4.10.09

மண்மாதிரிகள்.

மண்பாண்டங்கள் மண்ணிலிருந்து செய்ததுதான் என்பதைக் கண்டுபிடிக்க எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைகால் எனத்தெரியும் ஞானம் போதும். பீங்கானும், கண்ணடிப்பொருள்களும் களி மண்ணிலிருந்து தான் உருவனதென்பதை அறியும்போது ஆச்சரியப்பட்டேன். கிமு 3000 ல் மண்பாண்டங்களில் எழுதப்பட்ட மெசபடோமிய ( ஜார்ஜ் புஷ்ஷின் ரணுவபூட்சு பட்டு அழைக்கழிகப்பட்ட இப்போதைய ஈராக் ) எழுத்துக்கள் தான் உலகின் முதல் வரிவடிவ எழுத்துக்களாம்.


ரொம்ப மக்கா இருக்கிற பையனைப் பார்த்து ' மண்ணு மாதிரி நிக்கெயெடா ' என்று ஆசிரியர்கள் சொல்லுவார்கள்.கொஞ்சம் சுட்டியா இருக்கிறவனைச் சுட்டிச் சொல்லும் போது ' அவம் பெறந்த மண்ணு அப்டி' என்றும் சொல்லுவதுண்டு.செழிச்சிருச்சி எனவும் தரிசாப் போயிருச்சி என்றும் எதிரும் புதிருமாக மனித வாழ்க்கையை தானே ஏற்கிறது. மண்ணை நம்பி மரமும், மரத்தை நம்பி உயிர்களும் வாழ்ந்திருக்க, குரோதம் செய்தவர் மீது புழுதிவாரி இறைப்பதுவும், மனிதாபிமானம் ஈரம் கசியும் மண்ணென்றும் தானே உயிர்களைத் தாங்கிக் கொள்ளும்.


பூமாதேவியப்போல பொறுமை சாலி என்கிற பாமரச்சொல்லை அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்று இகத்தின் சுக துக்கங்களின் ஏற்கும் பழிநிலமாகுகிறார் வள்லுவனாரும். மன்னாதி மன்னனும் மண்ணைக் கவ்வினான் வீழ்ந்தோரைக்குறிப்பதும், குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணொட்டாமப் பேசுவதும், என்ன தான் சேர்த்துவச்சாலும் ஒட்டுற மண்ணுதா ஒட்டும் ஈர்ப்பையும் பிடிப்பயுமாக இந்த மண்ணே எல்லாவற்றையும் எடுத்துகொள்கிறது. சொன்னாலும் தெரியாது மண்ணாளும் வித்தை என்று மேலிருந்து சொலவடை சொல்லுவார். ' மண்ணாரு ஆண்டா மனையாரு கண்டா ' என்று கீழிருந்தும் உழைக்கும் மக்ககள் பழமொழி சொல்லுவார்.


அதுபோலவே என்னைக் கருவுற்றிருக்கும் போது என் தாய் தெள்ளித்தின்ற மண்ணைத்தவிர பரந்த இப்பூவுலகில் எனதுமண் எது எனும் கவிதைச் கேள்விகள் வெறியோடு வெளியேறுகிறது புதைக்கவிடாமல் தடுக்கப்படும் ஒவ்வொரு அருந்ததிய சடலத்திடமிருந்தும். இருநூறு ஆண்டுகள் பறிகொடுத்த மண்ணை யார் யரோ கூறு போட்டுக் கொண்டார்கள்.யூதர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் இன்னும் எத்தனையோ. என் பெரியப்பா நினைவாக மும்பையில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்குப் போனபோது இவர்கள் எல்லோருக்கும் அழியாத அழகுவேலைப் பாடுகளோடு கூடிய கல்லறைகள் இருப்பதை பார்த்துவந்தேன். அங்கே 600 ஆண்டுகாலப் பழமைவய்ந்த கல்லறைகளும் இருக்கிறது.


