9.8.10

அங்குமிங்கும் - பராக்குபார்த்தல்.

சரவனா ஸ்டோர் நெரிசலில் இருந்து தெரித்து வெளியே வந்தபோது எதிர்த்த சாரியில் ஒரு கிண்ணம் பப்பாளி துண்டுகள் வாங்கிச்சுவைத்தது ஆசுவாசமாக இருந்தது.தின்றுகொண்டிருக்கும்போதே கடைக்காரம்மாவின் பையன் வந்தான் ' இந்த மதியானத்துல தூங்குது பாருபா கடயாண்ட குந்திகினா பொயப்ப பாக்லாம்,தூங்குனா இன்னா ஆவுறது'என்று என்னிடம் தன் மகனைப்பற்றி புகார் செய்தாள்.அதற்கு அவன் சொன்னபதில் பப்பாளியை கசப்பாக்கியது.போட்டுவிட்டு நடையைக்கட்டினேன்.இல்லை பிதுங்கி பிதுங்கி வெளியேறினேன்.நடைபாதையெங்கும் வியாபாரிகள் கோலியாத்தை எதிர்க்கிற தாவீதின் குரலோடு சரவனா ஸ்டோ ரொடு மல்லுக்கு நின்றார்கள்.புல்லாங்குழல் இசைத்து விற்றுக்கொண்டிருந்த வடநாட்டு பையன் என் சட்டைப்பையில் பிதுங்கிய ரூபாய்த்தாளை பாதுகாக்கச்சொன்னான்.என்னை விட அந்த இருபது ரூபாயின் மதிப்பு அவனுக்குத்தான் அதிகம் தெரியும்.

அங்கிருந்து புத்தகம் வாங்கவேண்டுமென்கிற தீர்மானத்தில் பாரதி புத்தகாலயம் போனேன்.சென்னை தேனாம்பேட்டை சிக்னலுக்கெதிரே போகும் இளங்கோ சாலையில் அந்த புத்தகக்கடை இருக்கிறது.அங்கே வாங்கிய புத்தகங்கள் சிலவும் சுட்ட புத்தகங்கள் பலவும் என்னோட கையிருப்பு.கடையில் ஆறு புத்தகங்கள் சுடச்சுடக்கிடந்தது. லதா ராமகிருஷ்ணனின் மொழியாக்கத்திலும் தொகுப்பிலும் வந்த கருப்புக்குரல்கள் கவிதைத்தொகுப்பு,இலாவிசெண்ட் எழுதிய தமிழ் நிலமும் இனமும்,அப்புறம் இரா.முருகவேள் மொழிபெயர்த்த ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மூன்றும் வாங்கினேன். சட்டைப்பயில் கணம் குறைந்தது.தெரிவுசெய்த மற்ற புத்தகங்களிடம் வாய்தா வாங்கிக்கொண்டு கிளம்பியாயிற்று.

அரசு விரைவுப்பேருந்தில் பயணம். வண்டி ஏறும்போது விக்கிரவாண்டி உணவு விடுதிக்கு போகக்கூடதென்று வேண்டிக்கொண்டேன்.அப்படியே உன்னால் முடியாது போனாலும் அந்தநேரம் பார்த்து உரக்கத்தையாவது கொடுத்துவிடு கடவுளே என்று துணைக்கோரிக்கையையும் வைத்தேன்.பலிக்கவில்லை.மூத்திர நெடியும்,கட்டாயக்குரலும் உலுக்கிப்போட எழுந்து கீழிறங்கிப்போனேன்.வயிறு இரைச்சல் தாங்க முடியவில்லை.ஒரு பட்டர் பண் போதுமென்று வாங்கினேன்.பரவாயில்லை எட்டுரூபாய்தான் தீட்டினான்.

வண்டி மீளக்கிளம்பியதும் அந்த தாய்லாந்துக்காரப் பயணி மீண்டும் சத்தமிட்டான்.'நீங்கள் இந்தியர்கள் எல்லோரும் மோசடிப்பேர்வழிகள்' என்று ஆங்கிலத்தில் உரக்கத் திட்டினான். பக்கத்து இருக்கையில் இருந்த ஐடி ஜோடி ஆங்கிலத்தையும் நாட்டுப்பற்றையும் எடுத்துக்கொண்டு எதிர் மல்லுக்குப் போனார்கள்.நீங்கள் இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள் அநீதியைக்கண்டு ஆத்திரம் கொள்ளத்தவறியவர்கள் என்று மீண்டும் கத்தினான்.'கூர்க்கா நல்ல மப்புல இருக்கான்' என்று பக்கத்துப்பயணி சொன்னார்.ஒருவேளை அவன் மதுக்கிறக்கத்தில் கூட இருக்கலாம்.
அவன் சொன்னதில் தவறேதும் இருப்பதாகப்படவில்லை.     

