20.11.10

ஒரு சாமக் கனவும்,பிரம்ம முகூர்த்தவேளையும்.

பன்னாட்டு கம்பெனிகளிடம் கையேந்தாமல்,எல்லோருக்கும் சமாமய் எப்போதும் கிடைக்கிற காற்று.எந்த நடிகை நடிகரும் சிபாரிசு செய்யாமல் இயற்கையே குளிர்பதனம் செய்யது கொடுத்தகாற்று.
பிரம்ம முகூர்த்த வேலையில் கிடைக்கிற இலவச விடிகாலைக் காற்று.இதை அனுபவிக்க ஒரு பின்னிரவின் தூக்கத்தைத் தியாகம் செய்யவேண்டும்.அல்லது முன்னிரவின் ரசஞ்சாதமோ இல்லை ஒரு துர்க்கனவோ வந்து தூக்கத்தைக் கெடுக்கவேண்டும்.

வீட்டுக்குள்ளிருந்து வீசியெறியும் வெள்ளி உருண்டைகளாய் சிதறும் தண்ணீர் பட்டதும் சிலிர்த்துக்கொள்ளும் கதைகள் பொதிந்த வீட்டு  முற்றங்கள்.
எழுப்பி விட்ட குழந்தைப்போல கோலம் கேட்டுக் காத்திருக்கும் ஆதிப்பூமி.
உறக்கத்தின் மிச்சத்தைக்கண்களிலும்,கனவின் மிச்சத்தைக் கைகளிலுமாக கோலப் பொடிகளில் குழைத்துக் கொண்டு வரும் சோதரிகள்.

தகரக்குவளைகளில் உரசல்களில் எழுந்து வரும் தடதடப்பில் லயம் சேர்த்துக்கொண்டு மனதுக்கிசைந்த பாடலோடு  கடந்து போகும் பால்காரரின் சைக்கிள்.தலை எது கால் எது என்று தெரியாமல் படுத்துறங்கும் தார்ச் சாலை.எரிச்சல் தராத இறைச்சலோடு எப்போதாவது கடந்துபோகும் வாகனங்கள்.தண்ணீர் வற்றிப்போன அடிகுழாயில் தனது முழுபெலத்தையும் செலவழிக்கும் நகரத் தாதி அழகம்மாள்.

கச்சா மாவில் உப்பு உறைப்பு சரிபார்த்துவிட்டு முதல் உளுந்த வடையைப் பிளந்து வராத காக்கைக்கு ருசிபார்க்கக்கொடுக்கும் தேநீர்க்கடைக்காரர். ஆவன்னா.ராசா முதல் அக்கன்னா ராசாக்கள் வரை நாழிதழ் வழித் தெரிந்து கொள்ள உட்கார்ந்திருக்கும் முதல் போனி, பணி ஓய்வுபெற்ற பரந்தாமன் வாத்தியார். ஒரு நண்பர்கூட்டத்தின் உற்சாகம்,சிரிப்பு ஆதங்கம் சின்னச் சின்னச் சண்டை களின் மிச்சமாய்ச் சாலையின் விளிம்பில் சிதறிக்கிடக்கும் ப்ளாஸ்டிக் டம்ளர், சிகரெட்டுப்பெட்டி,காலியான புட்டி.அதைப் பார்த்து நினவில் கொண்டு வரலாம் ஒரு ரம்மியமான மதுவின் நாளை.

இந்த ரம்மியங்கள் யாவும் சிதைந்து போகாமல் வீடு திரும்பவேண்டுமென்றால் அந்த காட்சியைப்பார்க்காமல் திரும்ப வரவேண்டும்.

நாற்கர சாலைப் பாலத்தின் அடியில்.பீடிக்கங்கின் வெப்பத்தில் சுற்றுக்குளிரை சமாளித்தபடி ரெண்டுபேர்.அந்த விடிகாலையில் ஈக்கி விளக்கமார் தயாரிக்கும் தூரத்து மாவட்டத்துகாரர்கள்.அவர்கள் அருகில் குவிந்துகிடக்கும் துடைப்பங் களின் அளவில் தெரியும் தொலைந்து போன அவர்களின் ராத்தூக்கம். எந்திரகதியில் சுழலும் கைகளுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டி ருந்தது அவர்களின் கைப்பேசியில் ஒலித்த சினிமாப்பாடல்.

11 comments:

வானம்பாடிகள் said...

அழகான மாலைன்னு ரசிச்சிட்டிருக்கும்போதே நுகத்தடி வைத்தாற்போல் கழுத்தின் பின்புறம் அழுத்தி வலி காட்டும் கல்யாணமாலை.:)

கே.ஆர்.பி.செந்தில் said...

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து யாருமற்ற மலைசாலையில் ஒருமுறை நடந்தால் வாழ்வின் முழுமை புரிந்துவிடும்...

