15.12.08

மணலுக்கடியில் இன்னமும் காயாத ஈரம்


எட்டாவது வயதில் நடந்து கடந்தபோது
இவ்வளவு பெரிய ஓடையா
வியந்து கிடந்தேன்.
ஊர் திரும்புகையில் சுமக்கமுடியாத
சிப்பிகள் கிலுகிலுத்தது
கால்சட்டைப் பையில் .

குண்டி கிழிந்த காக்கிச் சீருடைடையை
ஓசிச் சலவைச் சோப்பில்
துவைக்க நடந்த மாணவர் விடுதி நாட்களும்,
அண்ணாமலை வாத்தியாரின்
'ஓசிச்சோத்துப் பன்னி' எனும் வசவும்
ஒரு ஓரத்தில் சாக்கடையோடு கிடந்தாலும்
தோண்டத் தோண்டத் தாகமெடுக்கும்
ஊற்றோடு நடந்தது எங்கள் வைப்பாறு.


ஆயிரம் முறை விழுந்தாலும்
சிராய்க்காத அந்த மணற்பஞ்சு மேல்.
எங்கள் தடங்களை உள்வாங்கிக் கொண்டு
புதைந்து கிடக்கிறது
எத்தனையோ விளையாட்டுக்கள்.


மணற்கூட்டத்தை மறைத்த
மனிதக்கூட்டத்தில் அவளைத்தேடி
எடுத்து வைத்த பிராயத்து காலடிகள்
இன்னமும் பாதத்தில் குறுகுறுக்கிறது
தைப்பொங்கல் கருநாள் நினைவுகளாய்.

ஒற்றை மாட்டுத் தண்ணி வண்டிகள்
சாரைசரையாக அலைந்த காலமும்,
சருகக்குடங்கள் மினுமினுக்க
மொத்தமொத்தமாய் இடுப்புக் குளிர்ந்து
தாவணிப் பெண்கள் நடந்த காலமும்
கடந்த காலமாகிப் போனது.


எப்போதாவது கரை நிறைந்து
கடத்தி விடும் வெள்ளத்தை
எல்லாக் காலமும் மணலுக்கடியில்
எங்களுக்கான தாகத்தை அடைகாத்தபடி.


முதல் காதல், முதல் கவிதை,
என அறிமுகமான படிப்பிடம்
கனத்துக் கிடக்கிறவற்றை
முழுசாய்த் திறந்து கொட்டிய கழிப்பிடம்.
சந்தோசத்தையும் கண்ணீரையும் பதுக்கிக்கொண்ட
ரகசிய உணர்வுகளின் காப்பகம்.

கூழாங்கல்லைப் பொறுக்கிக்கொண்டே
கார்த்தி சொன்ன இறந்து போன காதலின் கதை
மணலுக்குள் விரல் படும்போதெல்லாம் நெருடும்.
நிலவொளியில் மதுக்குடித்தது,
மாதுவும், தனுஷ்கோடி சாரும்
நானும் இணைந்துகொண்டு
கோணங்கியோடு இலக்கிய மல்லுக்கு
நின்றதெல்லாமே
குத்தகைக்கு விடப்பட்ட
மணலின் நினைவுகளோடு
கொள்ளைபோகிறது அயலூர் லாரிகளில்.


ஆனாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது
கண்ணீரும் சந்தோசமும்
ஈரமாக.

9 comments:

மாதவராஜ் said...

காமராஜ்!

வைப்பாற்றின் நினைவுகளை பத்திரமாக வைத்திருக்கும் உன் கைகளைப் பற்றிக் கொள்கிறேன்.
எத்தனை மாலை, இரவு நாம் அங்கே பேசிக் கழித்திருப்போம்.
வாழ்வின் வசீகரமான வெளி அது!

Anonymous said...

பொதிந்து வைத்திருந்த நினைவுகளைக் கிளர்ந்தெடுத்துத் தந்திருக்கிறீர்கள்.
கண்முன்னே கடத்தப்படுவது மணல் மட்டுமல்ல அதனுடன் புதையுண்ட பால்யத்தின் ஞாபகங்கள்.

geevanathy said...

///மாதுவும், தனுஷ்கோடி சாரும்
நானும் இணைந்துகொண்டு
கோணங்கியோடு இலக்கிய மல்லுக்கு
நின்றதெல்லாமே
குத்தகைக்கு விடப்பட்ட
மணலின் நினைவுகளோடு
கொள்ளைபோகிறது அயலூர் லாரிகளில்.///

துயர் தோய்ந்த வரிகள்....

////ஆனாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது
கண்ணீரும் சந்தோசமும்
ஈரமாக.///

ஞாபக மீட்டல்கள்தானே வாழ்வினைச் சுவாரிசமாக்குகிறது....
இயல்பான வார்த்தைகளால் எங்களையும் சிப்பி தேடித்திரிந்த காலத்துக்கு கொண்டு சென்றிருக்கிறீர்கள்...

அன்புடன் ஜீவன்...

காமராஜ் said...

நன்றி ஜீவன்,
மணல் போனால் என்ன
எங்களுக்கு நாற்கரச்சாலை இருக்கிறது
இதெல்லாம்,சின்ன சின்ன வலிகள் தான்.

காமராஜ் said...

நன்றி வடகரை வேலன்
எனது விருப்ப பதிவர்களில்
நீங்களும் ஒருவர்.

காமராஜ் said...

நன்றி ஜீவன்,
மணல் போனால் என்ன
எங்களுக்கு நாற்கரச்சாலை இருக்கிறது
இதெல்லாம்,சின்ன சின்ன வலிகள் தான்.

அன்புடன் அருணா said...

//எப்போதாவது கரை நிறைந்து
கடத்தி விடும் வெள்ளத்தை
எல்லாக் காலமும் மணலுக்கடியில்
எங்களுக்கான தாகத்தை அடைகாத்தபடி.//

மனதின் ஈரம் நினைவுக்கு வருகிறது படித்தவுடன்...
அன்புடன் அருணா

காமராஜ் said...

ஈரம் தேடியலைகிற மனிதர்கள்
சச்சரவுகளுக்குள்ளேதான்
எங்கெங்கோ இருக்கிறார்கள்.
அதிலோர் அருணா.
நன்றி

cheena (சீனா) said...

காமராஜ்

பால்யநினைவுகள் - ஆற்றங்கரையிலும் ஆற்றிலும் கழித்த - களித்த இளமைக்காலம் - அருமையாக விளக்கப்பட்டுள்ளது. சிப்பிகளும் கூழாங்கற்களும் பொறுக்கி விளையாடிய நாட்கள். விடுதி, ஆரம்பப்பள்ளி நாட்கள், ஆற்றுமணல் விளையாட்டு, பதின்ம வயதுக் காதல் -அல்ல என்ன வென்று தெரியாத ஒரு அன்பு - தண்ணீர் வண்டிகள் - வெயிலில் மினுமினுக்கும் சருகக்குடங்கள் - குளிர்ந்த இடுப்புகளுடன் தாவணிப்பெண்கள் - கவிதையின் பிறப்பிடம் - கனத்ததைக் கொட்டும் கழிப்பிடம் - நிலவொளியில் இலக்கியச் சிந்தனை - அத்தனையும் கொள்ளை போகிறது மணல் கொள்ளையோடு இப்பொழுது ......

காமராஜ், அனுபவித்து அசைபோட்டு ஆனந்தித்து எழுதப்பட்ட பதிவு

நன்று நன்று - நல்வாழ்த்துகள்