17.12.08

மத்தியதரக் குரங்குகளும், சுக்ரீவ அடயாளங்களும்




அவர்தான் முதலில் எனக்கு அதைச் சொன்னார். தொலைக்காட்சியில் பார்த்தபோது கொஞ்சம் பதற்றமாக இருந்தது. அந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மறுநாள் நான் அவரோடு பேசினேன். ரொம்பவும் வேதனையோடு பேசினார். ரோட்டில் நடந்துபோகிற, புகைவண்டிக்காகக் காத்திருக்கிற, ஜனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உயிர்வாழ்தல் நமது கையில் இல்லை. உடற்பயிற்சி யோகாசனம், டாக்டர், ஆரோக்கியம் எல்லாமே ஒரு இடைக்கால ஏற்பாடு போல இருக்கிறது என்று விசனப்பட்டார். அப்போதுதான் நடைப்பயிற்சிக்கு போய்வந்தாக சொன்னார். இருந்தும் வார்த்தைகளில் சோர்விருந்தது. அப்புறம் தான் தமிழ் தொலைக்காட்சிகளில் அதன் சிறப்பு பார்வையெல்லாம் காண்பிக்கப்பட்டது, சேலத்தில் ஒரு தாஜ் விடுதிச்சிப்பந்தி கூட அதில் இறந்துபோனார்.


இரண்டு நாட்களுக்கு முன்னாள் அவர்கள் ஊரில் பாரதி விழாக் கொண்டடியது சம்பந்தமாகப் பேசினார். தான் பணிபுரிகிற இடத்தில் நான்கு வருடங்களாகக்கூட பணிபுரிகிற ஒரு படித்த மனிதர்.'ஏ மாமா இப்பிடிச் செய்றீங்க' என்று கேட்டிருக்கிறார். இவரோ ஒன்றும் விளங்காமல் 'என்ன செய்தோம்',என்று கேட்டிருக்கிறார். 'நூத்துக்கணக்கான பேர கொன்றது ஞாயமா'என்று கேட்ட பிறகுதான் அதன் அர்த்தம் புரிந்திருக்கிறது.
இரண்டு பேரும் மிக நெருங்கிய நண்பர்கள். சினிமா அரசியல், உடை, உணவு போன்றவற்றில் ஒரே கருத்தும் ரசனையும் அவர்களுக்குள் இருந்ததாகப் பலமுறை என்னிடம் சொன்னதுண்டு. அப்படியிருந்தும் அந்தக் கேள்வி மிகவும் உலுக்கியிருக்கிறது. நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு ரொம்ப புலம்பினார். நான் இந்த தேசத்துக்காரன், இந்த மாநிலம் தான் எனது சொந்த மாநிலம்,உனது ஊர்க்காரன், சக ஊழியன், ஒரே சங்கத்து உறுப்பிணன், நண்பன், இதையெல்லாம் ஒரே ஒரு கணத்தில் அழித்து விட்டு, என்னை இன்னொரு தேசத்துக்காரனோடு தள்ளி விடுவது எப்படி அறிவார்ந்தவன், படித்தவன் வார்த்தையாகும். என்று ஆயிரம் கேள்விகளை கேட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தென்காசிக்கிளை செயலாளர் தோழர் நாசர்.


படித்தவன் எல்லாமே அறிவாளி, நல்லவன் என்று நம்புவது மூடத்தனம்.



அநதக் காலத்தில் தோல் பாவைக்கூத்து ஊர் ஊருக்கு நடக்கும். அதில் ராமாயணத்தில் வாலிவதம் என்று ஞாபகம். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் சண்டை வரும். போர் அறிவிப்பார்கள். போரில் ஈடுபடுகிற இரண்டு தரப்பும் குரங்குகள், அதுவும் தென்னாட்டுக் குரங்குகள். கூட்டம் கூட்டமாகச் சண்டை நடக்கும் இதில் எது வாலி குரங்கு எது சுக்ரீவன் குரங்கு என்று வித்தியாசம் தெரிய வேண்டுமே என்னும் சர்ச்சை வரும். அப்போது சுக்ரீவனின் படைக்கு நாமம் போடுவார்கள். வாலியின் படை கை ஓங்கி விடும். சுக்ரீவன் பகுதியில் நிறையச் சேதமாகும். அன்று இரவு நடக்கிற ஆலோசனையில் சுக்ரீவன் படையில் உள்ளவர்களுக்கு நாமம் போட்டு விட்டால் அவர்கள் தங்களுக்குள்ளே அடித்து மாய்ந்து போவார்கள் என்று முடிவாகி, அந்த முடிவை அமல்படுத்துகிற பொறுப்பு பபூனுக்கு வரும். அப்புறம் சண்டை சிரிப்பாக மாறும். சேதம் நாமம் போடாத குரங்குகள் பகுதியில் அதிகமாகி சுக்ரீவன் ஜெயிப்பார்.



இது சின்ன வயதில் பார்த்த பாவைக்கூத்து கதை.
கதை நடந்ததாகச் சொல்லப்படுவது எதோ ஒரு யுகத்தில். கதை பார்த்தது அறுபது,எழுபதுகளில். ஆனாலும் இன்னும் தொடர்கிறது சூழ்ச்சியின் கண்ணிகள் அறுபடாமல்.

1 comment:

geevanathy said...

///நான் இந்த தேசத்துக்காரன், இந்த மாநிலம் தான் எனது சொந்த மாநிலம்,உனது ஊர்க்காரன், சக ஊழியன், ஒரே சங்கத்து உறுப்பிணன், நண்பன், இதையெல்லாம் ஒரே ஒரு கணத்தில் அழித்து விட்டு, என்னை இன்னொரு தேசத்துக்காரனோடு தள்ளி விடுவது எப்படி அறிவார்ந்தவன், படித்தவன் வார்த்தையாகும். என்று ஆயிரம் கேள்விகளை கேட்டார். ////

இனம்.மொழி, பிரதேசம் சார்பாக நா தீ கக்கிவிடுகையில் உடையும் உள்ளங்கள் ஏராளம்....

இந்த துயர் நிறைந்த சம்பவத்தின் பலரும் தவறவிட்ட ஒரு பகிர்வு...