29.10.09

மறந்துபோன வரலாற்றிலிருந்து - தியாகி விஸ்வநாததாஸ்

இந்த அதிகாலைக் கனவை தனது அலைபேசி அழைப்பால் கலைத்துப் போட்டவர் தோழர் பாலச்சந்திரன். ஒரு முன்னாள் தொழற்சங்கத் தலைவர். விருதுநகர் மாவட்ட சுதந்திர வரலாற்றிலும் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகித்ததோழர் ஆலமரத்துப்பட்டி தியாகி ராமச்சந்திரன் அவர்களின் குமாரர். நான் திருத்தங்கல் கிளையில் பனிபுரியும் போது தற்செயலாக சந்தித்த ஒரு மகா மனிதன். தனது வீட்டில் புத்தகங்களுக்கென ஒரு அறையும் ஷெல்பும் ஒதுக்கிப்பாதுகாத்து வருபவர். தோழர் சீனிவசராவுடன் அவரது தந்தையாரின் தலைமறைவு வாழ்க்கையையும் அவர் நினைவுக் குறிப்பின் கையெழுத்துப் பிரதியையும் போற்றுதலுக்குரிய பொக்கிஷமாகப் பாதுகாத்து வருபவர்.


தொலைபேசியை எடுத்தவுடனேயே நாம் அந்தக்கலைஞனை மறக்கலாமா என்று முன்னுரை ஏதுமின்றி ஆரம்பித்தார்.அந்த அவசரத்தில் இருக்கிற ஆதங்கம் மிக வலிமையானது. சிவுகாசியில் பிறந்து தொந்தியப்ப நாடார் எனும் நாடகக்கலைஞனின்வளர்ப்பில் நடிப்பின் ருசியை உள்வாங்கி நாடகக் கலைஞனாகி, அந்த நேரம் சூடு பிடித்து எறிந்து கொண்டிருந்த சுதந்திரப் போராட்ட பொதுக் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் முன்னிலையில் தேசபக்திப் பாடல் பாடி மக்களையும் தலைவர்களையும் ஒருசேர ஈர்த்தவர். நாடகங்கள் மூலம் அடிமை எதிர்ப்பின் கங்கை ஊதிப் பெரிதாக்கிய பாஸ்கரதாஸ் அவர்களின் அடியொற்றி பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் தியாகி விஸ்வநாததாஸ்.


இன்றைய திரைக் கலைஞர்களுக்கு இணையான பிரபலமும், பணவரவும் கிடைத்த அந்தகால நாடக வரலாற்றில் அவருக்கு எல்லாம் கிடைத்தது. தனது பாடல்களாலும் பயமறியா நடிப்பினாலும் பெரும் மக்கள் திரளை ஈர்க்கமுடிந்த அவர் ஆங்கில அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். பல முறை பிரிட்டிஷாரால் சிறைப்பிடிக்கப்பட்டார். இரவில் நாடகங்கள் போடுவதுபகலில் தலைமறைவாக அலைவது என ஒரு பரபரப்பு வாழ்க்கைக்கு தான்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டவர். அந்தக்கால நாடக மேடைகளில் முருகன் வேஷத்தில் வந்து மயிமேல் அமர்ந்தபடி கொக்குப்பறக்குதடி என்னும் தியாகி பாஸ்கரதாஸ் அவர்களின் பாடல் விலைமதிப்பற்றதும், புகழ்பெற்றதுமாகும். அதை எல்லாமேடைகளிலும் பாடுகிற வசீகரக்குரலிருந்தது தியாகி விஸ்வநாத தாஸிடம்.


காலம் எல்லாரையும் ஒரு நேரம் தூக்கிவைத்து பின்னர் இறக்கிவைக்கும். அப்படியொரு இறங்கு முகத்தில் இருந்த கப்பலோட்டிய தமிழன் வ உ சி யைத்தான் தனக்காக வாதாட அழைத்திருக்கிறார் விஸ்வநாத தாஸ். வழக்கை நடத்திவிட்டு அவரைத்தனியே அழைத்து ' உன் குடும்பத்தையும் கொஞ்சம் பார்த்துக்கொள்" என்று அறிவுறை சொல்லி விட்டுப் போனாராம் வஉசி. அதன் பிறகு நாடகங்கள் குறைந்து நலிந்து கொண்டிருக்கையில் வீட்டை விற்று ஜீவனம் நடத்திக்கொண்டிருந்த விஸ்வநாததாஸிடம் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் நாடகம் போட அழைத்திருக்கிறார்கள், சென்னை மாகான கவர்னரின்பிரதிநிதி வந்து பிரிட்டிஷாரின் சார்பில் போரை ஆதரித்து நாடகம் போட அழைத்திருக்கிறார்கள். அப்போது அவரிடம் எதிர்க்க முடியாத வறுமையும், அடைக்கமுடியாத கடனும் இருந்திருக்கிறது. இரண்டையுமே சரிசெய்து மாதம் ஆயிரம் ரூபாய்கொடுப்பதாக கவர்னரின் பிரதிநிதி உறுதியளித்தாராம்.


