28.11.10

நந்தலாலா - அபூர்வமாகப் பூக்கும் தமிழ்ச்சினிமா.

எழுத்துப்போட்டு முடிந்த பிறகுதான் போனோம்.பத்து இருபது வருடங் களுக்குப் பிறகு ஆசையோடு பார்க்கப்போன பகல்காட்சி.நீல நிறப்படுதாவை விலக்கியபோது உள்ளிருந்த நூறுபேரில் சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.காட்சி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.விசிலடிக்க,கட்டவுட் வைக்க, தாள்களைக் கிழித்து தூவி விட யாரும் வரவில்லை. அப்பொழுது அகி பள்ளிக் கூடத்தி லிருந்து வந்து கொண்டிருந்தான்.திருவனந்தபுரம் கலாபவன் அரங்கில் பார்த்த ஒரு நூறு திரையிடல்களில் இருந்த அமைதி திரும்பிவந்தது.அங்கே பார்த்த ஒவ்வொரு படத்தின் முடிவிலும் இப்படியொரு படத்தைத்தமிழில் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் வந்து போகும். அந்த ஏக்கத்தை தனிக்கிற படம் நந்தலாலா.பாஸ்கர் மணி கீழ்பாக்கம் மருத்துவம்னையிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் 'அகி' என்கிற அகிலேஷ் வீட்டிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் இருவரையும் சேர்த்துவைக்கிற தாயின் தாகம்.தங்களின் தாயைத்தேடி நடக்கிற பயணம் தான் கதை.

அவர்கள் பயணிக்கிற வழியெங்கும் தட்டுப்படுகிற மனிதர்கள் எளிதில் கோபப்படுகிறவர்களாகவும்,நிதானித்து புரிந்து கொண்ட பின் மனிதம் வழிந்தோடுகின்ற ஈர மனசுக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.ஒரு நெடிய பயணத்தில் கரம் கோர்க்கிற ரெண்டு குழந்தைகளும் கால்நடையாகவே தொடர்கிறார்கள்.அவர்களை ஏனையோர் சந்திக்கிற ஒவ்வொரு பகுதியும் தனித்தனி குறும்படம்.அவர்களை நடக்க விடாமல் எல்லோரும் கைகளில் தாங்கி, முதுகில் ஏற்றிக்கடத்தி விடுகிற கவிதை நிகழ்வுகள்.இதில் இன்னோவா காரில் வரும் புதுமணத் தம்பதிகள் தவிர எல்லோரும் ஒரே வகை.

க்ளோசப் காட்சிகளை தொட்டால் சினுங்கி,ரயில் பூச்சி,ஆலம் விழுதின் நுனி,பிறந்த குழந்தையின் விரல்களைப்போன்ற வெளிர் மஞ்சள் நுனி ஆகியவற்றுக்கு ஒதுக்கி வைத்து விடுகிறார். மற்ற எல்லாவற்றையும் உணர்வு பூர்வமான பிரதிபலிப்புக்கு அர்ப்பனித்து விடுகிறார்.கலவரம் நடக்கும் பகுதியில் வந்து போகிற மாற்றுத்திறனாளியும்,கூட்டு கற்பழிப்புக்குள்ளாகிற பெண்ணும்,சாலையோர விபச்சாரியும் இந்த உலகத்துக் உரத்த மௌனத்தில் ஏதேதோ சொல்லிவிட்டுப் போகிறார்கள்.சாலையோர விபாச்சாரி விவரிக்கிற பழய்ய வாழ்க்கை ஒரு கண்ணீர்க்கவிதை.வசனகர்த்தாவை துக்கிவைத்துக் கொண்டாடவேண்டும்.

பெரும்பாலான தமிழ்சினிமாவின் கதாநாயகர்களின் முதல் பிரவேசத்தை, காமிரா காலில் தொடங்கி  மேலேறி முகத்துக்கு கொண்டு வரும். சாயங்கால மானால் மாடு வீடு திரும்பும் பாதைக்கு அணிசையாய் இழுத்துச் செல்வது போல. நாயகிகளின் இடுப்பையும், மார்பகத்தையும் கண்டால் நகராமல் இருப்பது எல்லாம் தமிழ்சினிமா காமிராக் கலாச்சாரம். இந்தப்படம் முழுக்க முழங்கால்களுக்கு கீழேயே அதிக காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.எதோஒரு ஜப்பனியப்படத்தின் தழுவல் தானென்றாலும்,இப்படியும் படம் எடுக்காலாம் பாருங்கள் என்று முகத்திலடிக்கிற முயற்சி இது.சூறைக்காற்றில் மேலெ ழும்பும்  மக்கும் மக்காத குப்பைகளுக்கு மத்தியில் உலகத்தரம் வாய்ந்த அரிதான தமிழ் சினிமா.இடைவேளையில் வெளிவந்த போது வந்திருந்த பத்து முப்பது இளைஞர்களின் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

