21.11.10

பேருந்து நிலையத்தின் புகைப்படம்

ரெண்டு வாயில்கள் உள்ள அந்த பேருந்து நிலையத்தின் நுழைவாயில் எப்போதும் சிறுநீர் வாடை காரமாக நெடிக்கும்.அங்கிங்கெனாதபடி செத்துப்போன சித்தப்பு வுக்கு நினவஞ்சலி சுவரொட்டி இருக்கும்.அங்கு ஒதுங்குகிறவர்களை அருவெறுப்புடன் பார்த்த நானே ஒரு மழைநாளில் ஒதுங்கி குனிந்து கொண்டே திரும்பி வந்தேன்.ரெண்டே ரெண்டு சைக்கிள் ரிக்ஷா இருக்கும்.ஒரு நாள் கூட யாரும் அதில் ஏறிப்பயணம் செய்த காட்சி எனக்கு நினைவுக்கு வரவே இல்லை.ஆனால் அவர்களைக்கடக்கும் போதெல்லாம் குளிர்காலத்தில் கொசுக்களை விரட்ட போடும் புகை மூட்ட வாசனை வரும்.

அதைக்கடந்து போனால் பூவிற்கிற பெண்.ஒரு நாளும் அவர் தலையில் பூவிருந்து பார்த்ததில்லை.ஒரு ஆரு மாதத்தில் பரிச்சயமாகிப்போனபின் 'பூ வாங்கிட்டுபோங்க சார்' சொல்வார்.யாருக்கு வாங்கிட்டுப்போக என்று கேட்டால்.கல்யாணமாகியிருந்தா வீட்டுக்கரம்மாவுக்கு,இல்லாட்டசாமிக்கு என்று சொல்லுவார்.முதலாவது பழக்கமில்லை ரெண்டாவது நம்பிக்கை யில்லை என்று சொன்னால்.'இந்தக்காலத்துலயும் இப்பிடியா ?எங்க வீட்டு அண்ணாச்சி காத்தியல் ஒண்ணாந்தேதி போட்ற மாலையை தைப்பொங்கல் கறிநாளாண்ணிக்குத் தான் கழட்டுவார்'.என்று சொல்லும்.பலநாள் சிரித்த படியே கடந்து போகலாம்.

அதைத்தாண்டி வேப்ப மரத்துக்கடியில் ஒரு வெள்ளை பேண்ட், வெள்ளைச் சட்டை போட்ட வெளிமாநிலத்துக்காரன் உட்கார்ந்திருப்பான். ஒரே ஒரு சூட்கேஸும் ஒரு மரப்பலகையும் கொண்டு வருவான். விரித்து வைத்து,ஒரு ஒலிபெருக்கியையும் டேப் ரிக்கர்டரையும் இணைப்பான்.பத்தி பொருத்தி வைத்து ஒலிபெருக்கியை உசுப்பி விடுவான். அதிர்ஷ்டக்கல் மோதிரம்.அதை வாங்கி உபயோகித்தால் உண்டாகும் நண்மை களைப் பட்டியல் இடும் ஒலி பெருக்கி. மனக்கஷ்டம், பணக்கஷ்டம், வியாபாரத்தில் நஷ்டம்,மாமியார் மருமகள் சண்டை,கணவன் மனைவி பிணக்கு,சந்தேகம்,பில்லி சூனியம், இல்லற இன்பம் என அந்த சிவகாசிப் பேருந்து நிலையத்துக்கு வந்து போகும் அத்தனை பேரின் புகாருக்கும் ஒரே கல்லில் தீர்விருப்பதாகச் சொல்லும்.

அந்த அதிர்ச்சியைத் தாங்கி நின்றால் அடுத்த இடியை இறக்கும். வாங்கி கொண்டுபோய் இரண்டு வாரத்தில் பலனில்லையென்றால் பணம் வாபஸ் பண்ணப்படுமாம். அப்படிச்சொல்லிவிட்டு மராட்டிய மாநிலத்தின் ஒரு குக்கிராமத்து பேர், பின்கோடோ டு விலாசமும் சொல்லும்.கல்லின் விலை எவ்வளவு தெரியுமா?, வெறும் பத்து ரூபாய்.'இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சியை சிவாகாசித் தொகுதியில் ஜெயிக்கவைக்கணும் அதற்கு இந்தகல்லை வைத்து ஏதாவது செய்ய முடியுமா' என்று கேட்டார் ஒரு குறும்புக்கார பக்தர். முறைத்துவிட்டு தலை கவிழ்ந்து கொள்வான்.உள்ளே நுழைகிற சஞ்சல முகத்துக் காரர்களை எல்லாம் அளந்து, அழைப்பான்.எப்போதாவது வரும் ஒரு கிராமத்து மனிதரை எதிர்பார்த்து தனது தேநீர் தாகத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே  இருப்பான்.

