14.11.10

நோக்கியா,கோயம்முத்தூர்,மற்றும் அங்காடித்தெருக்கள்.

அன்று மூவரும் பேசிக்கொண்டிருந்த போது அண்ணன் சோலைமாணிக்கம் இது பற்றி பதைபதைக்கச்சொல்லிக்கொண்டிருந்தார்.தோழன் மாது இது இப்பதா உங்களுக்குத்தெரியுமா என்று கேட்டான்.கூடவே மேலும் பல தகவல்களைச் சொன்னான்.கைப்பேசி உபகரணத்தின் மதர் போடு எந்திரத்துக்குள் விழுந்து விட அதற்குள் தலையை விட்டு எடுக்கப்போன அம்பிகா இறந்து போனாள்.எந்திரச் சிங்கத்தின் வாய்க்குள் தலையை நுழைத்திருக்கிறாள்.இது சாதாரணமாக நிகழக்கூடியதுதான் எனினும் கட்டுப்பாட்டை இழந்த எந்திரம் சக ஊழியர்களின் கண்முன்னே தலையைத்துண்டாக்கியிருக்கிறது.கழுத்தை நெருக்கிக்கொண்டிருந்த  எந்திரத்தினை உடைத்து அம்பிகாவின் உயிரைக் காப்பாற்றத் துடித்திருக்கிறார்கள் அவர்கள்.அந்த மனிதாபிமானிகளின் கோரிக்கை ஈனக்குரலாகிப் போனதாம்,எந்திரத்தின் விலையைச்சொல்லிய அதிகாரியின் சிம்மக்குரலால்.

இந்த தகவல் சொல்லும்போதும் கேட்கும்போதும் உடல் பதை பதைக்கிறது.உடனிருந்த தோழர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்கிற கற்பனை மரணத்தைவிடக் கொடூரமானதாக இருக்கிறது. அந்தக்கொடூரம்தான் தொழில் நுட்பம்,லாபம்,போட்டி என்கிற பெயரில் தேசியமயமாக்கப்பட்டு வருகிறது.இது இந்த காலத்தின்  மிகப்பெரிய அவலம்.பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சமாளிக்கத்தான் பிறப்பெடுத்து வந்ததாக அறிமுகப்படுத்தப்படும் பன்னாட்டு நிறுவனங்கள். அது குளிரூட்டப்பட்டு கணினி மயமாக்கப்பட்ட கொட்டடி என்பதை கையில் கிடைக்கிற காகிதங்கள் மறக்கடித்துவிடுகின்றன.ஒரு கணினி அறைக்கும் இன்னொரு கணினி அறைக்கும் இடையில் இருக்கும் தடுப்புச்சுவர் தனக்கு மிக அருகில் உட்கார்ந்திருக்கும் மனிதன் யார் என்பதை மறைக்கிற பார்க்காமைச்சுவர்.அருகிலிருக்கும் சக ஊழியனுக்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது எனத்தெரியாமல் உலக அரசியல் உலக இலக்கியத்துக்குள் கால் நனைத்து என்ன ஆகிவிடப்போகிறது ?.

இதைவிட மோசம் கார்,செல்போன்,ரசாயன உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும்  சீருடை அனிந்த பண்ணையடிமைகளின் நிலைமை.ஒவ்வொன்றாகப் பட்டியலிட அவசியமில்லை நீங்கள் அங்காடித் தெருவைப் பார்த்திருந்தால்.மதுரை போத்தீஸ் ஜவுளி நிறுவணத்தின் ஊழியர்கள் ரெண்டு பேர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த மாசம் இருவத்தி அஞ்சுநாள் வேலை செய்தால் ஒருமாசச் சம்பளமாம் என்றார் ஒருவர். சொன்னவுடன் கேட்டுக்கொண்டிருந்த சிப்பந்தி உற்சாகத்தில் துள்ளிக் குதித்துவிட்டார்.அப்போது நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த அல்வா என் கையிலிருந்தது.அதைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டேன்.ஆனால் அதே நேரத்தில் நிறுவண அதிபரின் பிம்பம் ஊழியர்களின் மனதில் தாறுமாறாக உயர்ந்திருக்கும். அது உண்மையுங்கூட.

