16.3.14

தகிக்கும் கேள்வி நெருப்போடு பயணமாகிற தோழன். ( விமலன் என்கிற மூர்த்தி)தமுஎச வின் பேனர்களை பார்க்கிற பொழுதெல்லாம் தொண்டைக்குள் ஒரு உருவமில்லாத உருண்டை உருளும்.ஒரு கடைக்கோடி கிராமத்தில்பிறந்து தெருப்புழுதியில் வளர்ந்து,தெருவிளக்கில் படித்து வங்கி ஊழியனாகிற வரை எனக்கொரு பாத்திரம் இருந்தது.எப்பொழுது தோழர் பீகேவைச்சந்தித் தேனோ அப்போதிலிருந்து ஒரு இயக்கத்தின் பிரதிநிதியாக மாறிப்போனேன். பிரதிநியாக மட்டும்.

எண்பத்தி ஐந்தாம் வருடம் சாத்தூருக்கு திரும்பிவந்தபோது.ஒரு மொய் நண்பர்கள்களுக்குள் தள்ளிவிடப்பட்டேன்.அந்தக்கூட்டத்துக்குள் தான் என் தோழன் மாது இருந்தான்.அவன்கூடவே மூர்த்தியும் இருந்தான்.ஒரு அழுக்கேறிய நான்குமுழ வேஷ்டியோடு வந்து என்கையைப்பற்றிக் கொண்டான் மூர்த்தி.அவனும்கூட என்னைப்போலவே ஒரு கருசக்காட்டுப் புழுதிக்குள் கிடந்து வந்து  இந்த நட்பு இனிப்புக்குள் திகட்ட திகட்டவாழ்ந்து பிரமித்தவன்.

42 பி என் எஃப் தெருவில் அந்த பிஜிபிஇஏ சங்க அலுவலகம் இருந்தது.அங்கு ஒரே அறையில் கிடந்த நாங்கள் எதாவது எழுதிக் குமிக்க முயற்சிசெய்து கொண்டிருந்த போது, அவன் மட்டும் மூன்று பத்தி மாடியில் இருக்கும் சமயற்கட்டில் ஏதாவது வரைந்து கொண்டிருப்பான்.அண்ணன் ஜீவா அதைப்பார்த்து விட்டு ’மூமா (அப்போது அதுதான் அவனது செல்லப்பேர்) என்ன வரிஞ்சிருக்கியோ அதோட பெயரைக் கீழே எழுதிரு” என்பார் .அவனும் சேர்ந்து சிரிப்பான்.ஒரு கடைநிலை ஊழியன் மேல் குவிகிற இந்த அதிகாரப் படிநிலையின் ஆதிக்கம் கொடூரமானது.அதை தகர்க்கிற பெருஞ்சம்மட்டியாய் பீகே இருப்பார்,அவரது நீளமான கை தோளில் விழுகிற போது கோடுகள் துவங்கி இடியாத பெருஞ்சுவர்கள்வரை இற்று இடிந்து போகும்.அவரது பேச்சை விடவும் காந்தத்தன்மை கொண்டது அவர் சகதோழர்கள் மீது காட்டு கிற பிரியம்.சாத்தூர் வீதிகளில் ஆறடி உயரத்தில் நடந்து போக அருகே நடப் பது எங்களுக்கு பெருமிதமான பயணமாகும்.

அந்தக்காலங்களில் தான் நாங்கள் பெரும்பசியோடு புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தோம்.பீகே தான் ஒவ்வொரு புத்தகமாய் கொண்டுவந்து கொட்டுவார் நானும் மாதுவும் போட்டிபோட்டு இரவுகளில் படிப்போம். அப்போது எங்கள் வயதொத்த ஊழியர்கள் அலுவலர் ஆவதற்கும்,சிஏஐஐபி படிப்பதற்கும் மெனெக்கெட்டுக்கொண்டிக்க நாங்கள் இலக்கியப் புத்தகங் களைக் கிறுக்குப் பிடித்துபடித்துக் கொண்டிருந்தோம்.நானெப்படி மாதுவை அகலக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேனோ அதைப்போலவே மூர்த்தி எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான்.அப்போதெல்லாம் நாங்கள் அவனைப்பகடி செய்வதிலேயே குறியாக இருந்தோம்.அவன் சைன்ஸ் ஜாதாவுக்கு பேர்கொடுத்து அவர்களோடு ஒரு காவி வேட்டியைக் கட்டிக் கொண்டு அலைந்தான். ஒரு தீவிர அறிவொளி இயக்கத்தொண்டனாய்த் திரும்பிவந்த அவனுக்குள் பெரு நெருப்பு குடிகொண்டு இருந்தது.அத்தோடு

