31.8.10

ஒரு குறிக்கோளற்ற காலைப்பொழுதும்,ஒரு மரப்பாச்சியின் சித்திரமும்.

எழுவதும் படுக்கை நீள்வதுமானது அந்தந்த நேரத்தின் சோம்பேறித்தனத்தால் தீர்மனிக்கப்படுகிறது.ஒரு இரவு சந்தோசமானதாக நீள்கிற போது அந்த நான்காம் ஜாமத்துக் குருவியின் சத்தம் இளயராஜவின் இசையூடு இழையாக்கி எழுப்பிவிடும்.மூன்றாவது வீட்டில் குடியிருக்கும் வீ ஏ ஓ வின் சுற்றுச்சுவர்  இரும்புக்கதவு திறக்கும் ஓசை அந்ததெருவின் கவனத்தை ஈர்க்கிற ஓசையாகும்.அவரது மடிப்புக் குழையாத முழுக்கை வெள்ளைச் சட்டையின் நிறமும் தலைகுனிந்த படி கடந்துபோகும் நடையின் லயத்தில் இனம்தெரியாத சிநேகம் வரலாம் .முற்றத்து வாதா மரத்திலிருந்து உதிர்ந்து விழும் வாதாம்பழம் ஒரு குண்டு விழுகிற ஓசையாகி வாசலில் உருளும்.எதோவொரு வீட்டுக் கழிப்பரையில் ஊற்றும் தண்ணீரின் சத்தம் மழைக்கால ஓடைச்  சலசலப்பை நினைவு படுத்திவிட்டுப் போகும்.

மங்கிய இரவு விளக்கின் ஒளியில் ஆடை விலகித்தூங்கும் அவளின் முகத்தில் படருகிற ரோமக்கற்றைகளை மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்களோடு போட்டிக்கனுப்பலாம்.ஜன்னல் திறக்கும் போது வேலிச்செடிக்கருகில் நின்றபடி மலம் கழிக்கும் முதியவரின்மேல் கோபம் வராது கடந்தும் போகும்.இதே காற்றுத்தானே நேற்று சாயங்காலம் பைக்கில் வரும்போது மண்ணள்ளிக் கண்ணில் தூற்றியது என்கிற நினைப்பே வராமல் த்ரேகம் முவுக்க நீரூற்றித் துடைப்பது போல் தழுவிவிட்டுப்போகும் மாசுபடாத் தென்றலைச் சிலாகிக்கச்சொல்லும்.

நடைபயணம் போகவா கூகிளோடு பயணம் போகவா என்கிற கயிறிழுப்பில் எது ஜெயித்தாலும் சந்தோஷம் வரும்.ஓசைப்படாமல் பால்பாத்திரம் கழுவி ஒரே ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கத் தெரிந்தால் வாசற்படியில் உட்கார்ந்து சூட்டோ டு நிலவையும் காற்றையும் குருவியின் கீற்றையும் குழைத்துக் குடிக்கலாம். தொகுக்கப்பட்ட சிறுகதைத்தொகுதியின் எழுத்துப்பிழையை இன்றைக்காவது சரிசெய்ய வேண்டுமென்கிற தீர்மானம் பாராவின் கவிதையில் உடைந்தோ,பாலாண்ணாவின் நையாண்டியில் சிதறியோ திசை மாறலாம்.அழகே அழகு தேவதை என்கிற ஜேசுதாஸின் பாடலைத் தட்டிவிட்டுக் கேட்கிற ஆவல் தூங்குகிற யாரையும் இடர்படுத்தக்கூடாது என்கிற எச்சரிக்கையில் தோற்றுக்கூடப் போகலாம்.

கடந்துபோன ஒண்ணரை மணிநேரத்தில் உருப்படியாக ஏதும் செய்துவிடாதது தெரிந்தாலும் லாபம் நட்டம் பார்க்காத வாழ்க்கை.பச்சை நிற பால் பாக்கெட் கிடக்கிறது. தீக்கதிர் பேப்பரும்,போன் பில்லும்,சிலநேரம் தூரத்து நண்பர்களிடத்திலிருந்து வந்துசேரும் புதுப்புத்தகமும் விழுந்துகிடக்கிற அதே இரும்புக் கதவுப் பெட்டியில் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் மல்லிகையும் கதம்பமும் சுருண்டுகிடந்து  அது வாசலைக்கடக்கிற போதெல்லாம் சுகந்தம் வீசும்.

