31.10.10

பாலிவுட்டில் தோண்டி எடுக்கப்படுகிறது, புதைபொருளாகிப்போன ஒருவலாறு.

                                                    Masterda Surya Sen 

ஒரு உண்மையான விடுதலை வரலாறு பாலிவுட்டில் படம்பிடிக்கப்படுகிறது.
மறைத்துவைக்கப்பட்ட செங்கொடிப் பதாகையின் நிழலும் முதன் முறையாக வெள்ளித்திறைக்கு வருகிறது.'க்கேலேங் ஹம் ஜீ ஜானு ஸே'(Khelein Hum Jee Jaan Sey) .'உணர்வோடும் உயிரோடும் விளையாடுவோமாக'. என்று அர்த்தமாம். ராஜசுந்தரராஜன் அண்ணாச்சிக்கு நன்றி.அசூதோஷ் கவாரிகர் இயக்கத்தில் அபிஷேக்கும்,தீபிகாவும் நடிக்கிறார்களாம். ஜாவேத் அக்தார் படல்களில் வந்தேமாத்ரம் புதியகுரலில் ஒலிக்கப்போகிறது.

பக்கிம் சந்த்ர சட்டர்ஜியின் கவிதை வந்தேமாத்ரம். அந்த ஒரு சொல் இந்தியா முழுமைக்கும் சொந்தமானதாக மாறிப்போனது.அப்போது விடுதலை முப்பதுகோடி மக்களின் பொதுப் பசியாகி இருந்தது.உயிர், உடமை, உற்றார், பெற்றோர், மேட்டிமை, கல்வி, கலவி, இளமை, கனவு, இயல்பு எல்லா வற்றையும் காவு கொடுத்துக் கிளம்பிய விடுதலை லட்சியம் சாதாரணமல்ல.
21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்திய மண்ணில் எண்ணிலடங்காத விடுதலை விதைகள் பதுங்கிக்கிடந்தது.இந்தியன் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் ரத்தம் கோரியபடிக் கிளம்பிய இயக்கங்கள் முளைத்த காலமது. எழுதப்பட்ட வரலாறுகளில்,பாடநூலில் சொல்லிக்கொடுக்கப்பட்ட மணப்பாடத் திட்டத்தில் காங்கிரஸ் மட்டுமே முன்நிறுத்தப்பட்டது.பல உண்மைப் போராட்டங்களின்  ரத்தகறைகள்,கலகங்கள் ஒதுக்கி  வைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று சிட்டகாங் எழுச்சி.

விடுதலைக்கு முந்திய இந்தியாவில் வங்காளத்தில் இருந்த ஒருங்கிணைந்த மாவட்டம் சிட்டகாங். மலை, ஆறு, கடல், இறுக்கமான வனம் என்கிற நிலவமைப்புகளைக்கொண்ட  பகுதி. தற்போதைய பங்களாதேஷின்
இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்கும் நகரம் சிட்டகாங்.பிரிட்டிஷ் ஆதிக்கம் குவிந்து கிடந்த அந்த 1930 களில் பெரும் தகிப்புடன் கிளம்பிய பல விடுதலை போராட்டங்களில் சிட்டகாங் எழுச்சியும் ஒன்று.தோழர் சூரியா சென் தலைமையில் சுமார் 65 தோழர்கள் ஏந்திய துப்பாக்கிகளின் வெடிச்சத்தம் பிரிட்டிஷ் பேரரசை நிலைகுழையச்செய்த நாள் ஏப்ரல் 18, 1930.

பிரிட்டிஷ் பேரரசின் மூளையான 'ஐரோப்பிய க்ளப்பின்' உயர்மட்ட அலுவலகம் அமைந்திருந்த இடம் சிட்டகாங்.அங்குதான் பேரரசின் உயரதிகாரிகள் வாசம் செய்தார்கள்.அவர்களை மொத்தமாகத் தொலைத்துக் கட்டவும், தபால், தந்தி, புகைவண்டி போன்ற தொலைத் தொடர்பு வசதிகளை நிர்மூலமாக்கவும் திட்டமிடப்பட்டதுதான் சிட்டாகாங் எழுச்சி. இதை கொரில்லாத் தாக்குதல் என்று சொல்லுவார்கள். இது வியட்நாம் விடுதலையின் அடிமுழு ஆதாரம். இதில் பிரதிலதா வடேதர்,அம்பிகா சௌத்ரி,ஆகியோரோடு தோழர் கல்பனாதத்தும்  இருந்தார். ராணி மங்கம்மாள், ராணி லக்குமிபாய், கேப்டன் லட்சுமி போன்ற பெயர்களுக்கு இணையான இன்னொரு பெயர்
'கல்பனாதத்'.