ஒப்பீட்டளவில் பார்த்தால் போத்தீஸ் நிறுவணம் ஏனையவற்றைவிட ஒசத்தியாகத் தெரியலாம்.1987 ஆம் ஆண்டு துருக்கியிலிருந்து இந்தியா சுற்றிப்பார்க்க வந்த ஒரு இளைஞனிடம் பேசியபோது அவன் கம்பெனி செலவில் நாடு சுற்றிப்பார்க்க வந்திருக்கிறான் என்று ஆச்சர்யம் அறிந்தேன்.கம்பெனி ஒன்றும் மல்டி நேசனல் கம்பெனியல்ல. சும்மா சாதாரண ரொட்டிக்கடை.12 நாள் தற்செயல் விடுப்பு,மாசம் ஒருநாள் மருத்துவ விடுப்பு,ஈட்டு விடுப்பு,அப்புறம் அரசாங்க விடுப்புகள் என்பதெல்லாம் யாரும் போட்ட பிச்சையுமல்ல,கடவுள் கொடுத்த வரமுமல்ல.உழைக்கிற ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்கவேண்டிய ஜீவாதார உரிமை.

இந்த 2010 ஆம் ஆண்டில் சனி ஞாயிறு லீவுக்கு சம்பளம் கொடுக்கிற மனிதன் கடவுளாக  றுவதற்கும். பண்ணையடிமை காலத்தில் ஆண்டைகள் கொடுத்த இன்னும் கிராமங்களில் கொடுத்துக்கொண்டிருக்கிற பண்டிகைக்கால பரிசுகளுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே அத்தக்கூலி தான் என்று சொன்னால் அவர்களே என்னைத் திட்டலாம். பரந்துகிடக்கிற கிராமங்களில்,சிறு நகரங்களில், வயிற்றுக்காக வாழ்வு கடத்தும் கோடான கோடி ஜனங்களின் வாழ்வு இன்னும் அப்படியே அத்தக்கூலியாகத்தான் தொடர்கிறது. அந்த பண்ணையடிமை சமூகத்திலிருந்து இன்னும் இந்தியா மீண்டு வரமுடியவில்லை என்பதற்கு குளிரூட்டப்பட்டு,எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்ட ஐந்து மாடி விஸ்வரூப உதாரணம் இது.

அதிலிருக்கிற குமுறல்களை ஒன்றிணைத்து சங்கமாக்கி வருகிற சிஐடியு வைப்பற்றி தீக்கதிர் தவிர நீங்கள் வேறு எந்த தினசரி ஊடகத்திலும் படிக்க முடியாது.தமிழகத்தில் மொத்தம் விற்பனையாகிற இருபதினாயிரம் பத்திரிகை,கொஞ்சம் சிற்றிதழ்கள்,அப்புறம் வினவு,மாதவராஜ் ஆகியோரின் பரப்புறைகள் பத்துக்கோடி ஜனங்களுக்கு பத்துமா?.
அப்படியே இருந்தாலும் எந்திரன்,மோகன்ராஜ்,கூட்டணிப் பரபரப்பில் இந்தசெய்தி எடுபடுமா?.

ஹியுண்டாய் கார் கம்பெனி ஊழியனுக்காகப் போராடி கைவிலங்கு மாட்டப்பட்டு ஜெயிலுக்குப்போன எங்கள் தோழர் அ.சவுந்திரராஜன் அந்தக்கம்பெனி ஊழியர் இல்லை.அந்த தொழிலாளிகளின் ஜாதிக்காரரும் இல்லை.அவர்களை முன்னிறுத்தி பேரம் பேசி சூட்கேஸ் வாங்கும் அரசியல் வியாபாரியும் இல்லை.எங்கு கொடுமைம் நடந்தாலும் அது கண்டு ரத்த அழுத்தம் கூடிப்போகிற கூட்டத்தின் தலைவன்.அப்படிப்பட்ட அசல் மனிதர்களை அச்சுறுத்துவதற்காக கொலைகாரர்களுக்கு இணையாக கைவிலங்கு மாட்டி அழைத்துப்போனது தமிழகம். அந்த தகவல் தமிழகத்தின் எத்தனைகோடிப் பேருக்குத்தெரியும்.

