29.7.12

bread and tulips - (இத்தாலியப்படம்) வசீகரிக்கும் முதிர்காதல்.


ஞாயிற்றுக்கிழமைகளை அர்த்தமுள்ளதாக்க மிகப்பெரும் முயற்சிகள் தேவையற்றுப் போகிறது. மிகச்சாதாரண நிகழ்வுகளும்,சம்பாஷனைகளும் அந்தநாளை இனிதாக்கிவிடும். பயணக்களைப்பில் படுத்துக்கொண்டே  தொலைக் காட்சி பார்க்கிற சோம்பேறி நிமிடங்களை நிமிர்த்தி வைத்து,அதற்குள்ளேயே இழுத்துக்கொண்டு போய் அமிழ்த்தி விட்டது இன்றைய சினிமா.bread and tulips என்கிற இத்தாலிப்படம் அது. வெறும் பத்து அல்லது பனிரெண்டே கதாபாத்திரங்கள். அவர்களு டனான உறவுகள், உணர்வுகள் இவை அணைத்தையும் பார்வையாளர்கள் மேல் பாய்ச்சமுடிந்திருக் கிறது அந்த இயக்குனரால்.

விடுமுறையைக்கழிக்க பேருந்தில் பயணமாகும் ஒரு குடும்பம் ஓரிடத்தில் அந்தக்குடும்பத்தின்  பிரதானப் பெண்ணை மறந்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறது. இரண்டு மணிநேரங்களுக்கு மேலாகியும் கணவனோ குழந்தைகளோ அவளைத்தேடி திரும்ப வராததால் பேதலித்துப் போகிறாள். தெரியாத இடம் மீண்டும் எப்படி வீடுபோவோம் என்று அல்ல. எப்படி மொத்தக்குடும்பமும் தன்னை மறந்து போனது என்கிற சிந்தனையில் குழம்பி, தன்னைத்தானே தொலைத்துக்கொள்கிறாள்.அந்த விடுமுறையைத் தனியேகழிக்க விரும்புகிறாள். தன் வாழ்நாளில் ஒருதரமாவது பார்த்துவிட ஏங்கிய வெனிஸ் நகருக்கு போகிறாள் ரோசல்பா.

வெனிஸ் நகரின் மார்க்கபோலோ விடுதியில் தொடர்ந்து தங்கமுடியாத அளவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த விடுதியின் சேவகர் பெர்னாண்டோவிடம் உதவி கேட்கிறாள்.பெர்னாண்டோ தனது அறையில் தங்க இடம் அளிக்கிறான். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மஸாஜ் மற்றும் அழகு கலை நடத்தும்  க்ராஸி யாவுடன் நட்புக்கொள்கிறாள்.சாப்பாட்டுக்கு துலிப் மலர்கள் விற்கும் ஒரு கடையில்  வேலைக்குச் சேர்கிறாள்.
ஒவ்வொரு நாளும் அறைக்குத் திரும்பும்போது கொஞ்சம் உணவும், துலிப் மலர்கள் மீது செருகப் பட்ட ஒரு கடிதமும் காத்திருக்கிறது. அதை வைத்து விட்டு அங்கிருந்து போய்விடும் எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்தோடு அலையும்  பெர்னாண்டோவை அறிந்துகொள்கிற ஆர்வம் மேலிடுகிறது அவளுக்கு. அவன் வாசித்துவிட்டு அடுக்கி வைத்திருக்கிற புத்தகங்கள் அவன்மீது லயிப்பை உண்டாக்குகிறது. அவனது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அக்கார்டியன் வாத்தியம் பெர்னாண்டோ மீது கூடுதல் ஈர்ர்ப்பை உண்டாக்கு கிறது. அந்த அக்கார்டியனை இசைத்து பக்கத்து அறை சிநேகிதியை சிலாகிக்கச்செய்கிறாள். அவனைப்பின் தொடர்கிறாள். ஊருக்குள் அவனது மகளும் பேரனும் இருப்பதை அறிகிறாள்.அவர்களோடு சேர்ந்து பேரனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

கணவனின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சிப்பந்தியை உளவுக்கு அமர்த்தி ரோசல்பாவை வெனிஸ் நகர் முழுக்கத் தேடச்சொல்லுகிறான்.அவனிடம் இருந்து தப்பிக்க நடன விடுதிக்குப் போகிறார்கள் ரோசல்பாவும், பெர்னாண்டோவும்.அங்கே அவளுக்குச்சில கவிதைகள் சொல்லுகிறான், பின்னர் இருவரும் நடனமாடு கிறார்கள்.விடுதியைத்தேடிக்ககண்டுபிடிக்கிற உளவாளி,ரோசல்பாவின் சிநேகிதி க்ராசியாவுடன் உறவுகொள் கிறான். பின்னர் உளவு வேலையை உதறிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். ஊரில் தனது மகன் போதைக்கு அடிமையாகி,பள்ளியில் இருந்து இடைநின்று போவதை அறிந்து வேண்டாவெறுப்புடன் ஊருக்குத் திரும்புகிறாள். அன்றிரவு மிகுந்த எதிர்பார்ப்புடன் படுக்கைக்கு செல்லுகிற ரோசல்பாவை கண்டு கொள்ளாமல் தூங்கி விடும் கணவனை எழுப்பி பேசுகிறாள். இனி நமக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தூங்கிவிடுகிறான்.

