26.11.10

எது கலாச்சாரம் ?, யார் அதை வடிவமைத்தார் ?

சின்னவயசில் கோழியச்சுற்றுகிற சேவலைப்பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழும் இவை இரண்டும் எப்போது கல்யாணம் பண்னிக்கொண்டன என்று.தாய் பிற ஆடவனுடன் பேசும்போது சேலைத் தலைப்பை பிடித்து இழுத்து வீட்டுக்கு வா என்று அடம்பிடிக்காத குழந்தைகள் இருப்பதில்லை.அது என்ன வகையான பொஷெசிவ் என்று இனம் கண்டு பிடிக்க முடியாது.எழுத்து, சிந்தனை, செயல் எல்லாமே ஆண்வயப்பட்டதாகவே களத்திற்கு வருகிறது. கொஞ்சம் குறைய நிறைய்ய ஆணவத்தோடும் களமிறங்குகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு காதல் பிடிக்கும்.இந்தக் கேள்விக்கு தயங்காமல் 99.99 சதம் ஆதரவுக்குரல் தான் வரும்.எத்தனை தகப்பன்களுக்கு காதலைப்பிடிக்கும்,அதுவும் பெண்ணைப்பெற்ற தகப்பன்களுக்கு?.மௌனம்,திசை திருப்பல் வியாக்கியானம் தான் வரும்.என் சொந்த தாய் மாமன் அவனுக்கு  என்னைவிட ஒரே ஒரு வயது
தான் அதிகம்.கல்லூரிக்காலத்தில் அவன் காதல் பிரசித்தமானது.ஒரு ஐந்துவருடம் ஊரில் அவன் பேச்சுத்தான் பேசப்படும்.அவனைக்காதலித்த பெண்னுக்கு அடி உதை. அப்புறம் பள்ளிக்குடம் கட்.அப்புறம் வீட்டைவிட்டு வெளியே போகும் சுதந்திரம் கட்.எல்லா வேலிகளில் இருந்தும் காதல்  ஒவ்வொரு முறையும் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொடுக்கும். கொடுத்தது.காதலுக்கு ஆதரவான கோஷ்டி,எதிரான கோஷ்டி என ஊர் ரெண்டானது.இறுதியில் அந்தப்பெண்ணின் குடும்பம் ஊரைக்காலி பண்ணிக் கொண்டு  ஒரேயடியாக வெளியூர் போய்விட்டார்கள்.

ஆனல் அது இறுதியல்ல.போன இடத்தில் அவளுக்கு பேய் பிடித்துக்கொண்டது.பிடித்த பேயை விரட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் கொண்டு போனார்கள்.இவனும் போனான்.'கள்ளம்பெருசா,காப்பாம்பெருசா'என்கிற சொலவடை முழுதாகப் புரிந்தது.பிறகு போலீஸ் டேஷன், அவனுக்கு ரிமாண்ட். அத்தோடு முடிந்து போனதென்று அவனும் அவளும் உட்பட ரெண்டு பக்கமும் ஒதுங்கிக் கொண்டார்கள்.ரெண்டு வருடம் கழித்து திடீரென ஒரு நாள்மாலையும் கழுத்துமாக வந்து நின்றார்கள். அலுத்துப்போன பெற்றோர்கள்,அதற்குமேல் ஏதும் செய்ய முடியதவர்களாக பெற்றோர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள்.பின் ஏற்றுக்கொண்டார்கள்.இது, இந்தக் கதை ரெண்டு ஜாதிகளுக்குள் இல்லை நண்பர்களே கவிஞர் மீராவின் கவிதையை போல செம்புலப்பெயநீர் சொந்தத்துக்குள். காவியத்தில்  காதலென்றால் கனிந்துருகும் மானிடம் நமது.அது இன்னொரு வீட்டில் நடக்கும் போது மட்டும்.

