1.11.10

ஒதுங்கிக் கிடக்கும் உபகதை

சாக்கோவின் பாட்டனார் காலத்தில் வெளுத்தனின் பாட்டானார் அவர்களுக்கு பண்ணையடிமையாய் இருந்தார்.சாக்கோவின்  அப்பாவுக்கும் வெளுத்தனின் தகப்பனாரும் அப்படியே. சாக்கோ அமெரிக்கா சென்று அங்கேயே வேலை தேடி,அங்கேயே மார்க்கரெட்டையும் மணந்துகொள்கிறான்.மார்க்கரெட் இன்னொரு ஆடவனோடு உறவு கொண்டாட அவளிடமிருந்து விவாகரத்து வாங்குகிறான்.பின்னர் அங்கு வாழப்பிடிக்காமல் கேரளா திரும்புகிறான். இதனிடையில் மூன்று தலைமுறைகள் கடந்துவிடுகிறது. தொழில், கல்வி, திருமணம்,விவாகரத்து, என வாழ்நெறிகள் மாறிக்கொண்டே இருக்கிறது.அந்த மாற்றங்களினால் எந்த வித சலனமுமில்லாமல் வெளுத்தனின் குடும்பம் சாக்கோவின் குடும்பத்தை அண்டியே வாழ்கிறது.

சாக்கோ உருவாக்கும் ஊறுகாய் தொழிற்சாலையின் பிரதான மெக்கானிக் காககவும்,தச்சு வேலைக்காரனாகவும் மூன்றாம் தலைமுறை வெளுத்தன் தயாராக இருக்கிறான்.சாக்கோ தனது ஆங்கில மனைவி மார்க்கரெட்டின் நினைவுகளால் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப் படுகிறான்.மார்க்கரெட்டின் இரண்டாவது கணவன் இறந்து போக, அந்தக்குடும்பம் மார்க்கரெட்டை ஏற்றூக்கொள்ளத் தயாராகிறது.

சாக்கோவின் விதவை சகோதரியான அம்முவின் குழந்தைகளுக்கு பணிவிடை செய்கிற பொறுப்பு பாரம்பரிய முநறைப்படி வெளுத்தனுக்கே வந்துசேர்கிறது. குழந்தைகளுக்கான பணிவிடைகள் சிநேகமாகி,கெட்டிப்பட்டு உறவாகிறது. அம்முவுக்கும் அவனுக்கும் ஒரு மறு உலகின் வாசல் திறக்கிறது. அது முழுக்க முழுக்க இரவுகளால் மட்டுமே அறியப்படுகிறது. மார்க்கரெட்டை ஏற்றுக் கொள்ளும்   சாக்கோவின் குடும்பம் முழுக்க வெளுத்தனை நிராகரிக்கிறது. மார்க்கரெட்டின் குழந்தை ஷோபி ஒரு ஆற்றுப்பயணத்தில் தவறிவிழுந்து இறந்துவிட,அந்த மரணமே அதுவரை தங்கள் காலடியில் கிடந்த வெளுத்தனைப் பழிவாங்கப் போதுமானதாகிறது. அம்முவைக் கற்பழிக்க முயன்று தோற்றுப்போய் பழிவாங்கும் வெறியால் குழந்தையைக் கடத்திக்கொன்றுவிட்டான் என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்படுகிறான்.

ஆற்றுப் பயணத்தில் ஷோபியோடு பயணம் செய்த அம்முவின் இரட்டைக் குழந்தைகளான எஸ்தாவும்,ரஹேலும் தான்  உண்மையான மரணத்தை அறிந்தவர்கள்'அந்த தெய்வக்குழந்தைகளும்.காலங்காலமாக தன் குடும்பத்தை போஷித்து வந்த குடும்பத்தின் நன்றியறிதலை உதறிவிட்ட எஜமான் சாக்கோவும்.கால மாற்றத்தின் நீட்சியாய் பெரும் உருவெடுத்த கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் மீது வைத்திருந்த நம்பிக்கையும்.அந்தக்கட்சியின் பிரதேச செயலாளர் என எல்லோராலும் கைவிடப்படுகிறான் வெளுத்தன்.நம்பிக்கை செத்துப்போய் போலீசின் காட்டுமிராண்டி வதைகளால் காயப்பட்டு அவனிடம் மிச்சமிருந்த உயிரும் பிரிகிறது.

