15.1.11

தைப்பொங்கல் கொண்டுவரும் நினைவுகள்

அந்த ரெண்டு தருணங்கள் சாத்தூரோடு நினைவுகளில் மேலெழும்பி வரக்கூடியவை. தைப்பொங்கலுக்கு முந்தியநாளின் கடைவீதியும் ஊரே ஆற்றுக்குள் இறங்கும் கரிநாளும்.அது ரெண்டும் சாத்தூரை தூக்கி மேலே சம்மணமிட்டு உட்காரவைக்கக்கூடிய பண்டிகைகள். எல்லோருக்கும் தனது மண்ணோடு இப்படி தருணங்கள் புதைந்துகிடக்கும். எனக்கு அது இரண்டும் வாலிபப் பருவத்தோடு அறிமுகமாகியதனால் இன்னும் கூடுதல் இனிப்பாக நெஞ்சுக்குள் கிடக்கிறது.மனிதனுக்கென்றும் பலநிலை வளர்சிதை மாற்றமிருந்தாலும் பருவங்களை விழுங்கிக்கொண்டு அதன் நிஜத்திலும் நினைவிலும் தொடர்வது காதற்காலம். பழைய்ய பாலத்திலிருந்து பார்த்தால் வைப்பாறு முழுக்க  திமுதிமுவென்று எங்குபார்த்தாலும் மனிதர்கள் நகர்வார்கள்.புதுப்பாலத்துக்கு மேற்குப்பக்கம் விரிந்துகிடக்கும் மணற்பரப்பு.திண்ண கறிசோறு செரிக்கவும் காத்தாட வரும் கூட்டம்.அப்படியே அன்பும் பிரியமும் வழியும் முகத்தோடு மனிதக்கூட்டம். கூட்டத்துக்குள் தொலைந்துபோன ஒளிர்விடும் அந்தக்கண்களைக் கண்டுபிடிப்பது. நொடிக்கொருதரம் கிரகணம் தீண்டாதா ? என்கிற விட்டிலாக  பார்வை படும் தூரத்தில் பின்தொடர்வது போன்ற மயக்கங்கள் எழுதி எழுதித் தீராதவை.

பத்துப் பதினைந்து லாரிகளில் வந்திறங்கிய கரும்புகள் எச்சிலை ஊறவைத்தபடி பிரதானச் சாலையெங்கும் தோகையோடு குவிந்துகிடக்கும். இவ்வளவையும் மனிதர்களே விளைவித்தார்கள் அதை அவர்களே சுவைக்கிறார்கள் என்கிற சிந்தனை மலைப்பாக இருக்கும்.கட்டுக்கட்டாக மட்டுமே தருவோம் என்று அடம் பிடிக்கிற விற்பனையாளர்கள் நடுத்தர மற்றும் ஏழைகளின் வயிற்றெரிச்சலை கூட்டுவார்கள். சின்னவயசில் தீப்பெட்டி ஆபீசில் பொங்கல் இனாமாக  வாங்கி வரும் ரெண்டுகரும்பில் எனக்கான ஒன்று கட்டாயம் இருக்கும். அதை ஏந்தியபடி வரும் திருமேனிச் சித்தியிக்காக ஏங்கிக்கிடந்த நாட்கள் நினைவில் வந்துபோகும். அவளுக்கு திருமணமான பிறகும் பிள்ளைகள் பிறந்த பின்னும் எனக்கென ஒதுக்கி வைத்திருக்கும் அவளின் அன்பு பொங்கல் கரும்பு எல்லாவற்றையும் விடத் தித்திப்பானது. அழுக்கேறிப்போன அவள் மூக்குத்தியும் சிரிக்கும்போதெல்லாம் தெரியும் கொருவாப்பல்லும் நான் பிறந்ததிலிருந்தே கூடவருகிறது. மஞ்சள் கிழங்குகள் செடியோடு கொத்துக் கொத்தாய் வந்துகிடக்கும். கல்யாணத்துக்கு முந்தி அதைப் பார்ப்பதற்காகவே காசுகொடுத்து வாங்கிக்கொண்டுபோய் என் சித்திக்கு கொடுத்த நாட்கள் நினைவில் வந்தோடுகிறது.

