10.12.10

வெள்ளைக்குள் ஒளிந்திருக்கும் நிறங்கள்.

மனைவியின் மகப்பேறுக்கு போயிருந்த போது அவளை அந்த மருத்துவர் அழவைத்துக் கொண்டிருந்தார். மெயின் ரோட்டுக்குப் போய் ஒரு விண்ணப்ப படிவம் வாங்கப்போனாளாம்.அது ஒரு மருத்துவ மனை புகழ்பெற்ற மருத்துவமனை.ஒரு சிசேரியன் மகப்பேறுக்கு எதாவதொரு சொத்தை வித்துத்தான் சரிக்கட்டணும்.முழங்கால் வலியென்று போனால் கூட எதுக்கும் ஒரு ப்ளட் டெஸ்ட் பாத்துருங்க,ஒரு எக்ஸ்ரே பாத்துருங்கண்ணு அடுத்த கட்டிடத்துக்காரர்களையும் சேர்த்து வாழவைக்கிற கைராசிக்கார புண்யவான்.

அவர் அங்கு வேலைபார்க்கிற பெண்களுக்கு ஆயிரத்து நூறு ரூபாய்தான் கொடுப்பார்.கொடுக்க எழுதேதி ஆகிவிடும் பதினாலுதரம் எண்ணி எண்ணி பார்த்துவிட்டுத்தான் கொடுப்பார். சம்பளம் வாங்குகிற ஒவ்வொரு மாசமும் அந்தப்பெண்களுக்கு தமிழ்சினிமா இறுதிக்காட்சி பார்க்கிற த்ரில் இருக்கும்.காளிமுத்துவின் மனைவிக்கு தலைப்பிரசவம் சிச்சேரியன் தான். ஒரு வாரம் படுத்த படுக்கையாய் கிடந்தாள். அப்போது சுசீலா தான் அவளைக் கவனித்துக்கொண்டாள்.பதினெட்டு வயசு கூட இருக்காது.இரவு பகள் என ரெண்டு ஷிப்டும் பார்ப்பாள்.அப்படி நாட்களில் ஒரு மீசைக்காரர் வந்து சாப்பாடு கொடுத்துவிட்டுப்போவார்.

எல்லாப்பிள்ளைகளுக்கும் ஆள் வரும்போது ஏ..உங்க அண்ணன் ஒங்க தாத்தா,உங்க அப்பா என்று கூப்பிடுவார் வாட்ச்மேன்.சுசீலாவுக்கு மட்டும் ஏப்ப்ள சாப்பாடு வந்துருக்கு என்று சொல்லுவார்.பேச்செல்லாம் முதிர்ச்சியாய் இருக்கும்.பாப்பா என்றுதான் கூப்பிடுவான் அவளோ பிடிவாதமாக அங்கிள் என்றே கூப்பிடுவாள்.என்ன சுசீ இன்னைக்கு ஒங்கப்பா சப்பாடு கொண்டு வர்ல.கொண்டு வரது அப்பாவும் இல்ல உள்ள இருக்றது சாப்பாடுமில்ல அங்கிள் என்று சொல்லுவாள்.அப்பறம் என்ன ப்ரியாணியா என்றுகேட்பான்.ப்ரியாணியா அத படத்துல கூடப்பார்த்ததில்ல என்பாள்.ஒருநாள் சாப்பாடு வாங்கப்போன காளிமுத்துவுக்கு சுசீலாவின் ஞாபகம் வர ஒரு பொட்டலம் கறிப்பிரியாணி வாங்கிவந்தான்.அங்கிள் என்ன பிரியாணி வாட வருது எனக்கா என்று கேட்டாள்.வாயாடி.ம்ம்ம்ம் உனக்குத்தான் என்று சொன்னதும் ஆடிப்போனாள்.அங்கிள் சும்மா கேட்டேன் சாப்டுங்க என்றாள். இல்லம்மா எனக்கு பிடிக்காது உனக்காகத்தான் வாங்கி வந்தேன் என்று சொன்னதும் அமைதியாகிப்போனாள்.

