13.5.12

நாளைமற்றொரு நாளே - விழுமியங்களின் எதிர்முனையிலிருந்து.

மதுரை டவுன்ஹாலில் வினாத்தாள் திருத்த ஆசிரியர்களோடு நடந்து போகையில் எங்கிருந்தாவது ஓடிவந்து ’ ஏ தணுஷ்கோடி எனக்கு ஒரு இருபது ரூபாய் கொடு, நான் சாராயம் குக்கவேண்டும். நீ எனக்குக்கொடுத்துத்தான் தீரவேண்டும். நீ எனக்குக்கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப்போகிறாய்’ என்று அதட்டலோடு வாங்கிக்கொண்டு போவாராம். எங்கள் ஆசான் எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்த பொழுதுகளில் குறைந்த பட்சம் நான்கைந்து தரம்  இந்தக்கதையைக்  கேட்டிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் மிகச்சிறந்த தமிழ்நாவல் களின் பேச்சு வருகிறதோ அப்பொழுதெல்லாம்  அழுக்குச் சட்டையணிந்திருந்த அந்த எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை பற்றிய செய்தி கூடவே பேசப்படும்.

தனது இறுதி நாட்களுக்கு முன் மதுரை வீதிகளில் அலைந்த எழுத்தாளர் ஜி.நாகரஜனைப் பற்றித் தான் எங்கள் ஆசிரியரும் தோழருமான தணுஷ்கோடி ராமசாமி அவர்கள் சொல்லுவார். குறத்தி முடுக்கு,நாளை மற்றொரு நாளே ஆகிய புதினங்கள் படிக்கத்தூண்டும் சுவாரஸ்யத்தின் கூடவே ஒரு பயத்தையும் கொண்டு வந்து சேர்க் கும்.அந்த பயத்தோடே பத்திருபது ஆண்டுகள் ஓட்டி விட்டேன்.சென்ற பதினொன்றாம் தேதி ராமநாதபுரத்து தனிமை என்னை அரண்மனை தொடங்கி செண்ட்ரல் ப்ளாசா வழியே முன்று தரம் அலைய விட்டது.ஏதாவது நான் விரும்புகிற புத்தகம் கிடைக்குமா  என்று அங்கி ருக்கிற அருணா ஸ்டோருக்கு (பெரும்பாலான ஊர்களில் ஸ்டேசனரிக் கடைகள் அருணா ஸ்டோர் என்றே இருக்கிறது) மூன்றாம் முறையாகப் போனேன்.

வாழ்க்கையில் ஜெயிப்பது  எப்படி, இயற்கை வைத்தியம் தொடங்கி எல்லாவைத்தியம்,செட்டிநாட்டுச்சமையல் தொடங்கி சீன நாட்டுவைத்தியம் வரையில்  அடுக்கி வைத்திருந்த புத்தகங்களோடு எக்சைல்,கொற்றவை போன்ற மிரட்டல் புத்தகங்களும் கிடந்து பயமுறுத்தியது. இவற்றின் தலைப்பும் சரி விலையும் சரி சாமன்யனை அருகே  அண்ட விடாது. அங்கு அரிதாக நாளை மற்றொரு நாளே,மாதொருபாகன் இரண்டும் இருந்தது.வாரிக் கொண்டுவந்தேன்.அன்று இரவு இரண்டு முறை மின்சாரம் தடைபட்டுப் போன பின்னும் நாளை மற்ரொரு நாளே புதினத்தை ஒரே மூச்சில் படிக்க முடிந்தது. எழுத்து அப்படியே இழுத்துக்கொண்டு போனது. எனக்குள்ளிருந்த பயம் எண்பதுகளைக் காட்டிலும் இன்னும்  அதிகமாகி விட்டது.

