29.12.09

இன்னொரு கோயிலும், இன்னொரு தாயும்.

திருச்செந்தூரில் இறங்கும்போது கடல் காற்று சில்லென்று முகத்திலடித்தது. நிறைய சலிச்ச வாசம் வீசுகிற காற்றில் மீன்களின் வாசமும் அடங்கியிருந்தது. எதிர்ப்படுகிற பேருந்தின் பெயர்ப் பலகையினையெல்லாம் உற்றுப்
பார்த்தான்.பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்த.அவன் அடுத்த பஸ் வர இன்னும் அரைமணி   இருக்கு  வா  தம்மடிப்போம் என்று சொன்னான். யாரோ  உற்றுப்பார்த்து விட்டுபோனார்கள். இந்தப்பெட்டிக்கடையில தான் சிகரெட் வாங்கி ஒளிஞ்சு ஒளிஞ்சு தம்மடிப்போம். அப்ப ரஞ்சன் ஒரு சிகரெட் அடிச்சுட்டு நாலு அசோகாபாக்குப் போடுவான். அவங்க க்றிச்டியன்ஸ், ரஞ்சன் தெரியும்லா. இந்தப் பஸ்டாண்ட், கடக்கரை, ரைல்வே ஸ்டேசன், எல்லாம் எங்க ஆளுகைìகுள் இருந்த பகுதிகள்.அவன் கண்ணுக்குள் எண்பதுகளின் கல்லூரிக்காலம் மினுங்கியது.   ஒரு வலத்தியான பெரியவர் 'எப்ப வந்தெ எப்பிடிப்பூ இருக்கா, நேத்தே வருவேன்னு அம்மா வாசல்லயே உக்காந்திருந்தாங்க' என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனார். முதிர்ச்சி வந்தால் போதும் ஊர்ப் பெரியவர்கள் எப்போதும் எல்லோரையும் தன் பிள்ளை, தன் பேரனாக்கிப் பாவிப்பார்கள்.


இன்னும்  ஒரு மணி நேரத்தில்   அம்மவைப் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பு வந்ததும் தைப்பொங்கலை, பங்குனிப்பொங்கலை, எதிர்னோக்குகிற அவஸ்தை இருந்தது. கூடவே இன்னொரு சஞ்சலமும் இருந்தது. அதை அப்புறம் சொல்லலாம்.  பால்ய கால நன்பண் இங்க தான் இருக்கான் வா பாப்பொம்'' என்று சொல்லி விட்டு முன்னல் நடந்தான். கோவில் வாசல் போகிற அலங்கார வலைவுக்கு அருகில் சைக்கில் ரிக்சாக்கள் நின்றிருந்த பகுதியில் நின்றான். ரெண்டு மூணு பேர் வந்து கோயிலுக்கா என்று கேட்டார்கள் இல்லை என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டான். வீடு ரொம்ப தூரமா என்று கேட்டேன் இல்ல என்று சொல்லிவிட்டு சிரித்தான்.செரி வா பஸ் வந்துருக்கும் திரும்ப நடந்தவேகத்துக்கு ஈடு கொடுக்க நான் ஓடும்படி ஆனது அவன் ரொம்ப உயரம் நான் கொஞ்சம் கம்மி. நகரப்பேருந்தில் மொத்தம் இருபது நபர்கள் மட்டும் இருந்தார்கள். நாங்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டோ ம். இரண்டு கிலோ மீட்டர் கடந்தவுடன் வாழையும் நெல்லும் சாலையின் இரண்டு புறமும் பொறாமைய்யொடு செழித்துக்கிடந்தது.