அங்கிருந்து கொஞ்சம் தள்ளி ஏட்டு கண்ணன் நிற்பார்.யாரையும் அதட்டமாட்டார்,என்ன நடந்தாலும் அதிர்ந்து பேச மாட்டார்.மாலை ஐந்து மணி பேருந்துகளில் நெறிபொழியும் கூட்டத்தை நெறிப்படுத்தவும் மாட்டார். அவ்வளவு அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும் அவரை எப்படி அந்த காவல் துறை சகித்துக்கொள்கிறதென்று புரியவில்லை.எனக்குத்தெரிந்த பூசாரியின் மகன் பரமசாது .குங்குமமும், துண்ணுரும் இல்லாமல் குளிக்கக் கூடப்போகமாட்டான்.விதவிதமாய் மீசை வைக்கவேண்டிய கல்லூரி நாட்களில்கூட மழித்துக்கொண்டு திரிந்தவன்.போலீசுக்கு தேர்வான மறுநாளே கிடா மீசை வளர்த்துக்கொண்டான். ஏட்டுக்கண்ணன் போட்டிருக்கிற உடுப்பைத்தவிர போலீசுக்கான அடையாளம் ஏதுமிருக்காது.அப்படிப்பட்ட ஆளிருந்தால் ஜேப்படிக்காரனுக்கு கொண்டாட்டம் தானே?.

வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் அங்கு வரும் அந்த வெளிர்நீள கால்சராய்க்காரனுக்கு கூட்டம் கூடும்நாட்களெல்லாம் கொண்டாட்டம் தான். சாத்தூர்,விருதுநகர்,ஸ்ரீவில்லிப்புத்தூர்,வெம்பக்கோட்டை போன்ற பிரதான வழிகளில் தான் அங்கிருந்து கிளம்புகிற எல்லாப்பேருந்தும் போகும். எல்லாப் பேருந்திலும் ஏறி இறங்கிவிடும் அவனது  வேலை நேரம் இரண்டு மூன்று நிமிடங்களில் முடிந்து போகும்.எதுவும் கிடைக்காத நேரத்தில் ஒதுங்கி ஒரு பீடி பற்றவைத்துக்கொள்வான்,சுபாரி பாக்குப்போட்டு நாற்றம் குறைத்துக் கொள்வான்.பையில் இருக்கும்  சீப்பை எடுத்து தலைவாரிக்கொள்வான்.யாரும் சந்தேகப்படக் கூடாது என்கிற ஜாக்கிரதை.பெரும்பாலும் பெண்களின் பின்னாடி நெருங்குவான்.அவர்கள் கவனத்தை மனிப்பர்சிலிருந்தோ, கைப்பையி லிருந்தோ திருப்புவதற்கு சில்மிஷத்தை நம்புவான்.ஒரு சாமான்யனான எனக்கு அவன் ஜேப்படிக்காரன் என்று தெரிந்திருக்கையில் அவனைக்கண்டுபிடிக்கிற தொழில் புரியும் ஏட்டுக்கண்ணனுக்கு ஏன் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதற்கு யூகங்கள் மட்டுமே பதிலாக இருக்கும்.

ஒரு கையில்லாத கட்டைக்குரல் கிருஷ்ணமூர்த்தியும், அவனது தொடுப்பு அட்டை கொடுத்து பணம் வசூலிக்கும் முக்காட்டுக்காரியும் வருவார்கள்.

(ஒரு நான்கு வருடம் காலையும், மாலையும் படிக்கும் புத்தகமாக இருந்தது.சில நேரம் தரமான திரைப்படம் காண்பிக்கப்படும் திரையரங்கு போலவும் மாறும்.இன்னும் சில நாட்கள் ச்சய் என்ன பொழப்பு என்று உருகி வெறுக்கும் நிகழ்வுகளும் திடும்மென வந்து விழும்.சிவகாசி என்னார் கே ஆர் பேருந்து நிலையம்.)

26 comments:

லெமூரியன்... said...

:) :):)
தினமும் பயணம் செய்யும் பேரூந்து....
தினமும் காத்திருக்கும் பேரூந்து நிறுத்தம்...
அல்லது பேரூந்து நிலையம்..........
இப்படி தினப் படி அவசரத்திலும் இது போல் சில உன்னிப்புகள் நமையரியாமல்
நம்மை இழுத்துச் சென்று விடும்.....
அட்டகாசமான OBSERVATION

அன்புடன் அருணா said...

நான் சாத்தூர் பஸ் நிலையமோன்னு நினைத்தேன்!

ஈரோடு கதிர் said...

||ஏட்டுக்கண்ணனுக்கு ஏன் கண்டு பிடிக்கமுடியவில்லை||

மன்மோகன் சிங்குக்கு ஏன் கண்டு பிடிக்கமுடியவில்லைனு மனசுக்குள்ளே ஒரு குரல் குறும்பா கேக்குது!

ஈரோடு கதிர் said...

