23.4.11

அசைபோடக் கிடைத்த நாட்கள்.


நான்கு நாட்கள் கிராமத்தில் கிடந்தேன்.விளைந்து மூன்று வருடங்களான வயல்வெளிகளினூடே நடந்து கண்மாய்க்கரைக்கு போனோம்.
அங்கே குழுமிக்கிடக்கும் புளியமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டோம்.தழும்பிக்கிடக்கும் கிணற்று நீரில் குதித்தோம் நேரம் போவது தெரியாமல் தவளைகளோடு நீருக்குள் கிடந்தோம்.ஷாம்பு, சோப்பு வகையறாக்கள் இல்லாத சிரிப்பும் கும்மாளமும் நீச்சலும் பாட்டுமான ஒரு குளியல் கிடைத்தது.

கருப்புநிலாக்கதைகளில் வரும் ஆனியன் தோசையைச் சிலாகித்துவிட்டு எட்டாவது குழந்தை பிறந்தபோது தன் மனைவிக்கு கருத்தடை செய்துகொண்ட பிச்சைக்கனியின் கதையை ஊர் சொல்ல இடி இடி எனச்சிரித்துக்கிடந்தோம்.உலகப்புரட்சிக்காரன் சேகுவேராவைப்பற்றி சொல்லச்சொல்ல முதியவர்களோடு இளைஞர்களும் நெருங்கி வந்து கதை கேட்டார்கள்.

காலையில் கறிவதக்கி இறக்கியதும் மாதவராஜ் தம்பியும் போட்டோக்கட கார்த்தியும் வருவாங்களாய்யா என்று அம்மா கேட்டார்கள். உட்காரக்கூட இடமில்லாத அந்த ஓட்டுவீட்டில் நண்பர்களோடு உட்கார்ந்து சாப்பிட்ட சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.கூடவே தளுத்தளுக்கும் குரலில் அம்மாவும் அவளும் குட்டியின் நினைவுகளைச் சொன்னார்கள்.இரவு சந்தோஷம் பொங்கும் வார்த்தைகளோடும் சந்தோஷக்குப்பியோடும் அன்புத்தம்பி பாலு வந்தான்.ஊர்தாண்டி இருக்கும் பம்புசெட்டு வாய்காலைல் உட்கார்ந்து பேசினோம்.

சாப்பாடு செமிக்க வெத்திலை போட்டுக்கொண்டிருக்கும்போது சாமியாடிக் கருப்பசாமிச் சின்னையா வந்து எங்களோடு உட்கார்ந்து தமிழகத் தேர்தலையும் அரசியலையும் பேசினார்.கடவுளின் தூதுவரோடு கருத்து யுத்தம் நடத்தினோம்.அவரும் கூட அன்னா ஹசாரேயைப்பற்றி புகழ்ந்து பேசினார்.இது அவருக்கிருக்கிற இன்னொரு நம்பிக்கை.வெப்பங்குச்சிகள் எரியும் அக்கினிச்சட்டியோடும்,மேளக்காரர்களின் வியர்வையோடும் வெறியேற்றுகிற டண்டனக்கா உருமியோடும்  சாயங்காலம் நாக்கில் சூலாயுதம் குத்தி சாமியாடினர்.கழுத்து முங்கக்கிடக்கும் ஊர்மாலைகளோடு நாங்களும் மாலைபோட்டோம்.

பார்க்கிற இடமெல்லாம் பான் பராக் தாள்களும், உடைந்த டாஸ்மாக் குப்பிகளும் கிடந்தன.தினம் முன்று நான்கு சண்டைகள் கூட நடந்தது.நூறு ரூபாய்க்கு ரம்மிச்சீட்டு விளையாண்டார்கள். இவைகளுக்குள்ளேதான் அவர்களின் கொண்டாட்டமும், அன்பும், விருந் தோம்பலும் கிடந்தது.

பாளையங் கோட்டையிலிருந்து கரகாட்டக் கோஷ்டி வந்திருந்தது இரவு முழுக்க சினிமாப்பாட்டும் ரெட்டை அர்த்த வசனங்களுமாக கேட்டுக்கொண்டே இருந்தது.விடிந்த பிறகு முதல் பேருந்துக்காகக் காத்திருந்த கரகாட்டக் கோஷ்டியில் அந்த இரண்டு பெண்கள் இருந்தார்கள். கொண்டு வந்திருந்த சூட்கேஸ் மேல் சுருண்டு படுத்துக்கிடந்த அவர்கள் மேல் இரவு முழுக்க எரிந்த காமப்பார்வைகள் கூட சுருண்டு கிடந்தது.ரெண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் ஆடிவிட்டு முடித்துக்கொள்ளலாமே எதுக்கு விடியவிடிய ஒடம்ப வருத்தனும் என்று கேட்டேன்.விடிய விடிய ஆடுவது சம்பளத்துக்காக மட்டுமில்லை கூட்டிக்கொண்டு வந்த பொம்பளப்பிள்ளைகளின் பாதுகாப்புக் காகவும் தான் என்று சொன்னார். அப்போது குட்டைப்பாவாடைக்கும் ஜிகினா ரவிக்கைக்கும் இடையில் தெரியும் அவள் பசித்த வயிறு நினைவுக்கு வந்தது.

ஊரை விட்டுக்கிளம்பும்போது சித்திகள், சித்தி பிள்ளைகள், பங்காளிகள், பெருசுகள் என அன்பும் பாசமுமாக சூழ்ந்து கிடந்தேன்.எல்லோரும் கொடிஎறக்குனாப்பெறகு போகலாமுல்ல எனச்சொல்லிக்கொண்டே வழியனுப்பினார்கள்.ஊருக்கு மேற்கே மஞ்சநீராட்டுக்கு அடிக்கிற மேளம் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே இருக்க வாகன இறைச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது.

