25.12.10

கூறு போட முடியாத குளிர்.

வியர்த்துக் குளிர் நிழல் தேடி
வெயில் அலைந்த தெருக்களில்
நடுக்கும் பனி படுத்துறங்குகிறது.

வெது வெதுப்பான இடம் தேடிவருவோர்க்கு
பீடிக் கங்குகளும் பெருமாள் கடைத் தேநீரும்
கடந்து போகும் வாகனப்புகையும்
இடைக்கால இடம் தருகிறது.

பஜனைப்பாடல்களும் வருகைக்கீதங்களும்,
உறக்கம் கெடுத்தாலும் ஒரேகுரலில்
இழுத்துக்கொண்டு போகிறது
இழந்த இசை நினைவுகளுக்கு.

அண்டை வீடுகளுக்கும் பரவுகிறது
கிழிசலில் சிதறும் கிறிஸ்துமஸ் நட்சத்திர வெளிச்சம்
அங்கே உறங்கும் குழந்தைகள் மீது
குவிந்து கிடக்கிறது ஆலீஸின் அற்புத உலகம்.

வண்ணப் பொடிகளில் உயிர்க்கும்
வட்டவடிவக் கனவுகளைத் தொற்றியபடி
கோல வாசல்களைக் கடந்துபோகிறார்
மார்கழிக் காலைகளின் பாதசரிகள்.

வீடுகள், கோடுகள், வண்ணங்கள்
தாண்டிய இயற்கையின் வீர்யத்தோடு
சிரித்துக் கொண்டிருக்கிறது மார்கழிப்பனி.

11 comments:

sakthi said...

மார்கழி மாதத்திற்கான கவிதையா காமராஜ்??? நன்று

sakthi said...

அங்கே உறங்கும் குழந்தைகள் மீது
குவிந்து கிடக்கிறது ஆலீஸின் அற்புத உலகம்.
குழந்தைகளின் உலகே தனி தான்!!!

sakthistudycentre.blogspot.com said...

ரொம்ப புடிச்சிருக்கு.
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

விமலன் said...

கவிதையின் கரங்கள் பற்றிச் செல்கிற தூரம் நிறையவே.

வானம்பாடிகள் said...

மார்கழி எழுத்தோவியம்:)

க.பாலாசி said...

ஒரு அழகானச் சாரல்... காலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது முகத்தில் படியுமே ஜில்லென்று பனிப்புகை அதுபோல கவிதையும்...

ஜோதிஜி said...

இங்கே ஏற்கனவே நடுநடுங்குது. நீங்க வேற நடுங்க வைக்கீறீங்க.

நடுங்கும் அழகு.

வினோ said...

அண்ணா கண் முன்னே விரிகிறது காட்சி..
இங்க பனி பொழிவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்...

Sethu said...

WoW. Super.

சுந்தர்ஜி said...

கலக்கிட்டீங்க காம்ஸ்.

என் பால்ய காலத்து மார்கழியின் புலர்காலைக் காட்சி கவிதையாக.

ஆண்டாள் ஒருவேளை இன்றிருந்தால் இதுபோலவே திருப்பாவை திருவெம்பாவை பாடியிருப்பாள்.

பத்மா said...

அழகான கவிதை சார் ...
எத்தனை எழுதினாலும் அத்தனைக்கும் தகுதி வாய்ந்தது மார்கழி ...
கவிதையும் மாதத்தைப் போலவே சிலு சிலு வென ...
கலக்குங்கள் சார்