10.11.10

கொள்ளிவாய்ப் பிசாசு,சரஸ்வதியின் அண்ணன்,பாதிரியாரின் அங்கி.

தேசிய நெடுஞ்சாலை ரெண்டாய்ப்பிளக்கும் நகரம் சாத்தூர்.வைப்பாறு படுத்திருக்கும் வடகரையில்  அமர்ந்திருக்கும் வளரா நடு நகரம்.ஒருகாலத்தில் மணல் பெருக்கெடுத்தோடிய பெருமையுடைத்து நம்ம வைப்பாறு.ஹார்வி( மில்லும்)பஞ்சாலையும்,மதுரா கோட்சும் இங்கிருந்தது என்று சொன்னால் என்னைக் கல்லால் அடிக்க வர்லாம்.ஆனால் அதன் எச்சங்களான வேதக் கோயில் கோபுரமும்,இந்து.... பாடசாலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கிற எத்தல்ஹார்வி,எட்வர்டு பெயர்கள் கட்டாயம் காரணம் சொல்லும். வேதக் கோயில் கோபுரம் எத்தனைமைல்கல்லுக்கு அப்பாலிருந்து பார்த்தாலும் சிலுவையோடு தெரியும்.கரிசல் கிராமங்களின் காலை நேரங்களில் சூரியன் பட்டுத் தெறிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும்.மாலைநேரத்து மஞ்சள் வெயில்பட்டுத் தெறிக்கும் வேதக்கோயில் கோபுரமும் பால்யத்தில் பொதிந்து கிடக்கும் நினைவுகளில்  ரொம்ப உசரமானவை.

'அடே காமராசு, காலைல ஏறுனா சாய்ங்காலம் ஆகிறும் கோவரத்து உச்சிக்கு போக தெரியுமா ?' என்று சொன்னபடி தன் டவுசரை ஏத்தி விட்டு அண்ணாக் கயிறால் இறுக்கிக் கட்டிக்கொண்டு நிற்கும் கந்தசாமி தான் அப்போது எங்கள் அறிவு டார்ச்.அவன் எது சொன்னாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.அவனோட அக்கா புருசன் வெவரக்கார சாமிதாசுதான் ஊரிலிருந்து சாமியாரைப் பார்க்க வாராவாரம் போய்வரும் ஆள்.

பதிலுக்கு சாமியார் வருசா வருசம் பண்டியலண்ணிக்கு(க்ரிஸ்துமஸ்) வருவார்.அன்னைக்குத்தான் குள்ளிப்பிளசர்(அம்பாசடர் கார்) ஊருக்கு வரும்.அதைத்தொட்டுப் பார்க்கவும்,கார்க் கண்ணாடியில் பல்லைக்கட்டிச் சிரிக்கவும் பசங்க கூட்டத்தில் அடிபுடி நடக்கும்.ஆனால் எனக்கு அதிலேதும் நாட்டமிருந்ததில்லை.தூசி படிந்த பின்புறத்து கண்ணாடியில் சிவாஜி வாழ்க,எஸ்கேஆர் இப்படி எழுதினால் தான் தூக்கம் வரும்.அல்லது சாமியாருக்கு பக்கத்தில் நின்றபடி 'அருள் நிறைந்த மரியே வாழ்க' மணப் படமாகச் சொல்லி அவர் பாராட்டுவாங்கவேண்டும்.கன்னத்தைப்பிடித்து கிள்ளி மலையாளம் கலந்த தமிழில் என் பெயெரென்னவெனக் கேட்க வேண்டும். இது நடந்து ரெண்டு நாளைக்கு நான் தற்காலிகத் தலைவ னாகிவிடுவேன்.பழைய்ய தலைவன் கந்தசாமி எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கமாட்டான்.