நடைப் பயிற்சிக்கு போகும்போது காடெங்கும் பொதுவில் சிரித்துக்கிடக்கும் கண்ணிப்பிள்ளைச் செடியும் வேப்பங்குழையும் விலைக்கு வந்துகிடக்கும். இந்தப் பொங்கலின் பொருட்களும்  களியாட்டமும் தீபாவளியின் கரும்புகைபோல தீங்கு விளைவிக்காதவை.காட்டில் கேட்பாரற்றுக்கிடக்கும் அந்த க்கண்ணிப் பிள்ளைச் செடியை சேகரித்துக் கொண்டுவந்து கடைவிரிப்பவர்கள் அதை வைத்து பங்களா கட்டுவதில்லை. மிஞ்சி மிஞ்சிப்போனால் ரெண்டு நாள் வகுத்துப்பாடு கழியும் அல்லது ஒருநாள் டாஸ்மாக்கில் கொடுத்து பாடும் வலிகளும் கறையும். எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் என்ன அரசியல் பேசினாலும் அடுத்தவேளைச் சோற்றுக்கு நாதியத்த வீடுகளுக்கு வரும் அரசின் அரிசியும் வெல்லமும் விலைமதிப்பில்லாதவை.இங்கிருக்கிற மேடுபள்ளங்கள் சமன்செய்யப்படுமா எனத்தெரியவில்லை.ஆனால் இந்த அரை நூற்றாண்டுகளில் ஏழ்மையும் கண்களில் பொதிந்து கிடக்கும் ஏக்கமும்
கோடிகோடியாய்ப் பெருகிக்கொண்டே போகிறது.

இந்த பொங்கலுக்கு திருப்பிய சானலில் எல்லாம் தெரிந்த தலைகள். பிரியமான நெருக்கமான தலைகள். அன்புத்தம்பி ’ஞானக்கிறுக்கன்’ ’புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன்.தனது காத்திரமான கவிதைகளை வெளியிடமுடியாமல் ஒத்திப்போட்டுக்கொண்டு வரும் உணர்ச்சிக்கவிஞன் இரா தனிக்கொடி எல்லாம் மெகா தொலைக்காட்சியில் கலக்கிக்கொண்டிருந்தார்கள்.ராஜ் தொலைக்காட்சியில் தோழர் பீகே கலந்துகொண்ட பட்டிமன்றம் தாமதமாகப் பார்க்க நேர்ந்தது.தமிழ்நாட்டிலே மரியாதையான மாவட்டம் கொங்கு மாவட்டம். ஏனுங்க வாங்க போங்க என்று பேசும் கொங்கு மக்கள் அங்கிருக்கும் தலித்துகளையும் அப்படியேதான் அழைகிறார்களா என்கிற புதுக்கேள்வியை வைத்தார்.அதுதான் கிருஷ்ணகுகுமார் பாணி. குழந்தைகள் இழந்த விளையாட்டையும் கனவுகளையும் சிரிக்கச் சிரிக்கப்பட்டியலிட்டுக் கொண்டிருந்தார் ராஜா.

காலை நாலரை மணியிலிருந்து இரவு வரை சிலுசிலுவென அடிக்கும் ஊதக்காத்து. இன்னைக்கு முழுக்க வெளிவரவே வராத சூரியன். அலைபேசிவழியே வாழ்த்துச்சொன்ன தோழர்களும் கணினி வழியே அன்புசெய்த வலைச்சொந்தங்கள். செல்லமகள் நிவேதிதா பாரதி. ஊரிலிருந்து வந்த அம்மா. பசியோடு பொங்கிய பானை அது வேகுமுன்னாள் கடித்துத் தின்ற பச்சரிசியும் தேங்காச்சில்லுமாக இந்த பொங்கல். எல்லோருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

8 comments:

Mahi_Granny said...

மலர்ந்த நினைவுகள் அருமை. தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

பொங்கல் சுவை:)

இராமசாமி said...

நினைவுகள கிளப்பி விட்டுடீங்க காமு சார்.. வைப்பாத்து கூட்டத்த முடிஞ்சா போட்டோ எடுத்து போடுங்க சார் ,,, இப்பவும் அதே அளவு கூட்டம் கூடுதான்னு பாக்க ஆசையா இருக்கு ...

வினோ said...

பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா...

Sethu said...

Nothing can sweeten us than this beautiful writing.
Vaanambadi sir has rightly said. When can we hold your hand.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்................

சுந்தர்ஜி said...

நேற்றைக்கும் இன்றைக்கும் நடுவில் புதையுற்றுக் கிடக்கிறது நம் கவிதைகளும் கனவுகளும்.

நினைவுகள் கனக்கின்றன காமராஜ்.

சிவகுமாரன் said...

சொல்வதற்கு வலியாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. மனைவியையும் பிள்ளையையும் ஊருக்கு அனுப்பிவிட்டு பொங்கலன்று இரண்டு ஷிப்ட் சேர்த்து பார்த்தேன். விடுமுறை கிடைக்காத வேலை. உங்கள் பதிவின் மூலம் பொங்கலைக் கொண்டாடிவிட்டேன்.