24.9.10

கனியிருப்பக் காய்கவரும் சாகசம்.

ஜன்னல் வழிப் பார்க்கும் போது மாதுளை மரத்திலிருந்த அணில்களும்,குருவிகளும் வெருண்டோடியது. இயல்பாக ஓடிவிளையாடு வதற்கும் பயந்து ஓடுவதற்குமுள்ள வித்தியாசம்.  அசாதாரணம்.

ஒரு கலவர நாளில். சாத்தூர் நகரின் கடைகள் அணைத்தும் பத்து நிமிட நேரத்துக்குள் மூடியதும்,மனிதர்கள் அங்கும் இங்குமாய் சிதறியதுமான காட்சியைப் பார்க்க நேர்ந்ததோடு ஒப்பிடலாம். ஏழை, ஜாதி,மத பேதமிலாது எல்லோர் கண்ணிலும் பயம் தெரிந்த நேரம் அது.எல்லோரும் வீடு நோக்கி ஓடிய கூட்டத்துக்குள் ஒன்றிரண்டு  காக்கிச்சட்டைகளும் இருந்தது.

இப்படி அணில்,குருவிகள் கலைந்தோடுவது பாம்புகளின் வருகையை முன்னறிவிக்கும்.இன்னும் கூர்மையாய் கவனித்தபோது அப்படியேதும் இல்லை.சுற்றுச்சுவருக்குப் பின்னாலிருந்து அஞ்சு விரல்கள் மெல்ல ஊர்ந்து வந்தது.

கலவரம் போய் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது.கைகள் ஊர்ந்த திசையில் இரண்டு மாதுளம் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தது.பின் வாசல்வழியே மாடிப்படிக்குப்போய் கவனிக்கக்கிடைத்த அனுபவம் அலாதியானது.
சுவரோடு ஒட்டியிருந்த இரண்டு உருவம் காய்களைப் பறித்துக்கொண்டு நழுவியது. ஏதும் நடக்காததுபோல முகத்தை வைத்துக் கொண்டதாய்  நினைத்துக் கொண்டு சில தப்படிகள் கடந்தது.தெருக்கோடி போனதும் ஒரே ஆரவாரம், கூச்சல் ரெண்டு சிறுவர்களும் நிலவுக்குபோய் வந்த சாகசக்காரர்களானார்கள்.

மறு நிமிசமே அணில்களும் குருவிகளும் திரும்பிவந்தன. மறுநாள் மரத்தைப் பார்த்த வீட்டுக்காரி வருந்தினாள். மரம் சிரித்தது.

9 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

இளவயதின் அறியாமையில் அணிலும், சிறுவர்களும் ஒன்றுதான் என்ற பார்வை தோழர்களுக்கே உரித்தானது...

க.பாலாசி said...

பழைய நினைவுகளை உருட்டிவிளையாடிய அழகான சித்திரம்...என்ன இப்ப மாதுளை அப்போது கொய்யா அல்லது மாங்காய்..

காமராஜ் said...

செந்தில்....வணக்கம்.

இதுல.. என்ன தோழர், தோழரல்லாதவர்.
நண்பா என்று சொல்வது எந்த இசத்தையும் குறிக்குமா என்ன ?
'சே' வின் நிழற்படம் தாங்க
ஒரு தில் வேண்டும்.

அப்படியான நீங்கள் தோழரில்லையென்றால்
யாரும் தோழரில்லை.

காமராஜ் said...

வாங்க பாலஜி.
சௌக்கியமா ?
குலாம் சௌக்கியமா?

ஹேமா said...

மாங்காய் பறித்து உப்புமிளகாய் வைத்துச் சாப்பிட்ட ஞாபகம் வருது !ஆனால் இந்த அணில்கள் அகதிகளாய் கூடு திரும்பாமல் !

Sethu said...

குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடுபவர்கள், அவர்களின் விஷமத்தையும் ரசிப்பவர்கள் அனுபவிக்கும் சுகம் இது. அருமை நண்பரே.

வானம்பாடிகள் said...

அந்தப் பொடுசுகளின் உலகத்துக்கு போய் வந்தாச்சு. :)

anto said...

மாமா...எப்பவும் நீங்கள் எனக்கு அற்புதமான வழிகாட்டி...நன்றி மாமா(எனக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு)

பத்மா said...

திருட்டு மாங்கா சாப்பிட ஆசை வருது ...

எத்தனை திட்டு வாங்கிருப்போம்?