நேற்று களவானி படம் பார்த்தோம் திருட்டு விசிடியில் தான்.அது அயல் சினிமாவிடமிருந்து களவாங்காத மண்னின் கதை.ரெண்டு ஊர்.பகை. கொலை விழுகாத கதை.விமல் குழுவும்,கஞ்சாக் கருப்புவும் சேர்ந்து வயிற்றைப்புண்ணாக்குகிறார்கள்.எந்திரன்களை அடக்குகிற விசைப்பொத்தான்கள் இப்படியான நேர்மையான கதைகளில் தானிருக்கிறது என்று உரக்கச் சொல்லவேண்டும்.

11 comments:

RAJ said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

ராம்ஜி_யாஹூ said...

அருமை.
அப்படியே நானும் உங்களுடன் ரங்கநாதன் தெரு, உஸ்மான் தெருக்களில் நடந்த ஒரு உணர்வு.
உண்மையில் சந்தித்து நடந்து போகும் உணர்வை எழுத்துக்களில் கொண்டு வரும் ஆற்றல் உங்களிடம் உள்ளது சாமி, வேறு என்ன வேண்டும்.

புகைப்படங்களே தேவை இல்லை.

செ.சரவணக்குமார் said...

//எந்திரன்களை அடக்குகிற விசைப்பொத்தான்கள் இப்படியான நேர்மையான கதைகளில் தானிருக்கிறது என்று உரக்கச் சொல்லவேண்டும்//

உண்மை அண்ணா. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அங்காடித் தெருவையும் கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.

velji said...

ரங்கனாதன் தெருவில் ஒரு மேன்சனில் இருந்தேன்.உங்களைபோலவே தப்பி ஓடி வந்து 15 வருடங்கள் ஓடி விட்டது!

ந்ல்ல பதிவு!

சிநேகிதன் அக்பர் said...

கூடவே பயணித்த உணர்வு. நல்லாயிருக்கு சார்.

லெமூரியன்... said...

வணக்கம் அண்ணா...!
கலக்குறீங்க...!
சென்னை பக்கம் வந்திருக்கீங்க... ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே???
சுவையாய் இருக்கிறது பயணக் குறிப்பு...!
:-)

கே.ஆர்.பி.செந்தில் said...

//அரசு விரைவுப்பேருந்தில் பயணம். வண்டி ஏறும்போது விக்கிரவாண்டி உணவு விடுதிக்கு போகக்கூடதென்று வேண்டிக்கொண்டேன்//

ஒவ்வொரு முறை கடக்கும்போதும் எனக்கு இந்தக் கடைகாரர்களைப் பார்த்தால் எரிச்சலாயிருக்கும்,

ஆனால் அங்கு ஒளிபரப்பாகும் நாட்டுப்புற பாடல்கள் என்னை வசீகரிக்கும்... .

சீமான்கனி said...

காட்சி...காட்சி பயணிப்பது போல கருத்துகளும் அருமை...

//எந்திரன்களை அடக்குகிற விசைப்பொத்தான்கள் இப்படியான நேர்மையான கதைகளில் தானிருக்கிறது என்று உரக்கச் சொல்லவேண்டும்.//

எதார்த்த மனிதர்களை ஏமாற்றும் சினிமாக்காரர்களை சிந்திக்க வைகட்டும் வாழ்த்துகள் அண்ணே...

angelin said...

yesterday i saw angaditheru movie.today again you have taken me there to ranganathan street.great even without any photos.very nice.

நேசமித்ரன் said...

காமு சார்

இன்னும் பேசி இருக்கலாமோ :)

கடைசி வரி பழுத்த கம்பியில் விழும் சம்மட்டி க்லீங்’

Mahi_Granny said...

இப்படியும் எழுதுங்க எங்க ரேஞ்சுக்கு அப்பப்ப . எனக்கும் சென்னை தி. நகருக்கு வந்த நினைப்பு..