3.9.10

வம்சம்,நான் மகான் அல்ல = வேறுவேறு அல்ல.

எப்படித் திருப்பிப்போட்டுப் பார்த்தாலும் ஒரேவகையான கதைகளிலேயே சிக்கிக்கொண்டு கிடக்கிறது தமிழ்சினிமா.முன்பாதி வாழ்வின் அன்னியோன்யங்களையும்,சின்னச்சின்ன மகிழ்ச்சியான தருணங்களையும் செதுக்கிக்கொடுக்கிற இயக்குனர்கள் பின்பாதியில் கொலைகொலையாக் குவிக்கிறார்கள்.கார்த்தி ஐசிஐசிஐ வங்கியின் கடன்தவணை வசூலிக்கப்போகும் காட்சியும் மனிதாபிமானத்தால் பறிபோகும் வேலையும் வேதனைகலந்த விகடம்.அதிலும் கிரிக்கெட் பார்க்கிற குடும்பத்துக்குள் புகுந்து ஒரு கிரிக்கெட் வெறியனாக மாறிப்போகிற போது இயக்குனரின் சமூக எள்ளல் அருமையாக வெளிப்படுகிறது.வம்சம் படத்தில் அம்மா,வீடு,கஞ்சாக்கருப்பு மற்றும் கிராமத்து குசும்புகள்.அதை அப்படியே நான்மகான் அல்லபடத்தில் அம்மா, அப்பா, தங்கை நண்பர்கள் நகரத்து கிறக்கும் தருணங்களாக்கியிருக்கிறார்கள்.

அங்கே எதேச்சையாய் ஒரு பெண் இங்கேயும் கல்யாணவீட்டில் ஒரு பெண்.காதலை முன்மொழிய அங்கு சங்கோஜம் இங்கே மணிரத்னம் ஸ்டைல்.எல்லாச் சினிமாக்களிலும் ஒரே ஒரு டூயட் பாடலில் காதலாகி பாடல் முடிவில் அப்பாக்களுக்கு தெரிவது தமிழ்சினிமாவின் மரபார்ந்த இலக்கணங்களில் ஒன்று. இப்படியே ஒவ்வொரு ப்ரேமாக இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.இடைவேளையோடு ஒரு திருப்பம் அதிலிருந்து வெள்ளித்திரை முழுக்க ரத்தக்களரி.அந்த ரத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் களம் ஒரே வகையான,ஒரே மாதிரியான,ஒரே பக்கமாக சாய்வது இங்கே தவிர்க்கமுடியாததாகிறது.அதுதான் ஏனென்றே விளங்கவில்லை.

எத்தனை கொலைகளைக் காண்பிப்பது, எவ்வளவு குரூரமாய் காண்பிப்பது என்பதில்தான் சமீபத்திய சினிமாக்களுக்குள் போட்டியே நடக்கிறது.ஒரு ஆட்டுக்குட்டியை அறுப்பதற்குக்கூட கரணங்கள் கற்பிக்கிற பரிகாரமும் செய்கிற மனித மான்பைக் கொச்சைப்படுத்துகிற காட்சிகள் அருவருப்பானவை.இன்னொன்று விகட வேடம் பூசிக்கொள்ள இங்கே காலங்காலமாய் கருப்பு மனிதர்கள் தான் தெரிவு செய்யப்படுகிறார்கள்.அந்தப்பீடையிலிருந்து பாலாஜி சக்திவேல்களும்,பாண்டிராஜுக்களும் மீண்டு வரமுடியவில்லை.ஆமாம் இது விஷயத்தில் தமிழ்திரையின் மரபு இன்னும் கற்காலத்திலேயே கிடப்பது வேதனைக்குரிய விடயம்.

இன்னொன்று தமிழ் பேசத்தெரியாதது மட்டுமே நடிகைகளுக்கான உயர்ந்த பட்சத் தகுதியாகிவிட்டது.கலைக்கு மொழியில்லை என்பதை அப்படியே ஏற்றுக்கொள்கிற விரிவு இருந்தாலும்.வடமாநிலப் பெண்களைத் தவிர யாரையும் நடிகையாக்கக் கூடாது என்கிற தமிழ்ச்சினிமாவின் சங்கல்பமும் அதன் சூட்சுமமும் தான் பிடிபடவில்லை.தமிழ்த்திரையின் பாரபட்சமற்ற ஆய்வாளர்கள் இது பற்றி ஏதும் சொல்லியிருக்கிறார்களா ?. அப்படியிருந்தால்  அறியத்தாருங்கள்.

காதல் படத்தில் ஊரைவிட்டு ஓடிப்போன ஜோடிகள் சுகுமாரனின் இருப்பிடத்துக்கு தஞ்சம் புகுவார்கள்.அறையில் தங்கியிருக்கும் சக தோழனின் நண்பனுக்காக தங்களின் குறைந்த பட்ச இருப்பிடத்தையும் விட்டுக்கொடுப்பார்கள்.அந்த கல்யாணத்தைக் கொண்டாடுவார்கள்.இவை எல்லாம் வாழ்க்கையில் எஞ்சியிருக்கிற நம்பிக்கையைத் தூக்கிப்பிடிக்கிற காட்சிகள். ஆனால் நா.ம.அல்ல படத்தில் நம்பி வந்த நண்பனைக் கொன்று விட்டு அவனோடு வந்த பெண்ணைப்பாலியல் பலாத்காரம் செய்கிற இளைஞர்களாக ஒரு குழுவைக் காண்பிப்பது அபத்தம். மிருகங்களில் கூட இப்படியொரு பழக்கம் இருக்கவே முடியாது.அவர்களில் ஒருவன் முஸ்லீமாகவும்,இன்னொருவன் கழுத்தில் சிலுவையைத் தொங்கவிடுவதும் விஷமத்தனமான காட்சிகள்.கல்லூரியில் முதலாண்டு படிக்கிற மாணவர்கள் நான்குபேர் சேர்ந்து ஒரு தொழில் முறை தாதாவை அதுவும் அவரது குப்பத்திலேயே வைத்து ஜஸ்ட் லைக்தட் போட்டுத்தள்ளுவது ரத்தத்தில் தோய்த்தபூவைக் காதில் சுற்றுவதாகும்.நா ம அல்ல படத்தில் கத்தியில் விஷம் தடவிக்கொள்ளுகிற உத்தி,வம்சத்தில் கத்தாழைக்குருத்தில் விஷம் தடவி.

நீங்கள் அப்படியே வம்சம் படத்துக்கு வந்தால் கொலைசெய்வதை ஒரு பாரம்பரியப் பெருமையாகவும்,திருவிழாக்கள் கொலைசெய்ய தேர்வு செய்யும் நேரமாகவும் அர்த்தப்படுத்துகிறார் அன்புத் தம்பி பாண்டியராஜன்.அவ்வளவு நடக்கிற இடத்தில் காவல் துறை கையலாகாததாக இருப்பதுபோலொரு தோற்றத்தைக் கொண்டுவருவது அனுபவ குறைச்சலைக் காட்டுகிறது.அதுவும் ஒரு காவலரே ஒரு ஜாதியின் பெருமையை ஒரு மணிநேரம் காலாட்சேபம் நடத்துகிற மாதிரியான காட்சிகள் பாண்டசி வகையைச் சேர்ந்தவை. லாக்கப் மரணங்களும், லத்திசார்ஜுகளும்,என்கவுண்டர்களும் மலிந்துகிடக்கிற காவல் துறைகுறித்து சின்ன ஞானம் கூட இல்லாததைத்தான் இது காட்டுகிறது.

இந்த தேசம் அதன் கல்விக்கொள்கை.அதன் அயல் கொள்கை.இங்கிருந்து சட்டபூர்வமாய் களவாடப்படும் கனிம வளங்கள்.வேலையில்லாத் திண்டாட்டம் என ஒரு கோடி பிரச்சினைகள் இங்கிருக்கிறது.எல்லாம் விடுபட்ட கேள்விகளாகி கிராமங்களில் அருவா பூத்துக்குலுங்குவதும் அதன் மஹிமை சொல்லுவதும்.நகரத்தில் பேட்டை மக்களை ஒடுக்குவதுமான முரண்பாட்டுடன் கூடிய ஒரே ஸ்டீரியோ டைப் கதைகள்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவின் விற்பனைப் பொருள்.இதை சிடியில் பார்த்தாலென்ன,பயாஸ்கோப்பு படச்சுருளில் பார்த்தாலென்ன,பென்  ட்ரைவரில் பார்த்தாலென்ன ?

1 comment:

லெமூரியன்... said...

அருமையாய் சொல்லியிருக்கீங்க..!
இந்த கூத்துக்காகத்தான் இப்போலாம் நான் தமிழ் சினிமா பக்கம் ஒதுங்க்றதே இல்ல..!
:-) :-)
அந்த நேரத்தில ஏதோ ஒரு அழகான புத்தகம் வாசிக்கலாம்
அல்லது சுற்றியிருக்கும் விஷயங்களை ரசிக்கலாம் :-)