22.10.09

அன்றாடங்களின் அலட்சியத்தை கவனப்படுத்தும் பேரா.தொப வின் - '' தெய்வம் என்பதோர் ''

சிந்துபாத் கதைகள் படிக்கத் தொடங்கிய போது, செய்திகளும் சினிமாவும் கூட அந்நியமாக இருந்தது. படக்கதைகள் படிக்கிற காலத்தில் சிறுகதைகளில் நாட்டமில்லை. சினிமாவின் கதாநாயகிகள் கனவுகளை ஆக்ரமித்தபோது எல்லாமே அயற்சியளிக்கிற விடயங்காளாக இருந்தது. சிறுகதைகளும் சாண்டில்யனும் படிக்கத்துவங்கிய காலத்தில் கட்டுரைகளின் ஒரு வரியைக்கூடக் கடக்க முடியாமல் போனது, அது சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதுவேறு இதிகாசம் ஆவணப் படத்துக்காக சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, பத்தமடை, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, மதுரை என அலைந்த காலத்தில் ஒரு நான்கு பேருடைய பேட்டி பல அடர்த்தியான அதிர்வுகளை உண்டாக்கியது. பஞ்சாயத்துராஜ் மற்றும் ஜனநாயகத்தேர்தல்கள் குறித்த ஆய்வாளர் பேரா.க.பழனித்துரை. வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். நாட்டார் தெய்வங்கள்குறித்த ஆய்வாளர் தொ.பரமசிவன். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.


ஆவணப்படத்தில் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் மட்டுமே வெளியான இவர்களின் மூலப் பேட்டிகள் ஒவ்வொன்றும் குறைந்தது இரண்டு மணிநேர நீளமனவை. தனித்தனியே ஒரு புத்தகமாக விரியும் தன்மை கொண்ட ஒலிவடிவக் கட்டுரைகள் அவை.நமது அன்றாடங்களில் எதிர்ப்படும், கேள்வியற்றுக் கடந்துபோகும் பல சின்னச் சின்ன நடைமுறைகள் மீது கவனத்தைத் திருப்பும் வல்லமை கொண்ட பேச்சுக்கள்.


பாளயங்கோட்டையிலுள்ள பேராசிரியர்.தொபரமசிவன் வீட்டுக்கு தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு படப்பிடிப்புக்குழுவினர் போனோம். படப்பிடிப்புக் குழு என்பது வெறும் மூன்று அல்லது நான்கு பேர்தான். நான், மாது, தம்பி ப்ரியாகார்த்தி எப்போதாவது ஒரு துணை ஒளிப்பதிவாளர் வருவார். பேரா.தொப வின் வீட்டுக் கொல்லையில் அந்த அரை நெல்லிக்காய் மரத்தடியில் விழுந்துகிடந்த நெல்லிக்கனிகளை எடுத்துச்சுவைத்த படி பேட்டி துவங்கியது. ஒரு திண்ணைப் பேச்சுப்போல, ஒரு நண்பர் சந்திப்புப் போல துவங்கிய பேச்சுதான், எங்களது பேட்டி. ஸ்டார்ட் காமிரா, ஆக்சன், கட் என்னும் வார்த்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டதாகவே எங்களின் நான்கு ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டது என்பது சற்று வியப்பான விஷயம்.


பேராசிரியரின் பேட்டியை உடனிருந்து கேட்ட எனக்கு அவரது புத்த்கங்கள் வாங்கிப்படிக்க வேண்டுமென்கிற ஆவலைத் தூண்டியது. பேராசிரியர் தொப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், மற்றும் தெய்வம் என்பதோர் எனும் இரண்டு புத்தகங்கள் ஆய்வுலகில் அலாதியானவை. படிக்கிற போது வாசகனை மிரட்டுகிற வார்த்தைகளோ மேற்கோள்களோ இல்லாமல் நமது அன்றாடப் புழக்கங்களில் இருந்தே எல்லாவற்றையும் ஆராயத் தந்துள்ளார். தோழர் தமிழ்ச்செல்வன் சொல்வது போல ஆற்றங்கறையில்,கிணற்றடியில்,சாவு வீட்டு முற்றத்தில் என தமிழ் மண்ணின் புழுதிபடிந்த வார்த்தைகளில் இருக்கிறது அவரதுதெய்வம் என்பதோர் புத்தகம். ஒரு பேராசிரியர் பாடப்புத்தகத்தின் தூக்கம் வரவைக்கும் சொற்களற்ற மொழியில்,வழியில் புத்தகம் தருவது இன்னும் சிலாக்கியமானது.