ராகவன் said...

அன்பு காமராஜ்,

பளீரென்று சானம் தெளித்து கோலமிடும் பெண்ணை பார்த்தவுடன், மார்கழி பிறந்துடுச்சோன்னு ஒரு ஞாபகம்... இதமான குளிர் பரவும் மார்கழி முதல் நாள் எங்கள் தெருவே விழித்துக் கொள்ளும், தெரு அடைத்து கோலமிட... தரைகளில் சாக்பீஸால் எழுதி எழுதி அழித்து பழகிய கோலங்களின் தீர்மாணமாய் அடுத்த நாள் காலையில் பூக்கிற கோலம் முடிவாகி விடும்... அம்மாவிற்கு தெருவை அடைத்து கோலமிடத் தெரியாது... அம்மா பிறந்து வளர்ந்த தெரு, வாகனங்கள் விரையும் பெருவழிச்சாலை... அடைத்து கோலமிட கற்றதில்லை அம்மா எப்போதும்... நாகரீக கோலமாய் மூன்று புள்ளி இரண்டு செம்மண் பட்டைகளில் முடிந்து விடும் கோலங்கள். அதனால் அதைப்பற்றிய பெரிய ஞாபகங்கள் இல்லை எனக்கு. நாங்கள் ஜவகர் தெருவில் இருந்த அழகர்சாமி நாயுடு காம்பவுண்டில் இருந்து காலி செய்து சொந்த மனை வாங்கி செல்வ வினாயகர் கோயில் தெருவுக்கு போனபோது, அது எனக்கு ஏதோ கிராமத்து சூழல் போல இருந்தது...

எதிரே மாட்டு கொட்டாயும், தெருவின் மறுமுனையில் ஆட்டுக்கொட்டிலும் இருந்தது... நிறைய கோழிகள், வைக்கோல், புல்லுக்கட்டு என்று நான் இதுவரை பொங்கல் வாழ்த்து அட்டையில் மட்டுமே பார்த்த அல்லது மக்களைப் பெற்ற மகராசி, பழனி போன்ற திரைப்படங்களில் பார்த்தது போல ஒரு அச்சு அசல் கிராமமாய் ஒளிந்திருந்தது, அந்த சோலை அழகுபுரம் பகுதியில். எதிரில் பாவாடைக்காரியாய் ஒரு புறம் மாரியம்மனும், அதன் மறுபுறம் வினாயகரும்...சின்ன கோயில்களில் கோலாச்சி அருள் பாலித்து வந்தனர் எனலாம்... நாங்கள் அங்கு போன பிறகு பொங்கலுக்கும், வருஷபிறப்புக்கும், புதுசு உடுத்த ஆரம்பித்தாள் ஆத்தா... இங்கு தான் கோலங்களும், மணக்கும் சானியின் வாசமும், தெருவை அடைத்துப் போட்ட கோலங்களில் உருளும் தேர்ச்சக்கரங்களும் காலை நேரத்தின் பூபாள சுவரங்கள் ஆனது.

எங்கள் வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளியிருந்த ஒரு குடும்பத்தில் வயது வந்து படிக்காமல் அல்லது படித்து முடித்த அல்லது படித்து நிறுத்தி வீட்டிலிருக்கும் தேவகி வந்தாள், முதலில் அம்மாவிடம் சகஜமாக பழக ஆரம்பித்தவள், என் அப்பாவிடமும் எங்களிடமும் ஒட்டிக் கொண்டாள், அவள் தொட்டு அவள் குடும்பமும் எங்களுக்குள் வந்தது... இரண்டாவது பெண்ணை பற்றி பிறகு பேசலாம்... தேவகி தான் எங்கள் அம்மாவை வளைத்து நெளித்து போட்ட கோலங்களில் சிக்க வைத்தவள்... முக வசீகரம் இல்லை என்றாலும், அவளின் விரல்களும், வாயும் வித்தை தெரிந்தவைகள்... சமையலா, கோலமா, கூடை பின்னுதல், சொட்டாங்கல் என்று என் அம்மாவிற்கு தெரியாத வித்தைகளை அறிமுகப்படுத்தினாள். அன்றிலிருந்து ஆரம்பித்தது... மார்கழி முதல் நாள் தொடங்கி... பொங்கல் வரை தொடரும் விதவிதமான் கோலங்கள்... வண்ணப்பொடிகள் சரியான கலவைகளில் கலந்து புதுப்புது வண்ணங்களை உண்டாக்குவாள்... எங்கேயோ வேர் விட்டு இங்கே பூத்திருக்கும் சானிப்பிள்ளையாரில் பூசனிப்பூ அல்லது செம்பருத்தி...

