12.9.10

அச்சிலேறாத பாடங்கள்

பெருமாளு, நூத்தி ஏழுக்கு யூரின் கேன் வை,
பெருமாளு, சிசேரியன் பேசண்டுக்கு துணிமாத்து,
நூத்திப்பண்ணண்டுல, டயோரியா பேசண்டு ரூம்ல லட்ரின் க்ளீன் பண்ணு,
அறிவே கிடயாதா, இங்க பாரு ஆரஞ்சு தோலு கெடக்கு,......
என்னத்தா எனக்கு இன்னுமா டிபன் வாங்கிட்டு வரல......

அந்த தனியார் மருத்துவமனையெங்கும் இந்தப் பெயர் அங்கும் இங்கும் இழுபட்டுக் கொண்டே இருக்கும். கூப்பிடுகிற திசையெங்கும் முனுமுனுத்துக்கொண்டும், பதில் குரல் கொடுத்துக்கொண்டும் ஒரு சின்னப்பெண்போல அலைகிற அந்தம்மாவுக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். வேலை ஓய்ந்த நேரங்களில் கார் ஷெட்டுக்குப்பக்கத்தில் வெத்திலை போட்டுக்கொண்டிருப்பார்கள். காய்ச்சல் தலை வலியென்றால் வரக்காப்பி வாங்கி அஞ்சால் அலுப்பு மருந்து கலந்துதான் குடிப்பார்கள்.  மாத்திரை, சிரிஞ்ச், ஊசி,  டானிக் பாட்டில், குளுக்கோஸ் பாட்டில் என்பதெல்லாம், அவர்களுக்கு குப்பையில் சேர்க்கிற பொருள் என்பதுதான் பொருள்.  

பேறுகாலத்துக்கு அனுமதிக்கப்பட்ட மனைவியோடு ஒருவார காலத்தில் தாதிப்பெண்களும், பெருமாளம்மாவும்  எங்களோடு ரொம்பவும் சிநேகமாகிப்போனார்கள். சீருடையோடு  சாயங்காலங்களில்  வரும் எல் கே ஜீ படிக்கிற முதல் பையனுக்கு பாடம் சொல்லித்தருமளவுக்கு தாதிப்பெண்கள் மிக அன்னியோன்னியமாயிருந்தார்கள். எடுபிடி வேலைகள் குறைந்திருக்கிற நேரங்களில் பெருமாளம்மா எங்கள் அறைக்கு வருவதும், துணைக்கிருக்கிற மாமியாரோடு வெத்திலையும் ஊர்க்கதைகளும் பகிர்ந்துகொள்வது வாடிக்கையானது. அப்போது பையனைச் ''சின்னவரே, சாமி..  ஒங்க குட்டித்தம்பிய நாந்தூக்கிட்டுப் போறேன் '' என்று கொஞ்சும். எல்லோரையும் போலவே அவனும் '' ஏ பெருமாளு '' என்று கூப்பிட்ட போது வலித்தது. ஆனாலும் பெருமாளம்மாவின் முகத்தில் ஏதும் சலனமில்லை. அதட்டி '' ஆண்டி '' என்று கூப்பிடச் சொன்ன போது 'ஆண்டி' என்பதுவும் பேர்தானே என்று சொன்னது. பிறகுதான் அத்தை என்று கூப்பிடச் சொன்னேன். அவனும் வாய்க்கு வாய் அத்தை என்று கொஞ்சினான். தாதிப்பெண்களையும் அப்படியே கூப்பிடச் சொன்னான். அப்போதெல்லாம் பெருமாளம்மா முகத்தில் மின்னல் வந்து குடிகொள்ளும்.

நாங்கள் ஆசைப்பட்ட அந்த நாள் வந்தது.டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்னால் பெருமாளம்மாவுக்கு ஐம்பது ரூபாய் சன்மானமாகத் தந்தோம்.பிடிவாதமாக வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டு, பிறகு வாங்கிக்கொண்டு கானாமல் போய்விட்டார்கள். அது செய்த உதவிக்கும் அன்புக்கும் பதிலாகப் பணம் தந்து விட்ட திருப்தியிருந்தது. கணக்கு நேர் செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டு வீடு வந்தோம்.

