6.8.10

நம்பிக்கையின் நாட்கள்.

அந்தப் பயணம் இன்னும் பாத ஒலிகளோடு கூடவே வருகிறது. சென்னைப்புகைமண்டலத்தின் துகள்கள் இன்னும் தேகமெங்கும் ஒட்டியிருக்கிறது.நாங்கள் தங்கியிருந்த BEFI guest house ன் இரவுப்பொழுதுகள் ஒரு மாணவர் விடுதியின் நாட்களைப் புதுப்பித்துக்கொடுத்தது.பெரு நகர உணவுவிடுதிக்களுக்குள் போய்த்திரும்பி வருவது பேய்பிடித்தது  போலாகிறது. அரிசியை விளைவித்த நிஜ விவசாயி ஒரு கவளம் பருக்கையைக் கூட தின்று திரும்பமாட்டார்.

இருந்தும் வாழ்க்கை அங்கே இருக்கிறது. ஜனங்கள் அங்கே குவிகிறார்கள்.தமிழகத்தின் தலைமை அங்கே இருக்கிறது.அவற்றைத் தீர்மானிக்கிற மினுமினுப்புகள் கூட அங்கே தான் இருக்கிறது.ஜாதி,மத,இன பேதம் மட்டுமல்ல அரசியல் பேதமற்ற ஒருங்கிணைப்பை ஒரே இடத்தில் குவிய வைக்கிற சினிமாவும் அங்கிருந்துதான் கிளம்புகிறது.

ஒரு  நூறு ஆண்டுகால சினிமாவினால் இங்கே ஐந்து முதல்வர்களைத்தயாரித்து தர முடிந்திருக்கிறது.ஆனால் அங்கிருந்து தரமான சினிமாவைப் பெறமுடிந்திருக்கிறதா என்கிற கேள்விக்கு தயங்கித் தயங்கித்தான் பட்டியலிட முடியும்.எல்லாப்படைப்புகளும் ஒருவித்தத்தில் அதனதன் இடத்தில் இருக்கிறது.என்கிற பெருந்தன்மையான கோணத்தில் அலசினால் கூட தமிழ்சினிமாப் படைப்புகள் எல்லாமே ஒரே வறையறைக்குள் இருப்பத்தாக சூடத்தில் சத்தியம் பண்ணிச் சொல்லலாம்.காதல்,குடும்ப செண்டிமெண்ட்,நல்லவன் வாழ்வான் என்கிற மூன்று ஊடு சரடை உருவி எடுத்து விட்டால் சினிமாவில் மிஞ்சுவது சில சொற்ப படைப்புகள் தான்.

அப்படி மிஞ்சுகிற படங்களில் சிலவற்றை இயக்குனர் மகேந்திரன் கொடுத்திருக்கிறார்.முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள்,நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற திரைப்படங்கள் நமக்கு மட்டுமல்ல திரைத் துறையிலிருப்பவர்களுக்குக் கூட இன்னும் மலைப்பான படங்களாகவே இருக்கிறது.அப்படி மலைக்கவைக்கிற ஒரு படைப்பாளியின் அருகில் இருந்துகொண்டு சினிமா குறித்து பேசித் திரும்பியிருக்கிறோம்.

அவரைப்பற்றி பேசுகிற சாக்கில் இயக்குனர்கள் திரு பாலுமகேந்திரா,திரு ராதாமோகன்,திரு தாமிரா ஆகியோர்களிடமும் சமகால இலக்கியம் அரசியல் குறித்தும் பேசித் திரும்பியிருக்கிறோம்.இரண்டு காமிரா,மற்றும் உபகரணங்க ளோடு பெருநகரப்பேருந்தில் பயணம் செய்து சில நேரம் ஆட்டோ வில் பயணம் செய்து பிரபல சினிமாப் படைப்பாளிகளைப் பேட்டியெடுத்து திரும்பியது மலைப்பான விஷயம் தான்.பயணத்தின் நயமான பக்கங்களை தீராதபக்கங்களில் தோழன் மாது இதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறான்.

