23.11.10

நுங்கும் நுறையாக ஓடும் காட்டாறுகள்.

இந்த மழைக்காலத்தில் பூமியெங்கும் நீராய் நிறம்பி வழிகிறது.சாத்தூரிலிருந்து மதுரை வரை குறுக்கே வருகிற அர்ச்சுனா,கௌசிகா காட்டாறுகள் நுங்கும் நுறையுமாக இழுத்துக்கொண்டு போகிறது.வேலிச்செடிகள் கரையில் அடைத்துக்கிடக்கும் பெரிய பொந்துகளாய்க்கிடந்த கரட்டு ஓடைகள் இப்போது கரை ததும்பி குதூகலமாக ஓடுகின்றன.மதுரையைக்கடக்கிற போதெல்லாம் அந்த வைகையைப் பார்க்கும் போது ஏக்கமும் பெருமூச்சும் மட்டும் வந்து போகும்.இதோ ரெண்டுகரையும் அடைத்துக்கொண்டு ஏப்பம் விடுகிறது வையை.சனம் வேலைவெட்டியைப் போட்டுவிட்டு பாலங்களில் நின்று நீரோட்டம் பார்க்கிறதுகள்.அடித்துச்செல்லும் மரக்கிளைகளில் மனசை ஓட விட்டு மெய்மறக்கிற கணங்கள் அலாதியானவை.

திரும்புகிற திசையெல்லாம் பசேலெனக் காடுகள் கண்னைப் பறிக்கின்றன. பிளந்து போட்ட பிளாட்டுகளின் நடுகற்களை மறைத்துக்கொண்டு கோரைப் புற்கள் பச்சைக் கொடியுயர்த்துகின்றன.உச்சிமத்தியானம் ஊதக்காத்து அடிக் கிறது எங்கள் வெயில் தேசத்தில்.எங்கு தான் மறைந்துகிடந்தனவோ இத்தனை காலம்,  இந்த தாரை தப்பட்டை முழங்குகிற தவளைகளும்,தாழப் பறக்கிற தட்டானும், ஈசலும், நெய்க்குருவிகளும். மொது மொதுவெனக் கிளம்பி வசந்த விழாக்கொண்டாடுதுகள்.

அரட்டாவளையை (அரைத்தவளை) மீனென்று நினைத்து குளம் குட்டைகளில் அலைந்து திரிந்த காலங்கள் மெல்லிதாய் வந்து போகிறது.பிடித்த அரட்டா வளையைச் மேல் சட்டையில் அள்ளிக்கொண்டுவந்து அம்மாவிடம்
கொடுத்து  கொழம்பு வைக்கச் சொல்லி பாராட்டு வாங்கலாமென்று அப்துல் கலாம் கண்டுகொண்டு போனதும்.ஒத்தப்பிள்ளையப்பெத்து இப்பிடி அரக் கிறுக்குப்பிடிச்சு அலையுதே. எலெ நீ என்ன சீனாக்காரனா தவளையத் திங்கச்சொல்ற' என்று அம்மா செல்லமாய் திட்டியதும்.வந்து அலையடிக்குது.

செக்கச்செவேலென கிடக்கும் கண்மாய்த்தண்ணீரில் ஆண் பெண் வித்தியாச மில்லாமல் நீச்சலடிச்ச காலம் வந்து போகுது.முங்கு நீச்சலடிச்சு வந்து சரசுவின் காலை அவளுக்குத் தெரியாமல் பிடித்த நிமிடங்கள் அந்த நேரத்து சாகசங்கள்.அதே கண்மாய்த் தண்ணீரில் முங்கி சாகக்கிடந்த பிச்சைக்கனியை தூக்கிக்கொண்டு வந்ததும். வண்டியக் கொடசாய்ச்சி சக்கரத்தில் வச்சு சுத்தியதும். ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த  நிஜ ஞாபகங்கள்.

16 comments:

Sethu said...

"ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த நிஜ ஞாபகங்கள்"
naanga innum itha ketkanume. innum konjam sollunga.

இராமசாமி கண்ணண் said...

arumaiyana eluthu sir.. athellam seri nama uru vaipathula thani odutha..

காமராஜ் said...

வணக்கம் சேதுசார் அதெல்லாம் எழுதிட்டே இருக்கேன்.கொஞ்சம் கொஞ்சமா எடுத்து உடனும்.காமிராக்காரியையும்,கூஜாவையும் சொல்ல எனக்கு பயிற்சியும் கொஞ்சம் தெம்பும் தேவைப்படுகிறது. ஆனா கட்டாயம் சொல்லுவேன்.

காமராஜ் said...