75 வருட திரைப்படங்கள் தமிழ் ரத்தங்களில் ஏற்றி வைத்திருக்கிற சாக்கடையை  ஒன்றிரண்டு திரைப்படங்கள் மூலம் சுத்தப்படுத்திவிட முடியாது. ஒரே குத்தில் பத்துப்பேரைச் சாய்க்கிற காட்சிகள்.கஞ்சிக்கில்லாத ஏழை நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில் வசிக்கிற செட்டுகள்.லேசாக் கண்ணசந்தால் ஓடிப்போய் சுவிட்சர்லாந்தில் பிருஷ்டத்தை  ஆட்டுகிற காதல்பாடல்கள் இல்லாத படம் மொக்கை படம் என்றுதானே வர்ணிக்கப்படும். ஆனால் பாருங்கள் மொத்த தமிழ்ச் சினிமாவின் குறிப்பிட்டுச் சொல்லுகிற படங்கள் எல்லாமே அந்தந்த காலத்தில் ஓடாமல் முடங்கிய மொக்கைப்படம் என்பது தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடு.

இதில் விமர்சிக்கவேண்டிய இடங்கள் இல்லையா என்றால் இருக்கிறது. எனினும் அதைப் புறந்தள்ளிவிட்டு தூக்கிப் பிடிக்கவேண்டிய படைப்பு இது.இல்லையென்றால் 200 கோடி,162 கோடி செலவு செய்து தயாரிக்கும் கதையில்லாத திரைப்படம் தான் படைப்பு என்று சந்தைக்கு வரும்.

காட்சிகளின் உறுத்தலற்ற பதிவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இசை இழுத்துச் செல்லுகிறது. இந்திய திரை இசையில் பின்னணி இசைக்கு புதிய பரிணாமமும்,அழகிய பரிமாணமும் கொடுத்து நிறுத்தி வைத்திருப்பவர் இளையராஜாதான்.ஒரு ஏழை வீட்டுக்கு வரும் அதிகாரியின் பிரவேசம் என்ன மனநிலையை உருவாக்கும் என்பதை குஞ்சுக் கோழியின் கெக்கெக் சத்தத்தை சேர்த்து பிரம்மிப்பூட்டியவர் இளையராஜா.படம் முள்ளும் மலரும் இடம் காளியின் வீட்டுக்கு வரும் எஞ்சினியரின் வருகை.ஒரு 900 இந்தியத் திரைப் படங்களுக்கு இசையமைத்த அவரின் மேதமை மத்திய அரசால் நான்கு முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

காட்சி ஊடகத்தின் மீதும், கதை மீதும்  அதீத நம்பிக்கை வைத்திருக்கிறது இந்த நந்தலாலா.அதற்கு ஈடு கொடுக்கிற அகிலேஷ்,பாஸ்கர்மணி அகியோருக்கு இணையாக இசை கூடவே நடக்கிறது.இருவரும் தங்கள் தாயைச்சந்திக்கிற  மனசை உலுக்குகிற காட்சியை கண்ணீர் விடாமல் சந்திப்பது சிரமம். அந்த ஈரம் அடுத்தொரு தரமான தமிழ்ச்சினிமா வரும் வரை காயாமல் காத்திருக்கும். நம்பிக்கையோடு.

20 comments:

சுந்தர்ஜி said...

ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த உணர்ச்சிப் ப்ரவாகம் உங்கள் மொழியில்.நானும் காத்திருந்தவற்றில் நந்தலாலாவும் ஒன்று.அறிமுக விமர்சனத்துக்கு நன்றி காமராஜ்.

Chitra said...

லேசாக் கண்ணசந்தால் ஓடிப்போய் சுவிட்சர்லாந்தில் பிருஷ்டத்தை ஆட்டுகிற காதல்பாடல்கள் இல்லாத படம் மொக்கை படம் என்றுதானே வர்ணிக்கப்படும்.


......சராசரி மனிதரின் பொழுதுபோக்கிற்காக வரும் படங்களையும், கலை உணர்வுகளுக்காக எடுக்கப்படும் படங்களையும் எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்? ஒவ்வொருவரும் படம் பார்க்கும் நோக்கம் வேறு வேறாக இருக்குமே!

காமராஜ் said...

அன்பின் சுந்தர்ஜி சார் வணக்கம்.

நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம். இப்படியொரு வித்தியாசமான கதையை இனி படிக்கிற வரை இதை கொண்டாடியே தீரவேண்டும்.

காமராஜ் said...