ஆரத்தி தீபத்தோடு புதுக்குழந்தையின் வருகை வீடெங்கும் சந்தோச ஒளி வீசிக்கொண்டிருக்க, மூத்தவன் மட்டும் இது எதிலும் ஒட்டாமல் ஒரு குட்டியூண்டு சைனாக்காரின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான். அது அவனுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் நண்பர்கள் சொந்தங்கள் என ஒவ்வொருவராக அந்தச்சைனாக்காரோடு பொருத்திப் பார்த்தோம். யாருமே பொருந்தவில்லை. ஒரு வேளை பக்கத்திலிருக்கும் கடையில் திருடியிருக்கலாமோ என்ற சந்தேகப்பல் கூட வளர ஆரம்பித்தது. ஆனால் அவனோ, '' இது அத்தை கார் ''  சாவகாசமாகச்சொல்லி விட்டு விர்ரென்று அறைமுழுக்க அலைகிற அந்தக்காரின் பின்னால் போனான். வீடு மொத்தமும் திரும்பிப்பார்த்தது. குழந்தைகளைத்தவிர  எல்லோரும் குற்றவாளிக் கூண்டிலிருந்தோம்.  பெருமாளம்மாளின் குள்ள உருவம் அன்னாந்து பார்க்க முடியாத உயரத்தில் இன்னும் இருக்கிறது.


பரனிலிருந்து     

20 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இது புனைவா !? இல்லை உண்மையாக நீங்கள் சந்தித்த நிகழ்வா !??
நெகிழ வைத்துவிடீர்கள் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

velji said...

அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருப்பவர்களால் கீழிருக்கும் மனிதம் பிழைத்துக்கிடக்கிறது.

அருமை!

வானம்பாடிகள் said...

அட அட! எவ்வளவு அழகா வலிக்காம மறுத்தா மாதிரியுமில்ல, கொடுத்த அழகும் பாங்கு அந்தம்மா.க்ரேட்:)

Sethu said...

ஆஹா! அருமை. முதலில் உங்களுக்கு ஒரு வாழ்த்துக்கள். பெருமாளம்மாக்கு ஒரு பெரிய வணக்கம்.

மனித நேயத்தை உங்களிடமும் உங்கள் எழுத்திலும் நிறைய பார்க்க முடிகிறது. நன்றி நண்பரே.

Sethu said...

உங்க பேஜ் ஓபன் ஆவதற்கு ரொம்ப நேரம் ஆவுது. புது template இனாலா?

ஆடுமாடு said...

அச்சில் ஏறாத பாடங்கள். அருமையான தலைப்பு தோழரே!
உங்களுக்கு பெருமாளம்மா. எனக்கு கிட்னம்மா.

கை பிடித்து ஊருக்கு அழைத்து செல்கிறது உங்கள் மொழியும் ஞாபங்களும்.

வாழ்த்துகள் தோழர்.

ஆ.ஞானசேகரன் said...

//பெருமாளம்மாளின் குள்ள உருவம் அன்னாந்து பார்க்க முடியாத உயரத்தில் இன்னும் இருக்கிறது.
//

உண்மைகளை உணர்வுடன் எழுதிய விதம் அழகு. நல்ல பகிர்வு நண்பா

அம்பிகா said...

படிக்கும் போதே நெகிழ வைக்கும் அருமையான பகிர்வு.

க.பாலாசி said...

உண்மையில் அன்னாந்து பார்க்கவேண்டிய உருவம்தாங்க அது... எவ்வளவு நெகிழ்வான இடுகை...நல்ல மனுஷிங்க...

பத்மா said...

அக்கம் பக்கம் சுற்றும் ஆட்களில் இருந்தே ஆயிரம் கதையும் நேயமும் காணும் உங்கள் கதைகள் ..

உருக்குகிறது

காமராஜ் said...

அன்புக்கும் வருகைக்கும் நன்றி வேல்ஜி...

காமராஜ் said...

வருகைக்கு நன்றி சங்கர். இது பெயர் மாற்றப்பட்ட நிகழ்வு.

காமராஜ் said...

நன்றி பாலாண்ணா

காமராஜ் said...

நன்றி ராம்ஜி

காமராஜ் said...

அன்பின்சேது சார்...நன்றி.

காமராஜ் said...

வணக்கம் தோழர் ஏக்நாத்

காமராஜ் said...

நண்பா ஞானசேகரன் வணக்கம்.

காமராஜ் said...

அம்பிகா நன்றி அம்பிகா.

காமராஜ் said...

வாங்க பாலாசி.

காமராஜ் said...

மேடம் பத்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி