14.1.10

மரியாதை குறையாத இடைவெளி.

நெஞ்சு விடைத்துக் கொண்டு அவர் பேசுகிற வசனங்களை மனப்பாடம் செய்வது அல்வா சாப்பிடுகிற ஆனந்தம்.
அதையே  ஆசிரியர் மாதாந்திரக் கூட்டத்தில் பேசிக்காண்பிப்பது பெரிய சாகசம். மஞ்சுளா,வாணிஸ்ரீ யோடு அவர் இழையும்நேரம் அடிவயிறு முழுக்கக் குறுகுறுக்கும்.டாக்டர் சிவா படத்தை ஒரே நாளில் மூன்று காட்சிகள் பார்த்த உண்மத்தம் நிறைந்த நாட்கள் பள்ளிப்பிராய நாட்கள்.சிவாஜியா குலதெய்வமா என்றால்  குலதெய்வம் தோற்றுப்போகும் கிறுக்கு குடிகொண்டிருந்த நாட்கள்.எம்ஜியார் படங்கள் பார்ப்பது தேசத்துரோகக் குற்றம் என்பது எங்கள் குடும்பத்தின் கட்டுப்பாடு. வேலைக்கு வந்தபிறகும் கூட எனக்கு அந்த வியாதி தொடர்ந்தது.கருப்பான துணிகள் கருப்புக்கோடு,ஊடு இழை இருக்கிற துணிகள் எடுத்தால் கூட கொன்னே போட்டுவிடுவார் எங்க தாத்தா.

ஒரு கிராமம் முழுக்க ஒரே கட்சியின் அடிமைகளாக இருப்பதும் அந்தக்கட்சி தொடர்புடையவர்களே எல்லாவற்றிலும் விருப்பத்தேர்வகளாக மாறுவதும் இந்திய மரபு. அதில் சினிமாவுக்கு மிகப்பெரிய இடத்தை உருவாக்கிக் கொடுத்தது தமிழ் அரசியல். சினிமா சினிமாக்கலைஞர்கள் மோசம் என்பது தவறு.அதே நேரம் எஸ்பி சவுத்ரியாக நடித்த சிவாஜியை தமிழகத்தின் டிஜிபியாக்கவேண்டுமென்று ஆசைப்படுவது அபத்தம். அதே போலத்தான் ஒரு முறை மாரியம்மன் வேசத்தில் நடித்த நடிகை  தனக்கு அம்மனின் அருள் வந்துவிட்டது அதனால் தான் கடுமையான விரதம் இருப்பதாக பேட்டிகொடுத்தார். அது தெரிய நிறைய்ய காலங்கள் ஆனது எனக்கு. தமிழகக்கிராமங்கள் அப்படியே தான் இன்னும் கிடக்கிறது. பிம்பத்தும் நிஜத்துக்குமான வித்தியாசம் தெரியாமல்.

அப்படியொரு நாளில் சிவாஜி கணேசன் தான் ஆரம்பித்த ஒரு தனிக்கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்காக சாத்தூர் வந்திருந்தார். அந்தக்காலத்தில் அரசியலில் ஜெயலலிதாவும்,அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையில் ஒரு பெரிய மதில்சுவரில் ரஜினிகாந்தும் இருந்ததால் சிவாஜி யாரையும் ஈர்க்கவில்லை.கொஞ்சம் கூட்டம் இருந்தது. ரெண்டு மூணு போலீஸ்காரர்கள் இருந்தார்கள்.சாத்தூர் எட்வர்டு மேனிலைப் பள்ளியின் முன்னாள் நிற்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலைபோட வந்தார். அந்த தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கு அவரது வருகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.மாலை போட ஆளுயர ஏணியில் ஏறிக்கடக்க பத்து நிமிடம் எடுத்துக்கொண்டாராம். முதுமை. அந்தவழியாக வந்த எனக்கு அந்த இடத்தில் சில நிமிடங்கள் கூட இருக்கப் பிடிக்கவில்லை.

சைக்கிளை மிதித்துக் கிளம்பினேன் வீட்டுக்கு வந்தபோது வீரபாண்டியக்கட்டபொம்மன் திரைப்படம் விசிடியில் ஓடிக்கொண்டிருந்தது. உட்கார்ந்து சாவகாசமாகப் பார்த்தேன். வீரவானிலே செந்நிறக்குழம்பு சுட்டெரிக்கும் செஞ்சுடர் அது.அதுதான் நீ என் நெற்றியில் இட்டிருக்கும் வட்டவடிவ ரத்தம் நிறைப்பொட்டு.அந்த வெற்றிவடு
ஒன்றே போதும் பகைவர்கள் மீது வேலை ஓட்ட வாளைப் பாய்ச்ச. சிவாஜி கர்ஜித்துக் கொண்டிருந்தார்.ஒரு மகாக்கலைஞனின் ஆகிருதியோடு. 

5 comments:

ஜோ/Joe said...

:)

அன்புடன் அருணா said...

பிம்பங்களும் நிஜங்களும் எப்போதும் பொருந்திப் போவதில்லை!

அம்பிகா said...

ஒரு காலத்தில் எங்க வீட்டிலும் எல்லோரும் சிவாஜி ரசிகர்களே! பாடல்களும் வசனங்களும் மனப்பாடம்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

குப்பன்.யாஹூ said...

NICE POST.

SIVAJI, BAGYARAJ, T.RAJENDAR, SSR, VIJAYKANTH, SV SEKAR lot of actors, the failure list.