7.11.10

ஓபாமாவிடம் கேட்கப்பட்ட அசட்டுக்கேள்வி.

தீபாவளிக்காக கரியாக்கப்பட்ட பொருளாதாரத்தைவிட அதிகம் திரு.பாரக் ஓபாமாவின் வருகைக்காக இந்தியா ஒதுக்கியது.செலவுக்கதிகமான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் கூடிக்கொண்டே போனது. எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,கருத்து மோதல்கள் என ஊடகங்களின்மூலம் அல்லோல கல்லோலப்பட்டது தேசம்.சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் விளம்பர நேரத்தில் இடம் பிடிக்காதது மட்டும் தான் குறை. எல்லாம் ஒரு அமெரிக்க அதிபர் சம்பிரதாய வருகைக்காக.

வந்தவர் மும்பை புனித சேவியர் கல்லூரியின் மாணவர்களோடு உரை யாடினார். கேள்விகளும் பதிலுமான அந்த நேரத்தை உலகம் உற்றுக் கவனிக்கிறது. ஒரு மாணவி 'ஏன் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக அறிவிக்கவில்லை, ஏன் இன்னும் நீங்கள் நட்பு பாராட்டுகிறீர்கள்' என்று கேட்டிருக்கிறாள். இந்தக்கேள்வியும் அதற்கு திரு.பாரக் ஓபாமா சொன்ன பதிலும் தான் இந்த நிமிஷத்தின் தலைபோகிற பிரச்சினையாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. நல்ல வேளை ஜாவேத் அக்தாரை மெல்லமாக பந்துவீசச் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை.

'டைம்ஸ் நௌ' தொலைக் காட்சியின் நேரலையில் மும்பைத் தாக்குதலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கபட்டுக் கொண்டிருக்கிறது.பிரதம செய்தியாளர் மும்பை,டெல்லி போன்ற நகரங்களின் நிருபர்களோடு தொடர்பு கொள்கிறார் நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவர்களும் பதறுகிறார்கள்.அங்கிருந்து இஸ்லாமாபாத்துக்கு தொடர்புகொண்டு பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளரிடம் பேசுகிறார்.தொழில் நுட்பத்தின் சகல தகிடு தத்தங்களையும் உபயோகித்து  அவரது பதிலை ஒரு எறிகிற பிரச்சனையாக்குகிறது தொலைக் காட்சி வியாபாரம்.

அடிப்படையில் அமெரிக்கா ஒரு ஆயுதவியாபார தேசம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டாவது பாகிஸ்தானைக் 'கிள்ளுகிறான் முள்ளுகிறான்' என்று சொல்லி பிராது கொடுக்கிற அளவுக்கு அமெரிக்கா ஒன்றும் சட்டாம்பிள்ளையில்லை.அது ஒரு உலக நாட்டாமையும் இல்லை.உலகத்துக்கே நீதிசொல்லுகிற அளவுக்கு மனிதவளமும், அறிவுத் திறனும் இருக்கும் 117 கோடி ஜனத்தொகை கொண்டவர்கள் நாம்.அதை மறந்து அமெரிக்காவிடம் நியாயம் கேட்கிற அளவுக்கு இந்தியா கையறுநிலைக்குப் போய்விட்ட காரணம் என்ன?பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து விடுவதன் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்.லாபமிருக்கா இல்லையா வெனத்தெரியாது.ஆனால் அறிவித்தால் அது அமெரிக்காவுக்கு எவ்வளவு நஷ்டம்.

போபால் விஷ வாயுக் கசிவினால் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் அவலம்,பிடி கத்திரிக்காய்,காப்புரிமை,அனு ஆயுதபரவல், சந்தைப் பொருளாதாரம் போன்றவை குறித்து அமெரிக்காவிடம் கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரமாயிரம் இருக்கிறது.அது பற்றி அந்தப்பெண்ணுக்கு தெரியுமோ தெரியாதோ. 

இதையெல்லாம் தெரியாத ஒரு மாணவியின் அசட்டுக்கேள்வியை இந்த தேசத்தின் கோரிக்கையாக்கப் பார்ப்பது எவ்வளவு கபடம் நிறைந்தது. இது ஒரு மாணவியின் அசட்டுக் கேள்வி மட்டுமல்ல ஒரு 63 ஆண்டுகாலம் ஊட்டிவளர்த்த வெறுப்பின் பிரதிபலிப்பு.ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்ட இந்த பகைக்குப்பின்னாடி மிகப்பெரிய மேல்மட்ட அரசியல் இருக்கிறது. அதற்குப் பின்னாடி சர்வ நிச்சயமாக ஊடகங்கள் இருக்கின்றன.(அந்தக்கேள்விக்கு ஒரு நீண்ட பதிலைச்சொல்லிய திருமிகு ஓபாமா இறுதியில் 'இரு நாடுகளும் உட்கார்ந்து பேசித்தீர்க்கவேண்டிய விடயம் இது' என்று சொல்லுகிறார்.)இந்த ஊடக நாடகத்தின் தொடர்ச்சியாக இன்று மாலை அரசு முறைச் சந்திப்பாக பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்திப்பதையும், 20 நிமிட நேரம் தனியே உரையாடுவதையும் அறிவிக்கிறது. ஆறு அம்ச ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகிறது என்பதை போகிறபோக்கில் சொல்லி விட்டுக்  கடந்துவிடுகிறது.

சாமான்யன் முதல் அறிவு ஜீவி வரை எதிரும் புதிருமாக அடித்துக்கொண்டு பொழுதுபோக்க புனித சேவியர் கல்லூரி மாணவியின் கேள்வி.மேல்மட்ட இந்தியா இன்னும் கொழிப்பதற்கு தங்கு தடையில்லாத ஒப்பந்தங்கள்.

1 comment:

raja said...

இந்தியர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள் எல்லோரும் காலையில் எழுந்து வெடிகுண்டு வெடித்து நாளை தொடங்குபவர்கள் என்று நிணைக்ககிறார்கள்.. மிக வக்கிரமான,கொடூரமான பார்வை இது..வசதி மேல்சாதியப்பார்வை இது.. இந்தியமீடியாக்கள்,மதம் சார்ந்த அமைப்புகள்,கீழ்த்தரமான அரசியல்வாதிகள்,அனைவரும் உரமிட்டு வளர்த்து வரும் சிந்தனை இது.. இதே சிந்தனைதான் ஈழப்பிரச்சினையில் வட இந்தியர்களின் புரிதல்கள்.