இருபது வருடங்கள் ஓடிப்போனது,என்னிடம் ஒரு பிராது வந்தது 'ஊரில் ஒரு பய நம்ம பொண்ணு பின்னால சுத்துறான் என்ன செய்யலாந் தம்பி' ஒரு பெரியவர் வந்து சொன்னார். யார் பொண்ணு என்கிற விபரம் கெட்டேன்.  சொன்னார்.தாய் தகப்பன் என்ன சொல்றாங்க என்று கேட்டேன். 'கொதிச்சுப் போயி  இருக்காங்க,கேசு குடுக்கலாமா ,ரெண்டு தட்டு தட்டி வுடலாமா ஒரு ரோசன சொல்லு' என்றார்.ஒன்னுஞ்செய்ய வேண்டாம் புருசனும் பொண்டாட்டி யையும் தனியா ஒக்காந்து அவுக எப்பிடிக்கல்யாணம் முடிச்சாங்கண்ணு யோசிக்கச் சொல்லுங்க, எல்லாஞ்சுமூகமா முடிஞ்சிரும் என்று சொன்னேன்.அதன் பிறகு 'மழையில்ல,தண்ணியில்ல,இந்த பொம்பள ஆச்சியில வெலவாசியப்பாரு ஒங்க கம்மூனிஸ்ட்காரங்க சொல்றது சர்த்தாம்பா' என்று அரசியல் பேசிவிட்டு போய்விட்டார்.தூது அனுப்பிய தாய் தகப்பன் தான் முதலில் சொன்ன காதலர்கள்.முன்பாதியில் கதநாயக, நாயகியாய் இருந்தவர்கள் பின்பாதியில் வில்லனாக மாறுகிற சகஜமான கதை இங்கு,ஏராளம்.

கேட்டால் 'எங்கள் காதல் தெய்வீகமானது,இதுக சும்மா டைம்பாசுக்கு கடல போடுதுக' என்று சொல்லுவார்கள்.காலங்காலமாக பெற்றோர்களின் வார்த்தைகள் மாறிவரும் கருத்து மாறாது. இந்தச்சாதாரணக் கதையை வலையுலகத்துக்குள் நுழைந்து அவர்கள் படிக்கப் போவதில்லை என்கிற தைர்யத்தில் எழுதிவிட்டேன்.ஆனால் யாரும் வெளியில்சொல்ல முடியாத காதல் கதைகள் கோடி கோடி கொட்டிக்கிடக்கிறது. அவை யாவும் கெட்டிப்படுத்தப்பட்ட சமூகச்சுவர்களின் மறுபக்கம் உருவாகும் இருட்டுக்குள் புதைந்து கிடக்கிறது.வண்ண வண்ணக்கோலங்கள் படம் பார்க்கிற யாருக்கும் அதில் எந்த விமர்சனமும் வராது உள்ளூர ரசிப்போம்.அந்தக் கதை மாந்தர்களுக்கு கிடைக்கிற காட்டு சுதந்திரத்தை ஒரு நாளாவது அனுபவிக்கவேண்டும் என்கிற ஆவல் வந்து போகும்.அது துஷ்யந்தனுக்கும் சாகுந்தலைக்குமென்றால் காவியமாகும்.நடப்பில் என்றால் கள்ளத்தனமாகும்.

இது சரியா தவறா என்கிற வாதம் ஒரு புறம் கிடக்கட்டும்.இந்த வாதமே தவறானது இல்லை ஒருதலைப்பட்சமானது என்று புரியலாம்.இங்கு நடப்பது மோனோ ஆக்டிங் மட்டுமே.ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம்.'எலே ஊதாரிப்பெயலே நீ பெரிய சண்டியர்னு ஓண்ட அடங்கிப்போலடா,இந்த பச்சமண்ணுக தெருவுல அலையுமேங்குற கவலயிலதான் ஓண்ட சவண்டு போய்க்கெடக்கேன்' ஊரில் நடக்கிற புருசன் பொண்டாட்டி சண்டைகளில்,மிகச்சரளமாக வந்து விழும் வார்த்தைகளிவை.மாணாவாரிக் கிராமங்களின் தெருப்புழுதிகளில் வந்து விழுகிற இந்த வார்த்தைகள் பெரிய பெரிய வீடுகளின் அறைகளைத்தாண்டி வெளியே கேட்காமல் அமுங்கிப்போகலாம்.சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாத மௌனத்துக்கு சக்தி அதிகம்.அடங்கிப்போவது வெடித்துச் சிதறுவது இந்த இரண்டில் எது கலாச்சாரம் என்பதுதான் கேள்வி இப்போது ?