சாமியாரைப்பற்றி பல மயிர்க்கூச்செறியும் ஹேஸ்யங்கள் சொல்லுவான்.அவர் சாப்பிடவே மாட்டாராம் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் போதே மானத்திலிருந்து பன்ரொட்டியும் பாலும் வருமாம்.அவர் போட்டிருக்கிற வெள்ளைஅங்கி அழுக்காகவே ஆகாதாம்.அப்படியே ஆனாலும் சம்மணசுகள் ( தேவதைகள்) வந்து சரிசெய்துவிடுமாம்.பகல்பூராம் பார்க்கமுடியுமாம். ராத்திரியானால் ரூமுக்குள் போய் ஆவியாகி காணாமல் போய்விடுவாரம்.இதையெல்லாம் சொல்லும் போது எல்லோரும் டவுசரைக் கழற்றிக்கொண்டு ஓடையில் இருந்தோம்.அதனால் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. கேட்டேன்.'சாமியப்பத்தி தூஷனமாவா கேக்க இரு செம்பட்ட...' என்று சொல்லிக்கொண்டே கழுவாமல் ஓடிப்போய் அவனுடைய மாமனிடம் சொல்லிவிட்டான்.சாமி கண்ணக்குத்திப்புடும் என்கிற பயம் ஒரு பக்கம். சாமியின் சேவகன் அடித்துவிடுவானென்கிற பயம் இன்னொரு பக்கம். ஒரு வாரம் அவன் வீட்டு வழியே போகாமல் ஒரு தெரு சுற்றித்தான் பள்ளிக்கூடம் போனேன்.

ஒரு ராத்திரி நேரத்தில் சுற்றிப்போகத் தெம்பில்லாமல் அவன் வீட்டு வழியே போனேன்.வீட்டு முற்றத்தில் சப்பிட்டு விட்டு மொழுகுநீட்டி உட்கார்ந்து வளமை பேசிக்கொண்டிருந்தார்கள்.சரஸ்வதியும் இருந்தாள்.ஏதோ நடக்கப் போகிறது என்று தலையைக்கவிழ்ந்து கொண்டு நடந்தேன்.என் தலை தெரிந்ததும் ஒரே சிரிப்புச்சத்தம். எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவளும்தான். திடுத்திடுவென ஓடிவந்துவிட்டேன். ஏன் சிரித்தார்கள்.?


செம்பட்ட....கெட்டவார்த்தையில் என்னைத் திட்டிக்கொண் டலைவான். மூன்றாம் நாள் சாயங்காலம் கூப்பிட்டு வா தலைமையேற்றுக் கொள், மலங் காட்டுல ராத்திரி ராத்திரி ஏன் தீப்பிடிக்கிறது சொல் எனக்கேட்போம்.  கொஞ்ச நேரம் பிகுப் பண்ணிவிட்டு 'அப்ப நீ ஏண்ட மன்னிப்பு கேலு' என்பான். மண்ணிச்சிக்கோ ஆனா புருடா மட்டும் விடக்கூடாது என்பேன்.விசுக்கென எழுந்து குண்டி வரை கழன்ற டவுசரைத் தூக்கிவிட்டுக்கொண்டு கிளம்புவான். கூட்டம் என்னைக் கெட்டவார்த்தையில் திட்டும்.எல்லா வசவுகளையும் வாங்கிச் செரித்துக்கொள்வேன் சரஸ்வதிக்காக.அவள் கந்தசாமியின் தங்கச்சி.அவ கெடக்கா விடுங்க. சிரிக்கும்போது  பச்சரிசிப்பல் தெரியும். குளிச்சமஞ்சளின் வாசம் சாத்தூர் தாண்டி வீசும்.கணக்குப்பாடம் சந்தேகம் கேட்கும் போது அவள் கூழுக்கு கடித்த வெங்காயத்தின் வாசம் கட்டாயம் மணக்கும்.பெயரும் பெயரும் அருகிருக்கும் அழகு பார்த்து மகிழ்ந்து போன அது மயிலிறகுக் காதல்காலம்.அது எதுக்கு இப்போ?.