14 comments:

Mahi_Granny said...

ஊர் பெயர் மட்டும் ரகசியமா வைத்துக் கொண்டீர்கள் என்றாலும் இப்படியான நாட்கள் சந்தோசம் தான்

♥ RomeO ♥ said...

\\ஊருக்கு மேற்கே மஞ்சநீராட்டுக்கு அடிக்கிற மேளம் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே இருக்க வாகன இறைச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது.//

சூப்பர் என்டிங் பாஸ் ..

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒருமுறை கெரமத்துக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்குண்ணே...

ஹரிஹரன் said...

தமிழ்நாட்டிற்கு ஒரு பொங்கல் தான் ஆனா மதுரைக்கு தெக்க இருக்கிற ஊர்களிலே தைப் பொங்கல், பங்குனிப் பொங்கல் சில நேரம் சித்திரைப் பொங்கலாகவும் வரும்.

சின்ன வயசில எங்க கிராமத்துல் வரகனி ஆட்டம் பார்த்திருக்கேன், நல்லாயிருக்கும். இப்பெல்லாம் அது இல்லை. நீங்க கேள்விப்பட்டிருங்களா?

சுந்தர்ஜி said...

ஆஹா!ஆஹா!

எதைச் சொல்ல? எதை விட?

அற்புதமாய் எழுதுகிறீர்கள் காமராஜ்.

அரூபமாய் நாங்களும் விழுந்துகிடக்கிறோம் உங்கள் கிராமத்தில்.

எத்தனை கொடுத்தாலும் இனிக் கிடைக்காதவையாய் அருகிவிட்டது விருந்தோம்பலும் பிரதிபலன் பாராத நட்பும்.

அதுவும் அந்தக் கரகாட்டக் காரப் பெண்களின் நிலை உங்களின் வார்த்தைகளில் மனதைப் பிசைந்தது.

ஆ.ஞானசேகரன் said...

//ஊருக்கு மேற்கே மஞ்சநீராட்டுக்கு அடிக்கிற மேளம் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே இருக்க வாகன இறைச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது.//

அருமையான நினைவுகளாய்ய்ய்ய்ய்....
பகிர்வுக்கு நன்றி தோழரே..

Rathnavel said...

அருமையான பதிவு திரு காமராஜ்.
நான் கிராமங்களில் திருவிழாவிற்காக நாடகம் போட வரும் குழுவினர் படும் பாடை பார்த்திருக்கிறேன்.
நன்றி.

க.பாலாசி said...

என்ன சொல்றது.. மாரியம்மன் திருவிழாவும் வீட்டுக்குவீடு காய்ச்சி ஊத்தும் அந்தக்கஞ்சியும், ஒட்டட ஒட்டட கம்பத்தில எனத்தொடங்கும் வள்ளித்திருமண நாடகப்பாடலும் கொஞ்சநேரம் வந்துபோனது.. இந்த அசைபோடும் நாட்களை தரவாவது மிச்ச ஒரு வருடப்பொழுதுகள் சீக்கிரம் கழியவேணும்..

//கொண்டு வந்திருந்த சூட்கேஸ் மேல் சுருண்டு படுத்துக்கிடந்த அவர்கள் மேல் இரவு முழுக்க எரிந்த காமப்பார்வைகள் கூட சுருண்டு கிடந்தது.//

வார்த்தைகளற்று கடந்துபோகிறேன்.

வானம்பாடிகள் said...

இப்படிப் படிச்சிதான் அனுபவிக்கணும், கிராமத்து வேரத்துப் போனவுங்க நாங்க.

/வார்த்தைகளற்று கடந்துபோகிறேன்./ எழுத்தாளர் பாலாசி. இது எங்க நாட்டாமை ட்ரேட்மார்க். நீ எப்படி சுடலாம்:))

kashyapan said...

தோழர் காமரஜ்! " கூட்டிக்கொண்டுவந்த பொம்பிளைப்பிள்ளைகளின் பாதுகாப்பிற்காகவும் தான்"! என்ன கொடுமை தோழா! ---காஸ்யபன்

ஓலை said...

Nice one. Thanks.

அன்புடன் அருணா said...

இப்படி எப்பவாது கிடைக்கும் நாட்கள் ஆனந்தம்!

இரா.எட்வின் said...

\ரெண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் ஆடிவிட்டு முடித்துக்கொள்ளலாமே எதுக்கு விடியவிடிய ஒடம்ப வருத்தனும் என்று கேட்டேன்.விடிய விடிய ஆடுவது சம்பளத்துக்காக மட்டுமில்லை கூட்டிக்கொண்டு வந்த பொம்பளப்பிள்ளைகளின் பாதுகாப்புக் காகவும் தான் என்று சொன்னார். அப்போது குட்டைப்பாவாடைக்கும் ஜிகினா ரவிக்கைக்கும் இடையில் தெரியும் அவள் பசித்த வயிறு நினைவுக்கு வந்தது./

அருமையானப் பதிவு காமராஜ். இன்றுதான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஐந்தாறு ஆண்டுகளாயிற்று ஊருக்குப் போய். போய் வந்ததும் பார்ப்போம்

ஈரோடு கதிர் said...

இரவு முழுக்க ஆடவேண்டிய நிர்பந்தக் கொடுமை.... :((((