12.1.11

தழலைப் புகையாக்கும் கரிமூட்ட அரசியல்.

இந்த அரசியலைப் பேசியே தீரவேண்டியிருக்கிறது.கூகுள் செய்தி தொடங்கி தினத்தந்தி வரையிலும் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டே போகிற சிந்தனையாக இருக்கிறது.முன்னெப்போதையும் விட ஊழலைப்பேசுகிற அறச்சீற்றம் அதிகரித்திருக்கிறது.உண்மையில் இது சந்தோஷமான கோபம். ஆனால் இந்தக் கோபமெல்லாம் இன்னொரு ஊழல்வந்து உட்காரத்தான் என்று நினைக்கும்போது .இது விழலுக்கில்லை, சாக்கடைக்கு இறைத்த சந்தன கரைசலாகிறது.அப்படியிருக்காது என்பதற்கு இங்கே எந்த உத்திரவாதமும் இல்லை.குறுக்கும் நெடுக்குமாக ஆக்ரமித்துக்கொண்ட இந்த முட்புதரை எங்கிருந்து சரிசெய்ய?.சரி செய்யப் புறப்படுகிற கைகளில் புதிய கறை படியாமலிருக்குமா?. இதைப் பற்றிப் பேசுகிற யாரும் லஞ்சம் வாங்கியிருக்க மாட்டார்கள் என்பது சத்தியம்.கொடுத்திருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்ரவாதம்.அதே போல தவறுகளுக்கான தண்டனை இங்கே ஆள் பார்த்து பின்புலம் பார்த்துத்தான் முடிவாகிறது.

மாளிகை வாசலில் ஆடிக்காத்தும் கூட வாலைச்சுருட்டுதடா
நம்ம ஏழைக்குடிசயக்கண்டுபுட்டா மட்டும் மல்லாக்கத் தள்ளுதடா

என்கிற பாடல்வரிகள் இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் அர்த்தமுள்ளதாகவே தொடரும். காசுவாங்காமல் கையெழுத்துப்போடுகிற கிராம நிர்வாக அலுவலர்கள் ஏதாவது நிர்வாக ரீதியான சிக்கலில் மாட்டிக்கொண்டு இடைநீக்கம் செய்யப்படுவதெல்லாம் நேர்மைக்கு வரும் சோதனையாம்.ஒரு முறை தினத்தந்தியில் ரூபாய் 200 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரைக் கைதுசெய்த செய்தி வந்திருந்தது.தேடிப்போய் விசாரித்துப்பாருங்கள் பாவம் எந்தப்பின்புலமும் இல்லாத அம்மாஞ்சியாயிருப்பார் அவர்.அதற்காக அவரை விட்டுவிடச் சொல்லவில்லை. சட்டத்திற்குமுன் எல்லோரும் சமம் என்கிற சொல் பான்பராக் பொட்டலத்தில் மதுப்புட்டியில் எழுதும் எச்சரிக்கை வாசகம் போல கேலிக்குறியாதாகக்கூடாது. தவறு செய்வதற்குக் கூட தகுதியும் திறமையும் கோருகிற அமைப்பாகிப்போனது நமது அமைப்பு.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டுநாளில் அல்ல எத்தனை யுகமானாலும் புதுக்கருக்கு மாறாமல் நிலைத்து நிற்கிற ஏற்பாடு இங்கே இருக்கிறது. நேர்மையாய் வாழ்ந்த கக்கனும் ஜீவாவும் கஞ்சிக்கில்லாமல் கிடந்தார்கள்.முதல்வர் பதவியை விட்டு வெளியேறும்போது நாலு வேட்டிசட்டையோடு கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறிய நிரூபன் சக்ரவர்த்தியை யார் கொண்டாடுகிறார்கள். ஊழலை தேசியமயமாக்கிய எந்த ஆளுங்கட்சிக் குடும்பம்  சோத்துக்கு லாட்டரியடித்தது சொல்லுங்கள்?. எதிரும் புதிருமாக போஸ் கொடுக்கிற கட் அவுட் வால்போஸ்டர்களில் மார்க்ஸ் லெனின் சேகுவாராக்களா இருக்கிறார்கள். ஒன்று பழய்ய கொள்ளைக்காரர்கள் இல்லை புதிய கொள்ளைக்காரர்களும் தானே முன்நிறுத்தப்படுகிறார்கள் .விடிந்து எழுந்தால் புறநானூற்றுத் தமிழர்கள் அதன் மூஞ்சியில் தான் முழிக்கிறார்கள்.