நான்காம் நாள் காளிமுத்துவின் மனைவிக்கு காய்ச்சலும் வந்துவிட்டது.அறுவை சிகிச்சை,குழந்தை, கூடவே காய்ச்சல்.சுசீலவை கூடவே இருக்கச்சொல்லிவிட்டு மருத்துவர் போய்விட்டார்.அதிக மெதுவாக க்ளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது அதன் வேகத்துக்கு இரவு முழுக்க ஏறினாலும் இரண்டுபாட்டில் தான் ஏறும்.ஒரு ஆனந்த விகடனும்,தாய் நாவலையும்,ஒரு ப்ளாஸ்க்கையும் கொண்டு போயிருந்தான்.இரவு இரண்டு மணிவரை காளிமுத்து கண்விழித்திருப்பது.அதன் பிறகு சுசீலா இப்படி புரிதல் உண்டானது.ஆனாலும் முழு இரவும் அவளே விழித்திருந்தாள்.முக்கால்வாசி நாவலையும் அவளே படித்திருந்தாள்.காலை ஏழு மணிக்கு எல்லோரும் தூங்கிப்போனார்கள்.காளிமுத்து முதலில் கண்திறந்த  போது சுசீலா அவன் மேல் கைபோட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.சின்னவயசில் அவனது தங்கச்சி சந்தனமாரி அவன்மேல் கைப்போட்டு தூங்குகிறமாதிரி.

காளிமுத்து வெளியே போயிருந்த நேரத்தில் ஏப்ள ஏ சுசீலா அண்ணே ரிசப்சன்ல இருந்தா கூப்டு என்று சொல்லியிருக்கிறாள்.இங்கபாருங்கக்கா நா ஆசப்பட்டுத்தா ஒங்கள அக்காண்ணும் அவர அங்கிள்ணு கூப்பிடுறே.ஒங்க வீட்லருந்து கோழிக்கொழம்பு கொண்டு வந்தப்போ எல்லோரோடயும் ஒக்காந்து சாப்பிட்டப்பவே முடிவுபண்ணிட்டேன்.ஒங்களுக்கு பிடிக்கலண்ணா சார்னே கூப்டுறேன் என்றாளாம்.ஏப்பிள்ள அப்படீல்லாம் கெடயாது இப்பவேண்ணாலு எங்கூட வந்துரு எனக்கு ஒண்ணியப்போலொரு தங்கச்சி வேணும் என்று சொன்னதும் கட்டிப்பிடித்துக்கொண்டு அளுதாளாம்.நேரங்கிடைக்கிற போதெல்லாம் குழந்தையைத்தூக்கி வைத்துக்கொள்வாளாம். 'பாவம்ல' காளிமுத்துவின் மனைவி சொன்னாள்.

அங்கிள் எங்க படிச்சீங்க,ஒங்களுக்கு எத்தன தங்கச்சி,அக்கா வீட்ல ரொம்ப பணக்காரங்ளா கேள்விகள் கேட்டு காளிமுத்து சொல்வதை ஒரு புத்தகம் படிப்பதுப்போல கூர்ந்து கேட்பாள்.அனால் தனக்கான புத்தகத்தை ஒரு போதும் அவள் திறப்பதில்லை.அலுவலகத்துக்கு விடுப்புச்சொல்ல தந்தியடிக்க போகவேண்டியிருந்தது ஞாபகம் வந்தவனாக எதோ அப்ளிகேசன் போடனுண்ணுல்ல கேட்டான்.அந்தநேரத்தில் மருத்துவரின் வார்த்தைகள் ஒலித்திருக்கவேண்டும்,முகம் சுருங்கிப்போனாள்.இல்ல அங்கிள் எனக்கு எதுவும் கிடைக்காது,ராசியில்லாதவ எங்கம்மா அப்டித்தா சொல்லுவாங்க.வற்புறுத்திக் கேட்டு அவனே வாங்கிவந்து நிறப்பச் சொன்னான்.நீங்களே நிறப்பித்தாங்க .பத்து,ப்ளஸ்டூ,நர்சிங் டிப்ளமோ,படிப்பு அத்தாட்சி நகல்களைக் கொடுத்துவிட்டு இன்னொரு பேறுகாலத்தைப் பார்க்கப் போய்விட்டாள்.சாட்சியாபுரம் சிஎம் எஸ் பள்ளிகளில் படித்திருந்தாள்,மதுரையில் நர்சிங் டிப்ளமோ எல்லாம் நிறப்பி அப்பா பெயர்,வீட்டு விலாசங்களை நிறப்பாமல் வைத்திருந்தான்.