மார்கழி புதிதாய் இருக்கும் எப்போதும்... இவளுக்கு திருமணமாகிப் போனவுடன்... அதே மாதிரி... வீட்டிலிருக்கும் பொம்மி வந்தாள்... ஒரு விளக்கு, இரு சுடர் விழி விளக்கு... எல்லா மாதங்களும் மார்கழியானது... எந்த பத்தியை படித்தாலும் அது சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை விடுத்து, தனக்கு பிடித்த கொப்பில் உட்கார்ந்து கொள்ளும் குரங்கு மனசு...காமராஜ்... நீங்கள் சொல்ல வந்திருக்கும் விஷயத்தை விட்டு எங்கெங்கோ போயிட்டேன் நான், மிக முக்கிய காரணம்... பத்தியின் முகப்பில் இருக்கும் அந்த கோலம் போடும் பெண்...

அருமையாய் இருந்தது... வெளக்கமாறு செய்பவர்களின் வாழ்க்கையும், அடுப்பும் எப்படி துடைத்து வைத்த மாதிரி இருக்கிறது என்று புரிகிறது... எல்லா நாடோடிகளுக்கும் இது போன்று தான் வாழ்க்கை காமராஜ்... உருளும் கல்...

அன்புடன்
ராகவன்

ஈரோடு கதிர் said...

கடைசி மூன்று வரிகள் யதார்த்தத்தை பொளேன்று அறைகிறது

வினோ said...

/ இந்த ரம்மியங்கள் யாவும் சிதைந்து போகாமல் வீடு திரும்பவேண்டுமென்றால் அந்த காட்சியைப்பார்க்காமல் திரும்ப வரவேண்டும். /

உண்மை தான்...

கடைசி வரிகள் அருமை...

க.பாலாசி said...

யதார்த்தமும், கவித்தன்மையும் பந்திப்போட்டு பறிமாறும் வல்லமை உங்கள் கைகளுக்கு இருக்கிறது. இந்த அதிகாலைதான் கீரைக்கட்டு சுமப்பவளின் அடையாளத்தையும் காட்டுகிறது.

க.பாலாசி said...

//அவர்கள் அருகில் குவிந்துகிடக்கும் துடைப்பங் களின் அளவில் தெரியும் தொலைந்து போன அவர்களின் ராத்தூக்கம். எந்திரகதியில் சுழலும் கைகளுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டிருந்தது அவர்களின் கைப்பேசியில் ஒலித்த சினிமாப்பாடல்.//

அதுதான் அவர்களுக்கு ரம்யமான நேரம்.

Sethu said...

நாம சுவாசிக்கிற காற்று கூட மத்தவங்க கைபடாம கிடக்கும் ஒரு மாசற்ற காற்றாக கிடைக்க நினைக்கும் நண்பரே! உங்க விடியற்காலை நடை பயணம் இவ்வளவு சுவராசியமனதா! அனுபவிங்க ராசா அனுபவிங்க.

ராகவன் பின்னூட்டம் பார்த்து எனக்கு தோன்றுவது,
---
விடியற்காலை அனுபவங்களே சூப்பர். அதுவும் மார்கழி மாசக் குளிரில் வாசல் பக்கம் வந்தா, பக்கத்து வீட்டு கோலம் பார்த்தே அடுத்த நாளுக்கு திட்டமிடும் அம்மா, சாணி மேல் வைக்க கிடைக்குமா ஊமத்தம்பூனு யோசிக்கும் ஊர் சனம், ஊர் சுற்றி வரும் பஜனையில் தொடக்கத்தில் சேர்ந்து கொள்ளனும்னு நினைக்கும் அப்பா, பஜனை முடிந்து வரும் சிறு தொன்னையில் கொண்டு வரும் பொங்கல் சர்க்கரைப் பொங்கலா அல்லது வெண்பொங்கல் தானா என்று யோசிக்கும் நாங்கள். எல்லாமே ஒரு அழகு தான்.

ஹேமா said...

ஒரு குளிர்மையான இதமான காலைப்பொழுது.அனுபவித்து எவ்வளவோ காலமாச்சு.உங்கள் எழுத்து மீண்டும் நினைவில் சில்லிட வைத்தது.நன்றி.

சுந்தர்ஜி said...

இருளா ஒளியா எனப் புலப்படாது- இயக்கமத்தனையும் உறைந்துபோனதாய்த் தோற்றம் தரும் அந்த ப்ரம்மமுகூர்த்த வேளையச் சொன்ன அழகு காலத்தைப் பின்னோக்கி விரையச் செய்து என்னைச் சிறுவனாக்கி என் கிராமத்து நதிக்கரையில் மார்கழிக்குளிரில் நடுங்கியபடியே பருக வைத்தது.அபாரம் காமராஜ். இத்தனை நாள் இழந்துவிட்டேன்.இனி அடிக்கடி வாசிக்க வருவேன்.

உயிரோடை said...

நல்ல பகிர்வு.