அன்பின் சகோதரி சித்ரா.

எனக்கு இந்த சராசரி மனிதன்,தேர்ந்த மனிதன் என்கிற பாகுபடுத்தல் பிடிக்கவில்லை சகோதரி.
நாங்கள் எங்கள் சாத்தூர் வீதியில் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரையிட்டோ ம்' மேல்மட்ட மனிதர்களுக்கு கூட புரியாத ஈரானிய பாஷைய உள்வாங்கிக்கொண்டு காட்சிகளை பார்வையாளர்கள் விவரித்த பின்னர் தான் புரிந்தது,ரசனை எல்லோருக்கும் பொதுவென்று.அந்தபார்வையாளர்கள் எல்லாம் யார் தெரியுமா ?.பள்ளிக்கூடம் போகாத சிறுவர்கள் மற்றும்,தீப்பெட்டி ஆலைக்கும் போகு பெண்கள்.

அதே போல பத்தாயிரம் மக்கள் கூடுகிற கலை இரவுகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகளைச்சொல்லுவோம் அப்படி ஆரவாரத்தோடு ரசிப்பார்கள்.

இது தான் யதார்த்தம். ஆனால் நாம் இன்னும் மிகைப்படுத்தலைமட்டும் தான் நம்பிக்கொண்டிருக்கிறோம் சகோதரி.என்ன பொழுது போக்கு கலைப்படத்தைப்பார்த்தால் பொழுதும் போகும்,அறிவு வளரும்.

கலை காலத்தின் கண்ணாடி யில்லையா அன்பின் சித்ரா ?

காமராஜ் said...

சகோதரி சித்ரா.

இந்த சினிமா வரும் வரைக்கும் தமிழ்ச்சமூகம் பொழுதுபோகாமலா தத்தளித்துக்கொண்டிருந்தது ?
கதைப்பாடல்கள்,தெருக்கூத்து,நாடகம்,என்கிற கலைவடிவங்களில் எப்போது டூயட் ஆடினார்கள்?

ஈரோடு கதிர் said...

அபூர்வம் தான்!

rajasundararajan said...

இப் படத்துக்கு வந்த விமர்சனங்களில் மணிஜீ எழுதியது எனக்கு மிகப் பிடித்திருந்தது. அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் உங்கள் பதிவுக்கும்:

நந்தலாலா. வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்தவன் கிருஷ்ணன், ஆனால் ‘நந்தலாலா’ என்றழைக்கப்படுகிறவன். குருதித் தொடர்பால் அல்ல; குணத்தால் ஆன செயல்பாட்டால் வருவது - ஆம், தாய்மை என்பது ஒரு குணம்.

“நீங்க என்ன சாதிண்ணே?” என்று அவனின் குருதிவழி கண்டுபிடிக்க வினவுகிறாள் சாதிச்சண்டையில் வற்கலவிக்கு ஆட்பட இருந்து அவனால் காப்பாற்றப் பட்டவள். அவன் சொல்கிறான், “மென்ட்டல்”.

தன் உயிரைப் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிய அத்தனை பேரும் - இயேசு உட்பட - “மென்ட்டல்” என்றே இனம் காணப்பட்டு இருக்கிறார்கள். பிறவியால் வருவதல்ல காருண்யம். தாய்பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ள நாம் சாதி வழி அடையாள அடிதடிகளைத் தாண்டவேண்டும். ஊன்றுகோல் நொண்டி ஒருவனாற்கூட இத் தாய்மையை உணரமுடிகிறது. காட்சியைக் கண்ணேற்கும் நமக்கு வெட்கத்தால் விழிகலங்க வேண்டும்.

rajasundararajan said...

பள்ளி மாணவி, இளநீர்ப் பெரியவர், மோட்டார் பைக் மோட்டா மனிதர்கள், பெருவழிப் பரத்தை என்று எல்லாருக்குமே அவரவர் பாடு உண்டென்ற போதிலும் உரிய வேளையில் வெளிப்பட்டுத் தழுவும் தாய்மையும் உட்பொதிந்து இருக்கிறது. பீர் அடித்து, பிறரைக் கோட்டிகாட்டிக் கழியும் ஓர் உல்லாசப் பயணமே வாழ்க்கை என்று கொள்கை கற்பித்தவர்களுக்கு இது வெளிப்பட வாய்ப்பில்லை. கடத்தி, வியாபாரக் காசு பண்ணுகிறவர்களுக்கு அறவே இல்லை. தனக்குள் இன்றி ஒரு தூரத்துக் கட்டளையாய்த் தாய்மையை ஏற்றுச் செயல்படும் புதுமாப்பிள்ளைத் தனிமை விரும்பிகளுக்கு அது முழுமைப்பட வகையில்லை.