கூடவே ஒருகாதலும் அவனுக்கிருந்தது.

தொழிற்சங்கத்தில் ஒரு தலைமுறை போய் இன்னொன்று உருவெடுத்தபோது மூர்த்தியும் எங்களோடு செயற்குழு உறுப்பினரானான்.விடிகிற வரை நடக்கிற செயற்குழுக்கூட்டத்தில் முதன்முதலில் அவனைத்தான் பேய் பிடித்துஆட்டும். அப்புறம் என்னை.எங்களை உசுப்பிவிடுவதிலே குறியாய் இருப்பார் தோழர் சோலைமாணிக்கம்.அங்கேயும் கூட பெரிய இலக்கு ஏதும் இல்லாத ஒரு பிரதிநிதியாக இருந்தான்.நான் கூட சிலநேரத்தில் சபலப்பட்டு இருந்தேன். அவனுக்கு பதவிமோகம் துளியும் கிடையாது.எல்லா சங்கப்பொதுக்குழு விலும் அவனுக்குத்தான் கொடிக்கம்பம் தயாரிக்கிற,தியாகிகள் ஸ்தூபி தயாரித்து சிகப்பு பேப்பர் ஒட்டுகிறவேலைகாத்திருக்கும்.ஆனால் அந்த கொடியை மடக்கிகட்டிவைக்கத் திணறு வான்.அப்போது அவனுக்கு நானும் நாசரும் கூட இருக்கவேண்டும்.கொடியேற்றிக்கொடுத்துவிட்டு நான் நாசர் மூர்த்தி  மூவரும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கடைசிப்பெஞ்ச் கோஷ்டியாகி விடுவோம்.ஆதலினாலே இந்த இருபத்தைந்து வருட தொழிற்சங்க பதிவு களில் எங்கள் புகைப்படம் எதாவது கூட்டத்துக்குள் கரைந்து போயிருக்கும்.

அதுபோலவே தமுஎசவிலும் எங்களோடு பயணித்தவன் மூர்த்தி.இங்கேயும் கூட பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இலக்கிய புல்லரிப்பில் அலைபவர் கள்நாங்கள்.எண்பதுகளில் என்னையும் அவனையும் தான் குற்றாலம் சிறு கதை பட்டறைக்கு அனுப்பிவைத்தார்கள்.அங்கிருந்து வந்து ஒரு வரிகூட என்னால் எழுத முடியவில்லை.ஆனால் மூர்த்தி எழுதி எழுதிக்குமித்து விட்டான்.அதை முதலில் என்னிடம் மட்டும்தான் காட்டுவான்.அவனது கையெழுத்து காற்றுக்கு வளைந்த நானற்கூட்டம் போல் நீண்டு வளைந்து இருக்கும்.எழுதிக்கட்டாக கட்டி என்னிடம் அனுப்பிவிடுவான்.படித்தது படிக்காதது என அவனது கையெழுத்துப்பிரதிகள் அலமாரியில் கணிசமான இடத்தை அடைத்து இன்னும் கிடக்கிறது. மாது ராஜகுமாரன் என்கிற சிறுகதைத்தொகுப்பு போட்டு,சில கட்டுரைத்தொகுதி வெளியிட்ட பிறகு நானும் தக்கி முக்கி எழுதி  ஒரு தொகுப்பு போட்டேன்.அதே வேகத்தில் அடுத்து மூர்த்தியின் முதல் தொகுப்பு வந்தது.நான் எப்படி மாது மட்டும் தான் எனக்கு முன்னுரை எழுத வேண்டும் என்கிற உறுதியில் இருந்தேனோ அதேபோல எனக்கு முன்னுரை எழுதுகிற வாய்ப்பைக்கொடுத்தது மூர்த்தி.
    