நெல்வயல்களைக் கடந்து வந்த காற்று பசிய வாசத்தோடு வந்தது. வாசங்கள் உள்ளூர நினைவுகளை எழுப்பிவிடும். வயல் காற்று வீசும் போதெல்லாம், செல்லிமுத்துநாடார் கிணற்றில் மல்லாக்கமிதந்த ரத்தினத்தாயென்னும் பேரழகின் உருவமும், அந்தச்சாவில், சாதீய வன்மத்தின் கொடூரம் முதன்முதலாய்  உணர்ந்த  ஞாபகங்கள் தவிர்க்கமுடியாது வந்துசேரும். எப்போதுமே இந்தக்காற்று இப்படித்தான் அது பூக்களுக்கென்றும், பீயாங் காட்டுக்கென்றும் விருப்பு வெறுப்பு சுமந்து வீசுவதில்லை.சாலையோரம் ஒரு வாய்க்கால் செருக்கோடு தண்ணீரைக் கடத்திக் கொண்டிருந்தது. ஓடைகளில் சம்பு அடர்த்தியாக முழைத்துக்கிடந்தது அதன் பூக்கள் ஏதோ வேற்று பிரதேசத்து நிலப்பரப்பைப்போல பரவசம் உண்டாக்கியது. இதுக்குள்ள தான் தூக்கனாங்குருவிகள் கூடுகட்டியிருக்கும். உள்ளே போனா கொத்து கொத்தா தொங்கும். முட்டையெடுத்து அவிச்சுத்திம்போம் அப்போ மாரப்பன் எப்போதும் கூடவே இருப்பான்.குரவ மீனெல்லாம் ரொம்ப அனாயசமா பிடிப்பான். குரவ மீன் முள்ளு குத்துச்சுன்னா ரெண்டு நாளைக்கு கடுக்கும்.

இப்படிக்கதைகள் சொல்லிக் கொண்டே வந்தவன் தூங்கிப்போனான். கதை சொல்லிகளைத்தூங்க வைத்த விநோதம் என்னவாக இருக்கும். ஒரு வேளை அந்தக்குளிர் காற்று, அந்தத்தளிர் நிலங்கள் ,பின்னிழுத்துக்
கொண்டுபோய் மீண்டும் அவனைத் தாய் மடியில் கிடத்தியிருக்கும். தூங்கட்டும்.எனக்கு தூக்கம் வரவில்லை நான் அந்தக்காடு,வயல்கள் தண்ணீரோடும்,  காற்றை கிழித்துக் கொண்டு நீச்சலடிக்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டு போனேன்.பூச்சிக்காடு வருவதற்கு முன் முழித்துக்கொண்டான். பேருந்தை விட்டு இறங்கியதும் சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் இல்லை.வீட்டுக்குபோனா தம்மடிக்க முடியாது இரு ஒரு தம்மடிப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு பெட்டிக் கடைக்குப் போனான்.

வீட்டுக்கு நடந்து போகிற வழியில் ரெண்டொரு பேர் எப்பப்பூ வந்தா,என்று விசாரித்தபடி முகம் மலர்ந்தார்கள்.அவனையொத்த முகஜாடையிருந்த ஒரு பெரியவரைக்காட்டி எங்க சித்தப்பா, கொஞ்சம் சண்ட என்றான் அவரும் ஓரக்கண்ணால் பார்த்தபடி கடந்து போனார். கூரைத்தாழ்வாராமும் ஓட்டுக்கூரையும் நார்க்கட்டிலும்,புராதான மரப்பீரோவும்,ஒரு பப்பாளி மரமும்,அடர்ந்த பிச்சிக் கொடியும் புதிதாய்க்கட்டிய ஒரு கழிப்பறையுமான வீட்டுக்குள் நுழைந்தோம்.முற்றத்தில், நடைபாதையில், புழக்கடையில், நடுவீட்டுக்குள் அம்மா அம்மா அம்மா என்ற வலைச்சொல்லை வீசி வீசி எறிந்து விட்டு திரும்பிவந்தான்.நான் தேடிவந்த அந்த பிம்பம் அடுப்பங்கரையில்  இருந்து பிரசன்னமானது.அவன் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொண்டான். கொஞ்சம் எட்டத்தில் இருந்தேன். எப்படி அவர்களோடு முகமன் சொல்லிக் கொள்வதென்னும் குழப்பம் என்னை ஆட்டுவித்தது. முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன். எனது உடல் தரையில் கிடந்ததுபோல இருந்தது.

11 comments:

Uma Maheswaran said...

இந்தப் பதிவின் முதல் இரண்டு பத்திகளின் பெரும்பகுதியும், மூன்றாம் பத்தியின் கடைசி சில வரிகளும் ஃபயர் ஃபாக்ஸிலும், இண்டர்நெட் எக்ஸ்புளோரரிலும் வேறு எழுத்துக்களாகத் தெரிகின்றன. அவை தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாக இல்லாதிருப்பதுதான் காரணமாக இருக்க வேண்டும். தயவுசெய்து தமிழ் ஒருங்குறிக்கு மாற்றுங்கள்.