ஆனாலும் இன்னும் விடுபடமுடியாமல் அதற்குள்ளே அமிழ்ந்துபோன நிகழ்வொன்று உண்டு.அது ரெட்டைச்சுழி படத்தின் இயக்குனர் 'தாமிரா'வினுடனான சந்திப்பிலிருந்துதான். ஒரு பாலத்தின் சுவரில் அமர்ந்து கொண்டு தீவிர இலக்கியம் பேசுகிற மனிதனாக இன்னும் கூடத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிற அசலான கலைஞன்.அங்கிருந்து தோளில்கைபோட்டு அழைத்துக் கொண்டுபோய் வீட்டில் இருக்கிற தானுண்ணும் பதார்த்தங்களை பகிர்ந்து கொடுக்கிறார். ஒரு சிநேகிதனோடும் பசியோடும் அன்பைப் பழகிய நாட்களை மீட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் திரையுலகத்துக்கு.அவர் பேசிய போது கிழித்து எறியப்பட்ட தீக்குச்சிகள் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.அது நம்பிக்கையின் ஜ்வாலையை அடைகாத்து வைத்திருக்கிறது.

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்துக்கு எதிர்ச்சாலையில் தலைதெரிக்கும் வேகத்தில், நெரிசலில். முன் செல்லும் வாடகை சொகுசு உந்துவில் உரசி விழுகிறான் ஒரு இளைஞன்.அவனுக்கும் அவனது இருசக்கர வாகனத்துக்கும் பட்ட அடியும் வாகன இரைசலில் கானாமல் போகிறது.அதை அமுக்கி விட்டு சொகுசு உந்து வண்டியோட்டி பறித்த ஐநூறு ரூபாய்க்காக குரல் கொடுக்க யாருமற்ற அந்த எந்திரச்சூழலில். '..தா என்று கோப்பளிக்கிற ஆட்டோ க்காரரின் கோபத்தில் இருந்து கிளம்புகிற நம்பிக்கை.

பாண்டி பஜாருக்கு திரும்புகிற தெருவில் ஒரு பதாகை தொங்குகிறது. அதில் தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சங்கம் என்கிற பெயர். அந்தப் பெயர் எந்த நம்பிக்கையை விதைக்கிறதோ அதே நம்பிக்கை.ஒரு ஆளும் வர்க்கத்தின் பிரதி நிதியாக இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் திரு உமா சங்கரின்  நம்பிக்கை எதுவோ அதே நம்பிக்கை.அப்படியான நம்பிக்கைதான் இந்த வியாபார சினிமா உலகத்துக்குள் தன்னை பொருத்திக்கொள்ள முடியாமல் போராடிய இயக்குனர் மகேந்திரனின் நம்பிக்கை. அவற்றை எல்லாம் சொல்ல ஒருநாள், ஒரு பதிவு போதாது.

இன்னும் நிறைய்ய பேசலாம்.

17 comments:

Sethu said...

நிறைய உங்கள் பார்வையில் உங்களுக்கே உரித்தான இனிய தமிழில் எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்கள் பட்டினத்துப் பயணத்தின் விவரிப்பு அலாதியானது. நன்கு ரசிக்க முடிகிறது. நன்றி.

சீமான்கனி said...

//அமுக்கி விட்டு சொகுசு உந்து வண்டியோட்டி பறித்த ஐநூறு ரூபாய்க்காக குரல் கொடுக்க யாருமற்ற அந்த எந்திரச்சூழலில். '..தா என்று கோப்பளிக்கிற ஆட்டோ க்காரரின் கோபத்தில் இருந்து கிளம்புகிற நம்பிக்கை.//

சமுக நிகழ்வுகளின் பல பரிமாணங்களை இந்த கருத்து கண்முன்னே கொண்டுவருது அண்ணே...