அந்த தேவதைக்காக கந்தசாமிசொல்லும் பேய்க்கதையை நம்புகிற மாதிரி முகத்தை வைக்கவேண்டும்.ரெண்டுவார்த்தை சொல்லிவிட்டு என்முகத்தை உற்றுப்பார்ப்பான்.கொள்ளிவாய்ப்பிசாசுகள் தான் மலங்காடுகளில் ராத்திரி நேரம் தீயாக வேசம் போட்டுக்கொண்டு அலையும் என்பான்.அதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.ஏனென்றால் அவனது பெரியம்மா வீடு மூணாறு எஸ்டேட்டில் இருக்கிறது.உடனே தமிழ்சினிமாவில் வரும் கண்ணாடி பங்களாவை கற்பனை செய்துகொள்ளவேண்டாம்.வீடு குடிசை வீடுதான். தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு பங்களாவா கட்டித்தருவான் மொலாளி. ஒரு தரம் அங்கே கல்யாணத்துக்கு போய்விட்டு வந்தான் கந்தசாமி. ஆகிற படியால் அவன் பேயை நேரடியாகப் பார்த்திருப்பான் என்று எங்கள் கூட்டம் நம்பியது.

பேய்க்கதை கேட்டண்ணிக்கு ஏழுபேரும் ஒருத்தன் கையை ஒருத்தன் பிடிச்சபடித்தான் அலைவோம்.அதிலும் கந்தசாமி கையைப்பிடிப்பதற்கு கடும் போட்டி நடக்கும்.பேயைப்பார்த்ததும்,சூலாயுதத்தை நீட்டலாம், இரும்புக் கம்பியைக்காட்டலாம், தீக்குச்சி எடுத்து பொருத்தலாம்.இதுல எதாச்சிலும் செய்தால் பேய் காத தூரம் ஓடிப்போகும் என்பான்.அதுக்காக பையில் எப்போதும் ரெட்டைக் கிளித் தீப்பெட்டி வைத்திருப்பான்.தடுக்கி விழுந்தால் தீப்பெட்டிக் கம்பெனிகள் இருக்கிற ஊரல்லவா. எல்லோர் பையிலும் கிடக்கும்  தீப்பெட்டியை நானும்கூட எடுத்து டவுசர் பைக்குள் போட்டுக்கொண்டு அலைந்தேன்.அதனால் பீடிகுடிக்கத்தான் வைத்திருக்கிறேன் என்று நினைத்த என் தாய்மாமன்களிடம் அடிவாங்கியதுதான் மிச்சம்.

இந்த அடிகளும்,கெட்டவார்த்தை வசவுகளும்,பயம் கலந்த பால்யமும் அடுக்குப்பானைக்குள் ஒளித்து வைத்த தினைமாவைப்போல் வாசமும் இனிப்புமாக முகத்திலடிக்கிறது.

16 comments:

இராமசாமி கண்ணண் said...

ஊருக்கு வந்துட்டு சுத்தின மாதிரி ஒரு உணர்வு சார்.. அது நம்ம வைப்பாறுதானா.. எங்கிருந்து எடுத்த போட்டோ சார் :)

இராமசாமி கண்ணண் said...

நான் படிச்சது எட்வர்டு ஸ்கூல்லதான் சார்.. அங்க ஒரு கதையுண்டு.. ஸ்டேடியத்துக்கு பின்னாடி காரனேசன் கிளப் பக்கம் நைட்டு பேய் அலையுன்னு கதை விடுவானுங்க.. ஸ்கூல்ல நைட் ஸ்டடி போறோன்னு சொல்லிட்டு அங்க போய் பெட் கட்டுவோம் பசங்க எல்லாம்.. நைட் ஒரு மணிக்கு மேல யாரு போய் ஸ்டேடியத்த தொட்டுட்டு திரும்பி வருவான்னு.. என்னத்த சொல்ல யாரும் போனதில்ல.. பாதி தூரம் ஒடிப்போயிட்டு திரும்பி வந்துருவோம் :)

இராமசாமி கண்ணண் said...

