17.1.10

தோழர் ஜோதிபாசுவுக்கு செவ்வணக்கம்.


வெஸ்ட் பெங்காலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியப் பிடிச்சிரிச்சே அதப்பத்தி என்ன நெனக்கிற என்று கமலஹாசன் சரத்பாபுவிடம் கேட்பான்.அந்தக் காட்சிக்கு, அதன் சூழலுக்கு சம்பந்தமில்லாமல் வந்துவிழும் கேள்விக்குப்பதிலேது இல்லாமல் சரத்பாபு முழிப்பதாக ஒரு காட்சிவரும் 'நிழல் நிஜமாகிறது' படத்தில். அந்த எழுபதுகளின் இறுதியில் இந்தக் கேள்வி ஒட்டுமொத்த தமிழகத்தைப் பார்த்துக் கேட்டதாகவே படுகிறது. ஒரு நூற்றாண்டைக் கடந்த பின்னும் இந்தக் கேள்வி இன்னும் முழு இந்தியாவிலும் ஒலிக்க வழியில்லாமலே கழிந்திருக்கிறது.

ஆனால் இதே இந்தியாவில், மாபெரும் ஜனநாயக தேசத்தில் அதிக வருடங்கள், அதாவது 23 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்திருப்பது சவால் மிகுந்த சாதனை. அதை சாதித்துக் காட்டியது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்பது உண்மையில் முரண்பாடானதும்  வியப்பானதுமான சேதி. அவர் தோழர் ஜோதிபாசு. பிரித்தானியாவுக்கு சட்டம் படிக்கப்போய் பொதுவுடமை படித்துத் திரும்பிய அவர், வந்ததும் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.1964 ல் கட்சி உடைந்தபோது புதிய cpi(m) உருவாகாக்காரணமாக இருந்த ஒன்பதுபேரில் அவர் ஒருவர்.அறுபதுகளில் முதன்முதலாக சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட அவர் 1996 வரை ஒருமுறை கூட தோற்கவில்லை. மக்கள் அவர்மேல் வைத்திருந்த நம்பிக்கை அப்படி.அந்த நம்பிக்கைக்கு நூறு சதவீதம் உண்மையாக இருந்தார்.

இன்னமும் இந்த தேசம் எட்டமுடியாத பலசீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியவர்.நிலச்சீர்திருத்த சட்டத்தின் மூலம் அங்கிருக்கிற அணைத்து மக்களையும் நிலவுடமையாளர்களாக மாற்றியது தோழர் ஜோதிபாசுவின் அரசு.
நிலவுடமைதான் அடித்தட்டுமக்களின் சுயமரியாதைக்கும்,பொருளாதாரப் பிடிமானத்துக்கும் ஆதாரம் என்பதை
நிஜமாக்கியது அந்த அரசு.கையால் மலம் அள்ளுகிற கேவலத்தை சுத்தமாக ஒழித்த அரசு.இன்னும் புதுக்கருக்கு மாறாமல் கூட்டுறவு செயல்பாடுகளை வைத்திருக்கும் மாநிலம்.நவகாளிக்குப் பின் இன்னமும் மதக்கலவரம் துளிர்க்காத மாநிலம். இப்படியே சொல்லிக் கொண்டுபோக பட்டியல் இருக்கிறது போலவே விமர்சனமும் இருக்கும்.

உலகத்திலுள்ள அணைத்து மத போதனைகளும்,இதிகாசங்களும்,நீதிக்கதைகளும் ஒரே புள்ளியில் இருந்து ஆரம்பிக்கும் அல்லது சந்திக்கும்.அணைத்து உயிர்களையும் சமமாகப்பாவிக்க ஆசைப்படுகிற மனிதாபிமானம் தான் அது. அதைச்செயல்படுத்த ஆசைப்படுகிற பொதுவுடமை.கடவுள்,கதாநாயகன் போன்ற பிம்பங்களின் கருத்துக்களை யதார்த்தமாக்க நினைக்கிற தத்துவம் அது. வாலிப காலத்தில் காதலோடு சேர்ந்து ரத்தத்தில் ரோந்து வரும் பொதுவுடமைக்கு மயங்காதோர் இல்லை.

அப்படியான மயக்கத்திற்கு இந்தியப் பெருவெளியில் கிடைத்த சில ஐகான்களில் முக்கியமானவர் தோழர் ஜோதி பாசு.நிறைய்ய நினைவுகளை விட்டுவிட்டு இன்று அவர் மறைகிறார்.செவ்வணக்கம் சொல்லுவோம் தோழருக்கு.

4 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

தோழர் ஜோதிபாசுவுக்கு செவ்வணக்கம்....

vimalavidya said...
This comment has been removed by a blog administrator.
சந்தனமுல்லை said...

செவ்வணக்கங்கள்!

அருமையான பகிர்வு.

நெல்லை பொடியன் said...

தோழர் ஜோதிபாசுவை தோழர்கள் பின்பற்றினால் இந்திய பொதுவுடமை கட்சிகளின் சரிவை தோழர்களால் தடுத்து நிறுத்த இயலும்.