ரஜினி காந்தும்,சங்கரும் அந்த பாலைவனப்பகுதிக்கு பிரத்யேக விமானத்திலும் காரிலும் போனதை சாகசமாக்கிக் காட்டிக் கொண்டிருந்தது சன் டீவி.ஐஸ்வர்யாராயோடு நெருங்கி நடிக்கும் போதெல்லாம் அமிதப்பச்சன் 'கபர்தார்' என்று வக்கணம் காட்டியதாக மனசாட்சியை தொலைக்காட்சிகளில் உருக்கினார் ரஜினிகாந்த். இந்த நடிகர்களின் மனசாட்சியெல்லாம் திரையோடும்,திரைத்துறை சார்ந்த பிரபலங்களோடும் தீர்ந்து போய்விடுவதுதான் சோகமும் திசை திருப்பலும் ஆகிறது.அந்த திசை திருப்பல் வேலைகளை விட அசிங்கமானது அன்பிற்கினிய பேச்சாளர்,நாடாளுமன்ற சட்டமன்ற வித்தகர்,பழுத்த காங்கிரஸ்காரர்  ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் அமைதியைக் குழைக்க சதி நடக்கிறது என்று பேசிய பேச்சு.

இந்த அரசு வன்முறையை,அரசாங்கமே வழிய திணிக்கிற கொத்தடிமையை முறையை தொழிற்சங்கங்களைச் சாடுவதன் மூலம் நியாயப்படுத்துகிறார் அவர்.வடக்கே தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தொடங்கிய போதும், பம்பாயில் கப்பற்படை எழுச்சி நடந்த போதும்,தென்கோடியில் வ உ சி தொழிற்சங்கம் ஆரம்பித்த போதும் யார் அமைதி கெட்டுப்போனதோ அவர்களின் அமைதி மீண்டும் கெடுகிறது. கவலைப்படுவது தேசத்தை மீட்டதாகச்சொல்லுகிற அதே காங்கிரஸ் காரர்கள்.இது  விடுதலை இந்தியாவின் மிகப்பெரிய கேலிக்குறிய விசயம்.

பன்னாட்டு நிறுவனங்களில் செய்து வைக்கப்பட்டிருக்கிற பலத்த மௌனத்திற்குப் பெயர்தன் அமைதி என்றால் அது போலவே அமைதி மயானங்களில் மட்டும்தான் கிடைக்கும். ஒருவருக்கொருவர் நல்லது கெட்டதைப் பேசுவதும் அதன்மூலம் சில வரம்பு மீறல்களைக் கண்டறிவதும் மனிதக்கூடத்தின் இயல்பு.அது மனித சுபாவமுள்ள தொழிலாளிகளின் உரிமை.அட்டூழியங்களை எதிர்த்துக் கேட்பது அமைத்திக்குப் பங்கம் என்பது பண்ணையார்கள் உருவாக்கிய உத்தி. அந்த விஷ உத்தியை இன்று வரை கெடாமல் பாதுகாத்து உலகமயத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்ததும் அவர்களே. எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு எஞ்சினிய்யரிங் கல்லூரி இருக்கிறது அங்கு சேட்டை செய்த எம் இ மாணவனை கட்டைக்கம்பால் அடித்து மண்டையை உடைத்திருக்கிறார் ஒரு தாளாளர்.விசாரித்துப் பார்த்ததில் அவர் ஒரு பட்டாசுக்கம்பெனி அதிபர் என்பது தெரிய வந்தது.இன்னும் தோண்டித் துருவி விசாரித்ததில்  அவர் குடும்பம் ஒரு பண்ணையார்க் குடும்பம் என்றும் தெரிந்தது.தனது பாட்டனார் வயக்காட்டிலும்,தனது தந்தை பட்டாசுக் கம்பெனியிலும் செய்ததை அவர் எஞ்சினியரிங் கல்லூரியில் நடைமுறைப்படுத்துகிறார்.