போர்த்துக்கீசியரைப் பார்த்து பொறாமைப்பட்டு, அவர்களைப் பின் தொடர்ந்து கள்ளிக்கோட்டை வந்த யூதர்கள் தான் முதன் முதலில் பீரங்கிகலையும் துப்பாக்கிகளையும் வைத்து கள்ளிக்கோட்டையைப் பிடித்தார்கள். அவர்களுக்கும் அப்போதைய திருவிதாங்கூர் மன்னனுக்குமிடையில் ஒரு ஒப்பந்தம் இருந்ததாம். தெருவில் வரும்போது பராக் சொல்லுவது முதல் அந்தப்புறம் வைத்துக்கொள்வது வரை,பதினான்கு விதமான அரச மரியாதையை யூதர்களுக்கும் வழங்கவேண்டும் என்று தாமிரப்பட்டயம் எழுதிக்கொடுத்தானாம். அவர்கள் தான் அங்கிருக்கிற நாடார் மற்றும் தலித்துப் பெண்களை மார்ச்சேலை அணியவிடாமல் ஆதிக்கக் கொடூரம் நிலை நாட்டினர்கள்.


தொண்ணூறுகளில் முதன்முதலாய் மேடையேறிய அன்புத்தம்பி புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், தனது நவீன ஜீன்ஸ் கால்சராயிலிருந்து மாறி பிச்சைக் கோலத்தில் மேடையேறுவார். அவர்தான் பிரகதீஸ்வரன் என்று கண்டுபிடிக்க சில நிமிடம் சிரமமாகும். அவரது பூஞ்சை உடலும் இப்போதைய ஃபாசனாக இருக்கும் அவரது ஐந்து நால் சவரம் செய்யாத தாடியும் பொருந்திப் போகிற ஞானக்கிறுக்கன் அரிதாரம். தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளாய் காண்பித்து பார்வையாளரிடம் இது என்ன என்று கேட்பார். முதலில் ஒரு ஒடிஞ்ச கம்பு கூட்டம் அதை அப்படித்தான் சொல்லும் அவரோ இந்த தேசத்தில் அஹிம்சையை விதைத்த காந்தியடிகளின் கைத்தடி என்று சொல்லுவார். இதுபோலவே பகத்சிங்கின் தூக்கு கயிறு, பாரதியின் பேனா இப்படியே.. வரும். இறுதியில் தனது தோலில் தொங்கும் மூட்டையிலிருந்து கொஞ்சம் காய்ந்த மணலை அள்ளி இது என்ன என்று கேட்பார், மணல் என்று பதில் வந்ததும் வெடித்துக் கத்துவான் அடப்பாவிகளா இது மண்ணில்லை எனது தேசம். என்று அழுகுரலில் எல்லோரையும் உறைய வைப்பான்.


ஆம் திருச்செந்தூர் தொடங்கி கன்னியாகுமரிவரையிலுள்ள கடல்புரத்தில் இருந்து யுரேனியத் தாதுக்கள் கப்பல் கப்பலாய்உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகிற சங்கதி நூற்றுப் பத்துக்கோடிப் பேருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தப் பகுதியில் குத்தகை எடுத்தவரைப் பற்றி ' மனுசன் கெட்டிக்காரன் எத்தன லாரி, எத்தன காரு, எவ்வளவு சொத்து இருக்குன்னு கணக்கு இல்ல நல்ல சம்பாத்தியகாரர் ' இப்படிச்சொல்லிக்கொண்டு போகிறார் ஒரு ரயில் பயணி.


அரசாங்கம் இலவசமாகக் கொடுத்த அரைசெண்ட் நிலத்திலிருந்து செம்மண் கேட்டபோது ' அதை வித்த காசில் சோறு திண்ணா பீ வாசம் அடிக்கும் ' என்று என் தாய் சொன்னபோது நாங்கள் இரண்டுவேளை சாப்பிடவில்லை. என் தாயின் ரோசம் தோற்றுப்போய் மூன்றாவது வேளை பசியாறிக்கொண்டிருந்த போது, பழய்ய பானையிலிருந்து புளிச்சாணித் தண்ணிகுடித்துக் கொண்டிருந்தாள் எந்தாய்.

