8.10.10

எழுத்தின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்.

எண்பதுகளில் ஆரம்பித்த புதிய சினிமாக்கள்,புதிய எழுத்துக்கள், புதுக் கவிதைகள் என அங்காங்கே ஒரு இலக்கியப்பூக்களின் வாசம் நிறைந்த காடுபோல அந்தக்காலம் விசித்திரமானது. அப்போதுதான் தமிழகமெங்கும் தமுஎச வின் கலை இலக்கிய இரவுகள் மக்களின் மத்தியில் ஒரு இரவு நேரச்சலசலப்பை  உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.அப்போது தான் இந்த சன் குழுமத்தின் தொலைகாட்சி நட்ட நடு வீடுகளில் குப்பையும் அள்ளிக்கொட்ட ஆரம்பித்தது. அப்போதுதான் சத்தூர் தமுஎச நண்பர்களின் இலக்கியக் கனவால் விழுது என்கிற ஒரு பத்திரிகை வெளிவந்தது.தோழர் மாதவராஜ்,தோழர் ச.வெங்கடாசலம்,வீ.திருப்பதி,இன்னும் பல தோழர்களின் உழைப்போடு நடைபெற்றது அந்தப்பத்திரிகை.

சுமார் ஆறு அல்லது ஏழு இதழ்கள் மட்டுமே கொண்டுவரமுடிந்தது.டிரெடில் மெசின்,கையெழுத்து மூலம் படைப்புகள்,முழுக்கமுழுக்க தபால் மூலமான தகவல் பரிமாற்றம்,மூன்று ரூபாய் நண்கொடை,25 ரூபாய்க்கு விளம்பரம். இப்படி ஒரு பிரம்மிக்கும்படியான உள்கட்டமைப்பில் ஒரு இலக்கிய இதழ் கொண்டுவரமுடிந்த காலம் அது.ரொம்ப காலமில்லை வெறும் பதினைந்து வருடங்களுக்கு முன்னாடிதான். இதழ் தயாரிப்பில் 99 சதவீத  வேலை களையும் இழுத்துப் போட்டுக்கொண்டு ஆசிரியர் தோழர் மாதவராஜே பார்த்தார்.

கரிசல் மண்ணின் முன்னத்தி ஏர் ஐயா கிராவின் காயிதங்கள்,எங்கள் ஆசான் எஸ்.ஏ.பி.யின் கட்டுரைகள்எழுத்தறிவு இயக்கத்தின் பிரபலம் எழுத்தாளர் ச.மாடசாமியின் சொலவடைகள்,தோழர்கள் ச.தமிழ்செல்வன், ச.வெங்கடாசலம் ஆகியோரின் பங்களிப்பில் எழுத்தறிவு இயக்க மாணவர்களுடைய வாய்மொழிப் படைப்புகள் ஆகிய புதிய பதிவுகளை அறிமுகம் செய்தது விழுது இதழ்கள். அத்தோடு 'களத்து மேடு' என்னும் பகுதியும். அதில் தோழர் மாதவராஜோடு இணைந்து சமூக அரசியல் சினிமா குறித்த பத்திகளில் நானும்  அணில் பங்கு செய்தேன்.

அந்த இதழ்களில் ஒன்று புத்தகங்களுக்கு இடையில் கிடந்தது. எடுத்துப்புரட்டினால் ஒரு வாலிபக் குறுகுறுப்பும்,ஆர்வமும் புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கிறது.ஒரு பழைய்ய போட்டோ வை எடுத்துவைத்துக் கொண்டவுடன் பின்னோடும் நினைவுகள் போன்றதிந்த புத்தகம். அப்போதைய பிரபல திரைப்படம் ஒன்றைப்பற்றி நாங்கள் கூட்டாய்ப் பேசிய பொறணி இது.

 0
'' கிட்டத்தட்ட எல்லோருமே பாரட்டி விட்டார்கள்.அதனாலேயே படம் பார்க்கவேண்டியதாயிற்று.தியேட்டருக்குள் இருட்டில் சீட் தேடி உட்கார்ந்தபோது'ஒரு பாட்டு போயிருச்சி' என்றார் ஒருவர்.'பரவால்லண்ணே என் இனிய தமிழ் மக்களேயும் போயிருச்சி' என்றார் இன்னொருவர்.சிரித்தார்கள்.

அண்ணன் தங்கை பாசம்...,தங்கை கல்யாணம்..,சம்பந்தகாரர் சண்டை...,பாசத்திற்கு வருகிற சோதனை,தாய்மார்களின் பெருமைகள், தங்கையின் மகளும் அண்ணனின் மகளும் காதலித்தல்,சம்பந்த காரர்களுக்காக  அவரவர் ஊர்க்காரர்கள் வெட்டிக்கொண்டு மோதல் கடைசியில் தங்கை, அண்ணன் மடியில் தாலியறுத்துக்கொண்டு உயிர் விடல்.பாரதிராஜா சொல்லும் நீதிவரிகள்.