வெனிசில் ரோசல்பாவை நினைத்துக்கொண்டே உருகிப்போகிற பெர்னாண்டோ அவலைத்தேடி போகிறான். மீண்டும் ஒரு முறை தன்னோடு நடனமாட அழைக்கிறான்.இருவரும் காதலாகி நடனமாடுகிறார்கள்.மிகச்சாதார ணமாக ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் பரபரப்பு,சண்டை,குரோதம்,திகில்,சஸ்பென்ஸ் என எதுவுமில்லை.அதுமட்டு மல்ல மையக்கதாபாத்திரங்கள் யாரும் இளையவர் இல்லை.ரோசல்பாவாக நடிக்கும் லிசியாமாக்லியட்டாவும், பெர்னாண்டோவாக நடிக்கும் கான்ஸும் நடுவயதுக்காரர்கள்.தவிரவும் படம் முழுக்க ஆங்கில பாணியிலான காதல் காட்சிகள் ஏதும் இல்லை.

ஆனால்

படம் முழுக்க நகர விடாமல் நம்மை ஈர்க்கிற மெலிதான புல்லாங்குழல் இசைபோல காதல் கதை நெய்யப் பட்டிருக்கிறது. சிறுபிராயத்தில் நம்மை வசீகரித்த மூன்றாம் வகுப்பு கனகசுந்தரி டீச்சர்,அடுத்த தெருவுக்கு வாக்கப்பட்டு வந்த மல்லிகா மதினி,மூன்றுவருடம் சிவகாசிப்பேருந்துப்பயணத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த  மின்சார வாரிய தமயந்தி மேடம். இப்படி நினைவுகளின் நிலைத்துப்போன முகங்களின் முதிர்ந்த பிம்பமாய் வருகிறது லிசியா மாக்லியட்டாவின் வசீகரமுகம். சிரிக்கிற காந்தக்கண்களும் அவரது பாவனைகளும் பார்வையாளர்களைக் கட்டி இழுத்துக்கொண்டு போகிறது. நீர் சூழ்ந்த அந்த அழகிய வெனிஸ் நகர வீதியெங்கும் சுழன்று சுழன்று போய் நடனத்துடனான இறுதி முத்தத்தில் ஜொலிக்கிறது. கனிந்து விழுந்த பழத்தின் வாசனையோடும் ருசியோடும் காதல் சொல்லப்பட்டிருக்கிறது.

10 comments:

வானம்பாடிகள் said...

பார்க்கணும். நல்ல விமரிசனம் காமராஜ்.:)

இராமசாமி கண்ணன் said...

எப்படியிருக்கிங்க காமு சார்.. நல்ல விமர்சனம்.. பார்த்துடறேன்.

Kurusu Socrates said...

எனக்கு சினிமாவின் மேல் லேசான வெறுப்புண்டு. புத்தகங்கள் எழுப்பிவிடுகிற உலகங்களை சினிமாக்கள் தந்துவிட முடியாதென்ற வறட்டு கௌரவம் நிழல்போல். என்னையே சினிமாவை நோக்கி திருப்பிவிடுகிற சாமர்த்தியம் கொண்ட உங்கள் காதல்வரிகளை கண்டு வியப்பின் உச்சத்தில்.

இ.பா.சிந்தன் said...

நானும் இத்திரைப்படம் குறித்து எழுதியிருக்கிறேன் தோழர்...

http://www.chinthan.com/2011/12/bread-and-tulips-italian-film.html

காமராஜ் said...

நன்றி பாலா அண்ணா. எப்படி இருக்கீங்க ?

காமராஜ் said...

வாருங்கள் ராமசாமிக்கண்ணன்.

காமராஜ் said...

ரொம்ப நன்றி தோழர் குருசு.

காமராஜ் said...

தோழர் சிந்தன்.அப்படியா இதோ படித்துவிடுகிறேன்.

karthi said...

அடர் கருப்பு காணக்கிடைக்காத சிறந்த சலனப்படச் சேவை! வாழ்த்துக்கள்

-கார்த்தி

karthi said...

அடர் கருப்பு காணக்கிடைக்காத சிறந்த சலனப்படச் சேவை! வாழ்த்துக்கள்

-கார்த்தி