அடிக்கிற கொள்ளையில் எதிர்க்கட்சிக்கும் கொஞ்சம் ஒதுக்கிவிடுகிற கூட்டுக்களவானிகளை புரட்சியாளராக்கியவர்கள் நாம். அப்படி லஞ்சப் புரட்சியை அமலுக்கு கொண்டுவந்தவரைக் கோவில் கட்டிக்கும்பிடுகிற தேசம் இது.கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்ட இந்த விஷம் மொத்த இந்தியர்களின் ரத்தநிறத்தை மாற்றிவிட்டது. சந்தேகக் கொலை ஜாதிக்கொலை இந்துக்கொலை முஸ்லீம்கொலை முன்விரோதக்கொலை கருணைக்கொலை கற்பழிப்புக்கொலை அரசியல்கொலை இப்படி ரக ரகமான கொலைச்சம்பவங்கள் இந்தியாவில் நடந்துகொண்டே இருக்கிறது.
அது நிமிடத்துக்கு நிமிடம் எங்காவது பதிவாகிக்கொண்டிருக்கிறது.ஆனால் எங்காவது லஞ்சம் வாங்கியவரை கொலை செய்த சேதி படித்திருக்கிறீர்களா நண்பர்களே. கிடைக்கவே கிடைக்காது. இயக்குநர் சங்கர் மட்டும் தான் அப்படிச்செய்வார். 162 கோடி செலவு செய்து அதைக் கல்லாக்கட்டுவார்.  அதுவும் கூட பத்துப்பைசா இருபது பைசா மற்றும் ஏழை எளியவர்களின் குற்றங்களுக்குத்தான் அவர் தீர்ப்புச்சொல்லுவார்.அம்பானிகளின் குற்றங்களை ஜாய்சில் விட்டுவிடுவார். நிஜத்தில் லஞ்சத்துக்கு எதிராகப்போராடியவர்கள் புழுப்பூச்சிகளைப்போல நசுக்கப்பட்டிருக்கிறார்கள். அதைச்சொல்லுமா இந்த இந்து சந்து பொந்து நாளேடுகளும் ஸ்டார் சன்குழும மின்னனு ஊடகங்களும் ?

இந்த உண்மை உச்சியில் இருக்கும் உயர்திருமன்மோகனுக்கும் கீழேகிடக்கும் பஞ்சமக் கூலித் தொழிலாளிக்கும் நன்றாகவே தெரியும்.

தேசம் முழுக்க புதர்மண்டிக்கிடக்கிறது
தீக்குச்சிகள் நமுத்துப்போய்கிடக்கின்றன.
எரிநட்சத்திரத்தில் கங்கெடுத்துப்பற்றவைக்கிற
கைகள் இங்கே இல்லை.
எங்காவது பற்றுகிற தீயைக்கூட
தண்ணீர் ஊற்றி அணைக்கிற
காரியங்கள் வெற்றியாகிறது.
கொழுந்து விட்டு எரியவேண்டிய தழலை
மூட்டம் போட்டு புகைய விடுகிற
ஏற்பாடு கச்சிதமாக நடக்கிறது.
கரும்புகை வெண்புகை என சந்தையில்
இரண்டே வகை புகை மட்டுமே கிடைக்கிறது
அந்தப்புகை நடுவே பயணம் செய்யவே
இந்தியர்களுக்கு விதித்திருக்கிறது.

9 comments:

MANO நாஞ்சில் மனோ said...

vadai...

MANO நாஞ்சில் மனோ said...

தேசம் முழுக்க புதர்மண்டிக்கிடக்கிறது

வானம்பாடிகள் said...