இயக்குனர் தமிராவை ஒரு தொலைகாட்சி பேட்டியில் பார்த்தேன் உண்மையிலேயே சிறுவர்களை மையப்படுத்தி ஒரு முழு படம் எடுக்க சராசரி இயக்குனரால் முடியாது... சிறந்த இடுக்கைக்கு பாராட்டுகள்...இன்னும் திரட்டிகளில் பகிராமல் இருக்கு. நான் பகிர்ந்து விடுகிறேன்...நன்றி அண்ணே...

velji said...

சென்னையின் நெருக்கடியும்,சினிமாவின் நெருக்கடியும் ஒன்றுதான்.பணத்திற்கும்,அதிகாரத்திற்குமான ஓட்டத்தில் நம்பிக்கயை விதைப்பவர்கள் 'ஆட்டோக்காரன்' போன்ற எளிமையானவர்களே...

தொடருங்கள்..காத்திருக்கிறோம்!

பா.ராஜாராம் said...

பேசும்..

ஒரே பயணம்தான். ஒரே நண்பர்கள்தான்.

பார்வையில் நீர் தொட்டதை, மாது தொட்டிருக்க முடியாது. மாது பார்த்ததை நீர் தொட்டிருக்க முடியாது. கொண்டு வந்து சேருங்கள் இருவரும்.

it's order u know! :-) தூரத்தில் இருந்து எப்படி இரந்து குடிக்கிறேன் பார்த்தீர்களா, ஓய். ஆமா, order-க்கு தமிழ் இரந்து தானே?

(அன்பு, பெருசா ஆங்கிலம் பார்க்காது காமு, மாது) :-)

ராம்ஜி_யாஹூ said...

நானும் நதி கரையின் அருகில் இருந்து விட்டு தான் சென்னை க்கு வந்தவன்.
என் பார்வையில் சென்னை ஒரு சிறந்த இடமே. எத்தனயோ எளிய மக்களை கை தூக்கி விட்டு உள்ளது.

பண்ணைபுரத்தில் வந்த ராசையாவை, பரமக்குடியில் இருந்து வந்த கமல்ஹாசனை, திருக்குவளையில் இருந்து வந்த கலைஞரை, முதுகுளத்தூரில் இருந்து வந்த செந்திலை என்று சொல்லி கொண்டே போகலாம்.

அதே போல கோடம்பாக்கம் பல நல்ல படங்களை படைப்புக்களை அளித்து உள்ளது.

பதினாறு வயதினிலே
சலங்கை ஒலி
வெய்யில்
மூன்றாம் பிறை
நாயகன்
அக்னி நட்சத்திரம்
அஞ்சலி
அங்காடி தெரு
வீடு
நீங்கள் கேட்டவை
வெற்றி கொடி கட்டு
unnaal mudiyum thambi
anbe sivam
வருதம் பதினாறு
கப்பலோட்டிய தமிழன்
பலே பாண்டியா
படிக்காத மேதை

Mahendhiran சிறந்த இயக்குனர் தான், ஆனால் பல மகேந்திரன் கள் உள்ளனர் கோடம்பாக்கத்தில் என்பதே என் செய்தி

kashyapan said...

மூன்று இளைஞர்கள் பாலத்துக் குட்டிச்சுவரில் அமர்ந்து திட்டம் போட்டார்கள்.கோடம்பாக்கத்தைத் திருத்த வேண்டுமானால் அங்குள்ள Star Systamஉடைக்கப் படவேண்டும் என்று கிளம்பினார்கள் கமல்.பாரதிராஜா,லேனின் ஆகிய மூவர் தான் அது..முந்தய இருவரும் அதனை உடைத்துக் கொண்டிருக்கும்போதே star systaத்திற்குள் கரைந்து போய்விட்டார்கள்.தன்னந்தனியாக லேனின் தான் அதனை நடத்திக் கொண்டிர்ந்தார்.அவரும் பாவம் ஒதுங்கிவிட்டார்.மகேந்திரான் தன் படைப்புகள் மூலம் தன் போக்கில் செய்துகொண்டிருந்த்தார்.இந்தக் கலைஞர்கள் கூட்டாக முயற்சி செய்யாமல் போனதுதான் வேதனைக்குறியது.....காஸ்யபன்.