கிழக்குச்சீமையிலே படம்.

சேவல் சண்டையிலிருந்து நெப்போலியனுக்குள் குரோதம் வளர்கிற காட்சி அப்படியொரு நேர்த்தியாக காட்டப்பட்டிருக்கிறது.அவமானம்,வீம்பு,பழிவாங்கும் உணர்ச்சியெல்லாம் கலவையாக முகத்தில் காட்டியிருக்கிறார்.அப்போது ராதிகாவோடு சேர்ந்து நாமும் பதைபதைத்துப் போகிறோம்.ஆனால் அவர்களின் சண்டைக்காக இரண்டு ஊர் படிப்படியாக திரண்டு எழுந்து ஒரு சின்னக்குசுச்சேத்திரப்போர் நிகழ்த்துவது எதார்த்தமல்ல.சிவனாண்டிக்கும் மாயண்டிக்கும் அந்த ஊர்க்காரர்கள் வேண்டுமானால் பகடைக்காயாக இருக்கலாம்.பாராதிராஜாவுக்கு இருந்திருக்கக்கூடாது.அண்ணன் தங்கை பாசம் உணர்த்த இனிய தமிழ்மக்களின் உயிர்தானா கிடைத்தது ?.

படைப்பாளி என்பவன் பாத்திரங்களை அதனதன் இயல்பான குணாம்சத்தோடு சித்தரிக்க வேண்டும்.ஒரு பாத்திரம் சிறப்பாக அமைவதற்கு மற்ற பாத்திரங்களை மட்டமாக்குவதோ படைப்பையே அறைகுறையாக்கி விடும். இந்தப்படத்தில் அது மாதிரி நிறய்ய டந்திருக்கிறது.நெப்பொலியன் சொந்த மகள் மேல் கூட பிரியமில்லாதிருப்பது எந்த வகைல் சேர்த்தி.அடுத்தது பாண்டியன் கேரக்டர்.படத்தின் மிக அற்புதமான பாத்திரம்.தமிழ்படவுலகில் இன்னும் தொடாத விஷயம்.காதலித்து மணந்த தன் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் சமூகம் தராத அந்தஸ்தை எப்படியவது பெறனும் என்கிற வெறி கொண்ட மனிதன்னவனை கண்டமேனிக்கு குடிக்கவைத்து,ஜாலியாக பெண்களோடு புரளவைத்து காலில்போட்டு நசுக்கியே விட்டார்.இவை யவும் ராதிகாவின் பாத்திரத்தை உன்னதமாக உயர்த்த அவர் செய்த கோல்மால்.

மென்னக்கெட்டு கருவேல முள்ளை கதாநாயகி உடம்பில் குத்த வைத்து கதாநாயகனை எடுக்க வைத்து காதல் எரிச்சலைத்தான் தருகிறது.வடிவேலுவும் பரிசக்காரியும் பேசுவதும் குழைவதும் வாந்திவரச்செய்கிறது. AR.ரகுமான் கிராமத்து பின்னணியில் இசையமைக்க முயற்சி செய்திருக்கிறார். காதலித்த குற்றத்துக்காக தூக்கில் நெப்பொலியனின்.. இல்லை இல்லை எங்கள் கால்களே படம் முடிந்த பின்னும் நினைவில் உறுத்திக்கொண்டு இருக்கிறது.

அந்தக் கிழவிகளும்,அப்படியே அள்ளணும் போல இருக்கும் வத்தலக்குண்டு செம்மண்ணும்,இலையில்லாமல் நிக்கிற கருவேல மரங்களும்,சாணியும் சகதியுமான மாட்டுக்கொட்டடி,இடிந்சுவர்களோடு நிஜக்கிராமம் இவைகளே இப்படத்தின் நம்பிக்கையளிக்கக் கூடியவை.நல்ல தளம் ,நல்ல களம்,விஷயம் சொல்ல நிறைய்ய  இடம் எல்லாம் இருந்தும் ஒரு அருமையான சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டிருக்கிறார்.''

2 comments:

சந்தனமுல்லை said...

மிகவும் சுவாரசியமான பகிர்வு அண்ணா. படத்தை பற்றிய பகிர்வு வித்தியாசமான பார்வையாக இருந்தது.

Anonymous said...

எழுத்தின் கருப்பு வெள்ளைகள் நிறைய,நிறைய கிளறிவிடுகிறது.
நன்றாகவும் உள்ளது.
மனது இனிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
அசைபோடுவதும்,நினைவுபுரட்டுதலும் மிக்க சந்தோசம் தருவதுதானே,எப்போதும்.