விளிம்பு மக்களின் வாழ்க்கையை எந்தவித மினுக்கல்களும் இல்லாமல் இயல்பாய் சொல்லவும் முடியும் என்று வரம்புகளைத் தாண்டிக் குதித்திருக்கிறார் ஜி.நாகாராஜன். தனது காதல் மனைவி மீனாவோடு கூடியிருக்கும் போது அனில்களின் கூடல்களையும், யானையின் கூடல்களையும் பேசிச்சிரிக்கும் கந்தன். விகல்பமில்லாமல் அணிகள் மயங்கிக் கிடக்கிற இதே மாதிரி, உனது வாடிக்கையாளர்கள் எவரோடும் மயங்கிக் கிடந்திருக்கிறாயா என்று கேட்கிறான்.அவள் ஒவ்வொருத்தராக விவரிப்பது உலுக்கி எடுக்கிறது.பேச்சியின் வீட்டில் வைத்து தொழில் நடத்துகிற மீனாவிடம் பொய்சொல்லி ரூபாய் வாங்குவது அவளும் அதைக் கண்டும் காணாமல் இருப்பது. ஒரு மதிய வேளையில் தன்னந்தனியே படுத்திருக்கும் கந்தனிடம்  ராக்காயி என்கிற மோகனா வருவதும் வெத்திலை பாக்கு வாங்கிக் கொடுக்கிறமாதிரி மச்சான் கந்தனுக்கு இஞ்சிச் சாராயம்  வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பது வுமாக வாழ்க்கை அவர்களுக்கு எல்லாம் கடந்ததாக இருக்கிறது.

கைப்பிள்ளையோடு வரும் கைம்பொண்,செட்டியாருடைய வைப்பாட்டியான ஆங்கிலோ இந்திய ஐரின், கடைசி யில் கொலைக் குற்றத்துக்கு ஆளாகும் வேளையில் அருகே இருக்கும் அன்னக்கிளி என,எல்லாம் கடந்த பெண் களாகவே கதை நெடுக வருகிறார்கள். இந்த கால் நூற்றாண்டில் படித்த எழுத்துக்களின் வழியே நமக்குள் படிந்து
போன படிமங்கள் ஒவ்வொன்றாய் வந்து நான் எங்கே நான் எங்கே எனத்தேடச் சொல்லுகிறது. காதல் வீரம் கற்பு
லட்சியம் என்கிற அகப்புற இசங்கள் எல்லாவற்றையும் சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய் எனப்புறந்தள்ளிவிட்டு
குடிசைக்குமுன்னாள் இருக்கும் சாக்கடையைத் தாண்டுகிற மாதிரி தாண்டிவிட்டுச்செல்கிறான் கந்தன்.அவன் நடந்து போகிற தெருக்கள்,அவனை ஏற்றிச் செல்லுகிற குதிரைவண்டி எப்பொழுதாவது கடந்து போகிற கார்கள், ஆள்பிடிக்கக் காத்திருக்கிற தியேட்டர்வாசல்,கட்சிமாநாட்டுக்கு வந்து போகிற மனிதர்கள்,லட்ஜின் வரவேற்பு அறையில் உட்கார்ந்து அரசியல் பேசும் மனிதர்கள் என மதுரையைப் புரட்டிப்போட்டு வரை படம் வரைந்து தந்திருக்கிறார் இந்த நாவலில். 

லாட்ஜில் காத்திருக்கும் பார்ட்டியிடம் தகிடுதத்தம் செய்து ஐம்பது ரூபாய் சம்பாதிப்பது. ஐரினையும் செட்டியாரை யும் வெட்டி விட்டு தரகுபார்ப்பது. கைம்பொண்டாட்டியை விலைபேசி அனுப்புவது சாக்கனாக் கடைக்காரனுக்கு உதவுவது என எல்லா காரியங்களும் தர்மஞாயங்களின் வாடையடிக்காத காரியங்களாகவே வாய்க்கிறது கந்தனுக்கு. அதுவெல்லாம் கூட இருத்தலின் பொருட்டு என்று சமாதானப் படுத்திக்கொண்டாலும் சுகவீனப்பட்டு கிடக்கிற தனது சொந்தக் குழந்தையை இறந்து போகிற வரை இயல்பாக்கி விடுவது நிறைய்ய எதிர்ப்பார்ப்பையும் அதிர்ச்சியையும் தரும் தருணம்.

இவ்வளவு  அதிர்ச்சியை வைத்திருக்கிற கதை அதற்கு ஈடாக பக்கம் பக்கமாய் எள்ளல்களையும் அடைத்து வைத்திருக்கிறது. செட்டியார்  செத்துப்போனதும்  வளர்ந்து வந்த அவரது தொப்பை வெடித்துத்தான் செத்திருப்பார் என்று சனங்கள் நினைத்திருக்கக் கூடும் என்று படிக்கும் போது சிரிக்காமல் இருக்கமுடியாது. அவர் நடத்துகிற காய்கறி மண்டியில் வெளிநாட்டுக் காய்கறிகளை அறிமுகப்படுத்தும்போது முள்ளங்கியில் பாதரசமும் கோசில் சுண்ணாம்பும் இருக்கிறது எடுத்துப் போங்கண்ணே என்று சொல்வாராம் இப்படியே போனால் பீட்ரூட்டில்  அலு மினியமும் காலிப்ளவரில் தங்கமும் கிடைக்கும் என்று சொல்லலாமாம். இன்னொரு முறை ஒருவன் கந்தனிடம் அறிவார்ந்து பேசுவதுபோல  அண்ணே இத்தனை தவறுகள் செய்கிறீர்களே அதற்கு என்ன காரணம் தெரியுமா வறுமை தானே என்று ஒருவன் கேட்பான் அதற்கு ’கொழுப்புத்தான்’ என்று கந்தன் பதில் சொல்லுவான்.