The best of yours. i luv this.

வினோ said...

அண்ணா இதை களையவே முடியாது :( ஆலமரம் ஆகி போனது....

அன்புடன் அருணா said...

/தேசம் முழுக்க புதர்மண்டிக்கிடக்கிறது/
எங்கிருந்து ஆரம்பிப்பதென்பதுதான் புரிய்வில்லை.

சுந்தர்ஜி said...

ஏன் இத்தனை அவநம்பிக்கை காமராஜ்?

அற்புதங்கள் ஒரு நாளில் நிகழும்.ஆனால் ஒரே நாளில் நிகழாது.

எனக்கு இத்தனை குமட்டல்களையும் விட இதைச் சீர் செய்யும் வழிகளையும் இதை நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் மீது எந்தக் காலத்தில் நெய்யூற்றப்பட்டிருக்கிறது?

ஒவ்வொரு ஊரிலும் வலைதளங்களில் இயங்குபவர்கள் தங்களுக்குத் தெரிந்த நேர்மையான மனிதர்களிடம் மார்ரத்துக்கான செய்தியை எடுத்துச் செல்வோம்.

வலைத் தலங்களில் பின் தொடர்பவர்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் நூறு நூறு பேராய் இதைக்கொண்டு சென்றால் ஒரு வருடத்துக்குள் பத்தாயிரம் நேர்மையான மனிதர்களை எட்டிவிடலாம்.இது லட்சமாவது ஒன்றும் பெரிய காரியமில்லை.

பொதுவான தளத்தை ஏற்படுத்துவோம்.விவாதிப்போம்.நிச்சயம் நம் இலக்கை அடைவோம்.

நிச்சயம் இதற்கு பத்தோ இருபதோ ஏன் நம் வாழ்நாளோ இதற்கு விலையாய் இருக்கலாம்.

நிச்சயம் என்னிடம் அந்த நம்பிக்கை இருக்கிறது.

நம்மால் முடியும் காமராஜ்.அருணா.

இடதுசாரி said...

உழைக்கும் மக்கள் எல்லா காலத்திலும் அமைதியாகவே இருந்து விட போவதில்லை...
ஜோதிபாசு போல., இ.எம்.எஸ். போல., இ.கே.நாயனார் போல., நிரூபன் சக்கரவர்த்தி போல....

அப்பழுக்கற்ற மனிதர்களை மீண்டும் உருவாக்குவோம்...

முன்பை விட அதிகமாய்...

நல்லனவற்றின் வளர்ச்சி எப்போதும் மெதுவாக தான் இருக்கும் தோழர்...

நம்பிக்கைகள் விதைப்போம்...

ஈரோடு கதிர் said...

எனக்குள் இருப்பதை அள்ளிக் கொட்டியது போல் இருக்கிறது...

இந்த இணைய எழுத்தில் மனதிற்குள் இருப்பதை இறக்கி வைக்கத்தான் முடிகின்றது. அடுத்த இடுகையில் மடை மாற்றிப் பயணித்து விடுகிறோம்.

நம் எல்லாப் புகைச்சல்களையும் காலம் மிக எளிதாய் அமுக்கிவிட்டு மௌனமாக போய்க்கொண்டிருக்கிறது.

இன்று ஆவேசமாய் எழுதியதை சில நாட்கள் கழித்துப் பார்க்கும் போது ஆயாசமாய் இருக்கிறது. லஞ்சத்திற்கு நிகராய் தலை விரித்தாடுகிறது அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு. என்னதான் நடக்கப்போகிறதென்று ஒன்றுமே புரியவில்லை!

Sethu said...

தலைப்பே எண்ண ஓட்டங்களை அருமையாச் சொல்லுது. ஆதங்கப் படுவதை தவிர என்ன சொல்வது.

'வானத்துச் சந்திரன் மன்மதன் இந்திரன்
வாழ்கின்ற பூமியடா' என்று தான் shining இந்தியா காமிக்கப் படுது. இருபது வருஷத்துக்கு முன்ன கேட்டப் பாட்டு இது.