நான்குமணிக்கு வந்தாள்.அப்பா பேர் கேட்டான். நிறைய்ய மௌனமாக இருந்தாள்.ப்ளாங்கா விடமுடியாதா அங்கிள் என்றாள்.காளிமுத்து மௌனமாகிப் போனான்.கார்டியன் போடலாம் என்றான்.ஒங்க பேர் போடுங்க என்றாள்.ப்ரியாணி மாதிரி இதுவும் சும்மாதானே என்றான்.இல்ல மாமா நெஜம்மாவே என்ற போது கண்களில் நீர்கோர்த்திருந்தது.அனுப்பிவைத்தான். விடைபெறுகிற நாளில் ஆட்டோ  வரை வந்து வழியனுப்புவாள் என்று நினைத்திருந்தான்.லீவு போட்டுவிட்டுப்போய்விட்டாள்.ஒரு ஆறு மாதம் கடந்து போயிருக்கும் யாரோ அவனது வீட்டு விலாசம் விசாரிப்பது கேட்டு கேட்டைத்திறந்தான்.சுசீலா தான்.சென்னை பொதுமருத்துவமனையில் வந்து சேரச்சொல்லி கடிதம் வந்திருந்தது.கடித்ததோடு இனிப்பு பொட்டலமும்,ஒரு குழந்தை சட்டையும் கொண்டுவந்திருந்தாள்.காளிமுத்து வேலைக்குப்போன பின்னும் அங்கேயே தங்கிவிட்டாள்.அவளே சமைத்தாளாம்,அன்னைக்கு பூராவும் பையனைத் தூக்கி வைத்துக்கொண்டு இறக்கிவிட்வே இல்லையாம்.

இரவு திரும்பி வரும்போதும் சுசீலா இருந்தாள்.அவளே தோசை சுட்டுக்கொடுத்தாள்.அவள் நடவடிக்கைவேத்தாள் மாதிரியே இல்லை.வண்டியில் கொண்டு போய் ஊரில் இறக்கிவிட்டு வாங்க இந்த ரூபாயையும் செலவுக்கு வச்சுக்க என்று ஒரு ஆயிரம் ரூபாயையும் கொடுத்தாள்.மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.ஊர் தாண்டிப்போகும் போது இருள் அவர்கள் இருவரையும் கறைத்துக்கொண்டது.மாமா ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒங்க குடும்பத்த பார்த்திருந்திருக்க கூடாதா என்று சொன்னாள்.ஏ இனிமே ஊருக்கு வரும்போதெல்லாம் இங்கே வா என்றான்.இல்ல மாமா அம்மாவக் கூப்பிட்டுக்கிட்டு மெட்ராசிலே செட்டில் ஆகப்போறன் என்று சொல்லிவிட்டு மாமா மெட்ராஸ் வந்தா கண்டிப்பா என்னப்பாக்க வரணும் என்றாள்.தாயில்பட்டி ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளே போகணும் வழிசொன்னாள்.நடுவழியில் வண்டியை நிறுத்தச்சொன்னாள்.ஒரு கைக்கடிகாரமும் கொடுத்தாள்.

திரும்பி வர நெடுநேரம் ஆனது.தயங்கித்தயங்கி வந்தவனை என்ன அதுகுள்ள வந்துட்டீக என்று கேட்டுவிட்டு அவளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள் காளிமுத்து ஊங்கொட்டிக்கொண்டே இருந்தான்.