இருந்தாலும் படித்து முடித்த பிறகு கந்தனின் சில்க் ஜிப்பாவும் அவன்மறைத்து வைத்திருக்கிற சூரிக்கத்தியும் வாடிக்கையாளர்களிடம் சந்தோசமாக இருந்த தாகப்பாவித்துவிட்டு  கந்தனுடன் இறுக்கமாக இருக்கும் மீனாவும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை விட்டு ஓடிப்போன மகன் சந்திரனின் நினைவுகளோடு கூடிய அவர்களின் துயர் நிறைந்த வாழ்வும் நெருடிக் கொண்டே இருக்கும்.

12 comments:

க ரா said...

செமயான புக்கு சார். நல்ல விமர்சனம்.. மதொருபாகனயும் படிச்சிட்டு எழுதுங்க :)

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி சார்.

ராம்ஜி_யாஹூ said...

அருமையான விமர்சனம்
மதுரை யோடு நெருக்கம் உள்ள உங்களின் வார்த்தைகளில்
மதுரை மண்ணின் வாசம் எனது கணினியில் உணர முடிகிறது

காமராஜ் said...

அன்பின் கண்ணன் வணக்கம்.எவ்வளவு நாளாயிற்று.வலையில் சந்தித்து.நலமா.ஊருக்கு எப்பொழுது வருவீர்கள்.கருத்துக்கு நன்றி

காமராஜ் said...

வணக்கம் ரத்னவேல் ஐயா.நன்றி.

காமராஜ் said...

நன்றி ராம்ஜி.

காமராஜ் said...

அன்பின் கண்ணன் வணக்கம்.எவ்வளவு நாளாயிற்று.வலையில் சந்தித்து.நலமா.ஊருக்கு எப்பொழுது வருவீர்கள்.கருத்துக்கு நன்றி

ஓலை said...

vanakkam. Nalla vimarsanam.

kashyapan said...

nhaNpar kaamaraaj avarkaLE! veLLai gippaa,vEttiyil pitikkatangaatha mIsaiyutan avar tavuN Haal rOtil valam varum azakai rasiththavan nhaan. eppErpatta manitharai izanthuvittOm.....kaashyapan.

vasu balaji said...

நாகராஜன படிச்சா நாலு நாளைக்கு தூக்கம் போயிரும். என்னா எழுத்து சாமி:)

செ.சரவணக்குமார் said...

நல்ல விமர்சனம் காமு அண்ணா. ஜி.நா வை வாசிப்பது அற்புதமான அனுபவம். குறத்தி முடுக்கு கிடைத்தால் வாசியுங்கள்.

சித்திரவீதிக்காரன் said...

இன்னொரு முறை ஒருவன் கந்தனிடம் அறிவார்ந்து பேசுவதுபோல அண்ணே இத்தனை தவறுகள் செய்கிறீர்களே அதற்கு என்ன காரணம் தெரியுமா வறுமை தானே என்று ஒருவன் கேட்பான் அதற்கு ’கொழுப்புத்தான்’ என்று கந்தன் பதில் சொல்லுவான். \\ இதான் ஜி.நாகராஜனின் தனிநடையே. சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலிகளை உடைத்தெறிவதே அவரது எழுத்துகள்.

ஜி.நாகராஜனின் ஆக்கங்கள் நூலை சென்ற ஆண்டுதான் படித்தேன். ஒவ்வொரு பக்கத்தையும் கடக்கையில் புதிய வாசிப்பனுபவமாக இருந்தது. ஜி.நாகராஜனின் எழுத்து எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

மதுரை வீதிகளில் அலைந்து திரியும் எனக்கு மதுரைவீதிகளை மையப்படுத்தி கதைகளை அமைத்த ஜி.நாகராஜனைப் பிடிக்காதா பின்னே?

குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே எல்லாவற்றையும் போல அவரது சிறுகதைகளும் தனித்துவமானவை.

பகிர்விற்கு நன்றி.