நண்பர்களே ஒரு தென்மாவட்டத்து குக்கிராமத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து சாத்தூருக்கு வந்த புரிதல் இது.சென்னைப் பெருநகர் வாழ்க்கை,வேகம்,நெரிசல் இவையெல்லாம் எனக்கு சர்க்கஸ் பார்க்கிற அனுபவம்தான்.அங்கிருந்து  கிளம்புகிற இந்த வாதத்தை முழுமையாக அறிய வலை ஒரு வெளியாகிறது. எனவே

உயர்திரு மருத்துவர் ருத்ரன்,
மதிப்பிற்குறிய மருத்துவர் ஷாலினி,
பாலாண்ணா (வானம்பாடிகள்),
யாராவது ஒரு பெண்பதிவர் 
மற்றும் மாதவராஜ்

ஆகியோர் விரிவாகப்பேசினால் தேவலாம்.

26 comments:

சுந்தர்ஜி said...

கலாச்சாரமோ மதமோ அடிப்படையில் அது நான்கு சுவர்களுக்குள் அடங்குவதுதான் நாகரீகம்.

ஆதிவாசிகளின் காலம் தொடங்கி இன்று வரை சிருஷ்டி என்பது பெண்களைச் சார்ந்து அமைந்ததும் பேறின் காலத்தில் ஒரு பெண் பிறரைச் சார்ந்திருப்பதிலிருந்தும் கலாச்சாரத்தின் வேர்கள் பிடிகொள்கின்றன.

ஆனால் கலாச்சாரத்தின் எல்லைகளை இழைக்கப்படும் ஒவ்வொரு தவறான செயல்களே தீர்மானிக்கின்றன.

கலாச்சாரம் உடை உணவு இருப்பிடம் என்பதில் அமைதியான- எல்லோருக்கும் பிடித்த உருக் கொள்கிறது. மெல்ல மெல்ல உறவுகள், வாழும் முறை என்று விரிவடையும்போது அந்த நாட்டின் வயதைப் பொறுத்து அதனதன் சௌகர்யப்படி தங்கள் வடிவை மாற்றியமைத்துக்கொள்கின்றன.

வானம்பாடிகள் said...

எனக்கு நானே உரத்துச் சொல்லிக் கொண்டமாதிரி இருக்கிறது. நன்றி காமராஜ்.

கே.ஆர்.பி.செந்தில் said...

சிறந்த அழைப்புகள் , அவர்களின் பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்....

rajasundararajan said...

உங்கள் தாய்மாமனின் வரலாறு சொல்லப்பட்ட வரிசைப்பாடு உங்கள் கதைசொல்லும் திறமைக்கோர் எடுத்துக்காட்டு. மாமனுடைய மகளின் காதலில் மாமியின் நிலைபாடு இன்னது என்று நீங்கள் கூறவில்லையே! தேவை இல்லை. தன் கணவன் எடுத்த நிலைபாட்டையே அவரும் எடுத்திருப்பார். கணவனுக்கு அடங்கிப் போகிற கலாச்சாரத்தினால் அல்ல; வெடித்துச் சிதறுகிற கலாச்சாரத்தினால். கணவனுக்கு முந்தியே கூட வெடித்திருப்பார்.

கவர்ந்து போகிற மாற்றானை மடக்கி வென்று, ஆநிரைகளை வீடு திருப்பிக் கட்டவேண்டிய குலப்பெருமை நமது. ‘கோமாதா’, ‘குலமாதா’ என்று கும்பிட, கொண்டாடப் படுவதை எதிர்த்து ஒரு தாயும், சகோதரியும், மகளும் குரல் கொடுப்பதாய் இல்லை. காதற்பட்டவளின் தாயார் என்றால் இல்லவே இல்லை. (கவனியுங்கள், நான் பெண்களைச் சாடுகிறேன். மிகுந்த மனவேதையோடு இதைச் செய்கிறேன்).