16 comments:

Chitra said...

வண்ணங்கள் மிளிர்கின்றன!

கே.ஆர்.பி.செந்தில் said...

மிக கனமான கதை.. அந்த இருளில் அவர்கள் இருவரும் கரைந்து போனார்கள் என சூசகமாக சொல்லியிருப்பது அருமை ..

வினோ said...

அண்ணா என்ன சொல்றதுன்னு தெரியல.. அருமையான கதை... முடிவு பலவாறு யோசிக்க வைக்கிறது..

வானம்பாடிகள் said...

அபாரம். ரொம்ப நாசூக்கான கதை. :)

க.பாலாசி said...

சார்..படிக்கிறவன குலுக்கியெடுக்கிறீங்க. எவ்வளவு அழுத்தம் திருத்தம்.. தானா வர்ர உறவுகளுக்குள்ளும் ஒரு விட்டகுறை தொட்டகுறை உண்டாகத்தான் செய்யுது....விடுவதும் தொடுவதும் அவரவர்பாடு. இது ரொம்ப சூசகம். அருமை..

சுந்தர்ஜி said...

இந்தக் கதையை இன்றைய இரவுக்காக ஒதுக்கிவைத்திருந்தேன் காமராஜ்.

அதற்கு முன் உங்களோடு பேசுவேன் என்ற கணிப்பற்று உதித்த இந்த நாளின் ரகசியம் பொதிந்த இந்த பின்மாலைப் பொழுதின் மீதான ஆச்சர்யம் இன்னும் விட்டகலவில்லை காமராஜ்.

உங்களை நினைக்கும் போது இனி கரை புரளும் உங்களின் உற்சாகமான சிரிப்பு நினைவுக்குவரும்.

தொடர இருக்கும் உறவுக்கும் இந்த இரவுக்கும் நன்றி காமராஜ்.

கதைக்குப் பின்னூட்டம் நாளை.

பத்மா said...

நாசுக்கு ,,,அழகு ..
கதை சொல்வதில் expert ஆன நீங்கள் எழுதுவதில் ஆச்சரியமே இல்லை .
liked it sir

Sethu said...

நல்லா இருக்குங்க.

ஈரோடு கதிர் said...

மென்மையாய், ஆழமாய் மனதை ஆட்டும் நிறைவு!

sakthi said...

க்ரேட் சார் :))

rajasundararajan said...

கலக்கமாக இருக்கிறது. சங்கடமாகவும்.

//ஒரு கைக்கடிகாரமும் கொடுத்தாள்// என்பதில் உள்ள 'உம்' போதுமானதாக இருந்தது.

'கைக்கடிகாரம்'? கால ஓட்டத்தில் கவனம் கொள்ளும் போதெல்லாம் காளிமுத்து இனி சுசிலாவை நினைவு கொள்ளாமல் தப்ப முடியாது.

'ஆனந்தவிகடன்' அதோடு 'தாய்' நாவல்: நடுவழியில். //நடுவழியில் வண்டியை நிறுத்தச் சொன்னாள்//, நிறுத்தாமல் என்ன செய்வான்?

'வெள்ளை' நர்சுகளுக்கான சீருடை என்றாலும் அப்படி நான் கணக்கில் கொள்ளவில்லை. தனியார் மருத்துவமனைகளில் பல நிறங்களிலும் வழக்கம் இருக்கிறது.

காளிமுத்து மனைவி. அவளுக்கு அடையாளமே அதுதான். பெயர் கிடையாது. //"வண்டியில கொண்டு போயி ஊர்ல இறக்கிவிட்டுட்டு வாங்க", "இந்த ரூபாயைச் செலவுக்கு வச்சுக்க!" என்று ஒரு ஆயிரம் ரூபாயையும் கொடுத்தாள்//. இந்தப் பெயரிலி - காளிமுத்து மனைவி - இவள்தான் வெள்ளை. மற்ற இரண்டும் நிறங்கள். இது என் வாசிப்பு.

