17.6.12

வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

வலைஎழுத்தில்  வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

மூன்று மணிநேர பயணத்துக்கப்புறம் மாட்டுத்தாவணிப்பேருந்துக்கு வந்திறங் கும் பயணிகள் எல்லாம்  முண்டி யடித்துக்கொண்டு எங்குபோவார் களோ அங்கேதான் போனேன். மூன்று ரூபாய் சில்லறை கேட்டார். இங்கே மூன்று க்கு ஒன்று இலவசம்.அப்பாட. அதற்கப்புறம் வணிக வளாகத்துக்குள் மேல் கோடியில் இருந்து கீழ்கோடி வரை ஒரு நடை நடக்க எனக்குப் பிடிக்கும். வலது கைப்பக்கம் இறுகக்கட்டி இடையிடையே சிகப்பு வண்ண செயற்கைப்பூ வைத்து அழகுபடுத்தப்பட்டிருக்கும் மல்லிகையின் மணத்தை ஓசியில் நுகர்ந் தபடி போக மனசு கொஞ்சம் லாஞ்சனைப்படும்.நாத்தம் சகிக்க முடியாத இடத்தில் ஒண்ணுக்குபோவதற்கு மூன்று ரூபாய்தெண்டம் கொடுத்து விட்டு, இந்த மனம் மயக்கும் சுகந்தத்தை ஓசியில் நுகர்ந்து செல்கிறோமே என்கிற லாஞ்சனை வரும். எத்தனைமுறை கடந்து போயிருக்கிறேன் ஒருதரமாவது பத்துரூபாய்க்கு  வாங்கிவீட்டுக்கு கொண்டுபோக வேண்டுமென்கிற யோசனை வந்ததில்லை.

வழுவழுப்பான தரையில் சுருண்டு தூங்கும் பயணிகளையும் சாயங்காலம் ஏழுமணிக்கு ஆவிபறக்கிற பூரியைக் காட்டி சாப்பிட அழைக்கும் ஹோட்டல் காரரையும்,தோசைக்கல் சைசுக்கு சுட்டு வைத்திருக்கிற முறுக்கையும்  பார்த் துக்கொண்டே  கடந்து போனேன்.எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எச்சரிக்கை செய்து  கொண் டிருந்த காவல்துறை அன்பரின் குரலில் குழைத் துக்கொடுத்த பயத்தை, அவர் ஒலிக்கவிட்ட எம்ஜியார் பாட்டு அதிகரித்தது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம்.

வசலுக்கு வந்து சின்ன சொக்கிகுளம் போகிற பேருந்து எது என்று கேட்டேன். தப்பான பேருந்தில் ஏறி  பாதி வழியில் இறங்கி ஆட்டோ பிடித்து பிடிஆர் ஹாலுக்கு போகும்போது ஹாலின் முகப்பில் யாரும் இல்லாதது கண்டு பயந்து போனேன். காரணம் தோழர் பத்மாவின் நூல்வெளியீடு ஏழுமணிக்கு. நான் போனது  எழேமுக் காலுக்கு. ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை இப்படி நிகழ்ச்சி முடிந்தபிறகு போய் போன ஜோரில் திரும்பி வந்திருக்கிறேன். அதுவெல்லாம் சொந்த ஊரிலேயே. இது அதிக தூரம், சுமார் 112 கிமீ. இந்த முறையும் ஏமாந்து போனாயா என்று சோர்ந்து போனது மனது.காவலாளி ஓடிவந்து சார் ஃபங்க்சன் மேல நடக்கு என்று  சொன்னார். ஓடிப்போய் மேடையைப்  பார்த்தேன் மேடையில் பத்மா ஜாடையில் யாருமே இல்லை. மணப்பெண்ணும்  மண மகணும் இருக்க ஒரு ஓரத்தில் க்ளாரிநெட்டில் ஒரு கலைஞன் உயிரை  உருக்கிக் கொண்டிருந்தார். சினிமாவில் வருகிறமாதிரி கொஞ்சம் ஒரு 90 டிகிரி காமிராவை திருப்பினேன். பத்மா.அலைந்த கலைப்பு போய்விட்டது.

நூல் வெளியீட்டுவிழா என்றால் மேடையில் தான் நடக்குமென்கிற நடப்பை தகர்த்து நுழைவாயிலின் ஒரு  ஓரத் தில் தோழர் பத்மஜாவின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களில் பத்மாவும்  எழுத்தாளர் சக்திஜோதி மட்டுமே தெரிந்தவராக இருந்தார்கள். இன்னும் முடியலையே என்று கேட்டேன்  இனி மேதான், என்று சொல்லி, அங்கிருந்த வர்களை அறிமுகப்படுத்தினார்.கிட்டத்தட்ட எல்லோருமே எனக்கு முகநூல் வழியே பரிச்சயமான பெயர்களாகவே இருந்தது. தோழர் லட்சுமி சரவணக் குமார் முகநூல் படத்தில் பார்த்ததை விடவும், முதிர்ச்சியாகத் தெரிந்தார். பேச்சிலும் கூட. மணிஜீ, அகநாழிகை வாசுதேவன் ஆகியோரைத் தேடினேன் அவர்கள் வரத் தாமதமாகும் என்று பத்மா சொன்னார்கள்.

தங்கை தாரணி ப்ரியாவை அறிமுகப்படுத்தும் போது சந்தோஷமும் கூடவே வருத்தமும் சேர்ந்துவந்தது. நான் 2008 ல் ப்ளாக் ஆரம்பித்து எனக்குத்தெரிந்த தோழர்களைத் தாண்டிப்போய் நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்த முதல் ப்ளாக் தாரணியுடையது.அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருட வலைப் பரிச்சயம் இருந்தது அவரோடு. பின்னர் எனது பதிவுகளுக்கு கமெண்ட் போடுவார் அது பெரிதல்ல வாய்க்கு வாய் சாரி, வரிக்கு வரி அண்ணா என்று எழுதுவார் அதில் நான் லயித்துப் போயிருக்கிறேன். வெயிலின் அருமை நிழலில் தெரியும். அந்த தாரணியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் இருந்துகொண்டு ஒரு ஹலோக்கூட சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்பது வலை அறிமுகப்படுத்தியிருக்கிற ஒரு புதுவகையான உணர்வு. அப்புறம் சம்பிரதாயத்துக்கு இரண்டுவார்த்தை பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டோம். அந்த நாள் முழுக்க திரும்பத்திரும்ப அது பற்றியே யோசிக்க வைத்தது.

4 comments:

விமலன் said...
This comment has been removed by the author.
விமலன் said...

நல்ல பகிர்வு.மிகவும் உயிர்ப்புடன் இருக்கிறது.மல்லிகையை மட்டுமல்ல,பலவிஷயங்களை வாங்க மறந்துபோகிறோம்.

சித்திரவீதிக்காரன் said...

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடக்குமிடத்துக்குமிடையேயான தங்கள் மதுரை வர்ணனை அருமை. நன்றி.

arunachalam bharathi said...

அந்த தாரணியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் இருந்துகொண்டு ஒரு ஹலோக்கூட சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்பது வலை அறிமுகப்படுத்தியிருக்கிற ஒரு புதுவகையான உணர்வு. அப்புறம் சம்பிரதாயத்துக்கு இரண்டுவார்த்தை பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டோம். அந்த நாள் முழுக்க திரும்பத்திரும்ப அது பற்றியே யோசிக்க வைத்தது./////// why! !! I'm not able to understand what you are saying!