29.10.10

நேற்று போல் இன்று இல்லை.

இரண்டு நாட்களாகப் பெரு மழை.முந்தாநாள் இரவு ஒன்பது மணிக்குத்துவங்கிய மழை குளிரையும் தவளைசத்தத்தையும் கொண்டுவந்தது.கூடவே பழைய்ய நினைவுகளையும்.ஒரே திசையில் உதித்தாலும் சூரியன் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்த் தெரிகிறான். இருப்பினும் பழய்ய நட்களின் நிறங்களையும்,வாசத்தயியும் உள்வைத்துக்கொண்டே விடிகிறது.அதுபோலவே மழையும்.எனக்கு மழைபார்க்கும்போதெல்லாம் தவறாது ரெண்டு நிகழ்வுகள் நிழலாடும்.ஒன்று பால்ய காலத்து மழை நாள்.இன்னொன்று பருவகாலத்து மழைநாள்.

தாத்தாவுக்கும் அய்யாவுக்கும் ஆகாது.அவர் திமுகவென்றால் இவர் அதிமுக.அது வேண்டாம் ஒரே குட்டையில் ஊறிய.அவர் மத்திய அரசென்றால் இவர் அருந்ததிராய்.ரெண்டு பேரும் பக்கத்தில் பக்கத்தில் நின்று ஒரு புகைப்படம் கூட்ட எடுத்ததில்லை.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கிடையாது.பார்த்தால் சண்டையில்லாமல் முடியாது.ஆரம்பிச்சுட்டாங்கப்பா என்று சொல்லிவிட்டு பம்பரக்கட்டையைத்துக்கிகொண்டு ஓடிவிடுவதுதான் அப்போதைய புரிதலாக இருந்தது.ஆனால் அந்த ஐப்பசி மழைநாளில் சண்டை முற்றி வீடுக்குள் இருந்த சட்டி பானைகளைத்தூக்கி எறிந்தார் தாத்தா.ரோஷத்தோடு என்னைத் தரதர என இழுத்துக்கொண்டு கிளம்பினாள் அம்மா.கையை உதறிக்கொண்டு புத்தகப்பையை எடுக்க வீட்டுக்குள் போனேன். என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுத பாட்டியின் கண்ணீர் இன்னும் உடம்பிலிருந்து போகவில்லை.

ஒரு குட்டிச்சாக்கோடு ஊரெல்லைக்கு வந்தாகிவிட்டது.எங்காவது கண்காணாத இடத்துக்கு போவது என்கிற அம்மாவின் உறுதியை.என் கண்ணீரும் புத்தகப்பையும் தான் குழைத்துப்போட்டது.நான் சொன்ன இரண்டு காரணங்களுக்குப்பின்னாடி எனது நண்பர்கள் ஒளிந்திருந்தார்கள் என்பது நிஜம்.நெடுநேரம் நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தோம். எங்களை ஆற்றுப்படுத்தி பூட்டிக்கிடந்த கூரை வீட்டுச்சாவியைக் கொடுத்து இருக்க வைத்துவிட்டுப்போணாள் பூர்ணம்மாக் கெழவி. ஒண்டிக்கட்டையான அவளது மகன்கடன் தொல்லையில் ஓடிப்போனப்பிறகு வெறும் வீட்டை காத்துக்கிடந்தாள்.