24 comments:

Pradeep said...

நல்ல ஒரு தகவல் மிக்க இடுக்கை.

Deepa (#07420021555503028936) said...

அருமையான இடுகை.

மண்ணின் மகத்துவத்தையும் அது கொள்ளை போகும் அவலத்தையும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

Deepa (#07420021555503028936) said...
This comment has been removed by the author.
பின்னோக்கி said...

மண்ணுக்கு இவ்வளவு கதைகளா ?
திருச்செந்தூரில் யுரேனியம் - செய்தி எனக்கு

கதிர் - ஈரோடு said...

எல்லோருக்கும் இன்று தான் கவலையாக இருக்கிறது...
நாளை பற்றி யாருக்கும் கவலையில்லை..

காற்று... அடுத்து தண்ணீர்.. அடுத்து மண் ஒவ்வொன்றாய் களவு போய் கொண்டேயிருக்கிறது...

பிரகதீஸ்வரன் - புதிய கோணங்கிகளில் வருபரா?

சந்தனமுல்லை said...

மண் மேல் மனிதன் கொண்ட ஆசை விடாது போல..எக்காலத்திலும்!!

கதிரின் //காற்று... அடுத்து தண்ணீர்.. அடுத்து மண் ஒவ்வொன்றாய் களவு போய் கொண்டேயிருக்கிறது...// வார்த்தைகளை வழிமொழிகிறேன்!

காமராஜ் said...

வணக்கம் ப்ரதீப்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

வணக்கம் தீபா. நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் பின்னோக்கி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆம் தேரிச் சிகப்பு மணலை அள்ளி அதிலிருந்து தாதுப்பொருள்
அடர்ந்த மணலைக்கொண்டுபோகிறது கப்பல்கள்.

காமராஜ் said...

நன்றி கதிர். ஆமாம் முதலில் அவருக்கு "ஞானக்கிறுக்கன்"
பிரகதீஸ்வரன் என்பதுதான் பெயர். அப்புறம் அவரே சமூகப்
பகடிகளைச்சொல்லும் புதிய கோணங்கி எனப்பெயர் மாற்றிக்கொண்டு
விளாசுகிறார். அவரது நிகழ்ச்சிகள் நேரில் பார்க்கக் கொடுத்துவைக்க வேண்டும்.
தொலைக் காட்சியில் வருபவை கத்தரிக்கப்பட்ட செடி, நேரடியாகப்பருங்கள் காட்டுச்செடி.

காமராஜ் said...

வணக்கம் சந்தனமுல்லை நன்றி

காமராஜ் said...

வாருங்கள்

திரு. செக்ஸி ரோஸ்,
திரு. திருப்பூர்மணி
திரு. தமிழ்நாடன்
திரு. பிரபாகர் ராமசாமி
திரு. வெண்மணிச்செல்வன்

எனது பக்கத்தில் இணைந்த உங்களுக்கு நன்றி

பிரபாகர் said...

நண்பரே,

உங்களின் பதிவுகளை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்... பதிவெழுதுவதற்கு முன் மாதிரியாய் இருக்கிறது உங்களின் பதிவுகள். இத்தனை நாள் உங்களோடு இணையாமல் வீணடித்திருக்கிறேன்... அறிமுகப்படுத்திய அன்பு கதிர்... ஆயிரம் நன்றிகள்...

இயற்கையை பாழ்செய்து இன்பத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்... ஆள்பவர்களே அவலங்களை செய்கிறார்கள் ஆப்பசைத்த குரங்காய் முடியும் என அறிந்தும்... பதிலுக்கு சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை அன்னையின் வெளிப்பாட்டையும் தாங்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.

அற்புதமான பதிவு. மனமார்ந்த வாழ்த்துக்கள்.


