30.11.10

இடைக்காலபண்டிகைகள்.

ஒரு மாதமாகவே விருதுநகர் மாவட்டம் ஒரு இடைக்கால பண்டிகைக்கு தயாராகிக்கொண்டிருந்தது.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலங்குலம் அருகே நமது மதிப்பிற்குறிய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின்
ஊருக்கு அருகே உள்ள கீழாண்மறைநாடு.அங்கே சமத்துவபுரத்தை திறந்துவைத்து,சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.குண்டும் குழியுமாக கிடந்த குறுகலான சாலைகள் துரித கதியில் தன்னாலே அகன்று கொண்டன.இருமருங்கும் அடர்ந்துகிடந்த வேலிச்செடிகள் வெட்டப்பட்டன.சாத்தூரிலிருந்து ஏழாயிரம்பண்ணை வரை குறுக்கோடிக்கிடந்த சுமார் முப்பது வேகத்தடைகள் அகற்றப்பட்டன.இப்போது அந்தச்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் போவது அவ்வளவு சுகமானதாக மாறிவிட்டது.

எல்லாம் துணை முதல்வரின் வருகை செய்த புண்ணியம்.மார்த்தாண்டத்திலிருந்தும் திருச்சியிலிருந்தும் கொண்டுவரப்பட்ட இரும்பு அலங்கார வளைவுகளில் செம்மொழித்தமிழ் கம்பளம் விரித்திருந்தது.தென்படுகிற சுவர்களெல்லாம் வருக வருக வாசகங்கள். இடைவிடாமல் இருமருங்கும் கட்சிக்கொடிகள் நட்டப்பட்டு கண்ணைப்பறித்தது.ஊர் ஊருக்கு கட்சி கிளைச்செயலாளர்கள் பம்பரமாய்ச்சுழன்று வாகனம் ஏற்பாடு செய்து,சுய உதவிக்குழுக்களோடு கலந்துபேசி ஆள் திரட்டினார்கள்.

இந்த உழைப்பின் பலன் 29 ஆம் தேதி காலையிலிருந்தே கிராமங்கள் நகரங்கள் வித்தியாசமில்லாமல் ஆணும் பெண்ணும் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சலைக்கு வரத்தொடங்கினார்கள்.எல்லாப்பாதைகளும் ஏழாயிரம்பண்ணை சாலையை நோக்கி. எங்கு பார்த்தாலும் எம் தாய் தங்கைகளின் தலைகள்.மக்கள் ஜனநாயக்கப்புரட்சி ஒன்று வருமா அதை நம் வாழ்நாளில் பார்த்துவிட முடியுமா என்கிற ஏக்கத்தை இதைப் பார்ப்பதன் மூலம் கற்பனை தனித்துக் கொள்ளலாம். அப்படியொரு மனித திரள்.அந்த காலை ஒண்பது மணி இரண்டு சக்கர நான்கு சக்கர பரபரப்பை தூக்கி விழுங்கிக்கொண்டு தார்ச்சாலைகள் முழுக்க மனிதப் பாதங்கள்.சாத்தூர் சின்னப்பர் குருசடியிலிருந்து தெற்கே கிருஷ்ணன் கோயில் நிறுத்தம் வரை இரண்டரை அல்லது மூன்று கிலோ மீட்டர் இருக்கும். அதை  இருசக்கர வாகனத்தில் கடக்க பதினைந்து நிமிடங்கள் ஆனது.

என்னோடு கூட ஒரு அண்ணாதிமுக அனுதாபி வந்தார் அமீர்பாளையம் நிறுத்தத்தில் குறைந்தது முந்நூறு பேர்,அதே போல சடையம்பட்டியிலும். இதைப்பார்த்து கடுப்பாகிப்போன அவர் சொன்னார் மேட்டுப்பட்டியில் இவ்வளவு மக்கள் இருக்கமாட்டார்கள் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அங்கிருக்கும் மக்கள் உயர்ந்த ஜாதிக்காரர்களும் இன்னொன்று அதிமுகவின் ஸ்திரமான கட்சிமக்களும் சமீபத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டரும் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.அங்கு காத்திருந்த மனித வெள்ளத்தைப் பார்த்ததும் 'அடப்பாவிகளா என்ன மாயஞ்செஞ்சீங்கடா' என்று கத்தி விட்டார்.இதே நிலைமைதான் பதினாறு பேருந்து நிறுத்தங்களிலும்.

9 comments:

Chitra said...

சாத்தூர் - ஏழாயிரம்பண்ணை - நாங்கள் ஊரு பக்கம் வரும் போது தவறாமல் செல்லும் ஊர்கள். :-)

வானம்பாடிகள் said...

ஒரே மாயந்தான்:)

வினோ said...

இன்னும் இப்படி நிறைய நாடக்குமில்ல ரெண்டு மூன்று மாதத்திற்கு...

Sethu said...

என்ன கொடுமை பார்த்தீங்களா! யாரவது ஒரு ஆளுங்கட்சி தலைவர் வந்தால் தான் நல்ல ரோடு கிடைக்கும்னு அந்த காலத்திலிருந்து தொன்று தொட்டு தவறாமல் கடைபிடிக்கும் ஒரு கோட்பாடு. இப்ப ஆளுங்களையும் சேர்த்து இறக்குமதியா!

யாராவது போய் ஜனாதிபதி, பிரதமரையும் கூப்பிடுங்க. இன்னும் கொஞ்சம் பயனாவது கிடைக்கும். தண்ணி தொட்டியாவது திறந்து வைக்க பெரிய ஆளுங்கள கட்சி வித்யாசம் பார்க்காம கூப்பிடுங்க.

விந்தைமனிதன் said...

தலைப்பில இருக்குதோ சூட்சுமம்?!!!!

ஹரிஹரன் said...

இது போன்ற திருவிழாக்களில் தான் வட்டத்தலைவர்கள் தங்களின் ‘வாழ்த்துத்திறன்’களை வெளிப்படுத்தமுடியும். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தான்.

நான் ஆகஸ்ட் மாதத்தில் சங்கரன்கோவில் சென்றிருந்தபோது அங்கெ துணௌமுதல்வர் வருகை ஓரிரு நாட்களில் கடைவீதிகளில் ஒரு அடிக்கு ஒஅரு பிள்க்ஸ் என்ற விகிதத்தில் நகரெமே போர்டுகளாக புகழ்பாடும் புலவர்களாக விள்ங்கியது.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்லாயிருக்கு இந்த பதிவு... காமராஜ்... அரசியல் பார்வை. ஆனால் அதுவும் அழகாக... காமராஜிற்கு மட்டுமேயான தனிக்கலை.

அன்புடன்
ராகவன்

ஆ.ஞானசேகரன் said...

//இப்போது அந்தச்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் போவது அவ்வளவு சுகமானதாக மாறிவிட்டது.
//

எங்கள் ஊரிலும் அப்படிதான்... சாலைகள் மழையில் பல்லிக்க ஆரம்பித்துவிட்டன.....

ஆ.ஞானசேகரன் said...

தலைப்பு அருமை