0

வழக்கமான மெதுநடையில் இன்னும் கூடுதல் மெதுவோடு வரும் அவள் கையில் டீத்தூள் இருக்கிறது.முகம் நிறைய்ய சஞ்சலம் அப்பிக்கிடக்கிறது. வந்ததும் அந்தப்பிள்ளை செத்துப்போச்சு என்று சொன்னாள்.சொன்னதும் சூழல்  அப்படியே வெக்கையாகிறது.

அவள், 

அந்தப்பிள்ளை பார்க்கிற நேரமெல்லாம் வியப்பைக்கொண்டு வந்து தருகிறவள்.ஒரு பெரிய மரப்பாச்சியைப் போல திருப்பிபார்க்கச் சொல்லுகிற சின்னக் கால்கள்,சின்ன முகம்,சின்ன பார்வை, சின்ன பேச்சு.பொதி சுமக்கிற பள்ளிப் பையை இழுத்துக்கொண்டு வாசலைக்கடந்து போவாள். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஒருநாள் பட்டுச் சேலைஉடுத்திக் கொண்டு கடந்துபோனாள். மாறுவேடப் போட்டி பார்க்கிற ஆவல் தான் அவள் மேலிருந்தது  அதன் பிறகும் பொதியச் சுமந்து கொண்டே ஒன்றிரண்டாண்டு கடந்துபோயிருக்க கூடும். வளர்க்கிற கிடாயெல்லாம் வெட்டத்தான் என்கிற நினைப்பு வருகிற மாதிரி ஒரு நாள் அவளோடு ஒரு கனத்த ஆடவன் நடந்துபோனான்.சித்தப்பா வயசிருக்கும் அவனுக்கு. பளபளத்து காப்பிக்கலரில் தொங்கும் மாங்கொழுந்து இலைகளின் மேல் பாரக்கயிறு கட்டியது போல இருந்தது. காற்று வாங்கப்போய் கவிதை வாங்கி வரலாம், இவள் கழிவு வாங்கிவந்தாள். அப்போதும் கூட மரப்பாச்சியின் சிரிப்போடுதான் கடந்துபோனாள்.

ஒரு பகல்நேர பேருந்து பயணத்தில் பின்னிருக்கையிலிருந்து சிகரெட்டு நெடி வந்தது திரும்பிப் பார்த்தால் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவன் புகை பிடித்துக்கொண்டிருந்தான். ஓடுகிற பேருந்தில் புகை பிடிக்கக் கூடதென்கிற
பொது விதியை அல்ல,சக மனிதனின் முகச்சுழிப்பை உதாசீனப்படுத்துகிற அவனோடு அந்தப் பிஞ்சுப்பெண் சிரித்த முகத்தோடுதான் உட்கார்ந் திருந்தாள்.இன்னொரு மாலை நேரத்தில் முழங்கை வரை வளையல் அடுக்கிக்கொண்டு கன்னக் கதுப்புகளில் துடைக்கப்படாத சந்தனத்தோடு வயிறு புடைக்க கடந்துபோனாள்.அப்போது தான் சின்னச் சஞ்சலத்தைப் பார்க்கமுடிந்தது. அவளின் எதிரே, அவளினும் வயது முதிர்ந்த,அவளினும் தேகம் பெருத்த மாணவி தோளில் பை மாட்டிக்கொண்டு கடந்து போனாள்.

பிறகந்த மரப்பச்சியின் கையில் இன்னொரு மரப்பாச்சி இருந்தது.அதோடு பேசிக்கொண்டு இரண்டு மழலைக் குரலாகக்கடந்து போய்க் கொண்டிருந்தாள். அந்த நாட்களில் தான் அவளைப் பற்றியும்,  அவள் குடும்பத்தைப் பற்றியும் என் மனைவி சொன்னாள்.அது இந்த தேசத்து கோடிக்கணக்கான விளிம்புப் பெண்களின் இன்னொரு கதை.அதன் பிறகான நாட்களிலெல்லாம் அவள் கடந்து போகும் போது, குருவி தலையில் பனங்காய் பழமொழி தான் நினைவுக்கு வரும்.அந்தக் குருவியும் முரட்டுக் கணவன் இல்லாத தனி நடைதான் நடந்துகொண்டிருந்தாள். அப்போதும் கூட அவள் முகத்தில் சிரிப்பு அழிக்கப்படாமல் இருந்தது. அது அந்த அடலசண்ட் வயதுக்கான சிரிப்பு. அப்படியே தங்கிப்போய் விட்டது  போல.

