13.1.11

டப்பாவில் மிஞ்சியிருக்கும் பெருங்காய நினைவுகள்.

மந்தப்பிஞ்சை பெரியசுப்பையத் தாத்தனின்
தொளுவத்தில் கழுத்துமணிச்சத்தம் அறுந்து போனது.
சாணமும் கோமியமும் குழுதாடியும் இருந்த இடத்தில்
ரெண்டு டீவிஎஸ் பிப்டி நிற்கின்றன.

மாட்டுத்திமிழும் வண்டிமசகும்
தலைத்துண்டை கையில்போட்டு பேரம் பேசும்
தரகு தொழிலும் வழக்கொழிந்துபோனது.

வாக்கூடு கட்டிக்கொண்டு வளைய வரும்
களத்துமேடுகளில் காரவீடுகள் முளைத்துவிட்டன.

காங்கேயத்தில் வாங்கிய காளைகளைக்
கம்மாயில் குளுப்பாட்டியதும்
அடைப்புக்குறி போன்ற கொம்புகளுக்கு
சிகப்புச்சாயம் வாங்க வண்டிகட்டிப் பயணமானதும்
தோண்டியெடுக்கும் கற்காலமாகிப்போனது.

இருந்தாலும் என்ன இரும்புக்கதவில் தொங்குகிற
கண்ணிப்பிள்ளைச் செடியிலும்
கரும்பு சாத்திவைத்த கதவுகளிலும் சிரிக்கிறது
பழய்ய பொங்கலின் நினைவுகளும் நிறங்களும்.

10 comments:

Sethu said...

அழகிய கவிதை.

இராமசாமி said...

enna panna.. athunachum iruke... nalla kavithai sir...

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஹரிஹரன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....

மாட்டுப் பொங்கலுக்குப் பதிலாக டிராக்டர் பொங்கலைக் கொண்டாடுகிறோம், இப்போது பொங்கல் தீபாவளி என்றால் சன் கலைஞர் டிவியில் வரும் சிறப்பு நிகழ்ச்சிகள் தான் என்றாகிவிட்டது.

MANO நாஞ்சில் மனோ said...

//கரும்பு சாத்திவைத்த கதவுகளிலும் சிரிக்கிறது
பழய்ய பொங்கலின் நினைவுகளும் நிறங்களும்///

அருமை அருமை...

செ.சரவணக்குமார் said...

அருமை காமு அண்ணா. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

வானம்பாடிகள் said...

இப்படி கவிதையில பதிஞ்சாத்தான் அடுத்த தலைமுறைக்கு இப்படி இருந்திருக்குன்னு தெரியும்.:(. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Sethu said...

Happy Pongal.

சுந்தர்ஜி said...

இழப்பின் வெறுமை பூசப்பட்ட துயர்கவிதை காமராஜ்.

vasan said...

/இரும்புக்கதவில் தொங்குகிற
கண்ணிப்பிள்ளைச் செடியிலும்/

இரும்புக்கதவில் தொங்குகிற
கண்ணிப்பிள்ளைச் (கண்ணு பூளை)செடி இல்லையெனில், தும்பைச் செடி வீட்டுக் க‌தவின் மேலும், விளைநில‌ங்க‌ளின் ஈசான‌ மூலையிலும், இன்னும் இருக்கிற‌தா அந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம்.
சென்னைக‌ளில் அந்த‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ள் கிடையாது போலும். இங்கு எங்கும் அந்த‌ தட‌ய‌மே இல்லை.