கோயம்பத்தூர் குழந்தைகளின் உயிரைக்குடித்த கயவனை என்கவுண்டரில் கொன்ற அரசுக்கு. அம்பிகாக்களை மெல்ல மெல்லக்கொல்லும் நிறுவணங்களை எச்சரிக்கக்கூடத் திராணியில்லை.இரண்டுமே உயிர்தானே?.
இப்போது 'பராசக்தி' படத்தின் கனல் தெறிக்கும் வசனங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகிறது.
அம்பிகாவின் உயிரைவிட எந்திரத்தின் விலை உயர்ந்தது என்று கணக்குப்போடும் எம்பிஏ படித்தவருக்கும்,எம் இ படிக்கிற மாணவனைக் கட்டக்கம்பால் அடித்து மண்டையுடைத்த தாளாளருக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாச மில்லை.பண்ணையடிமையின் குரூரங்களும் பன்னாட்டுக்கம்பெனிகளின் லாபவெறியும் கைகோர்க்கிற இடம் அது. அதுதான் இனிமேல் வரப்போகும் சந்ததிகள் சந்திக்கவேண்டிய மிகப்பெரும் சவால்.

அதைச்சமாளிக்கிற பொறுப்பு இப்போது இந்தியப்பெண்கள் பக்கம் திரும்புகிறது.சங்கம் அமைக்கும் நடைமுறை களுக்கும்,தொழிற்சங்க உரிமைகளுக்கும்,பயந்து பெரும்பாலும் பெண்களை மட்டுமே பணியமர்த்துகின்றன தனியார் நிறுவணங்கள்.அதன் மூலம் அமைதியயையும் லாபத்தையும் ஒருசேர குவிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிற வர்களின் கணக்குத் தப்பாக ஒரு நாள் எல்லாம் மாறும்.அந்த மாற்றத்தைப் பெண்களே முன்னெடுப்பார்கள்.

15 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

நாம் உணர்சிகளின் அடிமைகளாக இருக்கிற வரை இந்த மாற்றங்கள் வரவே வராது..

வானம்பாடிகள் said...

அவசியம் வரவேண்டிய மாற்றங்கள்தான். ஆனால் செந்தில் சொன்னபடி உணர்ச்சிகரமாக ஓரிரு நாட்கள் மட்டும் பொங்கி மட்டுப்படும் நம்மவர்க்கு இதன் புரிதல் அசாத்தியம். நல்ல கட்டுரை காமராஜ்.

விமலன் said...

வணக்கம் காம்ஸ்,நவீன உலமயத்தில் நாம் உணர்வுகள் கூட வடிவமைக்கப் பட்டுவிட்டதாய் அறிய முடிகிறது.மனித உயிர்கள் மிகவும் மலிவுத் தனமாகிப் போனது.

செ.சரவணக்குமார் said...

அம்பிகா பற்றிய செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது. எந்திரத்தின் விலை அதிகம் என்பதற்காக கண்ணெதிரே ஒரு உயிர் பறிபோவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க இவர்களால் முடிகிறதே?

மனம் பதறுகிறது காமு அண்ணா.

ஹரிஹரன் said...

ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் நாட்டில் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க தனியார் ஆலையும் அரசும் அங்கீகரிக்க மறுக்கிறது.

ஆனால் தினமும் பேப்பரை பார்த்தால் CII, FICCI எங்காவது மீட்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பொதுப்புத்தியில் முதலாளிகள் சங்கம் அமைத்தால் அது தொழில் வளர்ச்சிக்காகவும் என்றும் தொழிலாளிகள் சங்கம் அமைத்தால் தொழில் அமைதி கெடும் என்றும் பரவிக்கிடக்கிறது.

எந்த ஒரு கோரிக்கை இல்லாமல் அரசு முதலாளிகளின் லாபத்திற்கு உத்திரவாதம் அளிக்க சட்டம் போடுகிறது, 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகைகள் வழங்கியதை எந்த மீடியாவும் மக்களுக்குச் சொல்லவில்லை, சாய்நாத் அவர்களின் கட்டுரை ‘ஹிந்து’ பிரசுரிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.