காமராஜ் said...

நன்றி சேது.

காமராஜ் said...

கனி என்ன நலமா ?
ஆமாம் கனி.
தாமிரா கலையுலகில் கவனிக்கப்படவேண்டிய மனிதர்.

காமராஜ் said...

பாரா...
அன்புக்கு அன்பு.

காமராஜ் said...

உண்மை தான் வேல்ஜி.

காமராஜ் said...

வணக்கம் ராம்ஜி.இது வரை வெளியான தமிழ் படங்கள் மட்டும்கிட்டத்தட்ட 5400 என்கிறது ஒரு புள்ளி விபரம்.

அதில் நீங்களும் நானும் இன்னும் நம்மைப்போன்றவர்களும் தரும் பட்டியல் உங்களின் பட்டியல்போலத்தான் இருக்கும்.
இருந்தும் நம்பிக்கை தான் பிரதானம்.அதை முன்னிறுத்தவேண்டும்.சம்காலத்த்வர்க்கும் எதிர்காலசந்ததிகளுக்கும்.

காமராஜ் said...

மிகச்சரியாகச்சொன்னீர்கள் தோழர்காஸ்யபன்.கூட்டுமுயற்சிக்கு வேட்டு வைக்கிற எக்கசக்கமான காரணிகள் இருக்கிறது.மந்தன் வெற்றி அதைத்தொடர்ந்த சினிமா ஜான் ஆபிரகாமின் மக்கள் சினிமா முயற்சி பற்றியெல்லாம் பேசவேண்டும்.

க.பாலாசி said...

படிச்சிட்டு என்னன்னவோ சொல்லத்தான் தோன்றுகிறது.. அனுபவமும் அதை இந்தநிலையில் சொல்லியப்பாங்கும் மேலும் காத்திருக்கவே சொல்கிறது...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////அமுக்கி விட்டு சொகுசு உந்து வண்டியோட்டி பறித்த ஐநூறு ரூபாய்க்காக குரல் கொடுக்க யாருமற்ற அந்த எந்திரச்சூழலில். '..தா என்று கோப்பளிக்கிற ஆட்டோ க்காரரின் கோபத்தில் இருந்து கிளம்புகிற நம்பிக்கை./////


நேர்த்தியான எழுத்து நடை மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கிறது . சிறப்பான கண்ணோட்டம் . நல்ல இருக்கு

ஆடுமாடு said...

பிரமாதம். எதிர்பார்க்கிறோம்.

பேசுவதாக சொன்னீர்கள். பேசவில்லை.
இருந்தாலும், நீங்கள் வருவதாக சொன்ன நாளில்
'எந்திரன்' விழாவுக்காக மலேசியாவில் இருந்தேன்.

ஆ.ஞானசேகரன் said...

///ஒரு நூறு ஆண்டுகால சினிமாவினால் இங்கே ஐந்து முதல்வர்களைத்தயாரித்து தர முடிந்திருக்கிறது.ஆனால் அங்கிருந்து தரமான சினிமாவைப் பெறமுடிந்திருக்கிறதா என்கிற கேள்விக்கு தயங்கித் தயங்கித்தான் பட்டியலிட முடியும்.எல்லாப்படைப்புகளும் ஒருவித்தத்தில் அதனதன் இடத்தில் இருக்கிறது.//


வணக்கம் நண்பா,..

யோசிக்க வைக்கும் வரிகள்

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கு உதிரிப்பூக்கள் அளவுக்கு, முள்ளும் மலரும், ஜானி இரண்டுமே புடிக்கும்.. பொதுவாகவே உதிரிப் பூக்களில் விஜயன் ஆளுமை மகேந்திரனின் ஆளுமை...