கரட்டு ஓடைகளெல்லாம் நிரம்பி வழியும் போது நம்ம சாத்தூர் ஆறு தண்ணியில்லாமலா இருக்கும் ரெண்டுவாரமா தண்ணீ ஓடுது.இன்னைக்கு ஜாஸ்தியா இருமருங்கும் ஓடுது கண்ணன்.10 படிக்கும்போது சைக்கிள் எடுத்துக்கொண்டு ஊரிலிருந்து வெள்ளம் பார்க்க வருவோம்.

திருப்பரங்குன்றம் பெரிய கண்மாய் சமீபத்து மழையில் கடலாக மாறிப்போச்சு.

Chitra said...

ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த நிஜ ஞாபகங்கள்.


...... கவித்துவமான நினைவுகளை, அருமையாக பகிர்ந்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

கே.ஆர்.பி.செந்தில் said...

எத்தனை முறை முங்கினாலும் அலுக்காத கிராமத்து நதிக் குளியல்களில் அத்தைமகள்களும், மாமன் மகள்களும் ஏற்றிக் கட்டிய பாவாடையுடன் முங்க, அது தண்ணீரில் உப்பலாக மேலுழும்புகையில் அவர்கள் முகத்தில் நெளியும் வெட்க நாணல்களை இன்னும் நினைவுகளில் வளர்துக்கொண்டிருக்கிறேன்.. இந்த பதிவின் மூலமும் ...

காமராஜ் said...

நன்றி சித்ரா.

காமராஜ் said...

ஏ பாவி...
செந்தில்...
என்னமா நினைவுகளைக் கிளப்புகிறாய்.

செந்தட்டி பறித்து ஒழித்து வைத்து ஒழித்துவைத்தது மறந்து, நமது உடம்பிலே அரிப்பெடுக்குமே அது எப்டி.

நேசமித்ரன் said...

காமு சார் இன்றுதான் நெகிழ நெகிழக் கேட்டிருந்தேன் அம்மா சொல்லச் சொல்ல எழுதி விட்டீர்கள் . நன்றி

வினோ said...

இதையெல்லாம் அனுபவிக்கணும் அண்ணா...

cheena (சீனா) said...

அன்பின் காமராஜ் - அசை போடுதல் மனதிற்கு மகிழ்வினைத் தரும். மிக மிக இரசித்தேன்.

மணிநரேன் said...

நீர் நிரம்பியோடும் ஆறுகளும், பசுமையும்... கேட்கவே மிகுந்த ஆசையாகவும், காண்பதற்கு ஏக்கமாகவும் இருக்கின்றது காமராஜ் சார்.
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நன்றி.

stoxtrends said...

Enga thottamellam thannila methakithungov

பயணமும் எண்ணங்களும் said...

நான் PWD யில் வேலை பார்த்த போது கண்ட செழுமை நியாபகம் வந்தது

நல்ல எழுத்து

க.பாலாசி said...

இது செமயா இருக்குங்க...எல்லா நினைவுகளும் இந்த மனதுக்குள்ளதான் முங்கிக்கிடக்குது. ஆனா அத தூண்டிவிட்டு வேடிக்கப்பார்க்க உங்களமாதிரி ஒருத்தர் தேவைப்படுகிறார்...

சுந்தர்ஜி said...

ரம்யமான மழையும் குளிரும் கலந்த காலைபொழுதில் இந்தப்பதிவை வாசிக்கிறேன் காமராஜ்.தவறவிட்டுவிட்டேன் நேற்று.வாழ்வின் அற்புதமான கணங்களை வாரி இறைத்திருக்கின்றன உங்கள் சொற்கள்.

என் தாமிரபரணி நாட்களை நினைத்துப்பார்க்கிறேன்.தண்ணீர் எடுக்கக் குடத்துடன் ஆற்றிற்கு வந்து தன் முழு ஆடையையும் மாற்றி அவர்களின் அந்தரங்கம் பறிபோகாமல் நளினமாய் பாவாடையுடன் மஞ்சள் பூசிக்குளிக்கும் பெண்களும்-குளித்த பின்னும் திறந்த வெளியில் யாரின் கண்களையும் உறுத்தாமல் தன் முழு ஆடையையும் அணியும் அவர்கள் லாவகம், அதை வேடிக்கை பார்க்கும் பார்வைகளிலும் இருந்த நாசூக்கு- குடத்தைக் கவிழ்த்து நீந்திச் செல்லும் பெண்களின் பின் சென்று முங்குநீச்சலில் கிள்ளியது யாரென்று தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்குடன் வெட்டிசெல்லும் நிமிடங்களும் என் நினைவின் பானையிலிருந்து கள்ளைப் போலச் சொட்டுகின்றன.நான்கு சுவர்களுக்கு வெளியே குளிக்கவும் முடியும் என்பதை இப்படியெல்லாம் எழுதாவிட்டால் இனிவரும் தலைமுறயினர் நம்பமாட்டார்கள். ஒரு கிளறு கிளறியதற்கு நன்றி காமராஜ்.