ஒரு நிஜக்கலைஞனின் வீராப்போடும், உறுதியோடும் அதைத் தன் கால்பெருவிரலால் தள்ளிவிடுவது போல நிராகரித்தாராம். சென்னை ராயல் தியேட்டர் மூலம் இரண்டாவது சுற்றாகக் கிடைத்த வய்ப்பை பயன்படுத்தி மேடையேறிய விஸ்வநாததாஸ் பாடியபடியே தனது 54 ஆம் வயதில் மறைந்துபோனார். அவர்விட்டுச் சென்ற சுதந்திரக் கங்குகள் தேவையற்றுப்போனதால் சுதந்திர இந்தியாவில் கேட்பரற்றுக்கிடக்கிறது.


அவரது ஐந்து குழந்தைகளும் அதே போல மீண்டும் குலத்தொழிலுக்கே போய்விட்டது. குடும்பத்துக்கென அரசு கொடுத்த நிலம் தாயில்பட்டிக்கு காட்டுக்குள் தரிசாய்க்கிடக்கிறதாம்.விழாமேடையில்அமைச்சர்களுக்கருகில் உட்கார்ந்திருந்த பெருமை தவிர இப்போது ஏதும் இல்லையென்று வரட்டுக்குரலில் பேசுகிறது அவரது வாரிசுகள். இது வாரிசுகளின் காலம்.


மண்மூடிப்போன வரலாறுகளில் இருந்து எதையாவது உலகத்துக்குச் சொல்லவேண்டு மென்கிற தவிப்போடு பேசிய தோழர் பாலச்சந்திரன் வருகிற டிசம்பர் 31 அவரது நினைவு நாள் ஏதாவது செய்வோம் காமராஜ் அன்று அழைப்புவிடுத்திருக்கிறார். காய்ந்து போனப்பிறகும் எங்கிருந்தாவது ஊற்றெடுக்கும் நிலத்தின் தாய்ப் பரிவோடு.

8 comments:

மண்குதிரை said...

kantippaaka seyyanum sir

லெமூரியன்... said...

மிக சிறிய வயதில் ஒரு சிகை திருத்தகத்திற்கு சென்ற போது அவருடைய நிழற்ப்படம் அங்கே மாட்டிவைக்கப்பட்டிருந்தது...அப்பா யார்பா அவரு என்று நான் கேட்டபோது அப்பா சொன்னார்..காந்தி மாதிரி நேரு மாதிரி இவரும் சுதந்திரத்துக்காக போராடினார்னு...அப்போதைக்கு அவர் பற்றி தெரிந்து கொண்டது அவ்வளவு....பின்பு புத்தகங்கள் மேல் காதல் பிறந்த போது தியாகி விஸ்வநாததாஸ் அவர்களைப் பற்றி படிக்க நேர்ந்தது...மிகவும் பிரமிப்பாக இருந்தது....ஏனோ பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றி எந்த குறிப்பும் இடம்பெறவே இல்லை(அப்போதே...).......தற்ப்பொழுது சுதந்திரம் பற்றியே மாற்றுகருத்துக்கள் கொண்டுள்ள நிலையில்...சுதந்திரத்திற்காக இல்லாவிடிலும் இவர் ஆற்றிய போராடதிற்க்காகவும் தியகத்திர்க்க்காகவும் இளைய சமுதாயத்திற்கு இவரைப் பற்றி எடுத்துரைக்க கடமைப் பட்டுள்ளோம்..

velji said...

எனக்கு எல்லாமே தகவலாகவே இருக்கிறது.மாமனிதனை அறிமுகப்படுத்தியற்கு நன்றி.

க.பாலாசி said...

இந்த மகானைப்பற்றி நான் மூன்று தினங்களுக்கு முன்புதான் ஸ்டாலின் குணசேகரன் எழுதிய ‘வரலாற்று பாதையில்’ என்ற புத்தகத்தில் படித்தேன். அவரது உணர்வுகளையும், சுதந்திர உணர்ச்சிகளையும் கண்டு மெய்சிலிர்த்தேன். அதே உணர்வு தற்போது உங்களது இடுகையினாலும் எழும்புகிறது. இறுதியில் மயில்போல் அலங்கரிக்கப்பட்ட ஒன்றின் மீதே அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அதே ஒப்பனையுடன் அவரது இறுதி ஊர்வலமும் நடந்ததாக அதே நூலில் உள்ளது.

நல்ல இடுகை...

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எனக்கு தியாகி.விஸ்வநாததாஸை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல. என்னைப் போன்ற மிகக்குறைவாகவே படிப்பவர்களுக்கு இது போன்ற பதிவுகள், திறவுகோல்கள். தேடிப்படிக்க ஆவல் வருகிறது.

மிக அவசியமான பதிவு, உங்கள் ஓட்டம் சீராக, அழகாக இருக்கிறது.

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

இந்தப்பதிவுக்கு வருகை தந்த அணைவருக்கும்,
கருத்துச்சொன்ன

மண்குதிரை,
லெமூரியன்,
வேல்ஜி,
பாலாஜி,
ராகவன்.

அன்பும் வணக்கமும்.

ஆ.ஞானசேகரன் said...

புதிய அறிமுகம் மிக்க நன்றி நண்பா

அன்புடன் அருணா said...

அறிமுகத்திற்கு நன்றி.