‘இருத்தல் வழியது இயல்பு’ என்று தத்துவத்தில் ஒரு நிலைபாடு உண்டு. அதாவது, உடம்பு முந்தி; அதுவழி உணர்ந்து கிட்டும் அறிவு etc., பிந்தி. ஆனால் இன்ன தத்துவ நிலைபாட்டினரும் கூட, நம் நாட்டில், பெண்களைப் பற்றிப் பேசுகையில், முலைகளுக்குமுன் கருத்தாக்கங்களை தொங்கவிடுவதைக் காண்கிறோம். (Oversimplified, வேண்டுமென்றே.)

rajasundararajan said...

ஆணுக்குப் பெண் பெண்ணுக்கு ஆண் உடலின்பம் பகிர்ந்து வாழ்தல் அவ்வளவே இனம்பெருக்க எடுத்த உடல் வாழ்க்கை. இவ்வளவில், பெண்தான் எஜமானி; ஆண் அவளுக்கு எடுபிடி. இதை அறிய இத்துணூண்டு மூளைகூடத் தேவை இல்லை; உடம்புணர்வு இருந்தாலே போதும். ஆனால் பாருங்கள் வழிநிலை அறிவான கருத்தாக்கங்கள் நம் முன் ஊதிப் பெருகி நம்மை மூச்சுமுட்டச் செய்கின்றன.

[பொருளாதாரச் சமநிலை கண்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் ஒரு கருத்தாக்கம் உண்டு. (பொதுவுடைமைச் சமுதாயத்தில் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ நிலை இயல்பாகவே உருவாகி நிலைக்கும் என்று எங்கெல்ஸ் கூடக் கனவு கண்டிருக்கிறார் - குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - பக். 40., பீகிங் பிரஸ் வெளியீடு) ஆனால் சோஷலிசம் கம்யூனிசத்துக்கு மேலேறாமல் வழுக்கிய வழியில் முன்னை சோவியத் சகோதரிகளும் பலர்நாடித் தெருவில் நிற்கக் காண்கிறோம்].

தம்புக் கயிறு (தாலி) உறுதியாக இருந்தால் நம் ஆநிரைகளுக்குப் பாதுகாப்பும் உறுதி என்கிற கருத்தாக்கமே சாதி, சமய, இன உணர்வுள்ளவர்களின் தலையாய கருத்தாக்கம். இங்கு ‘தாலி’, இந்த இன-மான அமைப்பின் குறியீடு ஆகிறது. மாடுகளுக்கு இந்நாளில் கார்ப்பொரேஷன்காரன் லைசென்சு குத்துவது போல.

கற்புப்புண்ணாக்கு பற்றிக் கவலைப்பட நேரமில்லா வயிற்றுப்பாட்டு மக்களுக்கு, தாலி தாம்புக்கயிறு ஆவதில்லை. கண்டிருக்கிறேன். பணம் பணத்தோடு உறவுகொள்ளும் ஆகாயபுரியிலும் அப்படித்தான் என்று கதைக்கிறார்கள். கண்டதில்லை. (அப்படித்தான் என்று நம்பித்தானோ என்னவோ நம் மக்கள் முதலாளிகள், திரைச்சுடர்கள் ஆகிவிட லோல்படுகிறார்கள்!) கலாச்சாரம் என்பது இரண்டுங்கெட்டார் தம் தாம்புக்கயிறுகூட அல்ல, மூக்கணாங் கயிறு.

பயணமும் எண்ணங்களும் said...

மிக அருமையா சொன்னீங்க..நிதர்சனத்தை.. ஆனால் ,


// ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம். //

இதைத்தான் ஏற்க முடியலை...

வினோ said...

அவர்களின் பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்....

ஈரோடு கதிர் said...

||முன்பாதியில் கதநாயக, நாயகியாய் இருந்தவர்கள் பின்பாதியில் வில்லனாக மாறுகிற சகஜமான கதை ||

நமக்கு வந்தா ரத்தம், மத்தவனுக்கு வந்தா தக்காளி சூசுதானே!

dheva said...

