6.3.10

வெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.

வொயிட் டைகர்ஸ் புக்கெர் பரிசு வென்ற இரண்டாவது இந்தியர்  அரவிந்த் அடிகாவின் புதினம்.இந்தியாவும் சீனாவும் தங்களைப்பொருளாதார வல்லரசுகளாக நிலை நிறுத்திக் கொள்ள நடக்கிற போட்டியின் பின்னணியில்,உலகமயத்தின் விஷ வேர்கள் அமெரிக்காவிலிருந்து படர்ந்து வந்து இந்தியக்கிராமங்களிலும் ஊடுறுவும் இந்தக்காலத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப்படம் பிடிக்கிறது அந்தப்புதினம். இந்தியாவின் துயரார்ந்த பெரும்பிணிகள் பற்றிப்பேசுகிறது.

நூற்றாண்டுகளாக சொஸ்தப் படுத்தமுடியாத ஜாதியக்கொடூரம் அதைத் தக்கவைக்கிற மத ஏற்பாடுகள் அதனால் ஏற்படுகிற சரி செய்யப்பட முடியாத பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குறித்து பேசுகிறது. ஒரு கிராமத்துப் பள்ளியில் படிக்கிற மாணவனுக்கு ஒட்டுமொத்த பள்ளியும் அதன் ஆசிரியர்களும் உயர்ஜாதித் திமிர்கொண்ட வக்கிர மிருகங்களாக வாய்க்கப்படுகிறது.படித்து வெளியேறுகிற அவன் பின்னர் தன்னை ஒரு முஸ்லீமாக மாற்றிக்கொள்கிறான்.தனக்கு நேர்ந்த ரணமும் அவமானமும் வெறியாக மறிப்போக அவன் இந்த சமூகத்துக்கு தீவிரவாதத்தைத் திருப்பித்தருகிறான்.

இந்தியாவுக்கு வந்துவிட்டுத் திரும்பிப் போன சீனப் பிரதிநிதி வென் ஜியாபா வுக்கு பல்ராம் ஹால்வாய் என்கிற தொழிலதிபர் எழுதுகிற கடிதங்களின் தொகுப்பாக நீள்கிறது வொயிட் டைகர்ஸ்.பீகாரிலுள்ள லக்ஸ்மன்கார் எனும் கிராமத்தின் இருட்டு வாழ்க்கையின் ஒரு பிரதிநிதியாக இருக்கும் ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரனின் குடும்பத்தில் பிறக்கிற பல்ராம்.படிப்பை விடவும் தேநீர்க்குவளை கழுவ,மேஜைதுடைக்க,அடுப்பெறிக்கத்தேர்ந்து கொள்கிறான். அந்த தேநீர்க் கடையிலிருந்து தெருக்களை, நகரத்தை,உலகத்தைப் படிக்கிறான்.தனது தகப்பனின் ரிக்ஷா தனக்குக் கிடைத்தவுடன்,அதிலிருந்து இந்த தேசத்தின் கரடு முரடான நீள அகலங்களைப் படிக்கிறான். தனது கிராமத்துப் பெரும்பணக்கரக் குடும்பத்துக்கு ரிக்சா ஓட்டியாக தன்னை அடிமைப்படுத்துவதன் மூலம்  அங்கிருந்து டெல்லிக்கு இடம் பெயர்கிறான். ஒளிர் நகரமான டெல்லியின் கால்செண்டர்கள்,வியாபாரா வளாகங்கள்,போன்ற பளபளப்பான பகுதிகளுக்கு தனது எஜமானர்களை அழைத்துச் செல்லும் போது அவற்றின் பெருமைகளை அறிகிறான்.

தன்னை அந்த இடங்களின் வைத்துப் பொருத்திக்கூடப் பார்க்கமுடியாது என்பதை உணர்கிறான்.ஆனாலும் பணம் பகட்டு போதை யின் ருசியறிய ஆசைகொள்கிறான்.அதை அடைகிற வழி எல்லாமே அவனுக்கு அடைபட்டுக்கிடக்க தனது எஜமானானின் மகன் அசோக்கைக் கொலைசெய்வது ஒன்றே வழியெனத்  தீர்மானிக்கிறான். அமெரிக்காவி லிருந்து  திரும்புகிற அசோக்கிற்கு இந்திய லஞ்சமும், நெருக்கடியும் ஒத்துப் போகவில்லை.அதுவே அவன் கொலை செய்யப்படுவதற்கும் காரணமாகி பல்ராமே தொழிலதிபராகிறான்.

கிட்டத்தட்ட ஒரு பாண்டசிக் கதை போலத்தோன்றும் இந்தக் கரு.இந்திய பொருளாதாரம்,தனியார் நிறுவன வளர்ச்சி புரண்டோ டும் சாக்கடை,ஆரவாரத்தோடு முன்னேறும் மக்கட் பெருவெள்ளம் எல்லாவற்றையும் எதிர்த் திசையிலிருந்து அனுகுகிறது.பெருந்தொழில் நிறுவணங்களின் இலச்சினைகளில் சுற்றிவரும் உண்மை உழைப்பு நேர்மை என்கிற கோஷங்களை அதன் போக்கிலே போய் ஒத்திசைக்காமல் பிடுங்கித்தரையில் போட்டுத் தோலுரிக்கிற எதிர்ப்பாட்டும் எள்ளலும் நிறைந்த புதினம்.

2 comments:

அன்புடன் அருணா said...

நல்ல பகிர்வு!

உயிரோடை said...

நல்ல பதிவு. ஆனால் கண்டிப்பா இப்படிப்பட்ட புதினம் எல்லாம் படிக்க முடியுமா என்று தெரியவில்லை :(