இருக்கங்குடி மாரி, நெல்லைப்பகுதி பேச்சி, சுடலைமாடன், செல்லியம்மன், துரௌபதியம்மன் என்கிற கிராமக் கோடியில் வருசம் முழுக்க கேட்பாரற்றுக் கிடக்கிற நாட்டார் தெய்வங்கள் உருவான கதைகள் தொடங்கி, அவற்றிற்கிருக்கும் ஒரு நாள் மரியாதை குறித்தும் பேசுகிறார். அப்போது நமது வீட்டுப் பெரியவர் ஒருவர் நமது கையைப்பிடித்து கூட்டிக் கொண்டுபோய் ஒவ்வொரு நாட்டார் கோவிலாக அர்த்தத்தோடு சுற்றிக்காண்பிக்கிற உணர்வு ஏற்படுகிறது. பெருந் தெய்வங்கள் குறித்த ஒப்பீடுகள் வாசக மனதில் கேள்விகளை விவாதங்களைத் துவக்கி வைக்கிறது. வெறுமனே நீலிக்கண்ணீர் என்னும் ஒரு சொல் நமது புழக்கத்தில்கடந்து போகக் காண்கிறோம். அதற்குப் பின்னாள் இருக்கும் ஒரு கதையைச் சொல்லி வியக்கவைக்கிறார். பொங்கல் முடிந்த மறுநாள் வெகுமக்களோடு கறைந்து சித்தப்பா, மாமா அண்ணனாகி கூலிக்குப் போகும் நாட்டார் தெய்வப் பூசாரிகளையும், பெருந்தெய்வக் கோவில்களில் இருப்பவர்கள் அதை ஒரு அதிகாரமாக்கிக் கொள்வதையும் ஒப்பிடுகிறார். வள்ளலாரும் பங்காரு அடிகளாரும் பேசப்படுகிறார்கள். நாகூர், நாகப்பட்டினம், சமயபுரம் மூன்று கோவில்களுக்கும் ஒரே நபர் பயபக்தியோடு நுழைய முடிகிற மனநிலை எப்படி உருவானது என விவரிக்கிறார். தந்தை பெரியாரின் முரட்டு நாத்திகமும், ஆலய நுழைவுப் போராட்டமும் உண்டாக்கும் முரண்பாட்டையும் அதிலிருந்து எழும் கேள்விகளுக்கும் விளக்கம் தருகிறார் பேராசிரியர். தொ.ப.


நம்மைச் சுற்றிக் கிடக்கும் இந்த வாழ்கையின் மேலிருக்கிற அலட்சியத்தை இடை நிறுத்தி கவனப்படுத்தும் இந்த நூல். எல்லாவற்றையும் சம மரியாதையோடு பார்க்கக் கற்றுக் கொடுக்கும் அது தெய்வங்களுக்குக் கூட மனிதன் கொடுக்கிற கொடையாக மாறும் .


" தெய்வம் என்பதோர் "

யாதுமாகி பதிப்பகம்,
பாளையங்கோட்டை,
நெல்லை. 2

16 comments:

அ.மு.செய்யது said...

பகிர்வுக்கு நன்றி காமராஜ்..நேர்த்தியான அறிமுகம் !!

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

வணக்கம், வருகைக்கு நன்றி செய்யது.

velji said...

பேராசிரியரைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்து(நாம் நினைப்பதற்கு மாறாக i.t.executive போல இருக்கிறார்!) பண்பாட்டு அசைவுகள் புத்தகம் வாங்கினேன்.இன்னும் படிக்கவில்லை.உங்கள் பதிவு அதை படிக்க தூண்டி இருக்கிறது.
நன்றி.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

மிக அழகான அறிமுகம் ஒரு புத்தகத்துக்கு. ரொம்ப இயல்பாய் வழுக்கி ஒடுகிறது, என்னுடன் பேசியதன் நீட்சியாகத் தெரிகிறது இந்த புத்தக அறிமுகம். கட்டுரைகளை இலகுவாய்க் கொடுப்பதற்கு மிகப்பெரிய தேர்ச்சி வேண்டும், உங்கள் ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்க வேண்டும். உங்கள் சிறுகதைத் தொகுப்பும் படிக்க வேண்டும்.

அன்புடன்
ராகவன்

க.பாலாசி said...

//வெறுமனே நீலிக்கண்ணீர் என்னும் ஒரு சொல் நமது புழக்கத்தில்கடந்து போகக் காண்கிறோம்.//

இந்த வார்த்தை இப்போது அரசியலில்தான் அதிகம் நடைபோடுகிறது.

தேவையான புத்தகப்பகிர்வு அன்பரே...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி நண்பா

காமராஜ் said...

வணக்கம் வேல்ஜி,
படியுங்கள் ரொம்பச்சின்னச்
சின்னக்கட்டுரைகளடங்கிய தொகுதி அது.
இயல்பாய் இருக்கும். நம்மைச் சுற்றியிருப்பவை
பற்றிய தெளிவு அல்லது தேடல் பிறக்கும்.

காமராஜ் said...

அன்பின் ராகவன்.
இன்று கூட பேசவேண்டும் என நினைத்தேன்.
முழுவதும் மாதுவுடன் ஒருவேளையாய்
இருந்ததால் முடியவில்லை. முகவரி அனுப்புங்கள்.

காமராஜ் said...

//இந்த வார்த்தை இப்போது அரசியலில்தான் அதிகம் நடைபோடுகிறது. //

நெடுநேரம் சிரிக்க வைத்துவிட்டீர்கள் இல்லத்துணை வந்து
ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போகிறார்கள்.
ஒரு வர்த்தையில் கலக்கி விட்டீர்கள். நன்றி.

காமராஜ் said...

அன்பு நண்பா வணக்கம்.
என்ன ரொம்ப வேலையா
பதிவில் பார்க்க முடியவில்லை.
நலமே விளைக.

அன்புடன் அருணா said...

இப்போதும் கட்டுரைகள் கொஞ்சம் கலங்கடிக்கத்தான் செய்கிறது!

Venugopalan said...

அன்புத் தோழா

வழக்கம் போலவே கரிசனம் நிறைந்த குரலில், அடுத்தவரின் படைப்பை அறிமுகம் செய்யும் உங்களின் இந்தப் பதிவும் வளமான தமிழில் அமைந்திருக்கிறது. தொ.ப.வின் இன்னொரு புத்தகம் குறித்து இன்று உஙள் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி.

எஸ் வி வேணுகோபாலன்

காமராஜ் said...

சரி, சரி அருணா மேடம் இப்பதான் தைரியம் வந்து குதிச்சிருக்கேன் மீண்டும் பயமுருத்துறீங்களே.

காமராஜ் said...

நன்றி தோழா svv வணக்கம்.

சித்திரவீதிக்காரன் said...

தொ.பரமசிவன் அய்யாவின் தெய்வம் என்பதோர்.. அற்புதமான புத்தகம். எனக்கு தொ.பரமசிவன் அய்யாவின் எழுத்துகள் மிகவும் பிடிக்கும். மதுரை புத்தகத்திருவிழாவில் ஐயாவின் உரையை மூன்றுமுறை கேட்கும் பாக்கியமும் எனக்கு கிடைத்திருக்கிறது. அவருடைய அழகர்கோயில், சமயம் போன்ற நூல்களும் எனக்கு நெருக்கமானவை. நல்ல பதிவு. நன்றி.