கட்டுரையின் போக்கு நிதர்சனதை தொடும் தூரத்திற்கு வந்திருக்கிறது ஆனால் தொடவில்லை.

' இந்த பிள்ளைகளுக்காகத்தான் உன் கூட வாழ்கிறேன் ' எனும் சாராசரி வார்த்தைகள் கோபத்தில் எல்லா குடும்பங்களிலும் கொப்பளித்து வெளிவரும் எதிரிலிருக்கும் துணையிடம் கோபத்தை காட்ட உபோயோகம் செய்யும் உச்ச பட்ச் வார்த்தை.....

அந்த சண்டை முடிந்த இரவில் அந்த வார்த்தை பயனற்று காற்றில் கரைந்து போய்விடும் நிதர்சனத்தையும் நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஆண் பெண் உறவில் ஒரு நேர்மையும் அடக்குமுறையும் இல்லாத சுதந்திரப் போக்கும் இருப்பதை வரவேற்கும் அதே தருணத்தில்....காமம் என்பது ஜஸ்ட் லைக்தட்....உடலோடுப் போய்விடுமா இல்லை மனோதத்துவ ரீதியில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்துமா? இல்லை பிடிக்கவில்லை மாறிகொள்வோம் என்ற ஒரு கட்டாயத்தில் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை என்பதே...உடனடி முடிவு எடுக்க ஒத்துழைக்குமொரு தெளிவான முடிவு போன்ற போலித் தோற்றத்தை உருவாக்கி...மனம் போடும் வேசத்தில் ஜோடிகள் பிரிவது...சட் சட்டென்று நிகழ்ந்து விடுமா? இதுவும் சராசரி மனதின் ஆதங்கம்தான் அண்ணா...!

எல்லா மாற்றங்களும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும்...( நான் கூறும் கட்டு அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்கள்....) என்று எண்ணுவதில் தவறு ஏதும் இருக்குமா அண்ணா?

ஆழ்ந்து வாசித்தேன் அண்ணா...உங்களின் ஆதங்கத்தையும்...கருத்துக்களையும் அதிலிருந்து கிளைத்த என் எண்ணங்களை கருத்தாக்கியுள்ளேன்....!!!!!

மேலும் விவாதத்தை முன்னெடுத்து சென்றுள்ள உங்களுக்கு நன்றிகள் + நமஸ்காரங்கள் அண்ணா!

வருண் said...

ஆக, இப்போ லிவிங் டுகெதெர் சப்போர்ட் பண்றவா, இவங்க பிள்ளைனு வரும்போது, கல்யாணம்தான் நல்லது சொன்னா அதிசயம் இல்லைனு சொல்றீக?

நான் எப்படி இல்லைனு சொல்ல முடியும்? அதுதான் நம்ம "கலாச்சாரம்" ஆச்சே,? நமக்கொரு நியாயம் ஊருக்கு (தன் பிள்ளைகளையும் சேர்த்துதா
ன்) ஒண்ணுனு!!!:)))

Sethu said...

நண்பரே! எல்லாம் பெரிய பெரிய ஆளுங்கக்கிட்ட ஒபினியன் கேட்கறீங்க. எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு கேப்போம். கூடவே உங்க சுத்துமுத்து சனங்கக்கிட்டேயும் கேட்டு சொல்லுங்க. தமிழ்செல்வன் ஐயாவும் என்ன சொல்றார்னு கேளுங்க! ஆவலுடன் காத்திருப்போம்.

நகரத்து வாழ்வின் நிலை பாடுகளையும் சிறு சிறு ஊர்களின் வாழ்வு நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும். நகரத்தில் வாழ்ந்தாலும், கிராம நினைவுகளோடேயே வாழும் மக்கள் பலர். இந்தியாவில் பல்வேறு மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளுடன் ஒரு குடியரசு அமைப்புக்குள் ஒன்று பட்டு வாழும் நம் இந்திய மக்கள். வெறும் ஒரு வகை கலாசாரம் மட்டும் அனைத்து வகை மக்களுக்கும் பொருந்தாது.