இரவு எட்டு ஒன்பது மணியிருக்கும் பசி வயிறு முழுக்க பம்பரம் விளையாடியது.அம்மா குத்துக்காலிட்டு உட்கர்ந்து
ஒரு தீக்குச்சியால் தரையைக் கிளறிக்கொண்டிருந்தாள்.நான் ஒழுகிய கூரையின் தண்ணீரை வெங்கலக் கும்பாவில் பிடித்துக்கொண்டிருந்தேன்.  சொட்டு விழுகிற தண்ணீருக்கு அதிரும் வெங்கல ஓசைக்கென்ன தெரியும் பசியைப்பற்றி. சாக்குக்கோணியை மூடிக்கொண்டு ஒரு உருவம் வீட்டுக்குள் வந்தது தங்கராசு.ஒரு தூக்குச்சட்டியில் ரசஞ்சோறும், ஒரு மஞ்சப் பையில் நிலக்கடலையும் கொண்டுவந்து கொடுத்தான்.'நல்லவேளை நீ போயி ருவியோன்னு நெனச்சேன்'என்று சொன்ன அவன் கண்களின் கள்ளங் கபடமற்ற வாஞ்சை மட்டும் பிரகாசமாகத் தெரிந்தது.

கண்டுபிடித்துவிட்டாள் அம்மா. கடலை அவன் கொண்டுவந்தது.சோறு பாட்டி கொடுத்துவிட்டதென்று.அந்த இரவை கடலை வறுத்துத்தின்றே கழித்தோம்.அய்யா காலையில் எங்கோ போனவர் கொஞ்சம் பணத்தோடு வந்தார். சமையல் நடந்தது பசிக்கிற நேரம் மண்சட்டியில் சோறுபோட்டாள் அம்மா. வெங்கலக்கும்பாவை எங்கே என்று கேட்டேன்.'அதுதான் நீ திங்கிற சோறு' என்றாள் அம்மா.

இதோ இன்றும் மழை .நடு இரவு வரை பெய்திருக்கவேண்டும். என்னவெனத் தெரியவில்லை திடுமென நான்காம் சாமத்தில் முழித்துக்கொண்டேன்.  மழைநாளின் ஈரத்தை சுடச்சுடக் கொண்டாடிய வறுத்த கடலை.அம்மாவின் அழுதுவீங்கிய முகம்.தங்கராசுவின் கண்ணிலிருந்த வந்த கதிர்வீச்சு இவை யெல்லாம் சுழன்ரடித்தது.உட்கார்ந்து தேடினேன்.எதும் தட்டுப்படவில்லை. தங்கராசு கனவில் வந்திருக்கவேண்டும்.

12 comments:

லெமூரியன்... said...

மழைக்கு ஒரு கெட்ட பழக்கம் இது......
நிறைய பழைய நினைவுகளை கிளறி விட்டு விடும்.......
உங்களது பால்ய வயது நினைவுகள் எனது பால்யத்தை சார்ந்த கஷ்டங்களை
கிளறி விட்டுள்ளது....
:( :( :(

rajasundararajan said...

//ரெண்டு நிகழ்வுகள் நிழலாடும்.ஒன்று பால்ய காலத்து மழை நாள். இன்னொன்று பருவகாலத்து மழைநாள்.//

பருவகாலத்து மழைநாள் அடுத்து வருமா?

/மழைக்கு ஒரு கெட்ட பழக்கம் இது நிறைய பழைய நினைவுகளை கிளறி விட்டு விடும்.../

||April is the cruelest month|| என்பதுதான் டி.எஸ். எலியட் கூற்று. இவருக்கு October-ஆ?

மழை நேரத்துப் பசி மிகக் கொடுமையானது. 'தங்கராசு' - என்னமாப் பேரு வச்சிருக்காங்க பாருங்க!

ராகவன் said...

