28.10.10

எழுதப்படாத வாழ்க்கைக் குறிப்புகள்.(நீள்கதை)

அவள் பெயர் பொட்டத்தாய்.எண்ணெய்தேச்சு வழுவழுன்னு சீவிய தலைமுடி.ஆரஞ்சு,பச்சை,ஊதா,சிகப்பு கலரில் தான் சேலை உடுத்துவாள். அதுதானெ அப்பெல்லாம் கிடைக்கிற சேலைகள்.ஊரைச்சுத்தி பம்புசெட்டுக் கிணறுகள். டங்கு டங்குன்னு தரை அதிர்கிற மாதிரி நடந்து குளிக்கப்போவாள். மொளகா,பருத்தி,கடலைச்செடிகளுக்கு தண்ணி பாய்ச்சுகிற நேரம் தலையைக் குடுத்தால் குற்றாலம் ரொம்ப கிட்டக்க வந்த மாதிரி இருக்கும்.அப்பமெல்லாம் உருட்டு  மஞ்சள் கிழங்கில்லாமல் பொம்பளய்ங்க குளிக்க வரமாட்டாங்க. பொம்பளப்பிள்ளைங்க வந்துட்டா ஆண்களெல்லாம் கிணத்துக்குள் போய் குளிப்பார்கள்.கரண்டு நின்னுபோசின்னாலோ,இல்ல தண்ணிபாய்ச்சுறது  நின்னு  போச்சின்னாலோ.பொம்பளயாளுங்க தவதாயப்படனும்.எந்த நேரத்திலும் கரண்டு நின்னு போகும் அதானல பொம்பளைய்ங்க 'எலற்றிய நம்பி எலெ போடக்கூடதும்பாக'.ஆனா கனிமொலாளி சோப்பு
போட்டுட்டு தலையக்குடுக்கிற நேரம் பாத்து மோட்டார நிறுத்திருவார். ஈரத்துணியோட வந்து கெஞ்சனும்ல அதுக்கு.அவர சின்னப்புத்திக்கார மனுசன்னு சொல்லுவாக.கெடக்கட்டும்.

பொட்டத்தாய் அப்பெல்லாம்  ஊற வச்ச துணிகளத் தூக்கிக்கிட்டு கெணத்துக்கு வந்திருவா.உள்ளே ஒரே ஆம்பளப்பயக கும்மரிச்சமாக் கெடக்கும்.ஏ சனங்கா சீக்கிரம் எந்திரிச்சு வாங்க கரண்டு நின்னு போச்சு நாங்ககுளிக்கனுமின்னு  கோரிக்கை வப்பா.ரெண்டு தரம் மூனுதரம் சொல்லிப்பாத்துட்டு.கிணத்து மேல இருந்து தண்ணிக்குள்ள டொம்முன்னு குதிப்பா.ஆம்பளப் பயக எல்லாரும் அடிச்சு புடிச்சு மேலேறி வந்துருவாங்க.உள்ளே பெத்த தகப்பனே குளிச்சாலும் இதா நெலம.இது சாம்பிள் தான் இன்னும் எவ்ளவோ இருக்கு.

சண்டியர் தொரப்பாண்டி அலறிப்புடிச்சி ஓடியகதை தெரியுமா.கெனத்துல குதிப்பா எங்க கூட வந்து கபடி ஆடச்சொல்லு பாப்பம்.கால் வழியா மோள்ற பொட்டச்சிக்கு திமிறப்பாருன்னு தொரப்பாண்டி சொன்னது பேச்சு வாக்குல அவா காதுல உளுந்து வாடா சண்டியரு வந்து வெளாடு பாப்பமின்னு வரிஞ்சு கட்டிட்டு வந்துட்டா.யார் சொல்லியுங்கேக்காம களத்துக்கு வந்து ஒத்தை யாளா நின்னப்ப,நம்ம தாடிக்கரா பெருமாளுதான்.என்னம்மா ஒரு பேச்சுக்கு சொன்னா பொட்டப்பிள்ள இப்டி ஆம்பள  கூட சரி மல்லுக்கு நிக்கியே சரிப்படுமான்னு மத்தியஸ்தம் பண்ண வந்தார். ஏஞ்சரிப்படாது சொல்லுங்க பெரியா ன்னு கேட்டா.முள்ளுமேலன்னு வாயெடுத்தார் நிப்பாட்டுங்க பெரிய்யா முள்ளுமேல வேட்டி விழுந்தாலும் அதே கெதிதான் என்றாள். வாய்க்குள்ளே எதோ முனுமுனுத்துக்கொண்டு இடத்தைக் காலி பண்ணிப் போய்விட்டார்.