உங்கள் வெளிப்பாடு ரொம்ப இனிமையாக வந்திருக்குங்க. வெட்டி சண்டைக்கு இடமில்லாமல் இருக்கட்டும்.

ஹரிஹரன் said...

சமைப்பது என்பது பெண்களின் வேலை என்று குழந்தைகளின் மனங்களில் பதிந்துள்ளது. நான் சில நேரங்களில் எனது துணைவியுடன் சமையல் செய்யும்போது என் மகன் கேட்கிறான்.அம்மா வேலையை நீ ஏன் செய்ற என்று. அந்த வகையில் நாம் நமது வீட்டில் சில நாட்கள் அவர்களுக்கு உதவி செய்தாலே முற்போக்காளர் ஆகிவிடுகிறோம் என்று எண்ணுகிறோம். ஆனால் ‘ஆண்கள் சமைப்பது எப்படி’ என்ற தோழர் தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகம் இது நாள் வரையிருந்த சிந்தனையை மாற்றியது.

பத்மா said...

எப்பொழுதும் போல அருமையான கட்டுரை.மொழி உங்களிடம் எப்படியெல்லாம் லாவகமாக வளைந்து கொடுக்கிறது!
அனைவரும் கூறுவது போல authorities என்ன கூறுகிறார்கள் என காண காத்துக்கொண்டிருக்கிறேன்

க.பாலாசி said...

ரொம்பத் தெளிவான பார்வையும் கட்டுரையும். இதை பற்றின முழுத்தெளியும் பெறவேண்டுமென்பதே எனது விருப்பமும். வாதங்கள்தானே வழியைக்கொடுக்கும். அவரவர்பால் ஆயிரம் எண்ணங்கள், கருத்துக்கள் இதைபற்றி இருக்கிறது. எதுவுமே ஒரே நேர்கோடில்லை. காத்திருப்போம்.

காமராஜ் said...

சுந்தர்ஜி சார்,
பாலாண்ணா.

ரெட்டைக்குழல் துப்பாக்கி போல ஒரே குரலில் சொன்னதாகவே படுகிறது.காற்றுக்கும் மனசுக்கும் வேலிகட்டமுடியுமா என்கிற கேள்விதான் என்னிடம் மிஞ்சி நிற்கிறது.வேஷ்டி கட்டுவதா,தாவணிபோடுவதா என்று நாம் சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் பலகோடி கால்சராய்களும்,சுடிதார்களும் விற்றுத்தீர்ந்துகொண்டிருக்கின்றன.கடைவாசலில் நின்று சுடிதார் எடுக்காதீங்க என்று சொல்லுவது ஊட்டிக்குபோகாதீங்க என்று தடுப்பதுபோலாகும்.இல்லையா பாலாண்ணா,சுந்தர்ஜி சார்.
இதில் பங்கெடுத்துக்கொண்டமைக்கு ரெண்டுபேருக்கும் வந்தனம்.

காமராஜ் said...

அன்பின் செந்தில்...
நானும் கூடக்காத்திருக்கிறேன்.

காமராஜ் said...

ராஜ சுந்தரராஜன் அண்ணா.
எப்படி இருக்கீங்க?

இந்தப்பதிவில் வந்து நின்னு சதம் போட்டு வெளியேறாமல் நிற்கிறீர்கள்.கஞ்சி குடிப்பதற்கிலார்,அதன் காரணம் என்னவென்ற அறிவுமிலார் என்கிற பாரதியின் கோபம் உங்கள் பதிவில் தெரிகிறது.

காமராஜ் said...

பயணமும் எண்ணங்களும் said...

// ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம். //

இதைத்தான் ஏற்க முடியலை...

எங்கெல்லாம் பெண்களின் கருத்துக்களுக்கு சம் மரியாதை கொடுக்கப்படுகிறதோ.அங்கெலாம் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை தோழரே.

ஆனால் பொதுவில் கொடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.அங்கொன்ரும் இங்கொன்றுமாக
உயர்ந்து வரும் குரல்கள் 110 கோடி மக்களுக்கு பத்தாது.இது என் தாழ்ந்த கருத்து.