எழுத்து பேருந்து நிலையத்தை அப்படியே மனது முழுதும் நிரப்பிவிட்டது!

Amudhavan said...

மிக நல்ல அடர்த்தியான பதிவுகள். மனசில் உள்வாங்கி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
அன்புடன்,
அமுதவன்.

Pradeep said...

Simply Superbbb !!!!!!

வானம்பாடிகள் said...

எழுத்தில் உயிர் பெறுகிறது ஒரு பேருந்து நிலையம். புகைப்படமாகவல்ல. சலனப்படமாக. பின்னே, சொல்லாத ரை, ரை களும், பாப்கார்ன்களும், வாட்டர்பாக்கட் விற்பவன் குரலும் எங்கிருந்தோ வந்து நிரம்புகிறதே:)

செ.சரவணக்குமார் said...

சிவகாசி பஸ் ஸ்டாண்டுக்குள்ள போய்ட்டு வந்த மாதிரி இருந்ததுண்ணே.. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை அப்படியே எழுத்தில் வார்ப்பது உங்களின் தனிச்சிறப்பு காமு அண்ணா.

சமீபத்துல அந்தப் பக்கம் போயிருக்கீங்களா? இன்னுமா அப்படியே இருக்கு?

வினோ said...

/(ஒரு நான்கு வருடம் காலையும், மாலையும் படிக்கும் புத்தகமாக இருந்தது.சில நேரம் தரமான திரைப்படம் காண்பிக்கப்படும் திரையரங்கு போலவும் மாறும்.இன்னும் சில நாட்கள் ச்சய் என்ன பொழப்பு என்று உருகி வெறுக்கும் நிகழ்வுகளும் திடும்மென வந்து விழும்.சிவகாசி என்னார் கே ஆர் பேருந்து நிலையம்.) /

பல முறை நானும் கடந்து போயிருக்கேன்.. என் பார்வை கோணல் இப்படி அமைந்ததில்லை...

சுந்தர்ஜி said...

அற்புதம் காமராஜ். ஒவ்வொருமுறையும் பேருந்துநிலையத்தை கடக்கும் போதும் இனி இந்த மனிதர்களைக் கண்கள் தேடும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

எங்கள் மன்னார்குடி பேருந்து நிலையம் மனக்கண் விரிந்தது ...

நேசமித்ரன் said...

நல்ல அவதானிப்பும் பகிர்வும்

Sethu said...

ஒவ்வொரு பாராவும் ஒரு கதை. நம்மை சுற்றி சுழண்டு வரும் எளிமையான மனிதர்கள். அதையும் கவனித்து விவரிக்கும் உங்க அழகான பாங்கு.

ஆயிரம் மனிதர்கள் அன்றாடும் புழங்கக்கூடிய இடத்தில் சாலை ஓரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவல நிலை.

மதுரை சரவணன் said...

அருமை.. வாழ்த்துக்கள்

Ravi kumar Karunanithi said...

nalla padhivu.. and good bus stand. tamilnadu super'a munneridum

விமலன் said...

நல்ல படப்பிடிப்பு.

க. சீ. சிவக்குமார் said...

அண்ணா!...ஒரு பேருந்து நிலையத்தின் அகப் படம் ’ என்றல்லவா தலைப்பு இருந்திருக்கவேண்டும். சிவா.

காமராஜ் said...

நன்றி

லெமூரியன்,
அருணா,
கதிர்.

காமராஜ் said...

நன்றி

அமுதவன்,
பிரதீப்,
பாலாண்ணா

காமராஜ் said...

நன்றி
சரவணா ஆமாம் அப்டியே தான் இருக்கு )
நன்றி
வினோ.

காமராஜ் said...

வாங்க ஐயா சுந்தர்ஜி.
உங்கள் வருகையும்,பின்னூட்டமும் உற்சாகமாக இருக்கிறது.

காமராஜ் said...

புதிய வருகைக்கு நன்றி ரவிகுமார் கருணாநிதி.

காமராஜ் said...

நன்றி

செந்தில்,
சேதுசார்,
மதுரை சரவணன்

காமராஜ் said...

நன்றி

நேசன்
விமலன்

காமராஜ் said...

ஆஹ்ஹா..
வாங்க அன்புத்தம்பி சிவா.

எப்போது பேருந்து நிலையம் பற்றி யோசித்தாலும்,எழுதினாலும்.
சிவா ஒரு தரம் நினைவிலாடிவிட்டுப்போவீர்கள் தெரியுமா ?
இப்போ வந்து பின்னூட்டமே போட்டுட்டீங்க நன்றி.

க.பாலாசி said...

படிக்கிற கண்களுக்கு அந்த இடத்தை விருந்து வைக்கிற எழுத்து. ஊருக்குப்போகும்போதெல்லாம் மாயவரம் பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு மனிதர்களையும் நோட்டமிடுவேன். ஆனால் இப்படி கோர்த்தெழுததான் தெரியவில்லை...