//ஒருகாலத்தில் மணல் பெருக்கெடுத்தோடிய பெருமையுடைத்து நம்ம வைப்பாறு.//
ஒரு காலத்துல வருசம் முழுக்கவும் ரெண்டு கரை தட்டியும் எப்பவும் தண்ணி ஒடுன்னு எங்க அப்பாவும் ஸ்கூல்ல சிங்கமுத்து சாரும் சொல்லிருக்காங்க சார்.. அப்புறம் நான் எப்பவாது பாத்திருக்கேன் அந்த் மாதிரி தண்ணி ஒடுறத.. இப்ப மணல் கூட இருக்காதுன்னு நினைக்கிறேன்...சரியா சார் :)

இராமசாமி கண்ணண் said...

எனக்கு தெரிஞ்சு வெம்பக்கோட்டை டேம் வந்ததுக்கு அப்புறம்தான் தண்ணி ஒட்டம் நின்னிருக்குன்னு நினைக்கிறேன் :)

லெமூரியன்... said...

ரசிக்கும்படியான FLASH BAC :) :) :)

வைப்பாரு நதி காட்டாறு என்றுதான் நினைத்தேன்.....
:(
கொள்ளிவாய் பிசாசு , எனது பால்யத்தின் பேய்கள் பற்றின கதைகளை நினைவூட்டியது....
:) :)

வானம்பாடிகள் said...

/இந்த அடிகளும்,கெட்டவார்த்தை வசவுகளும்,பயம் கலந்த பால்யமும் அடுக்குப்பானைக்குள் ஒளித்து வைத்த தினைமாவைப்போல் வாசமும் இனிப்புமாக முகத்திலடிக்கிறது.
/

தினைமாவு!! இந்தத் தலைமுறைக்கு தெரியுமா இதன் ருசி. பால்யத்தைப் போலவே:(

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அருமையான பதிவு... அழகான நடை... இது நதிவழி அது பாட்டுக்கு சொல்லாமல் போகும் எழுத்து... நேர்ச்சைக்கென முடிந்து வைத்திருக்கும் கடவுளை இன்னும் அடையாத பித்தளைக்காசென சலசலக்கும் எழுத்து... எல்லோருடைய பால்யங்களிலும் கதை சொல்லவும், காரணங்கள் சொல்லவும் ஒரு மேதாவி நம்மை போலவே இருப்பான்... அப்பாவியாய் கதை கேட்க நம்மள போல ஆட்கள் அனேகம்... தெரிந்தோ தெரியாமலோ நம்ம கூட இருப்பவனே ஒரு தலைவனாய், வழி நடத்துபவனாய், கதை காரணங்கள் சொல்பவனாய் ஆகிவிடுவதுண்டு... தோற்றப்பொலிவு, முகவசீகரம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் ஏதோ ஒரு சொல்ல முடியாத விஷயம் நம்மை அறியாமல் அவர்கள் பின்னால் போகச் சொல்லும்.... சவடால் பேச்சு, கைகளை அசைத்து பேசும் பொலிவு... எதுவென்று தெரியாது....
ஒரு எட்டு வயதில் இருந்து பதினெட்டு வரையிலான மூவாயிரத்திற்கும் மேலான நாட்களில் ஒளிந்திருக்கும் நினைவுகள் ஒவ்வொன்றாய் ஒரு நாவல் மாதிரி எழுத முடியும் உங்களால் காமராஜ்... நாவல் எழுதுகிற சாத்தியம் உங்களுக்கு அதிகம்.... கொஞ்சம் உழைப்பு... தகவல் சேகரிப்பு இருந்தால் தயவு செய்து நாவல் எழுதுங்கள்.... நாம எல்லாரும் சேர்ந்து வெளியிடலாம்... வம்சிய கேட்டு பாக்கலாம்.... போயிக்கிட்டே இருங்க காமராஜ்!

