14.12.10

இரண்டு சிறுகதைகள். தீட்சண்யா, bk

தேடித்தேடிக்கதைகள் படித்த காலங்களை பாதாள கரண்டிபோட்டுத்துழாவ வேண்டியிருக்கிறது.பேச்சில் மற்றவர் வேல.ராமமூர்த்தியின் வேட்டையைச் சிலாகிக்கிறபோதே ஆசை விதை  விழுந்துவிடும்.செக்காவின், தமிழ்ச்செல்வனின்,மாமா ஷாஜியின் கதைகள் குறித்து  வாயாற பேசுவார்கள். அந்தப்பேச்சு புத்தகங்களைத்தேடி த்துரத்தும்.அப்படித்தான் இரும்புக்குதிரை படித்துவிட்டு மாதுவும் bk யும் பேசிக்கொண்டிருந்தார்கள்.'அதன் அழகே அதன் சமயமற்ற தன்மையில்தான் இருக்கிறது' என்று bk சொல்லுவதற்கு முன்னாடி அந்தக்கதையின் தெறிப்பான இடங்களைப்பேசினார்கள்.அன்று இரவே விடிய விடிய முழித்து இரும்புக்குதிரை படித்துவிட்டேன்.அது போல ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய bk 'புரிந்துகொண்டு வாழும் ஆண்,பெண் உறவு ரெட்டை நாயனத்தின் சங்கீதமாக வழிந்து ஓடும்' என்று எழுதினார்.

அப்படியான ஒருவாழ்வைப்பற்றியது. அது முடிகிற நுனியில் கிடைக்கிற அடர்த்தியான சோகம் நிறைந்த சிறுகதை
அப்பத்தா.பேச்சின் சாமர்த்தியத்தை அப்படியே எழுதவும் முடிகிற வீச்சு.

//வீட்டுக் கோழிகளுக்கும், விருந்தாட வரும் காக்கைகளுக்கும், கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத்தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே, சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம்.//

//பேரக் குழந்தைகள் விடுமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் விருந்து தான். கறிக்கடை தங்கராசு வீட்டுக்கு வந்து தனிக்கறியாக, வெள்ளாட்டங்கறியாக தந்து விட்டு போவான். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நல்லி வெட்டி வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பட்டியலில் தாத்தா எப்போதும் உண்டு.//

இப்படிச் சிறுசு சிறுசாக அப்பத்தா தாத்தா இணையின் உறவைச் சொல்லிக்கொண்டே போய் அப்பத்தாவின் கதையை முடித்துவைக்கிறார் எழுத்தாளர்.கீற்றுவில் கிடைக்கும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11876&Itemid=263

சுட்டிப்படிக்கும் வரை நான் சொல்வது அதிகமெனப்படும்.

0

இன்னொன்று ஆதவன் தீட்சண்யாவின் 'களவு' இந்த காலாண்டுக்கான புதுவிசையின் கடைசிப்பக்கத்தில்.மேலே சொன்ன கதை , வயிறாரச் சாப்பிடும் ஒரு குடும்பத்தின் உறவும், உலுக்குகிற பிரிவும் என்றால். இது ஒரு விளிம்பு மக்களின் வயிற்று இரைச்சல் கேட்கிற எழுத்து.முழுவதும் கேட்க முடியாத படிக்கு எழுந்து ஓட வைக்கும் வாழ்வின் கதை. ஒரு அடர் மழை நாளில் கிழங்கு திருட வந்து பிடிபட்டுக்கொண்ட பெண்ணின் வறுமை சுழற்றியடிக்கும் கதை. முழுக்க முழுக்க எள்ளல்வழியே நகரசுத்தி தொழிலின் கொடுமையைச் சொன்ன  அவரே எங்கும் விலகாத அடர்த்தியோடு இழுத்துக்கொண்டு போகிறார். ஒரு வேளை பசியமர்த்தும் கிழங்கைத் திருடப் போகிறவள் மின்சார வேலியில் சிக்கிச் செத்துப்போனவர்களின் பட்டியலை நினைத்துக் கொள்கிறாள்.  நிஜத்திலும் கதையிலும் அது கடக்க முடியாத துயரம்.உழைப்பு உன்னதம் தான்,களவு கேவலம் தான். இந்த இரண்டையும் விட இருத்தலும் உயிரும் இன்றி யமையாதது. இதோ இல்லாதவர்களை அலைக்கழிக்கும் இருத்தலின் வலி.

http://www.facebook.com/#!/notes/aadhavan-dheetchanya/kalavu-cirukatai-atavan-titcanya/180560295304249

11 comments:

Chitra said...

இரண்டு வித்தியாசமான கதைகளை குறித்து பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

வானம்பாடிகள் said...

அப்பத்தா போவுறப்ப நம்ம உசுரையும் சேர்த்து புடுங்கிட்டு போயிடுச்சி. எப்படி உங்களுக்கு நன்றி சொல்ல காமராஜ்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அருமையான பகிர்வு இது... காமராஜ்... ஆதவன் தீட்சன்யாவின் நடை அழகு... ரெண்டுமே அருமையான கதைகள்...

அன்புடன்
ராகவன்

அம்பிகா said...

அண்ணா,
அருமையான பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.

இராமசாமி said...

நல்ல பகிர்வு காமு சார் ... நன்றி

வினோ said...

அண்ணா ரெண்டையும் store பண்ணிட்டேன். இரவு படிப்பேன். நன்றி அண்ணா..

க.பாலாசி said...

அருமையான கதைகள் முத்துமுத்தா... அள்ளி அப்படியே கண்களில் ஒத்திக்கணும்போல.... ரொம்ப நன்றிங்க..

ஈரோடு கதிர் said...

bk பகிர்வுக்கு நன்றி!

அதுவும் தொடர்ச்சியாய்.

இன்றுதான் BKவின் facebookல் படங்கள் வேறு பார்த்தேன்!

Sethu said...

வானம்பாடி சார் சொன்னதையே வழிமொழிகிறேன்.

அப்பத்தா/தாத்தா போன்று இன்று வாழும் என் மனைவியின் உறவினர் தான் நினைவுக்கு வருது. நிஜ வாழ்க்கையில் பார்ப்பது மிகவும் அரிது.

காமராஜ் said...

சித்ரா,
ராகவன்,
பாலாண்ணா,
பாலசி,
கதிர்,
ராமசாமிகண்ணன்,
வினோ,
சேது,
மற்றும்
அம்பிகா.

எல்லோருக்கும் அன்பும் நன்றியும்.

aranthairaja said...

நீங்கள் சொல்லியவிதம் ஒருவேளை திரையில் பார்த்தால்கூட அந்த உணர்வு எங்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. காட்சியாய் தெரிந்தன வார்த்தைகள். வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே...

http://aranthaiking.blogspot.com/