"மண்மாதிரிகள்" இயற்கையை நேசிக்கும் எல்லோருடைய் குரல்களுக்கும் முன்மாதிரிகள்...

பிரபாகர். http://abiprabhu.blogspot.com

காமராஜ் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பிரபாகர்

மாதவராஜ் said...

அருமையான பதிவு. கடைசி பத்தி கதி கலக்க வைத்து விட்டது அருமை தோழனே. மண் குறித்த பார்வையும், சிந்தனையும் உணர்வுகளோடு பேசுகின்றன.

ஆ.ஞானசேகரன் said...

//இறுதியில் தனது தோலில் தொங்கும் மூட்டையிலிருந்து கொஞ்சம் காய்ந்த மணலை அள்ளி இது என்ன என்று கேட்பார், மணல் என்று பதில் வந்ததும் வெடித்துக் கத்துவான் அடப்பாவிகளா இது மண்ணில்லை எனது தேசம். என்று அழுகுரலில் எல்லோரையும் உறைய வைப்பான்.//

மண் குறித்த உங்களின் பார்வையும் ஆதங்கமும் என்னை சிந்திக்க வைத்தது நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

//அரசாங்கம் இலவசமாகக் கொடுத்த அரைசெண்ட் நிலத்திலிருந்து செம்மண் கேட்டபோது ' அதை வித்த காசில் சோறு திண்ணா பீ வாசம் அடிக்கும் ' என்று என் தாய் சொன்னபோது நாங்கள் இரண்டுவேளை சாப்பிடவில்லை. என் தாயின் ரோசம் தோற்றுப்போய் மூன்றாவது வேளை பசியாறிக்கொண்டிருந்த போது, பழய்ய பானையிலிருந்து புளிச்சாணித் தண்ணிகுடித்துக் கொண்டிருந்தாள் எந்தாய்.//


உணர்வுகளை தட்டி எடுக்கும் வரிகள்

காமராஜ் said...

நன்றி மாது.

காமராஜ் said...

வாருங்கள் ஞானசேகரன், அம்மா அப்பாவைப்பார்த்துவிட்டு வந்தபின்னால்
அம்மா அப்பா கலைகட்டுகிறதா ?

ராகவன் said...

அன்பு காமராஜ்,

மனிதர்களுக்கு ஐம்பூதங்களையும் அடக்கி ஆள ஆசை. வான், நீர், நெருப்பு, காற்று, மண் என்று தனது ராஜ்ஜியங்களை விரிவு படுத்த பிரயாசைப்படும் ஒரு விபரீத கோட்பாடு எல்லாரிடத்திலும், நான் உட்பட இருக்கிறது. ஆள ஆசைப்படும் எதைப்பற்றியும் அறிவு இல்லை நமக்கு.
எத்தனை அறைகூவல்கள் கிரீன் எர்த், மதர் எர்த்,க்ளோபல் வார்மிங், ஓசோன், மாசில்லா காற்று, மாசற்ற நீர், வருங்காலத்திற்கு மிச்சம் இருக்கட்டும் நீ அனுபவித்தது, அனுபவிப்பது என்று சமண்பாடில்லாத இரைச்சல்கள்.

மலைகளின் முலைகளில் வடிகிறது விஷப்பேரருவி, வருங்காலம் நுழைய மறுக்கும் பூமியின் யோனி பெருங்கதவுகள், மரங்களின் நுரையீரல்கள் திரட்டும் கரியமிலப் பைகள், விந்தின்றி தொங்குகிறது மேகத்தின் விரைப்பைகள், வன்புணர்ச்சியில் லயிக்கிறது ஒரு எழும்பாத, நித்ய மரண இசை எல்லோர் எழவிலும். உன், என் உடல் கருகுகிறது நெருப்பில்லாமல், புகைதானே என்ற அலட்சியம் எல்லோரிடத்திலும்.