அன்பு காமராஜ்,

மழை மாதிரி மனுஷங்க... மனுஷங்க மாதிரி தான் மழை... பஸ் கூட்டத்தில அய்யொ பெரியவர கால மிதிக்கிறோமேன்னு தள்ளி வைத்த காலில் யாரையாவது மிதித்துவிடலாம்... மழை சார்ந்த நினைவுகள் ஒரு கூடுதல் அழுத்தத்துடன் பதிந்து விடுகிறது... சொல்ல வசதியா இருக்குது...
எனக்கும் எங்க அப்பாவ நினைக்கும்போது மழ ஞாபகம் வருது... அப்பா இறந்த அன்னைக்கு மழ பெய்தது... ஏழு வருஷம் கழிச்சு வந்த நான் நல்ல மழையில் பிறந்தேன்...
மழை மாதிரி சிலசமயம் அவர்களுக்கு உபயோகமாகவும், உபத்தரவமாகவும் இருந்திருக்கிறேன், வளரவும், சாய்க்கவும்... பிறந்து வீட்டுக்கு வந்தபோது முன் இறக்கியிருந்த ஓட்டு சாப்பில் ஒழுகிக்கொண்டிருந்தது மழை... தீபாவளி வரை மழை விடவில்லை... நான் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறேன்...
மழை நேரம் அதிகம் பசிக்கும்...ஆவி பறக்கும் எல்லாம் சுகமாய்த் தெரியும்... வறுகடலை மிகப்பொருத்தம் மழை நாளன்று... பாட்டி கொடுத்த ரசசாதம் சாப்பிடலை போலருக்கே... பாட்டி மேல என்ன கோபம்...
எனக்கும் ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி (பாராவுக்கு அண்ணன்னா எனக்கும் அப்படித்தானே!?) போல ஒரு சந்தேகம்... எழுத ஆரம்பிக்கும்போது ரெண்டு விஷயங்களை சொல்ல நினைத்து இரண்டாவது விட்டது வேண்டுமென்றே செய்ததோ என்று தோன்றுகிறது... அல்லது அண்ணாச்சி சொன்னது போல இன்னொன்று தொடராய் வருமா...

அன்புடன்
ராகவன்

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

வானம்பாடிகள் said...

ம்ம். ஒரு மழைநாளில் மழைநாளை நினைவூட்டி உள்ளும் புறமும் நனையவைத்த நனவு:)

அன்புடன் அருணா said...

/'அதுதான் நீ திங்கிற சோறு' என்றாள் அம்மா./
இப்படி எத்தனையோ பொருட்கள் சோறாகியிருக்கும் கதை கொட்டிக் கிடக்கிறது என்னிடமும்!

க.பாலாசி said...

ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு.. குடும்பத்துக்கொரு தாத்தா இப்படி அமைந்துவிடுவார்போல, பாட்டியும்தான்.. மழையுடன் கலந்துவிட்ட கண்ணீர்.. நினைத்து நினைத்து பெருமூச்சுவிடலாம்..

Sethu said...

"நேற்று போல் இன்று இல்லை."
-இது சினிமா பாட்டு. அந்தப் பாட்ட கேட்கும் போதெல்லாம் மனம் கொஞ்சம் அழுத்தமா இருக்கும். அவ்வளவு அனுபவிச்சுப் பாடியிருப்பாங்க.

உங்கப் பதிவப் பார்க்கும் போதும் அப்பிடி தான் இருந்தது. பல நிகழ்வுகள் நம்மை ஒரு புடம் போட வைத்து நல்ல மனிதராக மாற்றும்.

Thanglish Payan said...

Superb...

kamaraj

Adar karuppu

irul enpathu kuranitha oli..

Anathum superb..

Mahi_Granny said...

மழை நாள் எல்லோருக்கும் இதைப் போல் நினைவுகளை கிளறி விடும் . இத்தனை அருமையாய் செதுக்கியுள்ளீர்கள் . தங்க ராசு, பைபிலம்மா காலேசு மாடசாமி எப்படி தம்பி

மதுரை சரவணன் said...

arumai .... vaalththukkal

ஆடுமாடு said...

மழை கிளறிவிட்டு போகிற வாசனைகளில்
மகிழ்ச்சிகளும் சோகங்களும்
எல்லாருக்கும் இருக்குமென்றே தோன்றுகிறது.

சண்டை போடுகிற தாத்தா, பாட்டிகளின் சண்டித்தனங்களை
இப்போது நினைத்தால் சிரிப்பாகவும் இருக்கிறது, சிலாகிப்பாகவும் இருக்கிறது.

அருமையாக படம் பிடித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் தோழர்.