மொத்தத்தில் தொழிலாளி வர்க்கம் சாதியால், மதத்தால், வாங்குகிற சம்பளம் அடிப்படையிலும், அரசுத்துறை/தனியார் துறை என்று பிளவு பட்டிருக்கிறது, ஒருவரின் வேலைக்கலாச்சாரம் சரியில்லை என்று மற்றவர் கூறவே நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.

மக்கல் எளிதில் உணர்ச்சிவசப் படுத்த செய்யும் மீடியாக்களின் முயற்சி வெற்றியடைகிறது. என்னத்த சொல்ல....

Sethu said...

நன்கு அழகாக எடுத்து சொல்லியிருக்கீர்கள். அடிமட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் ஒரே அமைப்பு தொழிற்சங்கங்கள் தான் என்று மக்கள் உணரும் வரை, இது மாதிரி எடுத்துச் சொல்லி தான் ஆக வேண்டும். ஒரு வலிமையான சங்கம் உள்ள இடத்தில் அம்பிகா போன்றவர்களை இழக்க வேண்டிய நேரம் வராது.

கையில் அலைபேசியுடன் பைக்இல் உல்லாசப் பயணம் செல்லும் எண்ணம் உடைய மனிதர்களுக்கு புரிதலுக்கு நேரமாகும்.

காமராஜ் said...

அன்பின் செந்தில் வணக்கம்.
நேற்று நீயா நானா விவாதத்தில் லஞ்சம் பேசப்பட்டது.பேசப்பட்டதைவிட நியாயப்படுத்தப்பட்டது என்பதுதான் பெரும்பாண்மை பங்கேற்பாளர்களின் கருத்தாக உணர்ந்தேன்.ஒரு பேச்சுக்கு கூட அதை அங்கீகரிக்கக்கூடது என்கிற தார்மீக கோபம் குறைந்து போன ஜனங்களின் நாடு இது.
கோபப்படுகிற உங்களைப்போல நபர்கள், ஒற்றையாய் நம்பிக்கை வெளிச்சத்தை விதைக்கிறீர்கள்.
வெளிச்சம் பரவும்.

காமராஜ் said...

பாலாண்ணா.
நன்றி.
இந்த கட்டுரைக்கு கொடுக்கிற பெரும் அந்தஸ்தாக உங்களின் பின்னூட்டம்.தயங்கி தயங்கி பதிவிட்டேன்.கொஞ்சம் தெம்பு வந்துவிட்டது.

காமராஜ் said...

நன்றி மூர்த்தி.
மிகச்சரியாகச்சொன்னீர்கள்.

காமராஜ் said...

அன்பின் சரவணன் கருத்துக்கு ரொம்ப நன்றி.

காமராஜ் said...

நன்றி தோழர் ஹரிகரன்.

காமராஜ் said...

நன்றி சேதுசார்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ரொம்ப அருமையான பதிவு காமராஜ்... இது... என்னுடைய இந்த பின்னூட்டத்தில் நான் குறிப்பிடப்போவது ஒரு பகுதி மட்டுமே...தொழிற்சாலை சட்டத்தில் இருக்கும் அத்தனை ஷரத்துக்களையும் முழுமையாய் கடைபிடிக்கும் தொழிற்சாலைகளில் விபத்துக்கள் குறைய அனேக வாய்ப்புகள் உண்டு... அதே போல்... பணியிலிருப்பவர்களுக்கும் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் நிறையவே உண்டு... பாதுகாப்பு சாதனங்கள் (PERSONAL PROTECTIVE EQUIPMENTS) என்பது ஒரு last resort ன்னு சொல்வாங்க... அதனால் எல்லா இயந்திரங்களும் பெரும்பாலும், பாதுகாப்புக்காக சில கவசங்கள், தடைகள், இருபொருள் இயக்குவிசை என்று பல மாதிரி முயல்கின்றன. அதையும் மீறி விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறது என்றால், அது பணிபுரிபவர்களின் அசட்டைத்தனமும், அறியாமையும் தான்... அசட்டைத்தனம் அல்லது மேம்போக்குத்தனம் மட்டுமே காரணம் என்றால் சிலசமயம் நிர்வாகத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யமுடியாமல் போய்விடுகிறது. இயந்திரத்தை உடைத்து காப்பாற்றுவதை மறுத்த அதிகாரி பற்றி எனக்கு சரியாய் தெரியவில்லை... அப்படி நடக்க வாய்ப்பில்லை... உடைத்தால் காப்பாற்ற முடிந்திருக்குமா என்பது தவறு, மற்றும் உடனிருந்தவர்கள் உயிரை காப்பாற்ற நினைத்தால் கட்டுப்பாட்டு விசையை அனைத்திருக்கலாமே... இதற்கெல்லாம் தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்திருக்க தவறியவர்கள் இது போல நிர்வாகத்தையோ, இயந்திரத்தையோ அல்லது அதிகாரிகளையோ குற்றம் கூறுவது எந்தவிதத்திலும் பிரயோஜனமில்லை என்றே தோன்றுகிறது... கட்டுப்பாட்டை இழந்திருக்குமா அந்த இயந்திரம் என்றால் அதுவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது... இது சரியான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததன் விளைவே... இதற்கு போதுமான பயிற்சி வேண்டும்.... Psycho Motor Training …போல பயற்சிகள், தொடர்ந்து கொடுக்கப்படவேண்டும்...