புக்கர் பரிசுபெற்ற ' தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ் 'புதினத்தின் உபகதை இது.கிட்டத்தட்ட இதே போலோரு பாத்திரம் ரப்பர் நாவலிலும் காணக்கிடைக்கும்.

9 comments:

Unknown said...

வித்தியாசமான கதை. பகிர்வுக்கு நன்றிங்க.

க ரா said...

ஒரு நல்ல கதையை பகிர்ந்திட்டமைக்கு நன்றி காமு சார் :)

NaSo said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி. நண்பரே இன்டிலியில் இணைக்கவும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

பகிர்வுக்கு நன்றிண்ணே.. ரப்பர் இனிமேல்தான் வாசிக்கணும்..

சண்முகம் said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ் படித்திருந்தாலும் இப்படித் தமிழில் வாசிக்கும் போது புது உணர்வு தோன்றுகிறது!

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எப்படி இருக்கிறீர்கள்? வாழ்க்கை உங்களோடு சினேகமாக இருக்கிறது... நீங்களும் வாழ்க்கையோடு சினேகமாக இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்... அருந்ததி ராயை கொண்டாடும் வாசகர்களில், அல்லது கவனிப்பவர்களில் நானும் ஒருவன்... மாதவராஜூக்கும் அருந்ததி ராயின் கருத்துக்களில் ஒப்புதல் உண்டு என்று நினைக்கிறேன். அவரின் நக்ஸலைட் குறித்தான பார்வை, அவரின் காஷ்மீர் குறித்தான பார்வை... ஏனைய தலித், மலைஜாதி மக்களின் மீதான பார்வை எனக்கு எப்போதும் உடன்பாடு உண்டு... உங்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். மிகப்பெரிய எழுத்து, பேச்சு அவருடையது...

எத்தனை பேர் காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் படித்திருப்பார்கள்... எத்தனை பேரை அது பாதித்திருக்கும்... எத்தனை பேர் அதைப் பற்றி பேசியிருப்பார்கள்... அதுவும் இது போன்ற ஒரு கிளைக்கதையை தொட யாருக்குத் தெரியும்... இன்னும் பாதிக்கக்கூடிய கதைகள் அதில் இருந்தாலும்... சாக்கோவின் கதை எனக்கும் மிகப்பிடித்தமான் ஒன்று காமராஜ்... வர்க்கபேதங்களில் உழல்பவர்களின் அரசியல் கோட்பாடுகள் வினோதமானவை... வரைமுறை,தர்க்க ரீதியான எந்தவித அளவுகோல்களும் இல்லாதவை... வெளுத்தனின் கதை இங்கே நிறைய உண்டு... காமராஜ்... அடூரின் ஒரு படத்தில் வரும் இது போன்ற ஒரு உறவு... ஆனால் அதில் வெளுத்தன் போன்றவனின் வளை தண்மை பற்றி பேசப்பட்டிருக்கும்... உங்களுடைய மொழி பெயர்ப்பு எப்படி இருக்கிறது தெரியுமா... காமராஜ் அசலாய் இருக்கிறது... எந்தவித பாசாங்கும் இல்லாமல் இருக்கிறது... இன்னும் இதுபோல் நிறைய எழுதுங்கள் காமராஜ்...

அன்புடன்
ராகவன்

vimalanperali said...

நல்ல கதை.ஒதுக்கப்பட்டவனின் வரலாறாய் கம்யூனிஸ்ட்டுகளின் வாழ்வும் இருந்திருக்கிறது.கனம் மிகுந்த சிறுகதை.