31.8.11

எழுத முடியாமல் கழிந்துபோன நாட்களுக்கான சரிக்கட்டல்.


சாத்தூரிலிருந்து வேலிப் புதர்களைத் தாண்டி நான்கு மணிநேரம் பயணம் செய்து ராமநாதபுரம்.அங்கே ஐந்து இரவுகள் புத்தகங்கள் கொசு கொசுவர்த்தியோடு கழியும்.பகல்களை எல்லாம் வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்வார்கள்.அல்லது மனமுவந்து நானே கொடுத்து விடுவதுண்டு. சண்டையும், கோபங்களும், பேசாவிரதமும் நினைக்க நினைக்க இனிக்கிற தனிமை. அதுமட்டுமா இனிக்கிறது வெறும் வெங்காயம் கிள்ளிப்போட்டு மணக்க மணக்க இறக்கி வைக்கும் மொட்டைச்சாம்பார் இனிக்கிறது.அதன் ருசிதேடி நாக்கு நூற்றித் தொண்ணூற்றி எட்டு கிலோ மீட்டர்கள் நீளுகிறது.திங்கட்கிழமைக்காலை பேருந்து சத்தமும் பயண நினைவுகளும் எரிச்சலூட்ட சனிக்கிழமை அதே பேருந்தும் பயணமும் குதூகலம்தரும் இது ஒரு தவணை முறையிலான புலம் பெயர்தல். என் வாழ்நாளில் அதிகம் சண்டையிட்டுக்கொண்டது பேருந்து அரசுப்பேருந்து நடத்துநர்களிடம் தான்.இப்போதெல்லாம் அவர்களிடத்தில் கொஞ்சம் பரிவும் ஸ்நேகமும் வருகிறது.

சென்ற வாரம் 20, 21, 22 தேதிகளில் சென்னையில் இருந்தேன்.சென்னையில் இருந்தது ஒன்றும் பெரிய தகவல் இல்லை.ஆனால் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதிவர்கள் ஐந்துபேர் சந்தித்துக் கொண்டதுதான் மகிழ்சித்தகவல்.ஐந்து பேரை ஒன்று சேரவைத்தார் தோழர் பத்மஜா.சென்னை டிஸ்கவரி புக்பேலஸில் வலசை இதழ் வெளியீடு நடந்து முடித்திருந்தார் கார்த்திகைப்பாண்டியன்.அங்கே ராஜ சுந்தரராஜண்ணா வையும் தோழர் விதூஷையும் மேவியையும் சந்தித்தோம். வலசை இதழ்களோடு கீரனூர் ஜாகீர் ராஜாவின் மூன்று நாவல்களும் வாங்கிக்கொண்டோம் சென்னை செல்லும்போதெலாம் சந்திக்க எண்ணித்திரும்பியது வானம்பாடிகள் பாலாண்ணா வைத்தான்.அவரால் டிஸ்கவரி புக்பேலஸ் அமைந்திருக்கும் கேகே நகருக்கு அலையமுடியாததாகையால் சென்னையின் குவிமையமான தி நகருக்குச் சென்றோம்.

ஒவ்வொரு எழுத்தும் அதன் வரி வழியே முகங்களைக் கற்பனையில் வரைந்து வைத்திருக்கும்.அந்த கற்பனை ஓவியத்தோடு நிஜ ஓவியத்தை ஒப்பிட்டுப் பார்க்கிற ஒரு போட்டி முடிவும் குறுகுறுப்பும் முன்னோடிச் செல்லும். பின் தங்கிப்போய்  முகங்கள் பார்க்கும் சந்தோஷம் தான் இந்த வலைப்பதிவர் சந்திப்பு. இன்னொரு வகையில் அந்த சந்திப்புகளும் பகிர்தலும் எழுதுவதற்கு உந்துதலாகவும் மாறும். சில நேரம் படித்ததும் எழுத்தத்தூண்டும் சில புத்தகங்களும் நல்ல எழுத்தும் கூட. அப்படி எழுதத்தூண்டிய புத்தகங்கள் வரிசையில்ஜாகீர் ராஜவின் மீன்காரத்தெரு. பிறகு விரிவாக எழுதலாம். ஆனால் உடனடியாகச்சொல்லவேண்டியது வலசையில் வந்திருக்கும் தோழர் பத்மஜாவின் நீச்சல்காரன்.

ஜான் சீவரின் மூலக்கதை எப்படியிருக்குமோ தெரியவில்லை ஆனால் அதை அப்படியே பிசிறில்லா தமிழ்ச்சிறுகதையாக்க முடிந்திருக்கிறது தோழர் பத்மாவால். ஒரு கனமான முடிவும் விறு விறுப்புக்கு பஞ்சம் வைக்காத சம்பவங்களும் மட்டுமே மொழிபெயர்ப்போடு பயணப்படவைக்கும். அதுதான் இதுவரையில் எனக்கிருந்த அனுபவம்.ஆனால் ஒரு சன்னமான படிமக்கதைபோல தோற்றமளிக்கும் நீச்சல்காரனை நீரோட்டம்போன்ற எழுத்தின் மூலம் படிக்க வைத்திருக்கிறார்.அதுவே அந்த இதழிலுள்ள ஏனைய மொழி பெயர்ப்புகளையும் வாசிக்க தூண்டுகிறது.

7 comments:

நேசமித்ரன் said...

மீள் வருகைக்கு நல்வரவும் நன்றியும் :)

க ரா said...

வாங்க காமராஜ் சார் எப்படியிருக்கீங்க :)

hariharan said...

வணக்கம் தோழரே!, ரெம்ப நாளாச்சி உங்களை இந்த வலைப்பக்கம் பார்த்து. தோழர் மாதுவையும் காணாததால நீங்க மாநாட்டு வேலையில பிசியா இருக்கீங்க போல..
மாநாடு உங்க ஏரியாவுல நடக்கிறதால் வேலை அதிகமா இருக்கும்.

ஓலை said...

So nice to hear. Welcome back.

vasu balaji said...

இனியதொரு சந்திப்பு அது:). நன்றி காமராஜ்.

க.பாலாசி said...

வாங்க.. ரொம்ப நாள் கழித்து... உங்களின் கையாடலில்.

அன்புடன் அருணா said...

சரிக்கட்டியாச்சா??