போதிய பயிற்சி அளிக்காததும் போதிய கட்டுப்பாட்டு முறைகள் இல்லாததும், பணிபுரிபவர்களின் அசட்டைத்தனங்களும் தான் நிறைய விபத்துக்களுக்கு காரணம்.... அவசரகால பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால்... ஒரு தீ விபத்து நடக்கும் இடத்தில் தீயினால் இறப்பதை விட, நெரிசலிலும், கீழே விழுந்து மிதிபடுவதிலும் தான் அதிகம் இறக்கிறார்கள்... ஒரு பதட்ட நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அடிக்கடி பயிற்சி நடக்க வேண்டும்... ஒரு இயந்திரம் போல செயல்படவேண்டும்...

இயந்திர பராமரிப்பும் அவசியம்... Preventive Maintenance போன்ற விஷயங்கள் இது போன்ற பெரிய கம்பெனிகளில் அவசியம் இருக்கும், அதனால் இயந்திர பழுது ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமில்லை... 5S, SIX SIGMA, LEAN MANAGEMENT என்று நிறுவனங்கள் போய்க் கொண்டிருக்கும்போது இது போன்ற விபத்துக்கள் நேர்வதற்கு காரணம் போதிய பயிற்சியின்மையும், அதிக வேலைப்பளுவும், அதனால் ஏற்படும் fatique ம் முக்கிய காரணிகள்..

உதாரணத்திற்கு இயந்திரம் இயங்கிக் கொண்டு இருக்கும்போது யாரும் கையை விடக்கூடாது, கவசத் தடுப்பை நீக்கக்கூடாது என்று எச்சரிக்கை இருந்தாலும், அல்லது போதிய பயிற்சி இருந்தாலும் சில பேர் அதை செய்வதுண்டு... அதற்கும் மனோதத்துவ முறைப்படி அவர்களுக்கு செஷன்ஸ் நடத்தவேண்டும்... கவனமின்மைக்கு பெரும்பாலும் குடும்ப சூழலும், தன் சொந்த காரணங்களும், வேலைச்சூழலும் காரணமாய் இருக்கலாம்... வேர்கள் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்... அதைவிட்டால் வேறு வழியில்லை... தொழிலாளர்களுக்கும், ஏன் நிர்வாகத்திற்கும்...

விபத்தினால் இழப்பு ஏற்பட்ட பிறகு நஷ்ட ஈடு கொடுக்கப்படவில்லை என்றாலோ அல்லது.... சரியான மருத்துவ வசதி கொடுக்கப்படவில்லை என்றாலோ... அல்லது போதுமான பயிற்சிகள் அளிக்காதிருந்தாலோ அல்லது நிர்வாகம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத பட்சத்திலோ அந்த நிர்வாகத்திற்கு தொழிற்சாலை நடத்த எந்தவித உரிமையும் இல்லை என்று தொழிற்சாலை சட்டம் சொல்கிறது. உங்கள் பத்தியில் பிரச்னை எந்தமாதிரி இயந்திரம், என்ன செய்கிற இயந்திரம் என்பது பற்றி போதிய விபரங்கள் இல்லை... இது போன்ற செவி வழி செய்திகள் நம்மை பாதிக்கும் தான் ஆனால்... எங்கு தவறு என்று தெரிந்து அது களையப்பட வேண்டும் என்பதும் முக்கியம் இனி இது போல விபத்துகள் நடக்காமல் தடுக்க...