தற்கொலை முயற்சி செய்து பெருநகர் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னபோது  நம்பவே முடியவில்லை. ஒரு மரப்பாச்சி எப்படித் தற்கொலை செய்துகொள்ளும் என்பதான நெருடல் கேள்விகள் முளைத்துப் பின் வழிமறிக்கும் அன்றாடங்களால் கருகிப்போய்விடும்.இதென்ன கொடுமை இந்தச் சின்ன வயசில் இப்படியொரு விரக்தி என்று கேட்டேன்.உலகத்துக்குத் தான் இன்று அவளது இறந்த நாள். உள்ள படிக்கு  அவளுடைய கல்யாண நாள் தான் இறந்தநாள் என்று சொன்னாள்.

10 comments:

வானம்பாடிகள் said...

ம்ம்ம். நெஞ்சு, உடம்பு எல்லாம் தளர்த்தி அதிகாலைச் சுகம் அனுபவிக்கையில் அடிவயிற்றில் மெல்ல் மெல்ல சங்கடமெழுப்பி சரேலென்று இறங்கித் திருகிய கத்தியாய் யதார்த்தம். நவராத்திரி கொலுவில் கூட கடைசி நாள் மரப்பாச்சியை மட்டும் படுக்க வைப்பார்கள் இல்லையா? ஏதாவது தொடர்பிருக்குமோ என்று சம்பந்தமில்லாமல் மண்டைக் குடைச்சல்.

kashyapan said...

மரப்பாச்சியின் மீது பரிதாபம் வரக் கூடாது தோழா!கணவன் என்ற பெயரில் அந்த மரப்பாச்சியைப் பெண்டாளவந்தானே அவன் மீதும் அதனை அனுமதித்த வர்கள் மீதும் கொபமும் ஆங்காரமும் வருகிறது....Bandit queen என்ற படத்தில் இப்படி ஒருகாட்சி உண்டு.அந்தச் சிறுமி மிகப் பெரிய கொள்ளைக்காரியாக மாறுவதற்கு இதுவும் ஒரு காரணம்....காஸ்யபன்.

Sethu said...

I haven't read fully. Will come back later. உங்கள் எழுத்தோடு எப்பொழுதும் ஒன்றிப் போய்விடலாம்.

"லாபம் நட்டம் பார்க்காத வாழ்க்கை"
ஆமாங்க. வாழ்கையில் பார்க்கக் கூடாது. பார்த்தா எப்போதும் negative தான். 1 or 2 percent தான் +ve ஆகா தெரியும்.

Sethu said...

Sad story at the end. Sorry to hear.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\லாபம் நட்டம் பார்க்காத வாழ்க்கை.//

வாழ்க்கையின் விநாடிகளை அழகாக பதிந்துகொண்டே வந்தீர்கள்.. ஒரு இழப்பின் பகிர்தல் அந்த அழகுக்கு நடுவே இருக்கும் பெரும் துயரத்தை காட்டியதில் அழகெல்லாம் ரப்பர் வைத்து அழித்தது போல ஆகிவிட்டது.. :( என்ன வாழ்க்கை ?

velji said...

/பளபளத்து காப்பிக்கலரில் தொங்கும் மாங்கொழுந்து இலைகளின் மேல் பாரக்கயிறு கட்டியது போல இருந்தது. காற்று வாங்கப்போய் கவிதை வாங்கி வரலாம், இவள் கழிவு வாங்கிவந்தாள்/

நிகழ்வை அப்படியே பதிவு செய்த வரிகள்.

சில மரப்பாச்சிகளை நினைக்க வைத்துவிட்டீர்கள்.

ஹேமா said...

வாழ்வதாகச் சொல்லிக்கொண்டு மரப்பாச்சி பொம்மைகள் இன்றும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

பா.ராஜாராம் said...

நாமலே அந்த மரப்பாச்சியை பார்த்தது போலான ஒரு பதிவு. எத்தனை முறைதான் உம்ம கையை எடுத்து கண்ல ஒத்திக்கிறது ஓய்?

க.பாலாசி said...

கலங்கச்செய்கிற பதிவு. எங்கெங்கோ இழுத்துச்சென்று கல்யாணநாளில் நிற்பாட்டி கனக்கச்செய்துவிட்டீர்கள்.

Sethu said...

பா.ரா. வின் பதிவிலிருந்து (http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_11.html) இதை கிடைக்கப் பெற்றேன். நன்றி.

அப்பா! எவ்வளவு அற்புதமான எழுத்துக்கள். நீங்கள் புத்தகம் வெளியிட்டால் தெரியப் படுத்துங்கள். இம்மண்ணின் மக்களது எழுத்துக்கள் போற்றக்கூடியவை. நன்றி.
அன்புடன்.