பைத்தியக் கூட்டத்தில் மகனை விடநேர்ந்ததில் தானும் பைத்தியமாகிப் போவதே தாய்மை என்று உரத்த போதிலும், கைவிடப் பட்டு, இன்னொன்று கிட்டிய அடைக்கல நிலையில், சிறுவனுக்கு இல்லையென்று போகும் அந்தத் தாயையும் என்ன குறைசொல்ல? திரும்பு வழியில் எதிர்ப்பயணம் வந்து, பார்வை மாறி, முதல்மகனின் படிமக் கையிருப்பைப் பறத்திவிட்டுப் போகும் அவள்மீதும் இரக்கமே மிஞ்சுகிறது.

பனிக்குடத்தில் நீந்திய களிப்பும், அது உடைந்து வெளிக்காற்று தீண்ட வரும் அழுகையும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே நேர்த்தியான விமர்சனம் ....

Sethu said...

நேத்து தான் கதிர் இடம் சொன்னீங்க, உடனே போய் பார்த்துவிட்டு வந்து ஒரு சூப்பர் விமர்சனம் வேற. எங்க பார்த்தீங்க? சாத்தூர், சிவகாசி, தூத்துக்குடி?

Sethu said...

ஆஹா! உங்க விமர்சனத்தோட சேர்த்து ராஜசுந்தரராஜன் அண்ணனோட விமர்சனம் படிக்கும் போது, மக்களே உயரிய sinthanaikalodu வாழக்கூடிய ஒரு பெருவாழ்வு ஒரு பேரின்பமல்லவா! அருமைங்க.

லெமூரியன்... said...

கலக்கீடீங்க............
தழுவல் கதையா இருந்தா என்ன..........
அதை PRESENT பண்ணிய விதம் எல்லாருக்கும் கை கூடிய வித்தை கிடையாது..........
கண்டிப்பாக சிறந்த படம்தான் இது..........


:) :) :)
குடும்பத்தோட போனீங்களா??? இல்ல நண்பர்களோடா???

rk said...

//எழுத்துப்போட்டு முடிந்த பிறகுதான் போனோம்.//

கண்டிப்பாக டைட்டில்கார்டை நீங்கள் மீண்டும் பார்க்க வேண்டும்..அதுவே ஒரு அழகான ஹைக்கூ!!

வானம்பாடிகள் said...

ஒரே படம். ஒட்டு மொத்தமா ஒரே கருத்து..எத்தனை அழகழகான விமரிசனங்கள்.

வினோ said...

கண்டிப்பா பார்க்கணும் அண்ணா....

பத்மா said...

ஐயோ எல்லாரும் இப்படி எழுதறாங்க ..நிச்சயம் ஒரு அருமையான படமாகத்தான் இருக்க வேண்டும் .இதற்காக வரும் விமர்சனங்களே மிகவும் கவித்துவமாக

kashyapan said...

நல்ல நல்ல சினிமாவைப் பாத்து பாத்து எழுதுங்கய்யா! நாங்க இங்க(நாக்பூர்ல) வயத்தெரிசப்பட்டு சாகரோம். என்னிக்கு ஐயா! நாங்க பாக்க---காஸ்யபன்

basheer said...

உங்கள் விமர்சனமே ஒரு நல்ல கவிதையாய் மனசுக்கு நிறைவை தருகிறது.தொடருங்கள்.

ஹரிஹரன் said...

இப்போது வலைப்பூக்களில் வரும் ‘விமர்சங்களை’ மட்டுமே நம்புகிறேன் ஏனென்றால் எந்த வியாபாரமும் நம்க்கில்லை. குமுதம்,ஆ.விகடன் போன்றோர் மார்க் போட்டால் கருணாநிதியின் குடும்ப தயாரிப்பு படங்களுக்கு குறைத்து மதிப்பிட இவர்களால் முடியுமா.

நந்தலாலா வை நிச்சயம் பார்த்தேஆகவேண்டும்.

ராம்ஜி_யாஹூ said...

வண்ணதாசனா/ கலாப்ரியாவா என்று தெரிய வில்லை, அழகாக எழுதி இருப்பார்.

பன்னியை பார்த்ததும் கல் எடுத்து எறிய கோபம் வந்தது, ஆனால் குட்டிகளோடு படுத்து இருப்பதை பார்ததும் கோபம் தணிந்து சந்தோஷம் வந்தது.

அதைப் போல உங்களின் எழுத்து கட்டி போட்டு விட்டது .

ஒரு உந்துதல்/தழுவல் படத்திற்கு இவ்வளவு பாராட்டா என்று கோபம் வந்தும் உங்களின் எழுத்து கட்டி போட்டு விட்டது கோபத்தை.