மண் மாத்திரம் இல்லை காமராஜ், எல்லா பூதங்களையும் சீசாவில் அடைக்கும் செப்படி வித்தைக்காரர்களாய் உலவ ஆசைப்படுகிறோம்.
உனக்கு ரேடியோ ஒக்குடத் தெரியுமா? தெரியும், ரேடியோ புதுசா செய்யத்தெரியுமா? தெரியாது, இதன் நீட்சிதான் நாம் எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்து நிற்பது எல்லாம்.
அறியாமையின் குழந்தைகள் தான் நாம் இன்னும், மாற்றங்கள் பற்றி பேசுவோரின் மார்தட்டல்கள் தொப்பு, தொப்பென்று வெறும் காற்றுக் குடுவையில் அறைகிறது, போர் பிரகடனங்கள் என வேஷம் கட்டிக்கொண்டு.

அழகுவேலைப்பாடுள்ள கல்லறைகளுக்குள்ளே தானே நீங்களும், நானும். கல்லறைக்குள் இருந்து கொண்டே கல்லறையை பார்க்கிறோம் நாம். நரகலில் வாழும் நமக்கு பீ வாசம் தனியாக தெரிகிறதா என்ன? அகண்ட காவிரி அகத்திய கமண்டலத்தில் நிறுத்தியதைப்போல ஒரு மூட்டை மண்ணில் நமது தேசம், தூக்கிக் கொண்டு அலைகிறார் பிரகதீசுவரன், தோள் கொடுக்க ஆட்கள் உண்டு நம்மிடையே.

என்னை எங்கெங்கோ கொண்டு சென்று விட்டது உங்களின் இந்த பதிவு. கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டதற்கு வருந்துகிறேன், உள்ள இருக்கிறது வெளியே.

அன்புடன்
ராகவன்.

காமராஜ் said...

//மலைகளின் முலைகளில் வடிகிறது விஷப்பேரருவி, வருங்காலம் நுழைய மறுக்கும் பூமியின் யோனி பெருங்கதவுகள், மரங்களின் நுரையீரல்கள் திரட்டும் கரியமிலப் பைகள், விந்தின்றி தொங்குகிறது மேகத்தின் விரைப்பைகள், வன்புணர்ச்சியில் லயிக்கிறது ஒரு எழும்பாத, நித்ய மரண இசை எல்லோர் எழவிலும். உன், என் உடல் கருகுகிறது நெருப்பில்லாமல், புகைதானே என்ற அலட்சியம் எல்லோரிடத்திலும்.

மண் மாத்திரம் இல்லை காமராஜ், எல்லா பூதங்களையும் சீசாவில் அடைக்கும் செப்படி வித்தைக்காரர்களாய் உலவ ஆசைப்படுகிறோம்.
உனக்கு ரேடியோ ஒக்குடத் தெரியுமா? தெரியும், ரேடியோ புதுசா செய்யத்தெரியுமா? தெரியாது, இதன் நீட்சிதான் நாம் எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்து நிற்பது எல்லாம். //

ஆஹா ஆமாம் ராகவன். இவ்வளவு பெரிய தேசத்தில் நாம் கண்டுபிடித்தது 0 வும், நிறப்பிரிகையும் தான். இன்னும் வண்ணத் தொலைக்காட்சிக்கான பிக்சர் ட்யூப் தருவிக்கப்படமட்டுமே முடிகிறது. இந்தியாவை ஆண்டபோது சம்பாதித்ததை விட இப்போது பலமடங்கு சம்பாதிக்கிறோம் என்று சொன்ன எக்காளவார்த்தைகள் ரோசப்பட வைக்கவில்லை.

கபிலன் said...

மண்ணுல இவ்வளவு மேட்டரா....புட்டு புட்டு வச்சு இருக்கீங்க..
அருமயான தகவல்களைச் சொல்லி இருக்கீங்க..
வாழ்த்துக்கள்!

i criticize periyar said...

அது யுரேனியமம் கொண்ட மண்ணாக இருக்க வாய்ப்பில்லை.தோரியம் போன்ற ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு.

செந்தழல் ரவி said...

மண்வாசனைப்பதிவு !!!

அருமை அருமை !!!!!!