என்பதுகள் தொடங்கி இன்று வரை ரெண்டு முறையாவது அது என்ன இது என்ன என்று அவன் கேட்கிற கேள்விகளில்தான் அந்த பெரு நெருப்பு குடி கொண்டிருந்தது.எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பு புத்தகத்தை கையில் தொடாமல் எழுத்தில் ஜெயித்த எங்கள் அன்புத்தோழர் மேலாண்மையை மாதிரியே மூர்த்தியும். ஒரு சின்ன துணுக்குகூட ஆங்கிலத்தில் படித்திருக்க வாய்ப்பில்லாதவன் மூர்த்தி.நானும்கூடத்தான்.ஆனால் எனக்கு பாடப்புத்தகம் வழியே ஆங்கிலம் அறிமுகமாகி இருந்தது.கல்லூரியில் லே மிசரபிள் போன்ற நான் டிடெய்ல் புத்தகங்தொட்டிருக்கிறேன் அப்படி வாய்ப்பில்லாத அனுபவப் படிப்பை மட்டும் கைப்பற்றி நண்பர்களை அருகிருந்து நோக்கி எழுதியவன் தோழன் மூர்த்தி.

மூர்த்தியின்எழுத்தைப்பேச,சிலாகிக்கவேண்டியதைவிடவும்.அவனைச்சிலாகிப்பதே பெருங்கடமை.பெரிய கல்விப்பின்புலம்,எழுத்துப்பின்புலம் இல்லாததோழமை யும் நட்பும் துணைகொண்டு எழுதிகிற மூர்த்தி சிலாகிக்கப்படவேண்டியவர்(ன்).

14.3.14 ல் விருதுநகரில் நடந்த அந்த விழாவில் பங்கேற்க முடியாத தடைகளை இந்த வரிகள் சரிசெய்யும்.எங்கள் பிரியத்தோழர் முத்துக்குமாருக்காகவாவது அதில் கலந்திருக்கவேண்டும்.எங்களைப்போலவே அவரும் எளிய தோழர். மூர்த்தியைப்புரிந்து கொண்டு சரியாக விழா எடுத்த அவர்,அங்கே போகமுடியாத என்னையும் புரிந்துகொள்வார்.   

9 comments:

விமலன் said...

நெக்குருகிப்போக வைக்கிற எழுத்து/நன்றி காம்ஸ்/இதில் எழுத்தையும் அது சொல்லிச்செல்லும் வாழ்வின் வலியையும் சொல்லியிருந்தால் இன்னும்,இன்னுமாய் நிறைய சந்தோஷப்பட்டிருப்பேன்/நன்றி வணக்கம்/

காமராஜ் said...

வா மூர்த்தி,உனக்குத்த்ரியாததா,பொய் ஏன் சொல்லனும்.படிக்கலை.

Mahi_Granny said...

நாம் உங்களையும் உங்கள் நண்பர்களையும் அகலக் கண்ணால் பார்ப்பது உங்களுக்கு தெரியுதா? நண்பர்கள் அமைவதும் கொடுப்பினை தான்.

kashyapan said...

ஆஹா ! விமலன் தான் மூர்த்தியா ! வாழ்த்துக்காள் ---காஸ்யபன்.

காமராஜ் said...


Mahi_Granny said...//நாம் உங்களையும் உங்கள் நண்பர்களையும் அகலக் கண்ணால் பார்ப்பது உங்களுக்கு தெரியுதா? நண்பர்கள் அமைவதும் கொடுப்பினை தான்.//

நன்றி

காமராஜ் said...

இவ்வளவுநாளாத்தெரியாதா தோழர்.

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Vimalan Perali said...

வணக்கம் காம்ஸ்,தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது,
விபரம்.www.vimalann.blogspot.com

Language Translator said...

Nice...
for Tamil Typing