அன்புடன்
ராகவன்

அலைகள் பாலா said...

super

ஈரோடு கதிர் said...

உங்கள் ஊரை நோக்கி இழுக்கிறது அடர்த்தியாய் எழுத்தில் வீசும் மண்வாசம்

க.பாலாசி said...

எவ்வளவு சுவாரசியம் பாருங்க இந்த பால்யத்தை குடைந்து பார்ப்பதில்...

//கணக்குப்பாடம் சந்தேகம் கேட்கும் போது அவள் கூழுக்கு கடித்த வெங்காயத்தின் வாசம் கட்டாயம் மணக்கும்.பெயரும் பெயரும் அருகிருக்கும் அழகு பார்த்து மகிழ்ந்து போன அது மயிலிறகுக் காதல்காலம்.//

இந்த வரிகள் என்னமோ அந்த இடத்துக்குள்ள சுத்தின எறும்புபோல ஆக்கிவிட்டது.

Sethu said...

அருமையான விவரிப்புங்க. சூப்பர்.

-திருட்டு அப்பம் வாங்கிய கதை எப்போ, எந்த வயசில?

கே.ஆர்.பி.செந்தில் said...

நானும், நண்பர்களும் பழைய விட்டாலாச்சார்யா படத்த இரண்டாம் ஆட்டம் பாத்துட்டு சுடுகாட்டு வழியா வர்றப்ப ஒருத்தன் பயந்து வீட்டுல பிரச்சினை ஆனது நினைவுக்கு வருது ... நமக்கு கிடைத்தது போன்ற இந்த அனுபவங்கள் இனி வரும் தலைமுறைகளுக்கு இல்லாமல் போய்விட்டது ..

விமலன் said...

முகத்திலடிகிற இனிப்புகளாய், வாழ்க்கை காட்டும் கண்ணாமூச்சிகளாய்,வைப்பாறுகளாய்,தேசியநெடுஞ்சாலைகளாய்,வேதக்கோவில்களாய்,இன்னுமானவையாய் சுழித்துக் கொண்டு ஓடும் வாழ்வு,,,,,,,நிறைய சுமந்து கொண்டும்,சொல்லிக் கொண்டும்./

Anonymous said...

முகத்திலடிகிற இனிப்புகளாய், வாழ்க்கை காட்டும் கண்ணாமூச்சிகளாய்,வைப்பாறுகளாய்,தேசியநெடுஞ்சாலைகளாய்,வேதக்கோவில்களாய்,இன்னுமானவையாய் சுழித்துக் கொண்டு ஓடும் வாழ்வு,,,,,,,நிறைய சுமந்து கொண்டும்,சொல்லிக் கொண்டும்./

Mahi_Granny said...

அடுக்குப்பானைக்குள் ஒளித்து வைத்த தினைமாவைப்போல் வாசமும் இனிப்புமாக முகத்திலடிக்கிறது.'
தினைமாவு ருசித்ததில்லை . நிச்சயம் ருசியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். என்ன அருமையாய் பால்யகால நினைவுகளை பகிர முடிகிறது உங்களால் . ராகவன் சொல்லுவதை நானும் வழிமொழிகிறேன் .

சே.குமார் said...

அண்ணா...
சிறு வயது நினைவுகள் அரும்பு மாதிரி... எப்போது நினைத்தாலும் நமக்குள் வாசனையுடன் பூத்துவிடும்.

உங்கள் நடையில் நகைச்சுவையுடன் சொல்லியிருந்தாலும் சின்ன வயது ஞாபகத்தை எனக்குள்ளும் பூக்கவைத்துவிட்டது.

வாழ்த்துக்கள் அண்ணா.