திட்டமிட்டபடி  பத்துமணிக்கு துவங்கியது வீரவிடுதலையின் அணிவகுப்பு. முந்திட்டப்படி ராணுவத்தளவாடங்களை மட்டுமே அவர்களால் தகர்க்கமுடியவில்லை எஞ்சிய அணைத்தும் வெற்றியடைந்தது.பின்னர் ஓரிடத்தில் கூடி 'விடுதலை இந்தியா' என்கிற பிரகடத்தை முழங்கி தேசியக் கொடியேற்றிவிட்டு காட்டுக்குள் போனார்கள்.

ஒரிஜினல் வீரம், ஒரிஜினல் விடுதலை,  எதுவும் இந்தியாவில் நிலைக்க முடியாது என்ற விழுமியத்தின் எச்சம் தான் சிட்டாகாங் வீரர்கள் சிறைப் பிடிக்கப்பட்ட வரலாறு.பிடிபட்ட அந்த 65 பேர்கொண்ட' இந்திய விடுதலைப் படை' (indian revolution army)  யில் பதினான்கே வயதானதொரு வீரன் இருந்தான். பிடிபட்டவர்களில் மிக மிக இளவயதுக்காரன். வாழ்வியல் சுழற்சியின் அதியற்புதக் கனவுக் காலமான விளையாட்டுப் பருவத்தை தியாகம் செய்த தோழர் சுபோத்ராய்.கைதுசெய்யப்பட்டு 1940 ஆம் ஆண்டே  உயிரோடு விடுதலை அடைந்து 2006 ஆம் ஆண்டு வரை உயிரோடிருந்த தோழர் சுபோத்ராய்.பெரும்பாண்மை இந்தியர்களின் கவந்த்துக்கு வராத இந்தவரலாறு வெள்ளித்திரை மூலம் திரும்புகிறது.அது பெரிய சந்தோஷம்.

இந்த நிஜமான புரட்சிக்காரர்களின் செல்லுலாய்ட் பிம்பங்களாக வெளிவர இருக்கிறது 'க்கேலேங் ஹம் ஜீ ஜானு ஸே' ('கெலீன் ஹம் ஜீ  ஜான் சே').ஒரு கதை,ஒரு நாவல்,ஒரு உண்மைச் சம்பவம் திரைப்படமாகும்போது நீர்த்துபோகவும் சாத்திய மிருக்கிறது அடர்த்தி யாகவும் சாத்தியமிருக்கிறது.அது படைப்பாளியின் செய்நேர்த்தியைப் பொறுத்தது.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

8 comments:

பத்மா said...

பகிர்வுக்கு நன்றி காமராஜ் சார் ..
வரலாறு கற்க ஆவலை தூண்டுகிறது.

rajasundararajan said...

தோழரே, படத்தின் தலைப்பைத் தமிழில், 'க்கேலேங் ஹம் ஜீ ஜானு ஸே' என்று, முடிந்தால், திருத்தி எழுதிக்கொள்ள வேண்டுகிறேன்.

(க்கேலேங் - விளையாடுகிறோம், ஹம் - நாம், ஜீ - நெஞ்சம், ஜான் - உயிர், ஸே- ஒடு.)

'உணர்வோடும் உயிரோடும் விளையாடுவோமாக'.

கே.ஆர்.பி.செந்தில் said...

//'உணர்வோடும் உயிரோடும் விளையாடுவோமாக'//

இந்தப்படம் வெற்றிகரமாக வெளிவர வாழ்த்துவோம்...

விந்தைமனிதன் said...

புதைக்கப் பட்ட வரலாறுகள் ஒவ்வொன்றும் தோண்டி எடுக்கப்பட வேண்டும். கம்யூனிஸ்டுகளின் வீரஞ்செறிந்த விடுதலைப்போராட்ட தியாக வரலாறு வெளிச்சப் படுத்தப் பட வேண்டும்.

வானம்பாடிகள் said...

இப்படி மறைக்கப்பட்ட, மறந்து போன வரலாறுகள் எத்தனை இருக்கிறதோ:(

Sethu said...

படம் பார்த்திடுவோம். நன்றிங்க.

kashyapan said...

தோழா! அந்த சிட்டகாங்க் எழுச்சியில் பங்கு பெற்ற இளைஞர்களில் ஒருவர் கணேஷ் கோஷ். 1979 ம் ஆண்டு ல் சென்னயில் நடந்த சி.ஐ டி.யு மாநாட்டுக்கு வந்திருந்தார். தோழர் என்.ராமகிருஷ்னன் அவரிடம் எப்படியாவது ஒரு நெர்காணலை வாங்கிவிடும்படி கூறினார். என்னிடம் என்ன இருக்கிறது சொல்ல என்று மறுத்துவிட்டார்.அப்போது அவர் மேற்கு வங்க அரசில் அமைச்சராக இருந்தார்.அந்த மாவீரனை தரிசித்த பேறு கிடைத்தது .---காஸ்யபன்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் காம்ராஜ் சார்.