ஆதரவு, பிரியம், அஃதோடு (அத்தோடு) அமையக் கூடாமல் ஒரு கொடுக்கல் வாங்கலில் கொண்டு முடிக்கிற உறவுப் பலி!

வாசித்ததில், கலக்கமாக இருக்கிறது. என் சமூகம் எம் மக்கள் நானும் இப்படித்தான் என சங்கடமாகவும்.

Mahi_Granny said...

முதல் தடைவையாக பத்மா அவர்களின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன். கதை சொல்வதில் expert தான் .

சுந்தர்ஜி said...

நாட்காட்டியின் மர்ரொரு நாள் போல இரக்கமற்ற வாழ்க்கையின் இடைவெளியிலும் எப்படிப்பட்ட மனங்களும் அவற்றின் நிறங்களும்.

மற்றவருக்குப் பிடிக்கும் என்பதற்காக தனக்குப் பிடிக்காததாய் இருக்கும் ஒன்றை வாங்கித் தருவது பரிபூரண அனபில் திளைத்தவர்களுக்கே வாய்க்கும்.

அப்பாவின் பெயரை விடமுடியாதா என்று சுசீலா சொல்லும்போது கரைந்துபோனேன் காமராஜ்.இந்த வரிகளை குணாவில் கமலஹாஸன் கிரீஷ் கர்னாடிடம் சொல்லிப் புலம்பும் துவக்கக் காட்சிக்கு ஒப்பிடத் தோன்றுகிறது.

காளிமூத்து ஊங்கொட்டிக் கொண்டே இருந்தான் என்ற வரிகளில் முடிந்த இந்தக் கதை மறுநாள் வேறெங்கோ தொடர்ந்தபடி இருக்கும்.

வாழ்க்கை நேர்கோட்டில் செல்வதான கற்பனையோடு வாழ்பவர்கள் அவசியம் இதைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

எழுதிய மை உலரும் முன் படிக்கக்கிடைத்தது பெருமையாக இருக்கிறது காமராஜ்.

பத்மா said...

தலைப்புக்காக மற்றொரு முறை ...
யார் வெண்மை? யார் வண்ணமயமானவர்கள்?
எது இதம் நிறமா ?நிறமற்றதா? இல்லை யாவற்றையும் முழுங்கி நிற்கும் வெண்மையா?

Siva said...
This comment has been removed by the author.
Siva said...

"தயங்கித்தயங்கி வந்தவனை"
என்பதனனை நோக்கி பயணித்த கதையில்[கதைதானே?]"சின்னவயசில் அவனது தங்கச்சி சந்தனமாரி அவன்மேல் கைப்போட்டு தூங்குகிறமாதிரி" என்ற வார்த்தைகளை மாற்றியிருக்கலாம்.அல்லது "தயங்கித்தயங்கி வந்தவனை" என்பதனையாவது மாற்றியிருக்கலாம்.அவள் உறுதியுடன் தான் இருந்திருக்கிறாள் என்பது "இங்கபாருங்கக்கா நா ஆசப்பட்டுத்தா ஒங்கள அக்காண்ணும் அவர அங்கிள்ணு கூப்பிடுறேன்"என்று தெரிய வைக்கப்படுகிறது."என்ன அதுகுள்ள வந்துட்டீக" என்று அவளும் அந்த உறவை அங்கீகரிக்கவே செய்கிறாள்.
".கார்டியன் போடலாம் என்றான்.ஒங்க பேர் போடுங்க என்றாள்.ப்ரியாணி மாதிரி இதுவும் சும்மாதானே என்றான்.இல்ல மாமா நெஜம்மாவே என்ற போது கண்களில் நீர்கோர்த்திருந்தது".என்பது போன்ற வார்த்தைகளில் கதையை நகர்த்தி எங்கள் பார்வை எதை நோக்கி என்று சுய சோதனை செய்ய வைத்து விட்டீர்கள்.