வந்து பங்கேற்றதற்கு முதலிலே நன்றி சொல்லிருக்கணும்.பரவால்ல நன்றி தோழரே.

காமராஜ் said...

நன்றி அன்பின் வினோ,
நன்றி அன்பின் கதிர்.

காமராஜ் said...

//அந்த சண்டை முடிந்த இரவில் அந்த வார்த்தை பயனற்று காற்றில் கரைந்து போய்விடும் நிதர்சனத்தையும் நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.//

தேவா ரொம்ப மோசமான ஆளா இருக்கிங்களே.
கொஞ்சம் கவனமாத்தான் பேசனும் உங்களிடம்.

நா சொன்னது வேற பகுதி தேவா.கணவன் மனைவி ரெண்டுபேருக்கும் தனித்தனியாக இருக்கும் ஈகோ,மரியாதைக்கான ஏக்கம்.காரணகாரியமில்லாமல் அடித்து உதைக்கும் கணவன்.அதிலிருந்து வெளிவரும்
மீறலுக்கான ஒரு பளீர் மின்னல்.

நீங்கள் சொல்றது ஒரு அறைகுறைப்புரிதலோடு வெளிவரும் சின்னச்சின்ன சண்டைகளின் முடிவில் கிடக்கிற கூடல்.அத வேற சமயத்துல பேசலாம்.

காமராஜ் said...

வருண் said...

//ஆக, இப்போ லிவிங் டுகெதெர் சப்போர்ட் பண்றவா, இவங்க பிள்ளைனு வரும்போது, கல்யாணம்தான் நல்லது சொன்னா அதிசயம் இல்லைனு சொல்றீக?//

அதை நீங்க அப்டி புரிஞ்சுக்கிட்டாலும் சரி.அதை ட்விஸ்ட் பண்ணி லாஜிக் ஆக்கினாலும் சரி.
பொஷசிவ் என்கிற ஒரே விஷயத்தை ஆண் ஒரு மாதிரியாகவும் பெண் இன்னொரு மாதிரியாகவும்
வடிவமைத்துக்கொண்டார்கள்.அதை பின்னாட்களில் கலாச்சாரம் என்கிற இன்னபிற அரூபங்களால் கட்டிப்போடப்பார்க்கிறார்கள்.

காமராஜ் said...

அன்பின் சேதுசார்.

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
ரெண்டு விஷயத்துக்காக.
ஒன்று எல்லாம் பெரியாளுங்களா கூப்டிருக்கி
றேனென்றுமனசிலிருக்கிறதை அப்படியே கொட்டிட்டீங்க.கூப்பிடாத இடத்திலிருந்து வந்து பேசிய சுந்தர்ஜி,சந்தரராஜண்ணா,தேவா,...இப்படியான உங்கள் கருத்து ஒன்றும் லேசுப்பட்டதில்லை.

//இந்தியாவில் பல்வேறு மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளுடன் ஒரு குடியரசு அமைப்புக்குள் ஒன்று பட்டு வாழும் நம் இந்திய மக்கள். வெறும் ஒரு வகை கலாசாரம் மட்டும் அனைத்து வகை மக்களுக்கும் பொருந்தாது.//

இதை விடப்பெரிசா எங்கள் தமிழ்செல்வன் என்ன சொல்லிவிடமுடியும்.சபாவில் பாடுகிறது மட்டுமே பாட்டல்ல என்பதை புரிந்துகொள்கிற இயக்கம் நம்ம தமுஎச.

காமராஜ் said...

நன்றி தோழர் ஹரி,

பத்மா அரசியல் விவாதங்களுக்கு வரவே வராத நீங்களுமா.ரொம்ப சந்தோசம்.

வாங்க பாலாசி தாங்க்ஸ்

காமராஜ் said...

அன்பின் சேதுசார்.

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
ரெண்டு விஷயத்துக்காக.
ஒன்று எல்லாம் பெரியாளுங்களா கூப்டிருக்கி
றேனென்றுமனசிலிருக்கிறதை அப்படியே கொட்டிட்டீங்க.கூப்பிடாத இடத்திலிருந்து வந்து பேசிய சுந்தர்ஜி,சந்தரராஜண்ணா,தேவா,...இப்படியான உங்கள் கருத்து ஒன்றும் லேசுப்பட்டதில்லை.