அன்புடன் அருணா said...

Uma Maheswaran சொல்வது போலவே எனக்கும் சில எழுத்துக்கள் வேறுமாதிரி தெரிகிறது...../முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன். எனது உடல் தரையில் கிடந்ததுபோல இருந்தது./
அடிக்கடி எனக்கும் நிகழும் நிகழ்வுதான்...

காமராஜ் said...

வணக்கம் உமா மகேஸ்வரன்.
மிகச்சரியாக பதிவேற்றும் வேளயில் மின்தடை ஆனது.
சரிபார்த்து திருத்த இயலவில்லை. இப்பொழுது சரியாகிவிட்டது.
வருந்துகிறேன்.முடிந்தால் திரும்பப்படியுங்கள். நன்றி.

காமராஜ் said...

அன்புக்குறிய அருணா வணக்கம்.

இது மாதவாராஜின் அம்மா நினைவாக எழுதி வைத்து ஒரு வருடம் ஆகிப்போனது.

இன்று அவர்களின் நினைவு நாள்.

கூடுதலாக சிறிது சேர்த்துப் பதிவேற்றினேன் அதில் தான் கோளாறு.

இப்போது சரிசெய்துவிட்டேன்.

அன்பும் நன்றியும் அருணா.

Uma Maheswaran said...

வணக்கம் காமராஜ்! பதிவைச் சரிசெய்ததற்கு என் நன்றிகள். பதிவைப் படித்தேன். தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
//முற்றத்தில், நடைபாதையில், புழக்கடையில், நடுவீட்டுக்குள் அம்மா அம்மா அம்மா என்ற வலைச்சொல்லை வீசி வீசி எறிந்து விட்டு திரும்பிவந்தான்.நான் தேடிவந்த அந்த பிம்பம் அடுப்பங்கரையில் இருந்து பிரசன்னமானது.அவன் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொண்டான்.// அருமை!
மாதவராஜ் அவர்களின் அம்மா நினைவைப் பற்றி ”தீராத பக்கங்களில்” மாதவராஜ் இன்று எழுதியுள்ள பதிவையும் படித்தேன். நன்றி!

அம்பிகா said...

\\முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன்//

காமராஜ் அண்ணா,
நானும், மாது அண்ணாவும் எழுதியதை விடவும் உங்கள் பதிவு மனதை நெகிழ வைத்தது.

பா.ராஜாராம் said...

காமராஜ்...

ஒரு வாசனை,ஒரு முகம்,ஒரு நினைவு,ஒரு தெரு திருப்பம்,ஒரு நிலவின் மேகம் பொதிந்த ஊடாடல்,ஒரு எறி நட்சத்திரத்தின் கோட்டோவியம்,அல்லது இப்படி ஒரு அழுத்தமான நினைவு பகிர்வு போதுமானதாகும் எனக்கு..

மனசுக்கு பிடித்த திருப்பதி ஒயின்ஸ் வாசல் படி ஏறும் தேவை.

இன்றும் அப்படி தேவையாக இருக்கிறது..இடையில் கிடக்கிறது மூவாயிரத்து சொச்ச மைல்கள்!

எவ்வளவு வலி தெரியுமா மைல்களுக்கு அப்புறம் இட்ட ஆச்சர்ய குறி..

அம்மாவை பார்த்தது போல இருந்ததும் "என் உடலும் தரையில்தான் கிடந்தது".

செ.சரவணக்குமார் said...

//முதிர்ச்சி வந்தால் போதும் ஊர்ப் பெரியவர்கள் எப்போதும் எல்லோரையும் தன் பிள்ளை, தன் பேரனாக்கிப் பாவிப்பார்கள்.//

உண்மை, மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

காமராஜ் said...

நன்றி அம்பிகா.

பாரா வாங்க,வாங்க.
ஒவ்வொரு முறையும் நீங்கள் என்னோடு அருகிருந்து பேசுகிற மாதிரியே இருக்கிறது பாரா. நலமா ?.

வணக்கம் சரவணக்குமார். நன்றி.

வெயிலான் said...

ரொம்ப நல்லாயிருக்குண்ணே!

மாதவராஜ் said...

படிக்கும்போதெல்லாம் கண் கலங்குகிறது... என் தோழா.....!