

ஆ.ஞானசேகரன் said...

சுவராசியமான பதிப்பு.... பகிர்வுக்கு நன்றி தோழரே

ராகவன் said...

அன்பு காமராஜ்,

சாத்தூர்க்காரரைப் பார்த்துவிட்டால் ஏதோ பொக்கிஷம் கிடைத்தது போல.

”அந்த வரிசையில் ஒரு அழகான மண்ணிக்கணும், ஒரு நேர்த்தியாக உடை உடுத்திய வாலிபனும் இன்னொரு விபச்சாரப்பெண்ணும் நொடியில் கண்டதும் காதல் கொண்டார்கள். பிறகு இடைவேளைக்கு முன் அவள் அவனது கைக்கடிகாரம்,மணிப்பர்சுடன் எஸ்கேப்பினாள் அது கிடக்கட்டும்”

அன்பு வாழையில் பரிமாறிய விருந்தில் சிறு கல்லாய் அகப்பட்ட வரிகள் மேலே உள்ளவை. இந்த இடைச்செருகல் வேண்டாமே காமராஜ்! உன்னைப் போல் ஒருவனில் ரிப்போர்ட்டர் பெண்ணை சிகரெட் பிடிக்க வைத்தது போல் அன்னியமாய் தொங்குகிறது.

“தேநீர் குடிப்பதுகூட லாகிரி எனக் கருதும் தோழர்கள் கூட கொஞ்சம் சரக்கடித்துவிட்டு மேல்சட்டையை ஏற்றிக்கட்டி நடனம் ஆடியதும். ரெண்டு ரூபாய் சைக்கிள் வாடகையில் நான்குபேர் ஏறிக்கொண்டு கட்டாக் வீதியில் ஒரு ஆளும் கட்சி மந்திரிபோல எழுந்து நின்று வாக்குகேட்டதும். " பேரன்பு கொண்ட கட்டாக நகர வாக்காளப்பெருமக்களே, கெட்டவார்த்தைச் சின்னத்தில் போட்டியிடும் அன்புச் சகோதரர் கணேசன் அவர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மணியண்ணன் செய்த அட்டகாசம் அந்த நடு ராத்திரி ரெண்டு மணி கட்டாக் வீதியில் இன்னும் உறைந்து கிடக்கிறது.


சுப்புராஜ் அண்ணன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, கரம் சாயா, போண்டா வடை, மணிப்பாறைப்பட்டீ, மணிப்பாறைப்பட்டீ.. எனக்கத்திக் கொண்டு ஒரு ரயில் நிலையத்தில் கோணங்கிச் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பிரயாணம் செய்த மணிப்பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தூரப்பிரதேசத்தில் கைபற்றிக்கொண்டு பேசிய நெகிழ்வின் தருணங்களை துல்லியப்படுத்துவது எனக்கு கடினம்.”

தனிமனிதனாய் பயனிக்கையில் உள்ள நாகரீகப்பூச்சுகள் இது போல கூட்டமாய் பயனிக்கையில் கலைக்கப்பட்டு, நிஜங்களை மட்டுமே அம்மணமாய் உலவ விடும் என்பதை இதை விட துல்லியமாய் யாராலும் உணர்த்த முடியுமா தெரியவில்லை!
இது ஒரு தேர்ந்த உளவியல் விரிப்பின் முந்தைய நிலைக்கதை போல இருக்கிறது.
சாத்தூரில் நடந்த இந்த கலவரம் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது, ஆனால் இது போல விருதுபட்டியில், இரு பெரும் சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட கலவரங்களின் பலிகள், இழப்புகள், பய நிமிடங்கள் பற்றி சொல்லி மாளாது. எனக்கு தெரிந்த தன் தந்தையை கலவரத்தில் இழந்த அந்த வியாபார குடும்பத்தின் கலவரம் பற்றிய விவரிப்பு இன்றும் என் தூக்கத்தை முறிக்கும் இரவுகளில் விடியும். இவர்கள் மதுரைக்கு புலம் பெயர்ந்து விட்ட பிறகும் அந்த சுவடுகளை மனப்பரப்பில் பதியம் போட்டிருக்கிறார்கள் போல. ஆனாலும் இறந்தவரின் மனைவி அதை விவரிக்கும் போது அழுகிறார் இன்னமும்.

பாராவுக்கான பின்னூட்டப் பதிலியில் என்னைப் பற்றிய உங்கள் விசாரிப்பு எனக்கு கிறக்கத்தைக் கொடுக்கிறது. பச்சை வேட்டி சட்டையில் (பச்சை ஏதாவது குறியீடா என்று குழம்பிக் கொள்ளத்தேவையில்லை) என் கணவில் வந்த மதுரை வீதிகளில் உங்களுடன் சுற்றியது தீரும் முன்னே உங்கள் தொலைபேசி அழைப்பு, அழைப்பு மணியாய் பட்டது.

அன்புக்கு நன்றிகள் பல காமராஜ்!

ராகவன்

மண்குதிரை said...

பலவிதமான உணர்வுகளை எழுப்புகிறது.