//இந்தியாவில் பல்வேறு மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளுடன் ஒரு குடியரசு அமைப்புக்குள் ஒன்று பட்டு வாழும் நம் இந்திய மக்கள். வெறும் ஒரு வகை கலாசாரம் மட்டும் அனைத்து வகை மக்களுக்கும் பொருந்தாது.//

இதை விடப்பெரிசா எங்கள் தமிழ்செல்வன் என்ன சொல்லிவிடமுடியும்.சபாவில் பாடுகிறது மட்டுமே பாட்டல்ல என்பதை புரிந்துகொள்கிற இயக்கம் நம்ம தமுஎச.

லெமூரியன்... said...

\\ஊரில் நடக்கிற புருசன் பொண்டாட்டி சண்டைகளில்,மிகச்சரளமாக வந்து விழும் வார்த்தைகளிவை.மாணாவாரிக் கிராமங்களின் தெருப்புழுதிகளில் வந்து விழுகிற இந்த வார்த்தைகள் பெரிய பெரிய வீடுகளின் அறைகளைத்தாண்டி வெளியே கேட்காமல்.......//

மிக நிதர்சனமான வார்த்தைகள் அண்ணா இவை.....
அது தாங்கிச் செல்லும் வலிகளை முழுதாக புரிந்து கொண்டால் தெரியும், கலாசாரம் என்ற பெயரில் மிருகத்தனமான அடக்குமுறைகளை பெண்கள் மீது எவ்வாறு திணித்திரிக்கிறோம் என்று.........

பொருளாதார சுதந்திரம் மட்டும் இரண்டு தலைமுறைக்கு முன்பு உள்ள பெண்களுக்கு கிடைத்திருந்தால் இன்று இப்படி விவாதிக்க யாருக்கும் தகுதி இல்லாமல் போயிருக்கும்....

போகட்டும்... தனக்கு பிடித்த பெண்ணையோ அல்லது ஆணையோ மணக்கவே இங்கு ஆயிரம் பிரச்சினைகள் எழுப்பப் படுகிறது கலாசாரம் என்ற போர்வை போர்த்திக் கொண்டு....
இதில் எங்கு போய் சேர்ந்து வாழ்தல் பற்றி விவாதிப்பது??? இது தேவையற்ற விவாதமும் கூட... முன் கிடக்கிற குப்பைகளை பெருக்கி அள்ளாமல் சுத்தம் பற்றி விவாதிப்பது போல் அது ஆகிவிடக் கூடும்....

சேர்ந்து வாழ்தல் என்பதெல்லாம் பண பலம் மற்றும் மன பலம் உள்ளவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை....மேலும் அப்படி ஒரு கலாசாரம் இங்கு பரவிய பின்பு விவாதித்தால் தான் அதில் உள்ள சிக்கல்களை புரிந்து விவாதிக்க முடியும்.....
தற்சமயத்தில் இது தேவையற்ற விவாதமும் கூட அண்ணா.............

என்னோட கருத்து இது....

காமராஜ் said...

//போகட்டும்... தனக்கு பிடித்த பெண்ணையோ அல்லது ஆணையோ மணக்கவே இங்கு ஆயிரம் பிரச்சினைகள் எழுப்பப் படுகிறது கலாசாரம் என்ற போர்வை போர்த்திக் கொண்டு....
இதில் எங்கு போய் சேர்ந்து வாழ்தல் பற்றி விவாதிப்பது??? இது தேவையற்ற விவாதமும் கூட... முன் கிடக்கிற குப்பைகளை பெருக்கி அள்ளாமல் சுத்தம் பற்றி விவாதிப்பது போல் அது ஆகிவிடக் கூடும்....//

அசத்துறீங்க லெமூரியன்.இப்படியான அர்த்தமுள்ள விவாதங்கள் வரும் என்றுதான் பதிவு போட்டேன்.சந்தோசம்.