சோலை மாணிக்கம் அண்ணனை பார்க்க ஆவல் கூடுகிறது...

அன்புடன்
ராகவன்

சுந்தர்ஜி said...

உணர்வுப்பூர்வமான கட்டுரை காமராஜ்.

நமது மொத்த பலவீனமே நமது நாட்டின் பரப்பளவுதான்.மிகப் பெரிய நாடும் அதற்கேற்ப பொறுப்புணர்ச்சி இல்லாத மக்கள்தொகையும் தொலைநோக்குப்பார்வையில்லாத் தலைவர்களும்தான் நம் எல்லா இன்னல்களுக்கும் காரணம்.

ஒரு பிரச்சனை எப்படித் தொடங்கும் எப்படி முடிக்கவேண்டும் என்ற விவேகம் இல்லாமல் தொடங்கியபின் அதற்குப் போராடும் தலைவர்களைக் கொண்டுதான் எல்லாக் கட்சிகளும் இருக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தெருவில் வந்து போராடும் எந்தக் கட்சி 60களிலும் 70களிலும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பொறுப்போடு நடந்துகொண்டது?நமக்கு பரபரப்பான மக்களைக் கவரக்கூடிய விவாதங்களும் பிரச்சனைகளும் போதும்.

வினோபா பாவே கொண்டு வந்த நில உச்சவரம்புச்சட்டம் ஏன் எடுத்துச் செல்லப்படவில்லை?இன்றைய நகரமயமாதலுக்கு அது பெரும் தீர்வாய் இருந்திருக்குமே?

வயல்களுக்கு பேக்டம்பாஸையும் எண்டோசல்பானையும் பயன்படுத்த நிறுவனங்கள் 70களில் தெருமுனைப் பிரச்சாரங்கள் சினிமாக்கள் காட்டி மக்களை முட்டாளாக்கி விளைநிலங்களை குட்டிச்சுவராக்கிச் சென்ற பின் இன்றைக்கு ஆர்கானிக் காய்கறிகளைப் பற்றிப் பேசுகிறோம்?ஏன் எந்தக் கட்சியும் அது பற்றி அப்போது குரலெழுப்பவில்லை?

கோக்கும் பெப்சியும் எல்லா வளங்களையும் சுரண்டிப்போன பின்பும் ப்ளாஸ்டிக் உபயோகத்தால் வரும் நாசங்களையும் பற்றிச் சொல்ல எல்லாம் தலைக்கு மேல் போனபின்புதான் விஞ்ஞானிகளுக்கும் தலைவர்களுக்கும் தெரிகிறது.

இந்த நாட்டின் கல்வி நமக்கு எந்த விதத்திலும் உதவாத நாடுகளுக்கு மருத்துவர்கள் மூலமோ பொறியாளர்கள் மூலமோ கணீணீ வல்லுநர்கள் மூலமோ கடத்தப்பட்டு அந்த நாடும் அந்தக் குடும்பங்களும் வளர உதவுகிறது.

போதும் காமராஜ்.ரத்தம் சூடேறுகிறது.பட்டுத்தெரிந்து கொள்ளும் நாடும் அதன் தலைவர்களும் மோசமான போராளிகளும்.

இப்போதைய நம் தேவை ஒன்று திரண்டு தேர்தல்களைப் புறக்கணித்து இயக்கத்தை வழிநடத்தும் அறிவாளிகளை இந்திய அளவில் ஒருங்கிணைத்து சட்டம் கல்வி விவசாயம் நிர்வாகம் வெளிவிவகாரம் போன்றவற்றில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டுவரும் வரை போராடுவதுதான்.

இந்தப் போராட்டத்துக்கு விலை மிக அதிகம். எத்தனை பேர் இதற்கு யோசிக்காமல் விலை கொடுக்கத் தயார்?