பொட்டத்தாயின் சிநேகிதி பெரியதாய் வந்து ஏட்டி வாபிள்ள எதுக்கு நமக்கு வம்பு  என்று கடிந்து கூப்பிட்டாள்.பொம்பளய்ங்க கூட்டம் அலை மோதியது நேரம் ஆக ஆக வருவானென்று எதிர்பார்த்த தொரப்பாண்டியக் கானோம். தொரப்பாண்டி மட்டுமில்லை பொண்ணு பாக்கக்கூட அதுக்குப்பிறகு ஆம்பளைக வருவது குறைந்து போனது.ஊரின் உடம்பெல்லாம் வாயாகியது.வாய் ஓய்ந்து போக ஒரு வருஷம் ஓடிப்போனது.அந்த ஒரு வருஷ இடைவெளியில் சின்னக்கருப்பன் பொட்டத்தாயைப் புரிந்து கொண்டான்.பேய் பிடிச்சிருச்சு,பிள்ள பெறக்காது,அவ பொம்பளயில்ல என்கிற மூடநம்பிக்கைகள் பொட்டத்தாயின் மேலே கவிழ்ந்து கொண்டது.மகளுக்கு மாலை பூக்களெயே என்று மாரிகோயிலுக்கு வயனம் காக்கப்போனாள் அம்மக்காரி.பிள்ளையுந்தாயும் படுகிற வேதனையைத்தீர்க்க பொட்டத்தாயின் பாட்டிக்காரி ஒரு யோசனை சொன்னாள்.வீரணனுக்கு கட்டிப்போடு எல்லாஞ்சரியாப்போகுமென்றாள்.அதுக்கு நா அரளி வெதயக்குடிச்சிரலாம் என்று சொல்லி மறுத்து விட்டாள் பொட்டத்தாய்.

ஊர்த்தலைவர், தங்கிலியான்,ஜாதி சனம் எல்லாம் சொல்லியும் உடும்புப்பிடியாய் நின்றுவிட்டாள்.பொட்டத்தாயின் அம்மக்காரி அரளி வெதயக்குடிச்சதும் கலங்கிப்போனாள் பொட்டத்தாய்.அரளிவிதை அரைபட்டு மூத்த மலை பூத்தது.கார்த்திகை பதினஞ்சில் கல்யாணம் குறிச்சாச்சு.வீரணன் வீசையை முறுக்கிவிட்டுக்கொண்டான்.

'இன்னைக்கு இது போதும்'

6 comments:

வானம்பாடிகள் said...

/'இன்னைக்கு இது போதும்'/

போதலையே:)

க.பாலாசி said...

நாங்கள்லாம் போரோட திங்கிற ஆளுங்க, இப்டி கொஞ்சமா போட்டா கட்டுப்படி ஆகுங்களா?!!!

பொட்டத்தாய்.. என்னூர்ல கிழவியா பார்த்த அந்த ‘ராசாயா’வை ஞாபகப்படுத்துகிறாள்... வீரணனனையும், அந்த வீரசூரியையும் மேலும் காட்டுங்கள்...

Sethu said...

அடடா! விடாம படிச்சுட்டு வரும் போது டிவி மாதிரி தொடரும் போட்டுட்டீங்களே! ஆவலுடன் தொடருவோம்.

இராமசாமி கண்ணண் said...

தொடருங்க. படிக்கறதுக்கு காத்துகிட்டு இருக்கேன் :)

Mahi_Granny said...

வாசிப்பு மட்டுமே பொழப்பு. ரொம்ப காக்க வைச்சிராதீங்க. இந்த தமிழ் தான் எல்லோருக்கும் புரியுமோ இல்லையோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

லெமூரியன்... said...

அண்ணா அடுத்த பாகம் எப்போ????